Tuesday, December 6, 2016

Tribute to Amma Jayalalitha

இரும்பு மனுஷிக்கு இதய ஒலியாய் அஞ்சலி
- டாக்டர் பாலசாண்டில்யன் 

புறக்கணிக்கப்பட்டவர்க்குக் கூட 
பரிவு காட்டிய இரும்புத் தாய் நீ 
வீரர்கள் முன் நீ  அன்புப் பசு 
வீணர்கள் முன் நீ  சிங்கம் 
வீண்வம்புக்காரர் முன் நீ  புலி 

ஒப்பார்க்கு ஒப்பார் 
மிக்கார்க்கு மிக்கார் 
தங்கத்தாரகை நீ அம்மா 
முட்களைத் தாண்டிய பாதை தாண்டி 
மக்கள் பாதை நுழைந்தவர் நீ அம்மா 
நெருப்பாற்றில் நீந்தித் தான் 
பொறுப்பாற்றலைக் கற்றார் நீ அம்மா 

தேசத்தைப் பாதுகாக்கத் 
துணிந்த அம்மா நின் 
தேகத்தைப் பாதுகாக்க 
இயலாது போனது நேற்று ..!
பாபங்கள் செய்தவரைக் கூட 
விட்டு விட்ட எமதர்மன் - மக்கள் 
அனுதாபம் பெற்ற உன்னை 
எடுத்துச் சென்ற பிறகு 
மூதறிஞர் மண்டபத்தில் 
பேரறிஞர் உன் உறக்கம் இன்று...!.

எங்கு காணினும் சென்னையில் 
எல்லையில்லா அன்பர் கூட்டம் 
எல்லை கடந்த அன்பு கொண்ட உனக்கு  
கண்ணீர் அஞ்சலி செலுத்திட நாட்டம் 

தண்ணீர் தராதவரும் கண்ணீர் சிந்தினர் 
வாய் திறக்காதவரும் வாய்மொழி சிந்தினர் 
தேசம் முழுவதும் இருந்து தலைவர் வருகை 
நேசம் பாராட்டும் நண்பர்களின் அழுகை 
வர முடியாத நபர்கள் விட்டனர் அறிக்கை 
சென்னை வீதிகளில் தண்ணீர் 
வெள்ளம் சென்ற ஆண்டு 
சென்னை வீதிகளில் மக்கள்தலை 
வெள்ளம் இந்த ஆண்டு 

நீ  தேச ராணியா நேச ராணியா 
என்ற விவாதம் தேவை இல்லை 
பாசமும் பரிவும் காட்டியதால் 
நீ  அகிலத்தின் அன்பு ராணி 

பூதவுடல் புதையுமெனினும் 
புகழுடன் நீ உறைவாய் 
பூவுலகில் என்றென்றும் 
எங்கள் உள்ளங்களில் ...!

அம்மா என்றான தாய் 
இறைவனடி சேர்ந்தாய் 
சமரசமில்லா போராளியே 
சந்தோசம் காணா அறிவாளியே 
இனியில்லை போராட்டம் உனக்கு 
இனிதே உறங்குவாய் அம்மா 

கடலை விட பெரிது உனைக் காண வந்த கூட்டம் 
கடற்கரையில் களைப்பாறுவாய் 
அதுவே இனி உன் தோட்டம் 
ஆசிகள் தந்து வழிகாட்டு எனக் கேட்டோம் 

பாரத ரத்னா விருது அறிவிப்பு 
இன்றோ நாளையோ வரும் என்பதே 
எனது மனம் சொல்லும் கணிப்பு ..!
இது சத்தியம்...பெரும் சாத்தியம்...!!

உலகம் இனி காணுமோ உன் போல் அம்மா 
உலவும் என்றும் உனது புகழ் அம்மா !!
கணினி சிந்திய கண்ணீரில் 
கவிதையாய் வடித்தேன் அஞ்சலி ..ஏற்பாய் அம்மா.!!