Thursday, May 23, 2013

some latest expressions of mine

அம்மா இறந்து விட்டாள்

அனைத்து சொந்தமும் வந்து சேர்ந்தன
மருமகளைப் பார்த்து நாத்தி கேட்டாள்
அம்மா போட்டிருந்த தோடு எங்கே ?
மருமகள் சொன்னாள்
தோடு அவிழ்த்த விஷயம் மறைத்து
"அம்மா எதுவும் வேண்டாம் என
எப்போதோ கழட்டி வைத்தாள் ...
எங்கென்று தெரியாது எனக்கு !"
அம்மா போன சோகம் மறைந்து போனது
தோடு போன சோகம் கவ்விக் கொண்டது
நாத்தி மனசெல்லாம் ....!
தோடுடைய செவியன் பாதம்
சென்றடைந்த அம்மா மேலிருந்து சிரித்தாள் !
 ____________________________________________________ 
எலும்பில்லாத நாக்கு
வரம்பில்லாது பேசலாமா ?
மிருதுவான இதயம்
எருது போல் கனமாகலமா ?
_____________________________________________________
 மனதில் சந்தோஷம் தவிர
வேறு தோஷம் வேண்டாம்
சந்தோஷம் மனதில்
மழையும் தென்றலும் தரும் !
___________________________________________________
 அருவி

ஏமாற்றம் ஏதும் இல்லை
காதல் தோல்வி இல்லை
கால் இடறவில்லை
கல் தடுக்கவில்லை
யாரும் தள்ளி விடவில்லை
யாரும் விழச் சொல்லவில்லை
இருந்தும் மலை உச்சியிலிருந்து
விழுகிறேன் அதள பாதாளத்தில் ....!
_______________________________________________

Sunday, May 19, 2013

some of my recent expressions

வந்து சேர்ந்தாள்

அவள் கருப்பு
இவள் கண்ணாடி
அவள் குண்டு
இவள் அரட்டை
அவள் குட்டை
இவள் புத்திசாலி
அவள் அசடு
அவள் மாடர்ன்
இவள் கர்நாடகம்
என கழித்துக் கொண்டே
வந்ததில் ஓகே ஆனவள்
அவியல் போல
எல்லாம் கலந்தவளாய் ...!
 
 வாழ்த்த யாரும் இல்லாத போதும் வனங்களில் பூக்கள் பூக்கின்றன
வீழ்த்த யாரும் இல்லாத போதும் எல்லையில் இராணுவர் காக்கின்றனர்
பாராட்ட யாரும் இல்லை என்றாலும் நமது நற்சேவை தொடருவோம்
 நாமிருப்போம் நலமாக ....நம் மீது கவனமாக ...!
வாழ்விருக்கும் வளமாக ...!
வலையில் சிக்குவது மீன்
கவலையில் சிக்குவது நான் ....
வசதி வட்டம் - முடக்கிப் போடும்
சவால் வட்டம் - முடுக்கி விடும் !
  உறுதியுடன் எழட்டும்
ஒவ்வொரு செல்லும் - புது
உற்சாகத்துடன்

துடிப்புடன் எழட்டும்
ஒவ்வொரு செல்லும் - புதுத்
துள்ளலுடன்
 அம்மா

பெற்றது அவள்
பெற்றது நானும் தான்
பெரும்பேறு !
 எதிர்ப்பதும் எதிர்பார்ப்பதும் தவறே !
கொடுப்பதும் விட்டுக்கொடுப்பதும் தவமே !!

Saturday, May 11, 2013

Some More Haiku Poems written by me...!

