Friday, May 18, 2018

Bala's Quick Stories

An interesting one-liner: Quick story 
மூணு வேளையும் டீ குடித்தே வயிறு நிரப்பும் ராமு சொன்னான், நல்ல வேளை சக்கரை சரியா இருக்கா என்று அப்பப்போ ருசி பார்க்கிறேன் இந்த வேலையில். இதற்கு முன்பு முடி வெட்டுற வேலை.

One liner - Quick story: வாடகை நூலகம் சென்ற இளைஞன் கேட்டான், தற்கொலை பற்றிய புத்தகம் இருக்கிறதா? கடைக்காரர் சொன்னார், இருக்கிறது, ஆனால், யார் அந்த புத்தகத்தை திருப்பித் தருவார்?!
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner: Quick story
பாட்டிக்கு ஏண்டா பிறந்த நாள் பரிசா டிராக் சூட் வாங்கிக் கொடுத்தே என்று கத்திக் கொண்டு இருந்தார் ரமேஷின் தந்தை. அவன் சொன்னான், பாட்டி மட்டும் எனக்கு காயத்ரி மந்திரம் சிடி வாங்கித் தரலாமா?!
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner - Quick Story:
டாக்டர் ஒரு நாள் வரவில்லை. கம்பௌண்டர் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள 'ஒரு நாள்' டாக்டர் ஆனார். உள்ளே அவசரமாக நுழைந்தார் ஒரு இளைஞர். 'டாக்டர் சார் எனது தந்தை உயிருக்கு போராடுகிறார், உடனே வந்து உதவுங்கள் '. புறப்பட்டு அவர் பின்னால் சென்றான்.. அப்போது தான் நினைவுக்கு வந்தது டாக்டர் கழுத்தில் மாட்டிக் கொள்ளும் அந்தக் கருவியை மறந்து போனதை. மாட்டிக் கொண்டோம் என்று பயந்தான். பயத்தோடு அந்த முதியவரைத் தொட்டான். அவர் 'டாக்டர் டாக்டர்' என்று முணுமுணுத்து கண் திறந்தார். இவனுக்கும் உயிர் வந்தது.
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner, Quick story:
சாமுவேல் மறக்காமல் தனது மனைவி கல்லறைக்கு மலர் வளையம் வைத்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இது ஏழாவது ஆண்டு. தூக்கி வாரிப்போட்டது. ஏற்கனவே அங்கே ஒரு மலர் வளையம். யார் அந்த நபர்? பரபரப்பாக வந்த இளைஞன் ஒருவன், சாரி சார். எனது காதலி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்து பதட்டத்துடன் மாற்றி வைத்து விட்டேன்.. என்று தான் வைத்ததை எடுத்து விட்டு நகர்ந்தான். மேரி, ஒரு வினாடியில் உன்னை...! சாரி..!! அழுதான் சாமுவேல். மாறாத அந்த சந்தேகம்...?!
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner - Quick Story:
கோபமாக பைக்கில் வந்து ஓர் இடத்தில் நிறுத்தி கண்ணாலே ஜாடை செய்து ஹும் என்றான். எதிரில் இருந்த அந்த லுங்கிக்காரன் அரிவாள் எடுத்து ஒரே சீவு. வெட்டிச் சாய்த்தான் . குபீர் என்று கொப்பளித்து வந்தது தண்ணீர். நாப்பது என்றான். வேறு வழியின்றி பணத்தைக் கொடுத்தான் இளநீரை வாங்கிக் கொண்டு.

One liner - Quick Story:
இந்த வினோதத்தை விபரீதத்தை எங்கு போய் சொல்ல? பல இடங்களில் நடந்தது தான் இந்த ஊரிலும் நடந்தது. இரவு வரை அவன் தான் காத்தான். இரவுக்குப் பிறகு இவன் தான் காத்தான். காலையில் காணோம். கடவுள் சிலை ஒன்றும் காவல் காப்பவனும்.
Dr. Balasandilyan

One liner - Quick Story:
சற்று அவசரம் தான். பாதுகாப்பும் மிக முக்கியம் ஆயிற்றே. என்ன செய்வது? யார் நமக்கு உதவுவார் ? நமக்கு நாமே தான் பொறுப்பு. நம்பிக்கை விடாமல் இடம் தேடி குறுக்கும் நெடுக்கும் அலைந்தது Anniyan அம்பியை போல. பிரசவ வேதனையில் பூனை.

One liner - Quick Story:
வீடே ரெண்டு பட்டுக் கொண்டு இருந்தது. அலுவலகத்தில் இருந்து சற்று முன்பு தான் நுழைந்திருந்த ராகுலுக்கு தலையும் காலும் புரியவில்லை. ஏன் தனது அம்மா இப்படிக் கத்தறாங்க, "உணமையச் சொல்... யார் அந்த வடையை தின்னது? அது எலி பிடிக்க விசம் தடவி வைத்திருந்தேன்...!" அது கேட்டவுடன் வாந்தி எடுக்க ஓடினான் எதிர்வீட்டுப் பையன் கிட்டு. ராமு அவனை அள்ளித் தூக்கி காரில் போட்டு ஆஸ்பத்திரி விரைந்தான். இப்போது டென்சன் டாக்டருக்கு...!
- Dr. Balasandilyan

One liner- Quick Story:
குழந்தைக்கு உடல்நிலை படுத்திக்கொண்டே இருந்தது. தெரிந்த பெரியவர் ஒருவர் வீடு வந்திருந்த பொழுது உங்களுக்கு மிகவும் பிடித்த இனிப்பு ஒன்று செய்து இறைவனுக்கு படையுங்கள். பிறகு சிலருக்கு அதை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். இதே போல ஏழு செவ்வாய் செய்யுங்கள் என்றார். இவளும் கேசரி செய்து 'அவன்' முன்பு வைத்து பிரார்த்தனை செய்தாள். கண் திறந்த போது கேசரி இல்லை. பறந்து போனது நம்பிக்கை. அன்றோடு நிறுத்தினாள் நைவேத்யம்.
- Dr/ Balasandilyan

One Liner - Quick Story by
Dr. Balasandilyan
அது ஒரு டிவி ரியாலிட்டி ஷோ. செமி பைனல் நிகழ்வில் அன்று டெடிகேஷன் ரவுண்டு. எல்லோரும் அம்மாவைப் பற்றி பாட வேண்டும். இவனும் பாடினான். இவனுக்கு மட்டுமே தெரியும் அவள் ஐ சி யு வில் இருப்பது. கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படாமல் பாடினான். சுருதி சுத்தமாக இருந்தது அந்தப் பாடல். ஜட்ஜ் சொன்னார் சுருதி 'மாதா' உன் பாட்டில் ஒளிர்கிறாள். மிகப் பிரமாதம். அந்த தருணம் தனது அம்மா பிழைத்து விடுவாள் என்று புரிந்து கொண்டு மேடையில் அப்படியே விழுந்து வணங்கினான்.


