Sunday, February 23, 2020

வண்ணமும் எண்ணமும்


வண்ணப் பெருங்கடலின் சாயமே - உன் 
வண்ணமாய் என்னுடலும் ஆகுமே - காதல் 
எண்ணமாய் உன்னுள் நுழையுமே - என் 
வண்ணமும் உன் வண்ணமாகுமே 

உதடுகளில் ஒலிக்கின்ற கீதம் ஆனேன் -நீ 
உருமாறினால் நான் எங்கே போவேன் - வா 
எனைக் கரைத்து உன் வண்ணமாக்கு - அட 
உனைச் சுற்றியே ஆனது எந்தன் போக்கு 
லேசாக எனை உன் வண்ணமாக்கு 
மூச்சாக எனை உன் எண்ணமாக்கு 

கணம் கூட உனை விலக மாட்டேன் - உன் 
கதகதப்பின் வாசத்தை பிரிய மாட்டேன் - என் 
சுவாசம் உனதுயிரில் கலந்ததாலே - நான் 
சுயம் இழந்து நீயாக மாறிப் போனேன் 
உன் வண்ணம் எனை உருமாற்றியதாலே -நான் 
என் வண்ணம் இழந்து உன் வண்ணமானேன் 

காலின் கொலுசொலியில் கேட்பது நானே - உன் 
உயிரின் மூச்சொலியில் மாறி விட்டேனே - என் 
விழிகளிலே உனதழகு வழிகிறது மானே - உன் 
மொழிகளிலே எனதுறவு தெரிகிறது தானே 
உன் வண்ணம் எனை  உருமாற்றியதாலே -நான் 
என் வண்ணம் இழந்து உன் வண்ணமானேன்  

காதல் மழையில் நாம் நனைந்தாலும் - இனி 
கரையாது என்றும் நமது வண்ணம் - ஒரு 
காற்றடித்தாலும் மாறாது அது திண்ணம் 
கண்ணே நாம் கலந்திட்ட கிண்ணம் 
உன் வண்ணம் எனை  உருமாற்றியதாலே -நான் 
என் வண்ணம் இழந்து உன் வண்ணமானேன்  

- பாலசாண்டில்யன் 

Song On Election

தை பிறந்தால் வழி பிறக்கும் மெட்டு (பாடல்)
Lyrics by Dr. Balasandilyan

தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே 
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)

வாக்களித்து உளம் மகிழ்வோம் தங்கமே தங்கம் 
வல்லரசால் வளம் பெறுவோம் தங்கமே தங்கம் 
நல்லவரை தேர்வு செய்வோம் தங்கமே தங்கம்
நம் கடமை உணர்ந்து நிற்போம் தங்கமே தங்கம் 
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே 
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)

நேர்மையுடன் வாக்களிப்போமே  தங்கமே தங்கம் 
நிறைவுடனே நாமிருப்போம் தங்கமே தங்கம் 
யார் வரணும் நம் விரலில் தங்கமே தங்கம் 
யாவும் இனி நம் முடிவில் தங்கமே தங்கம் 
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே 
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)

தேர்தல் நாளு விடுமுறையா தங்கமே தங்கம் 
தேசம் மாறணும்  நம்மாலே தங்கமே தங்கம் 
தெளிவு வேண்டும் முடிவினிலே  தங்கமே தங்கம் 
துணிவு வேண்டும்நெஞ்சினிலே தங்கமே தங்கம் 
தேர்தல் வந்தால் மாற்றம் வரும் தங்கமே தங்கமே 
திருநாட்டில் ஏற்றம் வரும் தங்கமே தங்கம் (தேர்தல்)

Wednesday, February 19, 2020

நீயின்றி நானும்




தீயின்றி காதல் இருந்ததில்லை
நீயின்றி நானும் வாழ்வதில்லை 

என்ன சொல்லி புரிதல் செய்ய 
என்னிதயம் பணி புரிதல் இல்லை 
எனதன்பு சொன்னால் புரியுமா 
நீயே எந்தன் வாழ்வு தெரியுமா 

உன்னிதயத் துடிப்பு நான் தான் 
உனது பாதை எனது பயணம் 
எளிதாய் இருந்திருக்கும் வாழ்வு 
என் விழிகள் திறக்காதிருந்தால்  
என் வாழ்வு இனி நீ தான் நம்பு 
இன்னும் அனுப்பாதே கண்ணால் அம்பு  

பாதை மாறிய பயணம் எனது 
பாவை உன்னை சுற்றுது மனது 
நீயே ஆனது எந்தன் புது உலகு 
உன் பார்வை என் முகத்தில் அலகு 
பணிந்தேன் உன் சம்மதம் கேட்டு 
பரிவாய்  இனி இன்முகம் காட்டு 

