Monday, June 11, 2018

Evergreen Actor Mohan - I simply adore




தொலைந்து போன இளைய நிலா

நிலவு தூங்கும் நேரம் தென்றல் வந்து என்னைத் தொடும். அந்த மன்றம் வந்த தென்றலுக்கு தூக்கம் வராது 'நிலாவே வா' எனப்பாடும். அதற்கென்ன என்கிறீர்களா? எனது கவலை அந்த ராஜ ராஜ சோழனைக் காணவில்லையே என்பது தான்

சரியாகத் தான் புரிந்து கொண்டீர்கள் நான் நமது கோகில/மைக் மோகன் பற்றித் தான் சொல்கிறேன்

1956 ஆம் ஆண்டு மே 10 அன்று பிறந்த (இன்று 62 வயது ஆகிறது) நடிகர் மோகன் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மஹிந்திராவின் 'கோகிலா' படம் மூலம் கன்னடத்தில் அறிமுகம் ஆனார்

ஒரு ரஜினியின் ஸ்டைல், கமலின் நடிப்புத்திறன், விஜயகாந்த் சத்தியராஜ் போல சண்டைக் காட்சிகள் இவருக்கு சுட்டுப்போட்டாலும் வராது. இருப்பினும் பாலு மகேந்திரா, ஆர் சுந்தரராஜன், மற்றும் உலகம் போற்றும் மணிரத்தினம் ஆகியோர் படங்கள் இவரை பல உயரங்களுக்கு தூக்கி நிறுத்தின

ரொமான்ஸ், ஹீரோயின் சப்ஜெக்ட் அல்லது பாடல்களை மட்டும் மையமாக வைத்த படங்களுக்கு என்றே இவர் விதிக்கப்பட்டவர்.

நடிகர் பிரபு, ரகுவரன், முரள, கார்த்திக் இவர்களை மிஞ்சும் திறமை இவருக்கு இல்லை என்பது அவருக்கே தெரியும். இருப்பினும் இவருடைய நடிப்புக்கு பிரபல பின்னணி பாடகர் எஸ் என் சுரேந்தர் குரலில் டப்பிங், இசைஞானி இளையராஜாவின் இசை, தேன்குரல் எஸ் பி பி அவர்களின் பாடல், வாலி மற்றும் வைரமுத்து அவர்களின் பாடல்கள் - வேறென்ன வேண்டும் ஒருவர் முன்னணியில் நிற்க?

1977 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும், 1990 களுக்கு பிறகு இந்த 28 ஆண்டுகளில் வெறும் 5 படங்கள் மட்டுமே நடிக்க முடிந்தது திரு மோகனால். அதற்கு முக்கிய காரணம் அவருக்கு குரல் கொடுத்த திரு எஸ் என் சுரேந்தர் இருவருக்கும் ஏதோ சிக்கல் என்று சொல்லப்படுகிறது. அதெல்லாம் நமக்கெதற்கு?

சிலர் இடையில் அவர் மிகவும் நோய்வாய் இருக்கிறார், அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் கதை கட்டி விட்டனர். இருப்பினும் நேற்றைய கதாநாயகிகள் ரேவதி, ராதிகா மற்றும் சுஹாசினி ஆண்டு தோறும் கூடி மகிழும் நிகழ்வுகளில் நிச்சயம் மோகன் இருக்கிறார் என்று இணையதளம் சொல்கிறது

ஒரு புறம் இவை எல்லாம் இருக்கட்டும். ஒரு 72 படங்களில் நடித்த ஒருவர் எத்தனை வெள்ளி விழா படங்கள் வழங்கி உள்ளார்? அவரது திரைப்படப் பாடல்கள் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காதவை என்று தான் சொல்ல வேண்டும்பாடுநிலா எஸ் பி பி அவர்கள் 40 ஆயிரம் பாடல்கள் பாடி இருந்தாலும் அவருடைய டாப் 10 பாடல்களில் ஒன்றாக இருப்பது மௌன ராகம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நிலாவே வா' என்ற பாடல் தான். இதற்கு இளையராஜா அவர்கள் இசை. வாலி அவர்கள் பாடல் எழுதி உள்ளார். இது எல்லோருக்கும் பிடித்த பாடல்