Bala's little flash poems

உன்னோடு கைகோர்த்து
நடந்த போது தான்...அது
நடந்தது...
என் கடிகாரத்தில்
சின்ன முள்ளும் பெரியது போல்
சீறும் வேகத்தில்..!
உன்னை நினைந்து நினைந்து
பார்க்கும் போது தான்
நினைத்தேன் 
காப்பீடு
ஏன் எடுத்தேன் என்று...
ஆயுள் நீளும் என்பதை
மனது உறுதியாக சொன்னது..!!
- பாலசாண்டில்யன்

வாழ வேண்டும் என்பது
உயிர் நோக்கம்
சிறப்புடன்
வாழ வேண்டும் என்பது
உயர் நோக்கம்!!
இனிப்பு பிரச்சனையால்
இன்சுலின் சிக்கல்
கசப்பு பிரச்சனை என்றால்
'இன்'சொலின் சிக்கல்.
- பாலசாண்டில்யன்


சேதாரம் பற்றி
மகள் அம்மாவிற்கும்
மொபைல் பே பற்றி
மகன் அப்பாவிற்கும்
கணினி பற்றி 
மாணவன் ஆரிரியருக்கும்
கற்றுத் தந்தாலும்
எல்லாம் கற்றதாக நினைக்கும்
இளையவர்களுக்கு
இன்று யார் சொல்லித் தருவார் ?
ஒழுக்கம் மற்றும் பணிவு...!?
- டாக்டர் பாலசாண்டில்யன்


கரை புரண்டோடும் ஆற்றின் வெள்ளம்
அணை கட்டினால் விவசாயம்
அப்படியே விட்டால் சர்வநாசம்
அப்படித் தான் நம் அறிவும் ...
பயன்படுத்தா விடின் பாரம் ஆகும் ...


பாசம் சொரிந்தாலும் அன்பு
விலை போவதில்லை
பூக்கள் எறிந்து இறைச்
சிலை சாய்வதில்லை
பாக்கள் சொரிந்திடின் அவன்
அருள் ஓய்வதில்லை


யார் தொட்டாலும் சிகரம்
------------------------------------------
புல்வெளி காலுக்குள் சுகம்
சொல்வெளி காதுக்குள் புகும்
கட்டிப்பிடி காதல் புரியும் 
எட்டிப்பிடி வெற்றி தெரியும்
எடுத்து விடு உன்னைப் புரியும்
கொடுத்து விடு உலகைப் புரியும்
பேசிப் பார் அரங்கம் அதிரும்
யோசிப்பார் சுரங்கம் நிறையும்
அன்பாலே மனம் தொடு
அன்புக்கு சினம் விடு
- டாக்டர் பாலசாண்டில்யன்


Monday, May 14, 2018

அர்த்தமுள்ள உறவுகள்



அர்த்தமுள்ள உறவுகள்
- முனைவர் பாலசாண்டில்யன் 
மனநல ஆலோசகர்/மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் 

திரும்பிப் பார்க்கையில் நாம் விரும்பிப் பார்த்த சந்திப்புகள் மூலம் பல ஆயிரம் நபர்களை நாம் சந்தித்திருக்கக் கூடும், ஆனால் அவர்கள் இன்னும் நம்மோடு தொடர்பில் நட்பில் உறவில் இருக்கிறார்களா என்றால் விடை 'இல்லை' என்று தான் இருக்கும். 

பல தொடர்புகள் கடந்து போகும் அல்லது கடந்து போய் விட்ட உறவுகளாகவே இருக்கின்றன. ஒருவேளை நாம் ஓரிரு முறை மட்டும் அவர்களோடு தொடர்பில் இருந்து விட்டு பிறகு நமது வாழ்வில் அவர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லாத பொழுது அவர்களை மறந்திருக்கக் கூடும். மனதில் சிற்சில சிற்றலைகள் மட்டும் ஏற்படுத்தி விட்டு அவர்கள் நமது வாழ்வில் வந்தார் சென்றார் என்று ஆகிவிட்டார் எனலாம். 

அதே சமயம் வெகு சிலர் பல்லாண்டுகளாக நமது வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து இன்னும் கூட இருக்கிறார்கள். அவர்களோடு நாம் தொடர்ந்த தொடர்பில் இல்லாவிடினும், மீண்டும் தொடர்பு கொள்ளும் பொழுதெல்லாம் அந்த நட்பு உறவு உயிர்பெற்று விடுகிறது. தழைத்து ஓங்குகிறது என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. 

சிலர் தொழில்முறை நட்பு அல்லது உறவு தொடராது மற்றும் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்லக்கூடும். எனது அனுபவம் வேறு. இன்றும் பல்லாண்டுகளாக தொழில் ரீதியாக தொடங்கிய சிறு தொடர்பு பின்னாளில் நல்ல நட்பாக நெஞ்சில் நிலைத்த உறவாக மாறிவிட்ட ஆனந்தம் என் மனதை இன்னும் நிரப்புகிறது. 

கடந்து போகிற உறவு மற்றும் கடவுள் போல கூடவே துணை நிற்கும் உறவு என்று இருவிதமான உறவுகள் எல்லோருக்கும் உண்டு. நமது மனதை முழுமையாக திறந்து நட்பு பாராட்டி அன்பு நீர் வார்க்கும் முன்னரே மேம்போக்காக இருக்கும் போதே சில உறவுகள் முறிந்து போவதுண்டு. அவை தான் கடந்து போகும் உறவு என்பது. அப்படிப்பட்ட நண்பர்களோடு நாம் நமது உண்மை முகத்தை, சிரமங்களை, வெற்றிகளை, ரகசியங்களை பகிர்ந்து இருக்க மாட்டோம். அது ஒரு மேலோட்டமான உறவு மட்டுமே.

உண்மையான நட்பு அல்லது உறவு என்பது காலத்தை வெல்லும் ஒன்று. தினம் தினம்  நேரில் சந்திக்காவிடினும், முகநூல், ஈமெயில், வாட்ஸ் அப் என்று ஏதோ ஒரு விதத்தில் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த உறவு என்பது நிபந்தனைகளற்ற எதிர்பார்ப்பற்ற அர்த்தமுள்ள உறவாக இருக்கும்.

நிறைய நண்பர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் நினைத்ததுண்டு. ஏதோ ஓர் அற்ப காரணங்களுக்காக அவை முற்றிலுமே முறிந்து போன அனுபவமும் உண்டு. சிறு உரசல், சிறு புரிதலின்மை, இவைகளால் உறவு முற்றிலும் முறிந்து போன போது நான் வியந்து போய் இருக்கிறேன். இதற்கு நேர் மாறாக எவ்வளவோ தவறுகள் கோளாறுகள் புரிதலின்மைகள் இருந்த பொழுதும் சில நண்பர்கள் நமக்கான ஒரு இடத்தை அவர்கள் மனதில் அளித்து நம்மை உள்ளவாறே ஏற்றுக் கொண்டதால் தான் அந்த உறவு தப்பித்தது என்று என்னால் உறுதிப்பட சொல்ல முடியும். 

அவர்கள் நமது ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருந்து அழைக்காமல் வலிய வந்து உதவி நம்மை உயர்த்தியவர்கள் என்று சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது. 

சில நண்பர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மோடு ஒட்டிக் கொண்டு விட்டு அவர்களின் 'அந்த' ஒரு நோக்கம் நிறைவேறிய பின்னர் தானாகவே மெதுவாக பின்வாங்கி நம்மிடம் இருந்து விலகி விடுவார்கள். இவர்களையும் நமது நண்பர்கள் என்று பட்டியலில் சேர்ப்பது நிச்சயம் தவறு. 