டாக்டர் பாலசாண்டில்யன் எழுதிய ஹைக்கூ கவிதைகள் 
மின்தடை 
சமயம் 


அதே நேரம்
பழகிய தேகம்
ஓடாத கடிகாரம்
 ________________
கூடங்குளம்
படகுகள் ஓய்வு
மீன்கள் கலவரம்
மின்சாரம் அணு ஓரம்
__________________________
அன்னா ஹசாரே
உறங்கிய பசி
ஊழல் விழிப்புணர்வு
எழுச்சியில் தேசம்
___________________________
தொந்தரவு
பக்கத்தில் குறட்டை
பறந்த தூக்கம்
பாவமாய் நான்
____________________________
வெறுப்பு
ஒற்றை செறுப்பு
அலைந்த கண்கள்
கோவில் வாசல்
______________________________
மனுசுக்குள்
மெட்டி ஓசை
மல்லிகை வாசம்
மனைவி வருகை
_________________________________
என்னவள்
மேகத்தின் நடுவே
எட்டிப் பார்க்கும் நிலா
காணவில்லை அவள்
______________________________
படபடப்பு
பட பட பட
தட்டப்படும் கதவு
நுழைந்தது காற்று
______________________________________
தேதி பார்த்தேன்
ஆடிய காலண்டர்
மூடிய சமையலறை
இன்று விடுமுறை
_____________________________________________
மன ஓசை
நீட்டிய கை
கண்ணில் பட்ட மோதிரம்
பிச்சைக்காரன்
______________________________________________
இது சீசன்
ஆட்ட மைதானம்
ஒளி உமிழும் விளக்குகள்
ஒத்து ஊதும் நிலா மேலே !
__________________________________________
ஏமாற்றம்
காத்திருந்த காதுகள்
ஒலித்தது தொலைபேசி
புரியாத மொழியில் விசாரிப்பு
____________________________________________
கிளிப்
பரந்த முடி
கலைந்த மனம்
ஒன்றிணைத்த சிறு பிடி
_________________________________________________
டிரைவர் மனஒலி 
அடுத்த சிக்னலுக்குள்
திறந்து கொள்வாயா 
என் விழிகளே !
___________________________________________________


Thursday, May 9, 2013

Haiku poems of Dr Balasandilyan



பாலசாண்டில்யனின் ஹைக்கூ கவிதைகள் 

விலைவாசி 
குளங்கள் வற்றியதால்
கொக்கெல்லாம்
மீனைப் போல் சந்தையில்
______________________________
முதிர்கன்னி
ஜன்னலுக்கு இரு கண்
தானம் தந்தது யார்
அக்கா தான்
______________________
விவசாயக்கூலி
போரடித்தாள் முறமசைத்தாள்
தவிட்டு மடியில்
பசிச்சுமை அந்தோ
___________________________
மாணவன்
பரீட்சை சோகமும்
காலைச் சிற்றுண்டியும்
முட்டையோடு தான்
_______________________________
அவள்
கறுப்பின் மேல் வெள்ளை
கொள்ளை அழகு
கூந்தல் செடியில் ரோஜா
_____________________________________
சந்தேகம்
காசு கொடுத்தவன்
தலையிலேயே கை
யானை
___________________________
வாடிக்கை
கன்னம் வைத்தான்
களவு போனது
காதல் இதயம்
_____________________________
வியப்பு
போடும் போது பச்சை
போட்ட பிறகு சிவப்பு
வெற்றிலை
______________________________
மாற்றம்
அக்காவுக்கு ஜீன்ஸ்
அவள் சீலை உனக்கா
ஜன்னல்
____________________________
வினோதம்
கண்டு நடுங்கினாள் மனைவி
பொறாமையோடு கணவன்
கரப்பான்பூச்சி
_____________________________
காரணம்
மிரண்டு போனது சிறுமி
மதில் மேல் மீசைக்காரன்
பூசணிக்காய்
_________________________
ஞாபகம்
அழகான டப்பா
திறந்ததும் சிரித்தது
பாட்டியின் பல்செட்
_____________________________________
அநியாயம்
அஸ்திவாரம் ஆரவாரமாய்
வளர்ந்தது வேகமாய் புதுவீடல்ல
கடனுக்கு வட்டி
________________________________
பாவம்
அறுபதைத் தொட்ட அப்பா
அழகாய் ஈசி சேரில் ....அம்பது தாண்டிய அம்மா
அடுப்படியில் இன்னும்
____________________________________
விதி
அழகு மனைவி சமூகசேவகி
அடுப்புக்கரி
அம்மா முகத்துக்கு மட்டும்
___________________________________
கவலை 
கண்களுக்கு சொந்தம்
கண்ணீர் மட்டுமா
கைக்குட்டையும் தான் 
____________________________________
ஏழை
வானமே அழு
என் குடையை தைத்த பின்
அழு வானமே
_______________________________
வியப்பு
மழை நின்ற பிறகும்
மழை
மரத்தடியில் ...!
________________________________
ஓலம்
தெருவில் வெள்ளம்
அணைந்தது அடுப்பு
பசி தீ தானே
_________________________________
அக்கப்போர்
நாய்களின் சண்டை
குப்பைத்தொட்டி அருகே
ஜெயித்தான் மனிதன்
__________________________________
அறிவு
மனிதன் ஓரறிவு மிகுந்த
மிருகம் !....மிருகம்
ஓரறிவு குறைந்த மனிதன் 
_____________________________________


