Thursday, June 27, 2013

Gratitude to Guru



அந்த நாலு பேருக்கு நன்றி  -  குரு
- டாக்டர் பாலசாண்டில்யன்
கற்க வேண்டும் என்ற வேட்கை
கடலெனப் பெருகும் போது
கண்முன் தோன்றுகிறார் ஒரு குரு
எவரையும் சங்கடப்படுத்துவது மனஇருள்
எல்லையின்றி மேம்படுத்துவது குருஅருள்
நிற்க, நடக்க, உண்மை பேச, உழைக்க, உயர்வு பெற
நிழல் போல் உடனிருந்து வழிநடத்திய முதல்குரு அப்பா
தமிழும் இசையும் அன்பும் பாலுடன் புகட்டிய அம்மா
தெளிவு,முதிர்ச்சி, எதையும் எதிர்பாரா அன்பு
என்று எத்தனையோ கற்றுத்தந்த மனைவி
அறிவூட்டி அறம்காட்டி ஆளுமை புகட்டிய
அளவிலா ஆசான்கள் அனைவரும் உயர்வுக்கு ஏணிகள்
ஆர்வம் இருந்தால் கற்பது இயற்கை
அற்புதப் பாடங்கள் கற்பிப்பது 'இயற்கை' !!
தொட்டில் முதல் பாடைவரை தொடர்ந்தளிக்கும் மரங்கள்
எதிர்கால சேமிப்பை எடுத்துரைக்கும் எறும்பு
கதிரவனை கூவி எழுப்பும் காலைச் சேவல்
எப்போதும் சுறுசுறுப்பாய் பறக்கும் பட்டாம்பூச்சி
வாழ்வின் வண்ணங்களை விளக்கிவளையும் வானவில்
சுமை எதுவானாலும் முகபாவம் மாற்றாத கழுதை
பாரபட்சமின்றி பயனளிக்கும் காற்று, மழை
பெறுவதெல்லாம் வழங்கத்தான் என்று சிரிக்கும் பூக்கள்
எதுவானாலும் பகிர்ந்துண் என பரிந்துரைக்கும் காகம்
எது எழுதவும் யார் எழுதவும் அனுமதிக்கின்ற காகிதம்
நாளும் பற்பல கற்பிக்கும் அனைத்துமே குருமார் தான்
உழைப்பில் முன்னேறு எனச் சொல்லும் உதயம்ராம்
எழுத்தால் முன்னேறு என்றுரைக்கும் விக்கிரமன் ஐயா
புன்னகையே வெற்றி எனப் பறை சாற்றும் Dr ஜி வி ராவ்
பணிவுடன் சேவை தொடரும் பாங்குத் தலைவர் SVR
வயது வலி பாராட்டாது உழைத்து நிற்கும் Dr நடராசன்
பயபக்தியுடன் பணியும் உதவியும் செய்யும் NRK
வழங்குவதே வளர்ச்சி என உணர்த்தும் கார்முகிலோன்
நீளுகின்ற இப்பட்டியலில் சேர்த்தது குறைவு, குறைத்தது அதிகம்
அனைவருக்கும் நன்றி நவிலும் போது ஆன்மா நிறைகின்றது
அடுக்கிக் கொண்டே போனால் அடுத்தவர் நேரம் குறைகின்றது
அதனால் சுருக்கினேன் என் குருமார் பட்டியல்
அன்பைப் பெருக்கினேன் என் மனத் தொட்டியில்
நெஞ்சத்து உணர்வுகள் அனைத்தையும் அடக்கிவிட முடியுமா
"நன்றி" என்கிற ஒரு வார்த்தையில் !
ஆயிரம் முறை சொன்னாலும் அடங்கிவிடுமோ
ஆற்றாமை மனதின் பேராவல் !!
சிரம் தாழ்த்துகிறேன் ...கரம் கூப்புகிறேன்
சேர்த்து வைத்த நன்றிப் பெருக்கை திறந்துவிடுகிறேன் மன அணையிலிருந்து !
ஓடி வந்து நனைக்கட்டும் ஒவ்வொருவர் பாதங்களையும் ..!!

Thursday, June 13, 2013

Food for thought

When People see a lack of anything, it is simply a lack of love!
ஏதேனும் குறையென வாழ்வில் சிலர் கண்டுணர்ந்தால்
அது அன்பு குறைவு தான் அன்றி வேறேதும் இல்லை.