- பாலசாண்டில்யன் 

Monday, February 17, 2020

Wednesday, February 12, 2020

சொல் அந்த ரகசியம் அழகே


அப்படி என்ன ரகசியம்
ஒளித்து நிற்கிறாய்
உன் கண்களில் உலகை
ஈர்த்து நிற்கிறாய்
உன்னை விடவும்
அழகு... கண்ணே
உன் கருணைப்
பார்வையே அடடா (அப்படி )

உனது ஒரு பார்வையில்
மொட்டும் மலர்கின்றது
உனது மறு பார்வையில்
கரைகளும் சேர்கின்றது
உனது மௌனத்தில் கூட
உன் குரல் கேட்கின்றது
உனது கண்ணசைவில்
உலகே விழிக்கின்றது (அப்படி )

உனது பேச்சில் குறும்பொன்றும்
பெரிதாய் இல்லை
உனது பார்வையில் துஷ்டத்தன
மேதுமில்லை
உனது அசைவில் போலிப்
பாராட்டு கூட இல்லை - ஆனால்
உனது கண்களில் ஏதோ
ரகசியம் உண்டு அடடா (அப்படி)

- பாலசாண்டில்யன்

Monday, February 10, 2020

விழிகளில் வழிகள் மொழிகள்


உந்தன் விழிகள் தாண்டி எந்தன்
உலகில் வேறு எதுவுமில்லை - உன்
இமை திறக்கும் வேளை பகலாகும் - அந்த
இமை மூடும் சமயம் இரவாகும்
எந்தன் வாழ்வோ எந்தன் சாவோ உன் கண்ணிமைகளே முடிவு செய்யும்
உந்தன் விழிகள் தாண்டி எந்தன்
உலகில் வேறு ஏதுமில்லை ...
விழியின் வீதியில் சிரிக்கும் முகங்களே தெரியும்
விழிக்குள் எந்தன் கனவுலகம் முழுதாய் விரியும் - உன்
இமை திறக்கும் வேளை பகலாகும் - அந்த
இமை மூடும் சமயம் இரவாகும்
எந்தன் வாழ்வோ எந்தன் சாவோ உன் கண்ணிமைகளே முடிவு செய்யும்
உந்தன் விழிகள் தாண்டி
எந்தன் உலகில் வேறு ஏதுமில்லை ...
உன் விழியின் பார்வையில் எனது - எதிர்
காலமே தெரியும் என் விதியின் பயணமும்
காதல் விழியில் முழுதும் தெரியும் - உன்
இமை திறக்கும் வேளை பகலாகும் - அந்த
இமை மூடும் சமயம் இரவாகும்
எந்தன் வாழ்வோ எந்தன் சாவோ உன் கண்ணிமைகளே முடிவு செய்யும்
உந்தன் விழிகள் தாண்டி
எந்தன் உலகில் வேறு ஏதுமில்லை...
நீ எங்கிருந்தால் என்ன உன் நிழல் கூட
என் இதயத்துள் தெரியும்...நிஜமாக
மனம் மலர்ந்து விரியும் - உன்
இமை திறக்கும் வேளை பகலாகும் - அந்த
இமை மூடும் சமயம் இரவாகும்
எந்தன் வாழ்வோ எந்தன் சாவோ உன் கண்ணிமைகளே முடிவு செய்யும்
உந்தன் விழிகள் தாண்டி
எந்தன் உலகில் வேறு ஏதுமில்லை ...
- பாலசாண்டில்யன்

Saturday, February 8, 2020

எனது தவம் எனது வரம்



எனது பிரார்த்தனை 
இனிதே இன்று ஆனது 
நான் கேட்டது 
நான் கேட்டது என்னவென்று 
அவனே குழம்பிப் போனான் 

நிலவை எந்தன் கையில் கேட்டேன் 
நினைக்கும் முன்பே உன்னைத் தந்தான் 
இறைவன் என்றால் அது 
இவன் தான் அன்றோ ...என்ன கருணை 

வலியின் இருளை மாற்றி எனக்கு 
ஒளியின் வெளியை காட்டி நின்றான் 
கண்ணின் காட்சி உண்மையா என 
காதல் இதயம் துடிக்க வைத்தான் 

இரண்டு இதயம் துடிக்கும் சமயம் 
எந்தன் மனமோ கடக்கும் இமயம் 
புரண்டு பார்த்தேன் கனவு இல்லை 
புதையல் நீ தான் பிரமிப்பின் எல்லை 