நமது வாழ்வியல் மதிப்பீடுகள், ஒத்த கருத்துக்கள், விருப்ப வெறுப்புகள், வாழ்க்கை முறையில் ஒற்றுமை, கண்ணோட்டங்களில் சமன்பாடு என்று ஏதோ ஒரு விதத்தில் நம்மோடு ஒத்துப் போவதால் தான் சிலர் கடைசி வரை நமது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். 

மேம்போக்கான சில உறவுகளை நெருக்கமான ஒன்று என்று தவறாக நான் புரிந்து கொண்டு பின்னர் உணர்ந்ததும் உண்டு. சில உறவுகள் அர்த்தமற்றவை, தேவையற்றவை என்று கருதியது தவறு என்று உணர்த்துவது போல நீங்கா இடம் பிடித்து இன்னும் தொடர்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 

சிலர் வெளியேறும் நோக்கோடு தான் நமது உள்ளத்தில் வந்தார்கள் என்பதை நமது உள்ளுணர்வே சில சமயம் உணர்த்தி விடும். உங்களுக்கும் அது நேர்ந்து இருக்கிறதா? நகமும் சதையும் ஆக நம்மோடு இரண்டற கலந்து நிற்கும் சில உறவுகளின் நட்புகளின் வலிமை மற்றும் உண்மைத்தன்மை புரிந்து கொண்டோம் என்று சொன்னால் நாம் ஒரு நாளும் அந்த நட்பை இழக்கத் துணிய மாட்டோம். 

சில உறவுகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கூட தளிர் போல வளர்ந்து மேம்படாத ஒன்றாக இருக்கும். அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். சில உறவுகள் நாம் எதிர்பார்த்ததை விட ஆன்மீக வலிமை கொண்ட ஒன்றாக இருக்கும். 

எல்லா உறவுகளையும் நட்புகளையும் நம்மால் தக்க வைத்துக் கொண்டு கடைசி வரை பராமரிக்க முடிவதில்லை. கடந்து போகிற ரயில் சிநேகம் போன்ற நட்புகளை எண்ணி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கண்களைப் போல காக்க வேண்டிய சில உறவுகளை நட்புகளை வளர்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதே சமயம் காணாமல் போய் விட்ட உறவுகளை எண்ணி கவலை கொள்ளாமல் இருக்கும் உறவை உன்னதமாக போற்றிடுவோம். அர்த்தமுள்ள உறவுகளே வாழ்க்கையின் ஆதாரம். மீதமெல்லாம் சேதாரமே. மனதுக்கு தெரியும் உறவின் மகத்துவம். மனம் சொல்வதை சில நேரம் மௌனமாக இருந்து தான் கேட்க வேண்டும். 

Sunday, May 13, 2018

எச்சரிக்கை மணி




எச்சரிக்கை மணி 
- டாக்டர் பாலசாண்டில்யன் 
தொழில் ஆலோசகர் - CEO www.visionunlimited.in
Thought Leader/Transformation Coach/Psychologist/Leading Behavioral Catalyst