If you keep telling that you are not as smart as other people, or not as attractive as other people, or not as talented as other people, you will be right because they will become the pictures of your life...(Map in your subconscious mind becomes real)

When you fall in love with life, every limitation disappears, you have no resistance.
வாழ்க்கையை முழுமையாய் நீ
ரசிக்கும் போது வாழ்வில்
கட்டுப்பாடுகள் காணாமல் போகின்றன
எதிர்ப்புகள் இல்லாமல் போகின்றன


Destiny is no matter of chance. It is a matter of choice.
Life is not happening to you. Life is following you.
நாம் பயணிப்பது நம் விருப்ப வீதியில் என்றால்
விதி நம்மை வழி நடத்த வாய்ப்பே இல்லை.
வாழ்க்கை உனக்கு நடைபெறவில்லை
வாழ்க்கை உன்னைப் பின்தொடர்கிறது


இரக்கம் இல்லா மனநிலை
இல்லாமையைக் காட்டும்
உறக்கம் இல்லா உடல்நிலை
இயலாமையைக் காட்டும்


A solid rock is not disturbed by the wind, even so, a wise person is not agitated by praise
or blame.
காற்று வீசினாலும் அசையாது நிற்கும் பாறை
போற்றினாலும் தூற்றினாலும் நிலை மாறாது நிற்பவர் அறிவாளி


     We have less or no guts to face challenges in life.
But can we live with no regrets...
சவால்களை சந்திக்க துணிவில்லையா பரவாயில்லை
இழந்ததை நடந்ததை எண்ணி வருந்தாமல் வாழலாமே

Conflicting meaning in life

சாதாரண வழக்கு :
போயிடுச்சா ...தூக்கு ..
சினிமா வழக்கு :
தூக்கு - போய்ட்டான்னு அர்த்தம்

சாதாரண வழக்கு :
முடிச்சிடு - நிறைவு செய்
சினிமா வழக்கு :
முடிச்சிடு - இல்லாமால் செய்

சாதாரண வழக்கு :
காலி பண்ணு - மீதம் வைக்காமல் உண்ணு அல்லது அருந்து
சினிமா வழக்கு :
காலி பண்ணு : அடையாளம் இன்றி அழித்து விடு

சாதாரண வழக்கு :
கணக்கு பண்ணு - கவுன்ட் பண்ணு
சினிமா வழக்கு :
கணக்கு பண்ணு - காதல் பண்ணு

சாதாரண வழக்கு :
கரெக்ட் பண்ணு - சரி செய்
சினிமா வழக்கு :
கரெக்ட் பண்ணு - இம்ப்ரெஸ் செய்து காதல் பண்ணு

சாதாரண வழக்கு :
ஆபீஸ் ரூம் - அலுவலக அறை
சினிமா வழக்கு :
ஆபீஸ் ரூம் - அறை வாங்கும் அறை அல்லது இடம்

Wednesday, June 12, 2013








உன் பயணம் என் பணி !
- டாக்டர் பாலசாண்டில்யன்

மற்றவரை பாராட்ட ஒரு முகம் !அடுத்தவரை கவர்ந்திழுக்க ஒரு முகம்
முக்கியமில்லாதவரை தவிர்க்கும் மற்றொரு முகம் ! எப்படி பின் இருக்கும் வாழ்க்கையில் சுமுகம் ! எப்படி உன்னை ஏற்கும் சமூகம்
புன்னகை வீசி நிற்க தேவை இல்லை அறிமுகம் ...! எவரிடமும் காட்டாத பாராமுகம் ....! இப்படி ஒருவரை பற்றி அறிந்ததுண்டா ? பார்த்ததுண்டா ?

வருத்தங்களை மணலில் எழுது ...ஏன் நீரில் கூட எழுது ...!
பெற்ற அருளாசிகளை பாறையில் செதுக்கு ...!! என்பார்கள். பிறக்கும் போது தெரிவதில்லை நாம் பிறந்த காரணம். நம் வாழ்வின் பொருள்.
ஆனால் வெகு சிலர் இதனை அதிசுலபமாக உணர்ந்து கொண்டு செயல்படுகிறார்கள். அதுவே ஆச்சரியம்.

சாவைச் சாவு தீர்மானிக்கும். வாழ்வை நீ தீர்மானி என்று ஒரு வாசகம் வாசித்த ஞாபகம். அப்படி தனது பணி ஓய்வு வாழ்வினை மிக சரியாகத் தீர்மானித்து மிகப் பெரிய மிக அரிய சேவை ஒருவர் செய்து வருகிறார். அவர் பற்றியே இந்த சில பக்கங்கள். ஒரு வேளை இந்த பக்கங்கள் உங்களை அவர் பக்கம் ஈர்த்து உங்கள் பங்கையும் அளிக்க வைக்கலாம்.

