Sunday, July 28, 2013

A spiritual insight - by Dr.Balasandilyan

இன்று தானாய் எனக்குள் ஏனோ  தோன்றிய ஆன்மீக சிந்தனை :
மின்சாரம் பாய்ந்து மின்விசிறி சுற்றுகிறது. விளக்கு எரிகிறது. நாம் இங்கே போற்றுவது பாராட்டுவது அந்த உபகரணங்களை தான். ஆனால் போற்ற வேண்டியது மின்சாரத்தை தானே...! காண்கின்ற உபகரணங்கள் நமக்கு சிறப்பாகப் படுகிறது. கண்ணில் படாத மின்சாரம் மனதில் புரிவதில்லை.
காற்று வர மின்விசிறி, ஒளி தர விளக்கு, குளிர் காக்க பிரிட்ஜ் தேவை தான்.
அது போல ஞானம் பெற ஒரு குரு தேவை தான். ஆனால் குரு நமது கடவுள் ஒரு போதும் ஆகி விட முடியாது.
ஏசுவை வணங்குபவர்கள் சுவிசேஷக் கூட்டங்களுக்கு செல்லுவர். ஆனால் அவர்களுக்கு பிரசங்கம் செய்பவர் அல்லது போதிப்பவர் கடவுள் அல்ல என்பது தெரியும். சர்ச் சென்று வழி பட்டு ஆண்டவரை துதிப்பர் ...அது ஒரு வேளை பிரசங்கம் சொன்ன அல்லது கேட்ட வழியில் இருக்கலாம்.
இஸ்லாமிய சகோதரர்கள் ஐந்து வேளை தொழுகை செய்தாலும் அல்லா தான் எல்லாமும் என்பது தெளிவாக புரிந்து செய்கிறார்கள்.
ஹிந்து மதத்தினை பின்பற்றுபவர்கள் சிலர் பிரசங்கம் செய்பவர்கள், பாடல் பாடுபவர்கள், பூஜை செய்பவர்கள் இவர்களையே கடவுளாக பார்க்கத் தொடங்கி அவர்களை பின் தொடர்கிறார்கள்.
இன்னும் சில சகோதரர்கள் எந்த மதமும் சாராது  அன்னை, ரமணர், சாய் போன்ற குருமார்களையே கடவுளாக்கி வழி படுகிறார்கள். இது ஒரு அமைப்பு போல ஆகி இருக்கிறது.
ராமர், கிருஷ்ணர், அம்பாள், சிவன், ஏசு, அல்லது திருவள்ளுவர் யாரையுமே நேரில் பார்த்தவர்கள் நம்மிடேயே இல்லாத தருணத்தில் மனோ தர்மத்தில், ஞான திருஷ்டியில் சிற்பமாக, உருவமாக உருவாக்கி தந்திருக்கிறார்கள். ஏனெனில் கவனத்தோடு பிரார்த்தனை செய்ய ஒரு பிடிமானம் தேவை அல்லவா ...!
மேற்சொன்ன கடவுள் பட்டியலை தாண்டி "பரம்பொருள்" என்று உண்டு என மகான்கள், குருமார்கள் உணர்ந்து தனது ஆன்மீக அற்புத தெய்வீக அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்கள்.
ராமாயணம், பாரதம், பகவத் கீதை, பைபிள், எல்லாமே அந்தந்த காலத்திற்கு அந்தந்த சூழ்நிலைக்கு உகந்த ஒன்று என்பது ஒரு கருத்து.
மனிதனின் நம்பிக்கை, மனோபாவம், புரிதல், தேவை, மதிப்பீடுகள், சூழல், சாதகம், பாதகம், கஷ்ட நஷ்டம், தேடும் ஆர்வம், வாழ்வின் பொருள், செல்ல விரும்பும் பாதை இதன் அடிப்படையில் அவரவர் கண்டு தெளிந்து, பட்டு உணர்ந்து தனக்கென்ற ஒரு பாதையை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும்.
குருமார்கள் அவரவர் அனுபவம், போக்கு, நோக்கு, தேடல், பார்வை, குறிக்கோள், வாழ்வின் அர்த்தம், என்று கண்டுணர்ந்தது நமக்கு பொருந்தாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
கேட்பது, பார்ப்பது, தொடுவது, நுகர்வது, ஒவ்வொன்றும் அனுபவம் என்றாலும் உணர்ந்து தெளிவது தான் உண்மை அனுபவம். அதனை அடுத்தவருக்கு உரைக்க வேண்டிய அவசியம் இல்லை. உரைத்தாலும் அவருக்கு அது புரியாது.
நாம் கேட்பது, பெறுவது எல்லாமே கர்மவினைப் படி என நினைக்காமல், எது கேட்கிறோமோ அதனைப் பெறுகிறோம். எது நாம் பெறத் தகுதி உள்ளவர் என்ற அடிப்படை உள்ளது எனக் கொள்ளலாம்.