ஆட்டோமேஷன் என்று சொல்லக்கூடிய இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் வேகம் சற்று குறைவு தான் என்றே சொல்ல இயலாது. சூடு பிடித்து விட்டது எனும் இந்த எச்சரிக்கை மணியை நான் தயங்காமல் அடிக்க விரும்புகிறேன்.
முழுமையாக துணி தோய்த்து தரும் வாஷிங் மெஷின், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மால்களில் இயங்கும் எஸ்கலேட்டர், வங்கிகளில் பணம் எண்ணும் இயந்திரம், மற்றும் பாஸ்புக் என்ட்ரி போடும் இயந்திரம், பணம் பெறும் இயந்திரம், பார் கோட் பில்லிங் இயந்திரம், இப்படி ஏற்கனவே நாம் காண்கின்ற அல்லது பயன்படுத்துகின்ற இயந்திரங்களைப் பற்றி நான் இங்கே சொல்லவில்லை.
பல தொழிற்சாலைகளில் மூளையை அதிகம் பயன்படுத்தாத ரொட்டின் (routine) என்று சொல்லக்கூடிய வழக்கமான செயலப்பாடுகளை மனிதர்கள் செய்கிறார்கள் என்றால் அங்கே மனிதர்கள் தேவை இல்லை. அங்கே ரோபோ என்று சொல்லக்கூடிய தானியங்கி இயந்திரங்களின் பயன்பாடு இன்று அதிகமாகி வருகிறது.
இதன் காரணமாக பல பன்னாட்டு உற்பத்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹெல்பர் என்று சொல்லக்கூடிய உதவியாளர்களுக்கு வேலை போய் விட்டது. அங்கே ஒரு ரோபோ வந்து அதிவேகமாக அற்புதமாக அசுரத்தனமாக வேலை செய்கிறது. அதிக உற்பத்தி, உற்பத்தித்திறன், சீரான தரம், செலவுக் கட்டுப்பாடு, லாபம் இவற்றை முன்வைத்து இந்த நடவடிக்கைகளில் நிறுவனங்கள் சில முடிவுகளை எடுக்கின்றன.
கிட்டத்தட்ட 1200 கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரு ரோபோவை ஒரு இந்திய தனியார் வங்கி அறிமுகம் செய்து உள்ளது. இதனைப் பார்க்கும் பொழுது உற்பத்தி துறை தவிர வணிகம் மற்றும் சேவை துறைகளிலும் இந்திரமயமாக்கல் அதிவேகமாக பரவி வருகிறது என உணரலாம்.
தவிர 'டிஜிட்டல் இரா' எனும் இந்த நவீன யுகத்தில் கண்ணுக்கு புலப்படாத போட்டியும் நிலவுகிறது. நிகான் கேனோன் போன்ற கேமரா நிறுவனங்களுக்கு போட்டி சாம்சங் மற்றும் விவோ மொபைல் போன்கள் எனலாம். எச்எம்வி மற்றும் சோனி நிறுவனங்களை விட அதிகமாக இசையை விற்பது ஏர்டெல் டெலிகம்யூனிகேஷன் நிறுவனம் தான் என்று எனது நண்பர் முனைவர் மேகநாதன் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
இந்த நிலை பல்வேறு இடங்களில் நடக்கலாம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது துணிமணிகள் விற்கும் ஒரு மால் ஆக இருக்கலாம். வாடிக்கையாளர்களோடு அளவளாவி வணிகம் பெருக்கும் ஒரு விற்பனையாளருக்கு பதில் வெறுமனே அவர்களின் சந்தேகங்களுக்கு மட்டும் விடை அளிக்கும் ஒரு கஸ்டமர் கேர் மனிதர் மட்டுமே அங்கு இருக்கிறார் என்றால் அங்கே மனிதர்கள் தேவை இல்லை என்ற ஒரு நிலை உருவாகி வருகிறது. அப்போது இன்று இருப்பது போல பிரம்மாண்டமான துணிக்கடைகளில் அதிகம் படிக்காத பல சேல்ஸ்மேன்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலை இழக்க நேரிடும் என்ற ஒரு கணிப்பு உருவாகி உள்ளது. அவர்கள் வேறு சில திறன்களை வளர்த்துக் கொண்டால் பிழைத்தார்கள்.
மேலும் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதை விட மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களே இதற்கு சாட்சி.
பண பரிவர்த்தனை செய்ய மக்கள் இன்று வங்கிகளுக்கு செல்லுவதற்கு பதில் மொபைல் ஆப் பலவற்றின் வாயிலாக அதனை செய்கிறார்கள் என்பது யாவருமே அறிந்தது தான்.
குற்றங்கள் பெருகி வரும் இன்றைய சூழலில் துப்பு துலக்க நாய்களுக்கு பதில் பெரும்பாலும் சிசிடிவி காமெராக்கள், மொபைல் ஆடியோ மற்றும் விடீயோக்கள் தான் பயன்படுகின்றன.
ஹோட்டல்களில் உணவு கொண்டு வந்து மேசையில் பரிமாற இனி ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் (ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளது போல) பயன்பாட்டில் விரைவில் வரும். அப்போது உணவு சப்ளையர்கள் பலருக்கு வேலை போய் விடும் என்பது ஏற்க கடினமான ஒன்று என்றாலும் உண்மை நிலை அது தான். பெட்ரோல் பங்கில் கூட பணியாளர்கள் வேலை இழக்கலாம்.
துணிக்கடைகளில் ட்ரையல் ரூம் செல்ல வேண்டாம் எனும் தொழில்நுட்பம் அதிவேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட கேமெராக்கள் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட ஆடையில் எப்படி இருப்போம் என்று பட்டனை அழுத்தினால் தெரிந்து விடும். போட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஓகே பட்டனை அழுத்தினால் அந்த துணி தானாகவே கேஷ் கவுண்டருக்கு சென்று விடும். இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் வந்து விட்டால் பலருக்கு வேலை போய் விடும்.
அயல்நாடுகளில் பிள்ளைகளுடன் செல்ல ரோபோ குரு உருவாக்கி உள்ளார்கள். இது மாணவர்களோடு பள்ளி சென்று எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. அங்கே ஒரு படி மேலே சென்று மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லை அன்று பள்ளி செல்ல முடியவில்லை எனும் சூழலில் அவர்களுக்கு பதில் இந்த ரோபோ குரு பள்ளி செல்லும் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில் வெகு விரைவில் ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ குரு வரலாம். பள்ளி மேற்படிப்பு, மற்றும் கல்லூரி மேற்படிப்பு, திறன் மேம்பாடு இவற்றிற்கு மட்டும் ஆசிரியர்கள் இருப்பார்கள். மற்ற இடங்களில் அங்கே இயந்திரம் வந்து விடும் எனும் அபாயம் உருவாகி வருகிறது. நிறைய பாட்டு வாத்தியார்கள் இன்று ஸ்கைப் மூலம் பல வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.
இயந்திர காதலிகள், காதலர்கள், சமைக்கும் ரோபோக்கள், என்று கூட அயல்நாடுகளில் முயற்சி செய்யத் தொடங்கி விட்டார்கள். இங்கு அவை எல்லாம் வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று சொல்லி விட முடியாது.
கையில் அணியும் வாட்ச் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை, எவ்வளவு நடந்து இருக்கிறோம், எத்தனை கலோரி செலவு ஆகி உள்ளது, போன் பேசுதல், போட்டோ எடுத்தல், உடலில் உள்ள நோய் அறிகுறிகள் எல்லாமே தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. அப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்தும் பல இயந்திரங்கள், கருவிகள் இவை எல்லாம் பயனற்று போய் விடும் நிலை உருவாகி வருகிறது. சில கருவிகளை இயக்கம் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போகும்.
ஐபிஎல் பார்க்கிறோம். முன் போல ஒரு கபில்தேவ், ரவி சாஸ்திரி இவர்கள் மட்டுமா ஆல்ரௌண்டர்கள் ? ரெய்னா, ஜடேஜா, பிராவோ, என்று ஒவ்வொருவரும் ஆல்ரௌண்டர்கள் தான். பன்முகத்தன்மை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறார்கள்.
இங்கே பலருக்கு வேலை போய் விடும் எனும் எச்சரிக்கை மணி இந்த கட்டுரை என்று கொள்ள வேண்டாம். பழையன கழிந்து புதியன புகுகின்ற நேரம் என்று கொள்ள வேண்டும். அதாவது ஏற்கனவே நம்மிடம் இருக்கும் திறன் இனி பயனற்று போகும். புதிய திறன்களை அறிய வேண்டி வரும். நாம் செய்யும் தற்போதைய வேலைக்கு பதில் புதிய வேலை செய்யும் நிலை உருவாகும்.
ஏற்கனவே மனிதர்கள் செய்யும் கைமுறை வேலைகள் பலவற்றை இன்று கருவிகள் அல்லது இயந்திரம் மூலம் செய்யப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். அப்படி நாளுக்கு நாள் மேலும் இயந்திரமாக்கும் சூழல் உருவாகும் பொழுது நாம் அந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியம் ஆகிறது.
வாக்கிய அமைப்பு, இலக்கணம் இவற்றிற்கு எப்படி கணினி உதவுகிறதோ, போட்டோக்கள் மற்றும் எக்ஸ்ரே இவை ஈரத்தை காய வைக்காமல் உடனே கணினி மூலம் பிரிண்ட் ஆகி வருகிறதோ, திரைப்படப் பாட்டுகள் இசை அமைப்பதில், அசுரவேக பிரின்டிங் என்று பலதுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிடும் இந்த சூழலில், வருங்கால இளைஞர்கள் அதற்கேற்ப உள்ள படிப்புகளை தேர்வு செய்து படித்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏதாவது ஒரு இருக்கின்ற படிப்பை படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று கூறுவது இனி கூடாது. அதே போல ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் புதிய மாறி வரும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டால் அவர்கள் வேலை பிழைக்கும். இல்லையேல் நோக்கியா போன்ற நிறுவனங்களில் திடீர் என்று வேலை போனது போல பலருக்கு நேரிடலாம். அதனைத் தவிர்க்க அன்றாடம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எச்சரிக்கை மணி.
ரெடிமேடாக காம்பௌண்ட் சுவர்கள் கூட தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து விட்ட இந்த தருணம், குறைந்த பட்சம் ஒவ்வொரு மனிதரும் நான்கு அல்லது ஐந்து திறன் கொண்டிருத்தல் வேண்டும். தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்று இல்லாமல் இருக்கும் புதிய வாய்ப்புகளுக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ளுதல் தான் இதற்கு முக்கிய தீர்வு.
இயந்திரமயமாக்கல் ஒரு புறம் வேகமாக பரவி வந்தாலும், சிந்திக்கும் செயல்படுத்தும் பணிகள் எப்போதும் மனிதர்களே செய்வர். ஆகவே சிந்திக்கும் புதிய யுக்திகளை செயல்படுத்தும் நுட்பமான மனிதர்களாக நாமும் மாறுவோம். மாற்றத்தோடு வேகமாக நாமும் மாறுவோம். மாற்றம் தான் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுவோம்.
செயற்கை நுண்ணறிவு எனும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் மிக அதிகமாக ஒவ்வொரு துறையிலும் நுழையக் காத்திருக்கும் மிக முக்கிய தருணம் இது. இதில் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் என்பது மிகவும் பொருத்தமான வரி தான்.


