Wednesday, June 28, 2017

Gratitude

அந்த நாலு பேருக்கு நன்றி - குரு
- டாக்டர் பாலசாண்டில்யன் - Bhaskaran JayaramanG Vittal Rao
கற்க வேண்டும் என்ற வேட்கை 
கடலெனப் பெருகும் போது 
கண்முன் தோன்றுகிறார் ஒரு குரு 
எவரையும் சங்கடப்படுத்துவது மனஇருள் 
எல்லையின்றி மேம்படுத்துவது குருஅருள் 
நிற்க, நடக்க, உண்மை பேச, உழைக்க, உயர்வு பெற நிழல் போல் உடனிருந்து வழிநடத்திய முதல்குரு அப்பா தமிழும் இசையும் அன்பும் பாலுடன் புகட்டிய அம்மா தெளிவு,முதிர்ச்சி, எதையும் எதிர்பாரா அன்பு என்று எத்தனையோ கற்றுத்தந்த மனைவி அறிவூட்டி அறம்காட்டி ஆளுமை புகட்டிய அளவிலா ஆசான்கள் அனைவரும் உயர்வுக்கு ஏணிகள் 
ஆர்வம் இருந்தால் கற்பது இயற்கை 
அற்புதப் பாடங்கள் கற்பிப்பது 'இயற்கை' !!
தொட்டில் முதல் பாடைவரை தொடர்ந்தளிக்கும் மரங்கள் எதிர்கால சேமிப்பை எடுத்துரைக்கும் எறும்பு கதிரவனை கூவி எழுப்பும் காலைச் சேவல் 
எப்போதும் சுறுசுறுப்பாய் பறக்கும் பட்டாம்பூச்சி 
வாழ்வின் வண்ணங்களை விளக்கிவளையும் வானவில் சுமை எதுவானாலும் முகபாவம் மாற்றாத கழுதை பாரபட்சமின்றி பயனளிக்கும் காற்று, மழை பெறுவதெல்லாம் வழங்கத்தான் என்று சிரிக்கும் பூக்கள் எதுவானாலும் பகிர்ந்துண் என பரிந்துரைக்கும் காகம் 
எது எழுதவும் யார் எழுதவும் அனுமதிக்கின்ற காகிதம் நாளும் பற்பல கற்பிக்கும் அனைத்துமே குருமார் தான். புன்னகையில் வலி நீக்கும் மருத்துவ நண்பர் டாக்டர் பாஸ்கரன் 
உழைப்பில் முன்னேறு எனச் சொல்லும் உதயம்ராம் எழுத்தால் முன்னேறு என்றுரைக்கும் விக்கிரமன் ஐயா புன்னகையே வெற்றி எனப் பறை சாற்றும் Dr ஜி வி ராவ் 
பணிவுடன் சேவை தொடரும் பாங்குத் தலைவர் SVR, வயது வலி பாராட்டாது உழைத்து நிற்கும் Dr நடராசன் பயபக்தியுடன் பணியும் உதவியும் செய்யும் NRK வழங்குவதே வளர்ச்சி என உணர்த்தும் கார்முகிலோன் 
நீளுகின்ற இப்பட்டியலில் சேர்த்தது குறைவு, குறைத்தது அதிகம் 
அனைவருக்கும் நன்றி நவிலும் போது ஆன்மா நிறைகின்றது அடுக்கிக் கொண்டே போனால் அடுத்தவர் நேரம் குறைகின்றது 
அதனால் சுருக்கினேன் என் குருமார் பட்டியல் 
அன்பைப் பெருக்கினேன் என் மனத் தொட்டியில் 
நெஞ்சத்து உணர்வுகள் அனைத்தையும் அடக்கிவிட முடியுமா "நன்றி" என்கிற ஒரு வார்த்தையில் !ஆயிரம் முறை சொன்னாலும் அடங்கிவிடுமோ ஆற்றாமை மனதின் பேராவல் !!
சிரம் தாழ்த்துகிறேன் ...கரம் கூப்புகிறேன் 
சேர்த்து வைத்த நன்றிப் பெருக்கை திறந்துவிடுகிறேன் மன அணையிலிருந்து !
ஓடி வந்து நனைக்கட்டும் ஒவ்வொருவர் பாதங்களையும் ..!!

Friday, June 23, 2017

24th June 2017 Mambalam Talk covers about me


Recent poem of mine

யார் தொட்டாலும் சிகரம் 
------------------------------------------
புல்வெளி காலுக்குள் சுகம் 
சொல்வெளி காதுக்குள் புகும் 
கட்டிப்பிடி காதல் புரியும் 
எட்டிப்பிடி வெற்றி தெரியும்
எடுத்து விடு உன்னைப் புரியும்
கொடுத்து விடு உலகைப் புரியும்
பேசிப் பார் அரங்கம் அதிரும்
யோசிப்பார் சுரங்கம் நிறையும்
அன்பாலே மனம் தொடு
அன்புக்கு சினம் விடு
- டாக்டர் பாலசாண்டில்யன்