நகர்ந்தது மேகம் !கலைந்தது யோகம் !சரிந்தது தேகம் !கரைந்தது காகம் !!
எரிந்தது விறகு அல்ல ...தேக மரங்கள் ..! விழுந்தது சருகு அல்ல .....வாழ்வின் பூக்கள் ..! எழுந்தது சத்தம் அல்ல...கருணை மந்திர நிமித்தம் ...! வெந்தது தேகம் அல்ல ....நேயம் கலந்த யாகம் ..! செய்தது கடமை அல்ல ...புனித யோகம் ..! எவரும் அநாதை அல்ல...இவர் முன் ஒரே சமூகம் ..!
யார் இவர் ? என்ன செய்கிறார் ? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டாகிறது அல்லவா ?
உலகிற்கு சிலர் பூக்கள் பறிக்க வருகிறார்கள். சிலர் பயிர்களுக்கு நீர் ஊற்ற வருகிறார்கள். சிலர் கனி பறித்து சுவைத்து அனுபவிக்க வருகிறார்கள். சிலர் பவ சாகரத்தின் அந்த கரை பார்த்து விட்டு கஷ்டங்களுடன் செல்லவே வருகிறார்கள். சிலர் வாழ்வின் அனைத்து சுகங்களை தானும் கண்டனுபவித்து மற்றவருக்கும் வழங்க வருகிறார்கள். ஆனால் இவர் ஒரு கையில் பூக்கள், மறு கையில் சவப்பெட்டி மூடும் ஆணிகள் கொண்டு பிறந்தாரோ என்னவோ தெரியவில்லை ..!
தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டு 'கிருஷ்ணா ராமா' என்று ஓய்வு நாற்காலியில் அமர்ந்து விடாமல் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற வேட்கையோடு தொடங்கினார் தனது பணி. அந்த பணி செய்ய இவர் தொடங்கிய நிறுவனமே ஸ்ரீ காயத்ரி டிரஸ்ட்.
யாருமே இந்த உலகை விட்டு பிரியும் போது 'அவர்' என்பது மாறி 'அது' ஆகிறது.
உடலோ எழும்பும், சதையுமாக நம் கண் முன் கிடப்பது நிஜம். அந்த உடலை அதற்குரிய மரியாதையுடன் அப்புறப்படுத்துவது அந்த உடலுக்குள் வாழ்ந்தவருக்கு செய்யும் மரியாதையாகும்.
இறந்து போகிறவர் ஆதரவற்றவராகவோ, நோய் முதுமை விபத்து காரணமாகவோ, சொந்த பந்தங்களால் புறக்கணிக்கப்பட்டவர்களாகவோ. அல்லது ஏழை குடும்பத்தை சார்ந்தவர்களாகவோ இருந்துவிட்டால் அவர்களது இறுதி சடங்கு என்பது ஒரு மாபெரும் இடையூறாக பிரச்சனையாக ஆகி விடுகிறது.

இந்த இடத்தில் வந்து துணை நிற்பவர் தான் நாம் அறிந்து கொள்ள இருக்கும்
திரு G. ராகவன் அவர்கள்.
சாதி, மதம், நாள், கிழமை, நேரம் என்றில்லாமல் தொலைபேசியில் அல்லது நேரில் செய்தி வந்து விட்டால் போதும் ...இவரது 'பரம பத ரதம்' புறப்பட்டு விடும் அந்த இடத்திற்கு...இவர், ஓரிரு நண்பர்கள், ஓட்டுனர் இவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, காவல் துறை விஷயங்கள், இதர செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் சரி செய்து சடலத்தை மீட்டுக் கொணர்வார்கள்.
கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர், விபத்தில் இறந்தவர் இவர்களை தொட்டுத் தூக்க உறவினர்களே கூட தயங்குவார்கள், பயப்படுவார்கள்...குறிப்பாக புற்று நோய் வந்து இறப்பவர்களைக் கூட இவர்கள் தயங்காமல் எந்த சிரமும் பாராமல் எடுத்து வந்து எரிக்கவோ புதைக்கவோ செய்கிறார்கள்.
ஒரு சடலத்தை அடக்கம் செய்ய குறைந்தது 5000 ரூபாய் செலவாகும் இந்த கால கட்டத்தில் மின்சார தகன முறையில் எரியூட்டி அடக்கம் செய்ய இவருக்கு மட்டும் வெட்டியான்கள் கூட இவரது மனித நேயம் புரிந்து கொண்டு உபரி செலவு எதுவும் கேட்காமல் உதவுகிறார்கள்.
உயிரையும் உடலையும் சேர்த்தே அளித்த இறைவன் உயிரை மட்டும் பறித்துக் கொண்டு உடலை விட்டு விடுகிறார் இறுதியில். இந்த அநியாய செயலை மனதளவில் நொந்து கொண்டாலும் செய்ய வேண்டிய கடன்களை யாராவது செய்து தானே ஆக வேண்டும் என்கிற எண்ணத்தோடு அயராது உதவி வருகிறார் நமது மூத்த நண்பர் திரு ராகவன் அவர்கள்.