Cherish Your happy moments - my article in English






Thursday, May 10, 2018

என்னைப் போலவே என் மாணவர்கள்

என்னைப் போலவே என் மாணவர்கள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 
(மனநல/கல்வி/தொழில்  ஆலோசகர், மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர்)

அது 1987 ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வேலை பார்த்து விட்டு, ஓராண்டு மஸ்கட்டில் வேலை பார்த்து விட்டு சென்னை திரும்பி விட்டேன். நான்கைந்து மாதங்கள் வேலை எதுவும் கிடைக்கவில்லை. திரும்பவும் மும்பை அல்லது வெளிநாடு செல்லலாமா என்று குழம்பித் திரிந்த பொழுது இண்டோ இன்டெர்நேஷனல் எனும் தோலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர் வேலை கிடைத்தது. அப்போது இளங்கலை படிப்பிற்கு பிறகு ஐந்து பட்டயங்கள் பெற்று இருந்தேன். ஹிந்தி நன்றாக பேசத் தெரியும்.

இரவு பகலாக உழைத்தேன். அடிமட்ட உழைப்பாளி தோழனிடம் கூட வேலை கற்றுக் கொண்டேன். பிறகு தைக்கத் தெரியாது. மற்றபடி பல்வேறு விஷயங்கள் தெரிந்து கொண்டேன். ஒரு தோலை எடுத்து முகர்ந்து பார்த்தாலே அது ஷீப் அல்லது கோட் அல்லது கௌ லெதர் என்று சொல்லி விடும் அளவிற்கு தேர்ந்து போனேன். இரண்டே வருடங்களில் பேக்டரி மேனேஜர் ஆனேன். பிறகு ஹெட் ஆபீஸில் அமர்ந்து நான்கு பேக்டரிகளை மேனேஜ் செய்யும் அளவிற்கு உயர்ந்தேன். நல்ல பல தொடர்புகள் ஏற்பட்டது. வெளிநாடுகள் சென்று வந்தேன். அதற்குள் மேலும் நான்கு பட்டய படிப்புகள் முடித்தேன். 

பத்து ஆண்டுகள் நிறைவு. பிறகு 1997 ஆம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டிடியூட் அப் லெதர் ப்ராடக்ட்ஸ் எனும் தொழிற்கல்வி நிறுவனத்தின் செயல் இயக்குனராக சேர்ந்தேன். அங்கே 2007 ஆண்டு வரை பணியாற்றினேன். கிட்டத்தட்ட பத்தரை ஆண்டுகள். அங்கே காலணி, தோலாடை மற்றும் தோல் பொருட்கள் என்று மூன்று பிரிவிலும் சான்றிதழ், பட்டயம், மற்றும் பிஜி டிப்ளமோ படிப்பு இருந்தது. ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 300 கும் மேற்பட்டவர்கள் படித்து முடித்து பணிக்கு சென்றார்கள்.  ஆண்டுக்கு இருமுறை அட்மிஷன் செய்தோம். 

தவிர எங்கள் பயிற்சி நிறுவனம் குறித்து பல தனியார் தொலைக்காட்சிகளில் எனது பேட்டி வந்தது. எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, மற்றும் மைனாரிட்டி வகுப்பை சார்ந்தவர்களுக்கு தமிழக அரசுடன் இணைந்து இலவசமாக பயிற்சி, உதவித்தொகை, வேலை வாய்ப்பு என்று 5000 மாணவர்களுக்கு மேல் பயன்பெற்றார்கள். மேலும் சுய உதவிக் குழு பெண்கள், ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்கள், சாலைகளில் பங்க் கடை வைத்து காலணி தைப்பவர்கள் 150 பேருக்கும் மேலாக எங்கள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பலன் பெற்றார்கள். தோலாடை பற்றி முதன்முதலாக நூல் எழுதி வெளியிட்ட பெருமை எனக்கு கிடைத்தது.

இந்த கதை ஒரு புறம் இருக்கட்டும். 

2008 ஆம் ஆண்டு விஷன் அன்லிமிடெட் என்ற மனிதவள பயிற்சி நிறுவனம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்து ஒன்றரை லட்சம் பேருக்கு மேலாக பயிற்சி அளிக்கும் வாய்ப்பினை பெற்றேன். இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளேன். தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் பயிற்சி அளித்துள்ளேன். அரசு ஊழியர்கள், நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், நிறுவன அதிபர்கள், மேலாளர்கள், வங்கி அதிகாரிகள் என்று நான் சந்திக்காத துறை கிடையாது. ஆனால் தோல் துறையில் 20 ஆண்டுகள் பணி செய்த பிறகும் ஓரிரு நிறுவனங்கள் தவிர வேறு எந்த தோல் துறை சார்ந்த நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளவில்லை. அவர்களுக்கு பயிற்சியும் தரவில்லை. இப்படித்தான் என்னிடம் பயின்ற மாணவர்களும் என்பதை பின்னாளில் அறிந்த பொழுது ஆச்சரியம் கொண்டேன். 

பல சம்பவங்கள் இருந்தாலும் மூன்று நிகழ்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

ஒரு முறை விருகம்பாக்கத்தில் எனது நண்பர் முனைவர் தென்காசி கணேசன் அவர்களின் இல்லம் செல்ல வேண்டும். நான் சென்ற ஓலா வண்டி என்னை எங்கோ தவறுதலாக வேறு தெருவில் இறக்கி விட்டு சென்று விட்டார். அங்கே குடிநீர் சப்ளை செய்யும் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு வந்தார். சார் நீங்க இங்கே யாரைத் தேடுகிறீர்கள் என்றார். நான் விவரம் சொன்னேன். ஏறுங்கள் வண்டியில், நான் உங்களிடம் பயின்ற மாணவன், என்று  இரண்டு தெரு தள்ளி இருக்கும் விலாசத்தில் கொண்டு போய் இறக்கும் பொழுது சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எனக்கு அவரை நினைவில் இல்லை. 

அடுத்த சம்பவம் அதை விட ஆச்சரியம். என் மகள் ஒரு முறை பீச் சென்ற பொழுது தனது பர்ஸை தொலைத்து விட்டார். தெரியாத நபர் ஒருவர் எனக்கு போன் செய்து உங்கள் மகளின் ஆதார் கார்ட், லைசன்ஸ், போன்ற டாக்குமெண்ட்ஸ் என்னிடம் உள்ளது. நீங்கள் டி.நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பேசியவர் சற்று கறாராக பேசினார். நானும் அங்கே போய் காத்துக் கிடந்தேன். ஆட்டோ ஒன்று வந்து யு டர்ன் போட்டு நின்றது. இறங்கியவர் என்னைக் கண்டு ஆச்சரியத்தோடு இரண்டு கைகளை எடுத்து கும்பிட்டு, "சார் உங்க பொண்ணுடையதா?" என்றார். நான் ரொம்ப வெகுளியாக உங்களுக்கு என்னை முன்பே தெரியுமா என்று கேட்டேன். அவர் என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சார் நான் உங்கள் ஐஐஎல்பி மாணவர். நல்லா இருக்கீங்களா என்று எனது காலைத் தொட வந்தார். நான் தடுத்து நிறுத்தினேன். நான் அவருக்கு கொடுத்த பெட்ரோல் செலவு பணத்தை வாங்க மறுத்தார். பிறகு அவர் சட்டைபையில் பணத்தை போட்டு விட்டு தாங்க்யூ சொன்னேன். 