கொல்கத்தா செல்ல அதற்கான பாதை, கன்யாகுமரி செல்ல அதற்கான பாதை என உண்டு. ஆனால் இறை விஷயத்தில் எல்லா பாதையும் எந்த திசை நோக்கி நகர்ந்தாலும் சென்று அடையும் இடம் அவன் பாதம் தான். அவன் என்பது குறிப்பிட்ட கடவுள் அல்ல. எல்லோருக்கும் பொதுவான "பரம்பொருள்" என்பதுவே உண்மை. இதில் சரியான பாதை, தவறான பாதை, நேர் பாதை, வளைவுப் பாதை என்று கிடையாது.
முதல் ஞானம் குருமார்கள் வழிகாட்டிகள், சிவன்-ஏசு-அல்லா-ராம்-கிருஷ்ணர் இவர்களைத் தாண்டி பிரபஞ்சத்திற்கு பொதுவான "பரம்பொருள்" என்கிற அருவமற்ற, உருவமற்ற, பெயரற்ற அந்த பேரருள் பொருந்திய அந்த பரம சக்தியை நாம் நமது வழியில் கண்டறிய வேண்டும்.
ஒவ்வாத உணவு, ஒவ்வாத டிவி சானெல், ஒவ்வாத நிறங்கள், என்றெல்லாம் இருந்தாலும் "அன்பு" எனும் ஒன்றின் அடிப்படையில் (மின்சாரம் போல) அந்த புதிய பாதையை நாம் கண்டு தெளியலாம். கண்ணைத் திறந்தால் வெளிச்சம் தெரியும். மனதைத் திறந்தால் ஒளி பிறக்கும்.
எல்லாவற்றையும் கேட்டு, பார்த்து, உணர்ந்து பிறகு நமக்கான ஒன்றை கண்டறிந்தவர்கள் தான் நம் கண் முன்பு ரமணராக, சாய் பாபாவாக, இதர குரு பரம்பரையாக விளங்குகிறார்கள்.
இப்போது யோசியுங்கள் ...மின்விசிறி, விளக்கு இவற்றை போற்ற வேண்டுமா அல்லது மின்சாரத்தை போற்ற வேண்டுமா?
நாம் எல்லோருமே இந்த பிரபஞ்சத்தின் முன்னால் சமமானவர்கள் தான். நிறம், இனம், மதம் என்று பிளவு பட்டுக் கிடந்தாலும் போய் சேரப் போகும் இடம் ஒன்று தான். இது நீங்கள் அறியாத புதிய விஷயம் அல்ல. இருப்பினும் யோசிக்காத விஷயம் ஆக இருக்கலாம்.
எந்த மந்திரமும் தந்து விடாத அற்புதங்களை "நன்றி" என்ற மந்திரம் பெற்றுத் தந்து விடும். எந்த மொழியும் செய்ய முடியாத அதிசயத்தை  "அன்பு" மற்றும் "புன்னகை" செய்து விட முடியும். இது பிரபஞ்சத்திற்கு பொதுவானது - பரம்பொருளைப் போல..!
என் மனதில் தோன்றிய இக்கருத்து நான் எங்கும் எதிலும் படிக்கவில்லை. கேட்கவில்லை. உள்ளே இருந்து இயக்கிய மாசக்தி சொல்ல சொல்ல டைப் செய்தேன்.
தோத்திரம், பூஜை, நோன்பு, பஜனை இவற்றை விட "நன்றி" என்கிற சொல்லும் உணர்வும் மிகவும் சக்தி வாய்ந்தது. நன்றி எனச் சொல்ல சொல்ல கேட்டது கேட்காதது, நினைத்தது, நினைக்காதது நாம் கிடைக்கப் பெறுவோம். இது உறுதி.
இது எனது உணர்வு. உங்கள் மனதில் என்ன ஓடுகிறது இதனை படித்தவுடன் ...யோசியுங்கள் ...பிரபஞ்ச மனம் நம் உள் மனதுடன் தொடர்பு கொண்டு ஒரு பாதையைக் காட்டும். இது திண்ணம். முயற்சி செய்து பாருங்கள்.
Take diversion, அல்லது குறிப்பிட்ட திசை தான் இறைப்பாதை என குழம்பி விடாமல் எந்த பாதையும் "அங்கே" தான் இட்டுச் செல்லும் என அறிவோம். வழி சொல்பவர்கள் இறைவன் ஆகி விடக் கூடாது.
Signal அல்லது வழிகாட்டி அல்லது மைல்கல் எப்படி சாலை ஆகி விட முடியும்?
உணர்வோம் ...உயர்வோம் ...!
எனது இந்த தெளிவு உங்கள் குழப்பமாக ஆனால் மன்னித்து விடுங்கள் என்னை.
உங்கள் தெளிவுக்காக காத்திருங்கள்....!
இந்த எழுத்து யாரையும் குறிப்பிட்டு அல்லது புண்படுத்தும் அல்லது பண்படுத்தும் நோக்கில் அமைந்ததில்லை. ஒரு கருத்துப் பகிர்வு தான். தவறு இருந்தால் போகட்டும் என்றும் விட்டுத் தள்ளுங்கள்.