அண்மையில் திரு எஸ் பி பி அவர்களின் பிறந்த நாள் என்று ஒரு தனியார் சேனல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய எல்லா பாடல்களையும் ஒளிபரப்பு செய்தது. அதில் ஜெமினி, சிவாஜி, MGR, ஜெய்சங்கர், சத்தியராஜ், பிரபு, ரஜினி, கமல், கார்த்திக், விஜய், அஜித், என்ற பட்டியலில் ஏனோ அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் நடிகர் மோகன் அவர்களுக்கு பாடிய ஓரிரு பாடல்களோடு நிறுத்திக் கொண்டார். அது எனக்கு மனசு கேட்கவில்லை. ராஜா + எஸ்பிபி + மோகன் எனும் அந்த காம்பினேஷன் நிச்சயம் இசைப் பிரியர்கள் யாராலும் மறக்க இயலாது

மூடுபனி, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, தீராத விளையாட்டு பிள்ளை, பாசப்பறவைகள், இதய தீபம், மனிதன் மாறிவிட்டான் என்று (1980 - 2017 வரை) என்று பட்டியல் நீளலாம்

இவற்றில் நெஞ்சத்தை கிள்ளாதே 365 நாட்கள், கிளிஞ்சல்கள் 250 நாட்கள், பயணங்கள் முடிவதில்லை 300 நாட்கள், கோபுரங்கள் சாய்வதில்லை 200 நாட்கள், சரணாலயம் 175 நாட்கள், இளமை காலங்கள் 200 நாட்கள், மனைவி சொல்லே மந்திரம் 175 நாட்கள், விதி 500 நாட்கள், வேங்கையின் மைந்தன் 175 நாட்கள், நூறாவது நாள் 200 நாட்கள், நான் பாடும் பாடல் 200 நாட்கள், ஓசை 175 நாட்கள், உதய கீதம் 200 நாட்கள், தென்றலே என்னை தோடு 250 நாட்கள் (ஆறு பாடல்களும் ஹிட்), குங்கும சிமிழ் 175 நாட்கள், இதய கோவில் 200 நாட்கள், பிள்ளை நிலா 200 நாட்கள், டிசம்பர் பூக்கள் 175 நாட்கள், உயிரே உனக்காக 175 நாட்கள், மௌன ராகம் 250 நாட்கள், மெல்ல திறந்தது கதவு 200 நாட்கள், ரெட்டை வால் குருவி 175 நாட்கள், தீர்த்த கரையினிலே 175 நாட்கள், சகாதேவன் மஹாதேவன் 175 நாட்கள் - இப்படி ஓடின நடிகர் மோகனின் படங்கள்

என்ன மேலே சொன்ன பட்டியல் கண்டு மயக்கம் வருகிறதா? மிக அதிகமான திறமைசாலி நடிகர்கள் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் பொழுது அதிகம் திறமை இல்லாத நிறைய பலவீனங்கள் மட்டுமே கொண்டிருந்த ஒரு நடிகர் மாபெரும் வெற்றிப்படங்களை வழங்கி உள்ளார். இப்போது ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே வெற்றிகரமான பத்தாவது நாள் என்று போடுகிறார்கள். 40-5- நாட்களில் அந்த படம் வந்ததே மக்களுக்கு நினைவில் இல்லை

இந்த சூழலில் இன்னும் நமது நினைவுகளில் நீங்கா இடத்தைப் பிடித்து இருக்கும் நடிகர் மோகன் நிச்சயம் நாம் எல்லோரும் கொண்டாடப்பட வேண்டியவர். குறிப்பாக 1980 படங்களை போற்றுகிறவர்கள் இன்னும் சினிமா பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்

மோகன் தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என்று நான்கு தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயார் செய்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல் கசிகிறது. நிச்சயம் அவருடைய படங்கள் மக்கள் விரும்பி ஏற்பர் அதற்கு ஆதரவு தருவர் என்று நம்புவோம்

மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா? இதுவே எனது கேள்வி

அந்த சில நாட்களை, 24 மணி நேரம் நினைக்கா விடினும், நான் உங்கள் ரசிகன் என்று சொல்லி அவரது வெற்றிக்கு உனக்காக ஒரு ரோஜா என்று சொல்லுங்கள். அந்த நடிகரின் உள்ளத்தில் ஆயிரம் பூக்கள் மலரட்டும், மெல்ல கதவு திறந்து மனதில் மௌன ராகம் பாடட்டும். அவரின் அன்றைய பாச மழையில் நனைந்து நெஞ்சமெல்லாம் நீயே இன்றும் மோகன் என்று சொல்லுங்கள். அன்பின் முகவரியில் என்றும் கோபுரங்கள் சாய்வதில்லை அதனால் தான் சொல்கிறேன் மோகன் அவர்களின் பயணங்கள் முடிவதில்லை

நமக்கு மிக நல்ல படங்களையும் பாடல்களையும் வழங்கிய நடிகர் மோகன் நீடு வாழ அது ஒரு தொடர் கதையாக மாறட்டும்