இன்று நடந்ததும் சற்று ஆச்சரியம் தான். தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ள 2017 ஆண்டு பிரசுரம் செய்துள்ள நூல்களுக்கு பரிசு எனும் திட்டத்தின் படி விண்ணப்பம், வரைவோலை, மற்றும் நூலின் பத்து பிரதிகள் கொடுக்க தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகம் சென்றேன். முதலில் ஒரு அதிகாரியை சந்தித்தேன். அவர் ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்து விட்டு அங்கே அமர்ந்து இருக்கும் ஒருவரின் பெயர் சொல்லி அவரிடம் இந்த நூல்களையும் விண்ணப்பத்தையும் கொடுத்து விடுங்கள் என்றார். நான் அவர் சீட்டை தேடிச் சென்றேன். என்னை ஒரு முறை இரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு எழுந்து நின்று வணக்கம் சொன்னார். உங்களுக்கு என்னைத் தெரியுமா? என்று கேட்டேன் வழக்கம் போல. அவர் புன்னகையுடன் சார் நான் உங்கள் மாணவன் ஐஐஎல்பி நிறுவனத்தில் 2002 ஆம் ஆண்டு படித்தேன். இங்கே மூன்று ஆண்டுகளாக பணியாற்றுகிறேன் என்றார். என்ன ஆச்சரியம். மன்னிக்கவும் எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லை என்றேன். அவர் நன்றாக வளர்ந்து நடிகர் விஜயசேதுபதி போல இருந்தார்.

என்னைப் போலத்தான் எனது மாணவர்களும். ஒருவரும் தான் படித்த லெதர் துறையில் இல்லை. எங்கெங்கோ பணியாற்றி வாழ்க்கையை வெற்றிகரகமாக நடத்தி வருகிறார்கள். (லெதர் துறை சரியாக வாய்ப்புகள் மற்றும் வருமானம் தரவில்லை என்பதும் ஒரு காரணம்). உங்கள் மாணவர் என்று சொல்லும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு எல்லையே இல்லை. ஏதோ ஒரு விதத்தில் ஒரு சிறு மாற்றம் என்னால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கும் பொழுது மனநிறைவு ஏற்படுகிறது. எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லா வளங்களும் பெற்று இன்பமாக இருக்கட்டும். இதுவே எனது பிரார்த்தனை. 

Wednesday, May 9, 2018

மந்தை மனநிலை

மான்களின் மனநிலை
- டாக்டர் பாலசாண்டில்யன் 

குடும்பத்தோடு வெகுநாள் கழித்து ஒரு திரைப்படம் காணச் சென்றனர் எனது நண்பரும் அவர் இல்லத்தாரும். படம் தொடங்கப் போகிறது. விளம்பரம் திரையில் ஓடிக் கொண்டு இருக்கிறது. தியேட்டரில் இவர்களைத் தவிர யாருமே இல்லை பால்கனியில். எனது நண்பரின் மகன் பால்கனி வழியாக கீழே எட்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம். அங்கும் யாருமே இல்லை. என்ன வினோதம். நமது குடும்பம் மட்டும் பார்க்கும் படமா? தப்பு பண்ணி விட்டோமா அப்பா? என்று கேட்டான். 

அட ஒரு ஹோம் தியேட்டர் மாதிரி நமக்கு மட்டும் ஒரு படம். யாரும் இல்லை நம்மை தொந்தரவு செய்ய என்று நினைக்கத் தோன்றவில்லை. ஏன் ஏனில் எப்போதும் முதல் சீன் அல்லது டைட்டில் போடும் போதே விசில் சத்தம் வரும். ஹீரோ அறிமுகம் போது கைதட்டல் மற்றும் விசில் சத்தம் கேட்கவும் வேண்டுமோ? அப்படித் தானே பழகி விட்டோம்...!!

படம் முடிந்து வீடு திரும்பியதும் எனக்கு போன் போட்டு புலம்பி விட்டான் என் நண்பன். ச ...என்னப்பா இது போல இதற்கு முன்பு பார்த்ததில்லை. யாருமே இல்லாத ஒரு தியேட்டரில் எப்படி படம் பார்ப்பது, பயந்து தான் போய் விட்டேன். கொஞ்சம் குழப்பமும் தான். நாம் வேறு படம் போய் இருக்கலாமே என்று. படம் நன்றாகத் தான் இருந்தது. ரசித்து பார்க்கும் மனம் சற்றும் இல்லை. இதை  மான்கள் அல்லது மந்தை மனநிலை தான் என்று சொல்லலாம்.

விலங்குகள் மட்டும் கூட்டம் கூட்டமாக இருப்பதில்லை. மனிதர்களும் தான். கூடி வாழும் இனமல்லவா நாம்? மக்களோடு மக்களாக இருக்கவே பெரும்பாலும் விரும்புகிறோம். சுற்றி இருப்பவர்கள் நமக்கு முன்பின் தெரியாத அந்நியர்கள் என்றாலும் அந்த ஒரு கூட்டத்தையே மனம் நாடுகிறது. இது தான் நமது இயல்பு.

இந்த மனோபாவம்  தியேட்டரில் மட்டுமல்ல. நாம் செல்லும் பிற இடங்களிலும் தான். உணவு உண்ண ஹோட்டல்கள் சென்றாலும், காலியாக இருக்கும் இடம் சென்று விட்டால், உணவு இங்கு நன்றாக இருக்காதோ, சேவை நன்றாக இருக்காதோ? ஏன் இங்கு கூட்டம் இல்லை. அப்படியே சாப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நன்றாக இருந்தாலும் நேற்று சமைத்ததோ இன்று சமைத்ததோ என்ற சந்தேகமும் கூடவே வருகிறது. 

மாறாக வேறு ஒரு ஹோட்டல் போகிறோம். அங்கு கூட்டம் அலை மோதுகிறது. நமது பெயர் கொடுத்து அரை மணி நேரம் கழித்து உள்ளே அழைக்கிறார்கள். வந்து ஆர்டர் எடுக்க மேலும் இருபது நிமிடம். எல்லோரும் நிறைய கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். நமக்கும் வருகிறது. பசியோடு உணவில் கை வைத்து ஒரு வாய் உண்டு பார்த்தால் ருசி ரொம்ப சுமார். நமது மனதில் கேட்கும் குரல், "வாயில் வைக்க வணங்கலை...எப்படி தான் இவ்வளவு கூட்டம் வருகிறதோ? விலையும் அதிகம், வந்தால் காத்திருக்கும் நேரமும் அதிகம். ஒன்றும் புரியவில்லையே!" கதவு அருகில், ஏன் கை அலம்பும் வாஷ் பேசின் அருகில் இடம் கொடுத்தால் கூட அமர்ந்து கொள்ளுகிற கூட்டம் பார்த்து குழம்பித் தான் போகிறோம். 