1988 ஆம் ஆண்டு ஐந்து ஏக்கரில் மூன்று லட்சம் ரூபாயில் ஞானவாபி எனும் ஈம சடங்கு செய்யும் இடத்தை சென்னை குரோம்பேட்டை லட்சுமி நகரில் தொடங்கி இந்த சேவை தனை முறைப்படி செய்து வருகிறார். குளத்தில் மூழ்கி காரியம் செய்தால் தான் நல்லது என்கிற சாஸ்திர சம்பிரதாயப்படி செய்து முடிக்க ஸ்ரீ காயத்ரி தீர்த்தம் எனும் ஒரு பிரத்யேக குளத்தை அருகில் கட்டி உள்ளார்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இந்த அரிய மாபெரும் சேவை தனை செய்வதற்கு பரிபூர்ண ஆசி தனை காஞ்சி மாஸ்வாமிகள் வழங்கி உள்ளார். இது வரை பல ஆயிரம் நபர்களின் ஈமக் கிரியைகளை செய்துள்ள இவருக்கு இவரது குடும்பம் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இவரது அறக்கட்டளை தொண்டு நிறுவனம் செய்து வரும் பணிகளை தெரிந்து கொள்ளும் போது மிகுந்த மலைப்பு ஏற்படுகிறது. இவர்களது ஞானவாபி கட்டிடம் அந்தணர்கள் இதர இனத்தவர்கள் தமது காரியங்களை செய்ய தனித்தனி அறைகள், கியாஸ் ஸ்டவ், பாத்திரங்கள் என்று சகல வசதிகளும் பெற்ற ஒன்றாக விளங்குகிறது .
இவர்கள் டிரஸ்ட் மூலம் ஏழை மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், உதவி ஆண்டு தோறும் செய்து வருகிறார்கள். இது தவிர தாம்பரம் ஐயப்பன் கோவிலில் நடைபெறும் 60 நாள் அன்னதானத்திற்கு தேவையான அரிசி மூடைகள் வழங்கி வருகிறார்கள்.
இந்த ஆண்டு குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகில் ஒரு ஸ்டால் அமைத்து காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை 40 நாட்களுக்கு கடுமையான வெயில் காலத்தை சமாளிக்க நீர் மோர் வழங்கி உதவி உள்ளார்கள். 2006 ம் ஆண்டு தொடங்கிய இப்பணி இந்த ஆண்டு சிறந்த செயல்பாடை வெளிப்படுத்தி உள்ளது இவர் தம் அறக்கட்டளை.
ஏழைப் பெண்களுக்கு புடவை, மற்றும் மாங்கல்ய தானம் அளித்து திருமண உதவிகளும் செய்து வருகிறார்கள். சலவைத் தொழிலாளர்களுக்கு துணி தேய்க்கும் பெட்டி, கரிப்பெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்குவது இவையும் இவர் தம் சேவைப் பட்டியலில் அடங்கும்.
இனி உங்களுக்கு ஒரு செய்தி : சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டவர்கள் உங்கள் வீட்டருகே இறந்து விட்டர்களா ? அல்லது நீங்கள் பயணிக்கும் வழியில் விபத்து ஏற்பட்டு மரணம் சம்பவித்து ஆதரவின்றி தவிக்கிறார்களா? கவலை வேண்டாம் . ராகவன் என்ற இந்த ஐந்தடி இமயத்தின் நிறுவனத்திற்கு ஒரு போன் போடுங்கள். உடனே அங்கு அவர்களின் வேன் வந்து நிற்கும்.
வங்கிகள், உதவும் பரந்த மனம் மிகுந்தவர்கள் பலர் இந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்து வருகிறார்கள். இவர்களிடம் இருக்கும் ஆம்புலன்ஸ் வண்டிகள் வங்கிகள் வழங்கியது தான் !
நேரே சென்று திரு ராகவன் அவர்களை சந்தித்த போது என்னை அறியாமல் கண்ணீர் பெருகியது. மாமனம் படைத்த ஒருவர் இந்த சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் தர்மமும், கொடையும், மனித நேயமும். நல்லுதவிகளும் தொடர்கின்றன என்பதனால் தான் வானம் மழையாசி வழங்கி வருகிறது.
லக்ஷ்மி நகர், குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ காயத்ரி டிரஸ்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பை அளிக்க நினைத்தால் நீங்கள் அணுக வேண்டிய தொடர்பு எண் 22383333/22654777.
திரு ராகவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால், 9444022033 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
‘அநாதை ரட்சகர் ராகவன்’ அவர்களின் இந்த அஸ்வமேத யாகம் தொடர, கடைசி வரை யாரோ என்று தவிப்பவர்களுக்கு உவந்து உதவும் இப்பெருந்தகை பல்லாண்டு வாழ்க எனப் போற்றுவோம்.