சூரியனே
நான் காந்தி
என்பதால் சுட்டாயோ
சூரிய காந்தி !
_______________________________
மாறுபாடு
உப்பு நீரில் உயிர் வாழும்
கடல் மீன்கள்
உப்பு நீரை உற்பத்தி செய்யும்
விழி மீன்கள் 
____________________________________

Saturday, May 4, 2013

நெஞ்செரிச்சல் இன்று பிராதன பிரச்சனை !
பல்வேறு காரணங்களால் உண்டாகிற இந்த சிக்கலுக்கு உட்பட்டு பலர் இன்று தவிக்கின்றனர். அதிக காரமான, வறுத்த, பொரித்த, மசாலா உணவுகளே முக்கிய காரணம் எனலாம். மன உளைச்சல், மது, புகைத்தல், தூக்கமின்மை, சில ஒவ்வாத உணவுகள், இயல்பான அஜீரண கோளாறுகள் இவையும் இந்த பட்டியலில் உண்டு.
சரி சரி மேல சொல்லு என்று எரிச்சல் படுகிறீர்களா? இதோ சில யோசனைகள் :
- தினம் ஒரு வாழைப்பழம் இந்த சிக்கலுக்கு ஒரு அருமருந்து
- வேகமாக உண்ணுதல், மென்று உண்ணாதிருத்தல் தவிர்த்தல் வேண்டும்
- மூன்று பெரிய உணவுகளுக்கு பதிலாக நான்கு அல்லது ஐந்து முறை சிறு சிறு அளவு உணவு எடுத்துக் கொள்ளுதல் உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்.
- ஊறுகாய், கடுகு, வினிகர், சாக்கலேட், அடிக்கடி டீ காபி, சிட்ரஸ் பழ ரசங்கள், இவை நெஞ்செரிச்சல் அதிகமூட்டுகிறது. எனவே கொஞ்சம் ப்ரேக் போடுங்கள்
- சாலட் (பச்சை வெங்காயம், முள்ளங்கி) தவிர்க்கலாம்
- தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடித்தால் நல்லது
- சாப்பாட்டுக்கு முன்னால் தண்ணீரில் ஓரிரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தல் நல்லது
- துளசி இலைகள் ஓரிரண்டை அவ்வப்போது மெல்லுவது கூட நல்லது
- சிறு வெல்ல கட்டி வாயில் அடக்கி கொள்ளுதல் கூட உதவும்
-  சாப்பாட்டிற்கு பிறகு ஏலக்காய் துகள்கள் மெல்லுவது சிலருக்கு உதவும்
- வெள்ளரிக்காய், தர்பூசணி, வாழைப்பழம், இந்த சிக்கலுக்கு பெரிதும் உதுவுகின்றன
- பால், இளநீர் இரண்டும் கூட நிச்சயம் நல்லது தான்.
- ஒவ்வொரு முறை சாப்பாட்டிற்கு பிறகும் புதினா ஜூஸ் மிகவும் நல்லது
- சாப்பாட்டிற்கு பிறகு கூல் ட்ரிங்க்ஸ் கூடவே கூடாது. சீனர்கள்  மற்றும் ஜப்பானியர்கள் உணவுக்கு பிறகு கிரீன் டீ அல்லது ப்ளாக் டீ குடிப்பதை பார்த்திருப்பீர்கள் ...!
எரிச்சல் தவிர்ப்போம்...இன்பமாய் இருப்போம் !