என்னவோ இருக்கிறது இந்த ஹோட்டலில். அது தான் இவ்வளவு கூட்டம் என்று விளக்கம் தரும் இளைய தலைமுறை. நாம் போன நேரம் தவறாக இருக்கலாம். அல்லது நாம் ஆர்டர் செய்த உணவு அயிட்டம் தவறாக இருக்கலாம். அதற்கு தான் பெரும்பாலான மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து அதையே நாமும் ஆர்டர் செய்ய வேண்டும் எனும் வேறு ஒரு இளைஞர். 

அதெல்லாம் இல்லை நான் ஏற்கனவே நெட்டில் மக்கள் போட்டுள்ள கமெண்ட் பார்த்து விட்டுத் தான் இங்கு உங்களை கூட்டி வந்தேன். இப்போது இந்த ஹோட்டல் தான் ட்ரெண்டிங். போன வாரம் கூட என் பிரென்ட் பிறந்த நாள் இங்கு நடந்தது. பேஸ்புக்கில் எவ்வளவு போட்டோ தெரியுமா? இது இன்னொரு குரல்.

இன்னொரு விஷயம் கவனிக்க நேர்ந்தது. விடுமுறைக்கு ஊர் செல்வது. அங்கு தங்கும் விடுதி அல்லது ஹோட்டல் சாய்ஸ். அது மட்டுமா? அங்கு வருபவர்கள் எல்லோரும் பெரிய மனிதர்கள். நாம் எல்லோருமே ஜீன்ஸ் டிஷர்ட் எடுத்துக் கொள்ளுவோம். அங்கு வருபவர்கள் அப்படித் தான் வருவார்கள். அப்படி இல்லை என்றால் குர்தா பைஜாமா போடலாம். சும்மா புடவை வேட்டி என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்.- இது வேறு ஒரு வீட்டில் அலசப்படும் விஷயம். 

ஆக இந்த மான் அல்லது மந்தை மனநிலை தான் ஐபிஎல் டிக்கெட் வாங்குவது, பிள்ளையை சிங்கப்பூரில் படிக்க வைப்பது, ஹனிமூனுக்கு மாலத்தீவு செல்வது, ஏன் திருமணத்தையே அந்தமானில் வைப்பது, நீட் எழுதச் சொல்லி மகனை தொந்தரவு செய்வது, கொஞ்சம் கால் வலித்தாலும் குறிப்பிட்ட ஒரு ஹாஸ்பிடல் செல்வது, மனக் குழப்பம் என்றால் அந்த சாமியாரிடம் செல்வது ...இப்படித் தான் எல்லோருமே ஒரு சின்னத்தில் ஓட்டு போட்டு அதே ஆசாமியை ஆட்சிக்கு கொணர்வது எல்லாமே. 

இந்த மந்தை நிலை சற்று மந்த நிலை கூடத்தான். கூட்டம் அதிகமாக அதிகமாக மூளை ஸ்தம்பித்து போய் யோசிப்பதையே நிறுத்தி விடுகிறது. சுய சிந்தனை, சொந்த கருத்து இவை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் புதிது தான். 

என்ன நான் தனியாக ஏதாவது பிதற்றுகிறேனா ...இல்லை மக்கள் கருத்தைத் தான் மனக் குரலைத் தான் சொல்கிறேனா? எழுதும் போது சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நான் மட்டுமே இருக்கிறேன். என்ன படித்து விட்டு லைக் அல்லது கமெண்ட் போடுவீர்களா? பார்க்கலாம் போஸ்ட் போட்டு விட்டு. சும்மா சொல்லி வைக்கிறேன் தாங்க்ஸ் என்று. 

Tuesday, May 8, 2018

ஒரு பக்கக் கதை

பிழைத்தது பணம் 
- ஒரு பக்கக் கதை 
- முனைவர் பாலசாண்டில்யன் - 0940027810

ராஜனுக்கு வயது 75 இருக்கும். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று விழுப்புணர்வுக்கூட்டங்கள் நடத்தி வாழ்வியல் மதிப்புகள் பற்றிய போதனைகளை சொல்லிவிட்டு வருவார். தினமுமே மனைவி செல்லத்திற்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்வார். வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பார். வீட்டிற்குச் சாமான்கள் வாங்கிப் போடுவார். உறவினர்கள் வீட்டிற்கு சில சமயம் சென்று வருவார். 

ஒரே பையன் வெளியூரில் வேலை. அவ்வப்போது வெளிநாடும் சென்று விடுவான். 

ஒரு சமயம் தனது பையன் ஊரிலிருந்து வந்திருந்த போது  வெகுநேரம் காலை பேசிக் கொண்டு இருந்து விட்டு தாமதமாக குளிக்கச் சென்றார். வெளியில் வரும் போது யாரோ தள்ளியது போல உணர்ந்து இடுப்பில் துண்டுடனே கட்டிலில் அமர்ந்து கொண்டார்.  கண்கள் சொருகுவது இருந்த அவரை  மனைவி செல்லமும் மகன் மகேஷும் அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டு சென்றனர். 

ராஜனை உள்ளே ஒரு படுக்கை வண்டியில் போட்டு தள்ளிக் கொண்டு விரைந்தனர். செல்லம் அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தாள். மகேஷ் தனது மாமாவிற்கு போன் செய்து விட்டு, அப்பா அட்மிஷன் செய்திட அங்கே கொடுத்த பேப்பரில் எழுதிக் கொடுத்து விட்டு பத்தாயிரம் பணமும் செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டான்.

மகேஷின் மாமா ஒரு சமூக ஆர்வலர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என்பதால் நேரே சென்று தனது உறவினரின் பெயர் சொல்லி அவர் எங்கே என்று வினவினார் . தனது அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு உள்ளே நுழைந்து விட்ட போது சில நர்சுகள், மற்றும் இரண்டு டாக்டர்கள் ராஜனை நெஞ்சில் குத்திக்கொண்டு இருந்தனர். ஒரு ஊசியும் போட தயாராக இருந்தனர். மகேஷ் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு நடப்பது என்ன என்ற விபரம் கேட்ட போது புரிந்து கொண்டான் ராஜன் அங்கே கொண்டு வரும் போதே இறந்து விட்டார் என்று. 

அடுத்த அரை மணி நேரத்தில் ராஜன் பொட்டலம் கட்டப்பட்டு சடலமாக ஒப்படைக்கப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டார். ஏற்கனவே கட்டிய பணத்தில் மீதி என்று மூன்றாயிரம் ரூபாய் என்று கொடுக்கப்பட்டது.

மாமன்  வருகையால் பொட்டலத்தோடு கிடைத்தது சில ஆயிரங்கள் மீதியாய். இல்லையேல் சென்றிருக்கும் சில லட்சங்கள் பீதியாய். பிழைத்த பணத்துடன் போய் விட்ட பிணத்துடன் கிளம்பினார் ராஜனின் மகன்.

ஒரு பக்க கதை

வர்ணாஸ்ரமம் - ஒரு பக்க கதை
டாக்டர் பாலசாண்டில்யன் 
9840027810

ஸ்ருதி வருண் இருவருக்கும் நிச்சயம் ஆனது சற்று நம்ப முடியாத விஷயம் தான். பெண் பார்க்கும் படலம் நடந்து கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இருவரும் பழகிப் பார்ப்பதாக முடிவு செய்தனர். 