Monday, June 19, 2017

Dr. Baskar about my book release function on 18th June 2017

நண்பர் பாலசாண்டில்யன் அவர்களின் ‘தினம் ஒரு நண்பர் – கற்றதும் பெற்றதும்’ புத்தக வெளியீட்டுவிழாவும், அவரது விஷன் அன்லிமிடெட் நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு விழாவும் இன்று சென்னை திருவல்லிக்கேணியில், என் கே டி முத்து ஹாலில் (ஐஸ் ஹவுஸ் அருகில்) நடைபெற்றது. இன்று பாலாவின் பிறந்த நாளும் கூட –
திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் புத்தகத்தை வெளியிட, தொழிலதிபர் திரு முரளி ஸ்ரீனிவாசன் மற்றும் முனைவர் மேகநாதன், திரு என்.பஞ்சாபகேசன், ஆடிட்டர் என் ஆர் கே, மரு. பாஸ்கரன் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
பாலாவின் மகள் சுபீக்‌ஷா இறைவணக்கப் பாடல் – நேராகக் கலைவாணி வந்திறங்கியதைப் போல இருந்தது. வளமான சாரீரமும், மனமுருகிய பாவமும் மிக அருமை.
வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன், உதயம் ராம், பஞ்சாபகேசன், முரளி ஸ்ரீனிவாசன், வசந்தி ரெங்கனாதன் ஆகியோர் புத்தகத்தையும், பாலா என்னும் மனித நேயப் பண்பாளரையும் வாழ்த்திப் பேசினர்.
தலைமை உரையில் லேனா, தெரிந்த பெயரில், வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல் என்றார். நண்பர்களை எவ்வளவு ஆழ்ந்த அன்புடனும், அணுக்கமாகவும் புரிந்துகொண்டிருக்கிறார் பாலசாண்டில்யன் என வியந்தார்.
ஏற்புரையில் தன் வழிகாட்டிகள், ஆசான்கள், நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி சொன்னார் பாலா. வெற்றிகளின் பின்னால் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தன் குடும்பத்தினருக்கும் நன்றி சொன்னார் ( புத்தகத்தின் அட்டைப் பட வடிவமைப்பு அவரது இன்னொரு மகள் சுபாஷிணி )!
விழாவின் இரண்டாவது பகுதியாக, ஒரு ’மினி’ கருத்தரங்கம் – பெண்களும் வர்த்தகமும் (டாக்டர் வசந்தகுமாரி), மருத்துவம் இன்று, நாளை (டாக்டர் பாஸ்கரன்), பயிற்சித்துறை (NLP ராமசுப்ரமணியம்), இசை இந்தியாவில் – அயல்நாட்டில் (டி எஸ் ரங்கநாதன்), நிறுவங்கள் இன்று நாளை (Lean ஆர்.துரைசாமி), இளைஞர்கள் இன்று நாளை (NKT ஜெயகோபால்) ஆகிய தலைப்புகளில் ஒரு மினி அலசல் சொற்பொழிவு நடந்தது.
மதிய உணவு வழங்கப்பட்ட பின்பு, கூட்டம் நிறைவடைந்தது.
இந்தப் புத்தகத்தில் 58 நண்பர்களைப் பற்றி, சுருக்கமாக (இரண்டு பக்கங்களுக்குள்) குறிப்பிடுகிறார் பாலா. அவர்களின் நல்ல பண்புகள், சமூகத்தில் அவர்களின் பங்கு, அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டவை என எளிய நடையில் எழுதிச் செல்கிறார்.
அவருக்கு இருக்கும் நட்பு வட்டத்துக்கு, இன்னும் இரண்டு மூன்று தொகுப்புகள் வரும் என்பது என் கணிப்பு!
வாழ்த்துக்கள் பாலா!

Tuesday, June 13, 2017

Aaj Janae Ki Zidh Na karo - தமிழில் எனது பிரதிபலிப்பு

Aaj Janae Ki Zidh Na karo - தமிழில் எனது பிரதிபலிப்பு 

இன்றே செல்வேன் என்று அடம் பிடிக்காதே அன்பே 
இதயத்தில் நான் சற்று இடம் பிடிக்கும் முன்பே  (இன்றே)

என்னருகே கொஞ்சம் அமர்ந்து கொள் 
என்னை விரும்புவதாகச் சொல்லிக் கொல் 
நீ கிளம்பிவிட்டால் நீ மட்டுமா செல்வாய் 
என் உயிரும் தானே எனைவிட்டு செல்லும்  (இன்றே)

காலத்தின் கைப்பிடியில் நமது வாழ்க்கை 
காதல் காலமே விரிக்கும் சுதந்திரச் சிறகை 
பனிக் காலத்தில் நீயே எனது மேற்கூரை 
பணித்து நிறுத்து இரவே போகாதே எனக் கூறி   (இன்றே)

நான் ஏன் உனை நிறுத்துகிறேன் தெரியுமா?
நீ தான் என் வாழ்வும் சாவும் புரியுமா?
வாழ்நாள் முழுதும் துடிக்க வைப்பதா உன் வேலை 
வாழ்ந்து காட்டுவோம் உலகிற்கு அன்பின் லீலை (இன்றே)

- டாக்டர் பாலசாண்டில்யன்