நன்றி நன்றி என ஆர்ப்பரித்தேன் 
நல்லது என அவனும் சிரித்தான் 
எனது பிரார்த்தனை இனிதே ஆனது - இனி 
ஏதும்  வேண்டாம் மனது சொன்னது 

- பாலசாண்டில்யன் 

Monday, February 3, 2020

காதலெனில் பயம்



போகிற போக்கில்
என் கண்ணில் நீ தெரிந்தது 
எதைப் பற்றிப் பயந்தேனோ 
அது தான் நடந்தது ...ஹா ஹா ஹா 

காதல் என்றாலே பயமே விளைந்தது 
விளைவை எண்ணி மனமே குலைந்தது 
காதல் வந்து தானாய் நெஞ்சில் புகுந்தது 
எதைப் பற்றி பயந்தேனோ அதுவே நடந்தது 
(போகிற )

உனைத் தவிர ஏதும் என் மனம் அறியவில்லை  
உன் முகமன்றி  ஏதும் எனக்குத் தெரியவில்லை 
உனது முகம் தாண்டி  நிலவின்று  ஒளிரவில்லை  
எனது முகவரியே  கூட இனி நிரந்தரமில்லை 
(போகிற)

கண்களில் நிறையும் உந்தன் வதனம் 
நெஞ்சினில் உறையும் உந்தன் கவனம் 
காதல் மழையில் நனைந்த நம்  உலகம் 
கண்டு தெளிவோம் மனதின் கலக்கம் 

(போகிற)

- பாலசாண்டில்யன் 

பித்தானது நெஞ்சம்


பித்தானது என் நெஞ்சம்
உன்னிடம் தான் அது தஞ்சம்
பித்தானது என் நெஞ்சம் - உன்னை
உயிரெனக் காதலிப்பதாய் கெஞ்சும்
இருப்பினும் நீ முன்னால் வரும் போது ஏனோ
ஏதும் சொல்ல மனம் தயங்குகிறது பயம் தானோ
அதைப் புரிந்து கொள்ள நினைக்கிறேன்
அதைச் சமாதானம் செய்யத் துடிக்கிறேன்
அப்பாவி மனம் ஏதும் அறியவில்லை
அல்லும் பகலும் அதன் அழுகை நிற்கவில்லை
பித்தானது என் நெஞ்சம் - உன்னை
உயிரெனக் காதலிப்பதாய்க் கெஞ்சும்
ஒவ்வொரு கணமும் மனம் ரணமானது
ஒவ்வொரு இரவும் மிக கனமானது - இது 
ஒன்றுமே நீ சற்றும் அறியாதுது - இந்த ஏக்கம் 
ஒடுங்கிய தூக்கம் உனக்கின்னும் புரியாதது 
பித்தானது என் நெஞ்சம் - உன்னை 
உயிரெனக் காதலிப்பதாய் கெஞ்சும்
- பாலசாண்டில்யன்

Saturday, February 1, 2020

அன்பெனும் நூற்கண்டு



அன்புப் பிணைப்பின் நூற்கண்டு
அன்பே உன் விரலில் சிக்குண்டு  
ஆனந்த வலியில் நான் கிடக்க   
அன்பின் முடிச்சை அவிழ்க்கும் அரிய  
ரகசியம் மனம் சற்றும் அறியவில்லை 
என்னுடலின் நரம்பெல்லாம் மேகம் துளைத்து 
இன்னிசையாய்  நுழைவது  காதலா மோகமா 

பிணைப்பில் வைக்க எனைத் தேர்வு செய்த 
பித்து நீ அறிவேன், நான் என்றோ அதனை - என் 
அணைப்பில் வைக்க உனைத் தேர்வு செய்த 
பித்து நானும் தான், அறிகிலேன் அதனை 
நான் இரவென்றால் நீ பகல் - அந்த 
வான் சந்திக்கும் மாலை இடுவேன் நான் மாலை 
வானளாவும் நமதன்பு என்றும் இருவழிச் சாலை 

என்னிதயம் கவலையுற்று இருந்ததில்லை - அதில் 
எல்லையற்ற அன்பு நீ, அதை நான் மறந்ததில்லை 
எனது தகவல்கள் வந்து சேரும் புது முகவரி நீ 
எனது உளறல்கள் எல்லாம் அறிவாய் நீ - நாம் 
யாரென்று மனதிற்குள் சொல்லித் திரிவாய் நீ 
யாருமில்லா வீதியில் கண்மூடி நடப்போம் வா 
யாருமே நமக்கில்லை ஈடென்று கிடப்போம்.வா 

- பாலசாண்டில்யன்