Sunday, July 21, 2013

Few poetic thoughts



ஈரமில்லா மனமும் காய்ந்த பூமியும்
இங்கே பூமி அழுத போது
அங்கே அணை மூடப்பட்டது
அங்கே வானம் அழுத போது
அவசரமாய் அணை திறக்கப்பட்டது
______________________________________
நனைத்தேன் வந்தாய்
ஜலதோஷம்
நினைத்தேன் வந்தாய்
சந்தோஷம்
____________________________________
எச்சரிக்கை
குடையை விரி
பூக்கூடையாய் சிரி
நனைந்தால்
காதல் ஜுரம் கவ்வும்
____________________________
ஏய்
வானவில்லே  நனைந்து விடாதே
வண்ணங்கள்  சாயம் போகும்
வானத்துக்கு காயம் வரும்
________________________________
காருக்குள்
மழையும்
நானும்
நனையாமல் !
_________________________
மழை
நினைந்து பார்த்தால்
கிடைக்காது சுகம்
நனைந்து பார்த்தால்
கிடைக்கும் சுகானுபவம்
_________________________________________
காலி
வேலியே போலியென்றால்
பயிரெல்லாம் காலி தானே
கூலிகள் ஜாலியாயிருந்தால்
வயிரெலாம் காலி தானே
வாலியே பலமிழந்தால்
கவிபதவி காலி தானே ?
_______________________________________________

Saturday, July 20, 2013

Let us recognize people when they are alive

வயதானவர்கள், வாழ்க்கையில் சாதித்தவர்கள் ஒவ்வொருவராக இவ்வுலகை விட்டு கிளம்புகிறார்கள்.
சாதித்த சிலருக்கு உரிய பாராட்டு அங்கீகாரம் இன்னும் நாம் கொடுக்காமல் இருந்திருக்கலாம் .
இருக்கும் போதே அந்த மரியாதை, விருது, பாராட்டு, அன்பு, நேசம், இவற்றை கொடுத்து விடுவோம்.
இழந்த பிறகு காலம் தாழ்ந்த அங்கீகாரம், பாராட்டு எல்லாமே பழங்கஞ்சி தான்
யோசிப்போமா ?
பொக்கிஷமாக நம்மோடு இன்னும் சிலர் இருக்கிறார்கள் ...நமது அதிர்ஷ்டம் ...உதாரணத்திற்கு MSV சார், பாலமுரளி சார், பி சுசீலா, S ஜானகி, இப்படி கலை உலகில் ...இசை உலகம், எழுத்து உலகம் (பாலகுமாரன், சிவசங்கரி,) விளையாட்டு உலகம் இந்த பட்டியல் நீளும்.
அரசும், சமூக கலை அமைப்புகளும் இந்த நோக்கில் சிந்தித்து ஆவன செய்ய வேண்டும் ...
அதை விட நம் பெற்றோர் ஒரு வேளை சில சாதனைகளை, திறமைகளை வெளிக் காட்டாமல் இருந்திருக்கலாம் ...
DR M G பாஸ்கர் - என் நண்பர் அவரது தந்தை லயன் கோபு எழுத்துக்களை நூல் ஆக்கி வெளிக் கொணர்ந்தார்.
அது போல நீங்கள் என்ன செய்யலாம் யோசியுங்கள் ...
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி சாரை பாராட்ட வேண்டும் ...சிறந்தவர்களின் அன்னையை ஆண்டு தோறும் பாராட்டுகிறார்கள் ...!
இருக்கும் போது போற்றுவோம் ...பின்னாளில் ஆராதிப்போம் ...!

Friday, July 19, 2013

Change is growth

மாறலாம் மாற்றலாம்
- டாக்டர் பாலசாண்டில்யன்

சூரியன் விழுந்தால் நிலா முளைக்கும்
நட்சத்திரம் மறைந்தால் மழை தொடங்கும்
நிஜங்கள் மறந்தால் ஞாபகம் தோன்றும்
இமெயில் அறிமுகத்தில் தபால்தந்தி தடமாற்றம்
கணினி கண்டெடுப்பில் தட்டச்சு தடுமாற்றம்
கிரைண்டர் சுற்றுவதால்  கல்உரல் காணோம்
மொபைல் வருகையால் கிரகங்கள் கூட நெருக்கம்
விமானம் பறப்பதால் விண்மீன்கள்  அருகாகும்
ஜீன்ஸ் தைத்ததால்சேலைகள் ஜன்னல் ஆடை
DTH வந்ததால் திரையரங்கு உணவகமாய்
பைக்குகள் ஓடுவதால் சைக்கிள்கள் அரிதான ஓட்டம்
பிஸ்சா நுழைந்ததால் ஊத்தப்பம் ஊசலாட்டம்
வீதிகள் அகன்றதால் தூரங்கள் குறைவு
கோக் கேட்பதால் பன்னீர்சோடா வெறும் காற்று
விளைநிலம் வீடானதால்மொட்டைமாடி தோட்டம்
மேதைகள் பூமிதுறந்து புதுமேதைகள் மேடையேற்றம்
சுயநலம் நிறைந்து போனதால் சுனாமிகள் தோற்றம்
அன்புபாசம் பெருக்கெடுத்தால் ஆசாமி கூட  ஆண்டவன்
இறந்தகாலம் இருப்பதால் எதிர்காலம் ஒளியூட்டம் !

Thursday, July 18, 2013

Overcoming worry and anxiety Part 1

On Poet Vaali

வாலி மறைந்தார் வலி நிறைத்தார் சினி உலகில் 

தாலியில்லாத திருமணமில்லை 
வேலியில்லாத தோட்டங்களில்லை 
கூலியில்லாத வேலையுமில்லை 
மாலியில்லாத இசையுலகில்லை 
கோலி ஆடாத குழந்தையுமில்லை 
நூலிழையில்லாத சேலையுமில்லை 
போலிகளில்லா பொருள்களுமில்லை 
லாலி பாடாத தாய்களில்லை 
வாலி இல்லாது  இனி திரையிசை உண்டா ?

பட்டு ஜிப்பாக்கள் பலர் போடலாம் 
பாட்டு வாலி போல் எவர் பாடுவார், எந்த மெட்டுக்கும் அவர் பாடுவார் 
நாக்கு சிவக்க பலர் சிரிக்கலாம் 
நாதம் மணக்க இனி யார் சிறப்பார் ? கவி உலகில் யார் பிறப்பார்?

எந்த வயதையும் வசம் இழுக்க 
செர்ந்த வரிகளை இனி யார் எழுதுவார் 
சினி உலகமே அழுகுது பார் !

நெற்றிப் பொட்டில் அடித்தது போல் பேசுவார் 
நெற்றிப் பொட்டொடு நிதம் வலம் வருவார் 
சுற்றி முற்றி பார்த்தாலும் சீன் சொன்னவுடன் 
சற்றென பாடல் தர இனி யார் வருவார் 

 TMS PBS ராமமூர்த்தி முதலில் செல்ல 
வால் போல தொடர்ந்து சென்றார் வாலி 

தமிழ் திரையுலகிற்கு ஏன் அடி மேல் அடி 
அமிழ்கின்ற ஆழியில் ஆடிடும் படகோ ?

நரம்பு மீட்டூம் நாத சங்கீதத்திற்கு 
வரம்பு மீறாத வரிகள் தந்தவர் மறைந்தார் 

மறைந்த பின் புலம்பல்கள் ஆயிரம் செய்தாலும் 
மறையாது  அவர் புகழ் தான் மகிமை அதுவே !

நிறைந்திடும் மனம் அவர் பாடல் கேட்டால்
இறைவா அக்கவி ஆன்மா அமைதி பெறச்செய் !
- டாக்டர் பாலசாண்டில்யன்