தினமும் மாலையில் மால், சப்வே, ஐஸ் கிரீம் பார்லர், பார்க் பீச் என்று பல இடங்களில் அமர்ந்து பேசி விவாதித்து பின்னர் ஒரு வழியாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்ய அவரவர் வீட்டில் சொன்னார்கள்.

ஸ்ருதி ஒரு ஐடி கம்பெனியில் பெரிய போஸ்ட். வருண் சிஏ மற்றும் லா படித்து விட்டு சுயமாக ஒரு கம்பெனி நடத்தும் குறுந்தொழில் அதிபர். இருவருமே வீட்டுக்கு ஒரே குழந்தைகள். அவர்களுக்குள் ஒற்றுமை குறைவு. வேற்றுமை தான் அதிகம். அதுவே அவர்கள் இருவரும் இணைவதற்கு காரணம் என்பது கூட ஒரு விதத்தில் ஆச்சரியம் தான். 

அடுத்த வாரம் திருமணம். ஸ்ருதியிடம் இருந்து ஒரு போன் வந்தது வருணுக்கு. "வருண் ஒங்கூட கொஞ்சம் அர்ஜென்ட்டா பேசணும், வழக்கமா நாம மீட் பண்ற ஸ்பாட்டுக்கு வந்திடு". திருமணப் பத்திரிகையில் விட்டுப் போனவர்கள் பெயர் எழுதிக் கொண்டு இருந்தவன் திடீரென்று வெளியே புறப்பட்டதை கண்டு வருண் அம்மா சற்று குழம்பித் தான் போனாள்.

என்னப்பா ஏதாவது பிரச்சனையா என்று ஆரம்பிப்பதற்குள் வருண் தனது பைக் எடுத்து பறந்து போனான். 

திரும்பி வந்தான் அரை மணி நேரத்தில். முகத்தில் எந்தவித ஒரு மாற்றமும் இல்லை. இருப்பினும், "அம்மா எனது திருமணம் நடக்காது, அப்பாவிடம் நீ தான் சொல்லணும், காரணம் ஏதும் கேட்காதே" என்றான். வருணின் அம்மா சற்று பேய் அறைந்தது போல ஆனாள்.

வருண் ஒரு முதியோர் இல்லத்தில் டிரஸ்டி. அங்கே புதிதாக ஒரு வயதான ஜோடியை கொண்டு வந்து சேர்த்து விஐபி ரூம் ஒன்று ஏற்பாடு செய்து விட்டு கிளம்பினான். அங்கே மேனேஜரும் எந்த விவரமும் கேட்கவில்லை. 

எல்லாமே வருண் ஸ்ருதி சந்திப்பில் நடந்த விஷயம் தான். ஸ்ருதி சொன்னாள்,"வருண் என்னை ஒரு முக்கிய ப்ராஜெக்ட் விஷயமாக  ஆறேழு மாதங்களுக்கு ஆஸ்திரேலியா போகச் சொல்லுகிறார்கள். ஆகவே நமக்கு திருமணம் ஆன அடுத்த இரண்டு நாட்களில் நான் கிளம்ப வேண்டும். நீ உனது வீட்டில் இருக்காமல் எனது வீட்டில் தங்கி எனது அம்மா அப்பாவை பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றாள்.

வருண் வெகு நிதானமாக சொன்னான், "நாம் நல்ல நண்பர்களாக இருப்போம், இந்த திருமணம் நடக்காது. ஆனால் நீ கவலைப்படாமல் வெளிநாடு போய் வா, உனது அம்மா அப்பாவை நான் பார்த்துக் கொள்கிறேன்". ஸ்ருதி ஷாக் ஆகி விடவில்லை. சற்றும் அவளுக்கு சுருதி இறங்கவில்லை. தாங்க்யூ என்று புறப்பட்டு சென்றாள்.

அவளுக்குமே வருண் நடத்தும் முதியோர் இல்லம் பற்றி தெரியாது.

கடைசி வரை எதனால் திருமணம் நின்று போனது என்று வருண் யாரிடமும் சொல்லவில்லை. அதற்காக வருத்தப்படவுமில்லை. அவன் சிறு வயது முதலே எதற்கும் சந்தோஷமோ வருத்தமோ கொள்ளாத ஒரு சந்நியாசி போலத்தான். அவன் படித்த ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் அவன் கற்றுக் கொண்டது அது தான். 

திருமணம் நின்று போன விவரம் புரியாத ஸ்ருதியின் பெற்றோர் எத்தனை கேட்டும் வருண் எந்த விவரமும் சொல்லவில்லை. 

ஸ்ருதி பேதம் நடந்தது. ஆஸ்திரேலியா போன மூன்று மாதங்களில் வருணுக்கு ஒரு போட்டோ வாட்ஸ்ஆப்பில் வந்தது. அவளின் திருமண போட்டோ தான் அது. 

வழக்கம் போல அதையும் யாரிடமும் சொல்லவில்லை வருண்.

தோல்வி தரும் பாடங்கள்

தோல்வி தரும் பாடங்கள் வெற்றி தராது 
- டாக்டர் பாலசாண்டில்யன், மனநல ஆலோசகர் 

இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரி இறுதி தேர்வுகள் எழுதி முடிவுக்காக காத்திருக்கும் நேரம் இது. இந்த முடிவு வாழ்வின் அடுத்த முடிவுகளுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் சிலர் மேற்படிப்பு மற்றும் வேலைக்கு நுழைவுத் தேர்வு எழுதி இருப்பர். காத்திருக்கும் இந்த நேரம் எண்ணங்கள் எல்லாம் நடந்து போன தேர்வுகளின் முடிவுகள் பற்றியே இருக்கும். சிலருக்கு அது பயத்தை, குழப்பத்தை அல்லது அதைரியத்தை தரக்கூடும்.

வெற்றி பெற்று விட்டால் ஏற்படும் திருப்தி மற்றும் பெருமூச்சு நம்மை மெத்தனத்தில் கொண்டு சேர்த்து,  வாழ்வை வசதி வட்டத்திற்கு தள்ளி விடும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. நிச்சயம் வெற்றி தான் எல்லோருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை தோல்வி ஏற்பட்டால் துவண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் பெற்றோருக்கு, உறவினருக்கு, நண்பர்களுக்கு அல்லது வேறு யாருக்கோ உங்களை நிரூபணம் செய்வதற்காக தேர்வு எழுதவில்லை. 

அவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று பிறரை மனதில் கொண்டு அச்சப்பட்டு கவலைப்பட்டு அமர்ந்து விட வேண்டிய கட்டாயம் இல்லை. இதனை புரிந்து கொள்ளுதல் வேண்டும். 

வெற்றி நமக்கு கர்வத்தை, பெருமிதத்தை, அதீத நம்பிக்கையை தந்து விடும். அதுவே நமது அடுத்த நடவடிக்கையை கெடுத்து விடலாம். உதாரணத்திற்கு மிக நல்ல மதிப்பெண் பெற்று அருமையான கல்லூரியில் விரும்பிய படிப்பில் சேர்ந்து விடுகிறீர்கள் என்றால் அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை நிச்சயம் ஸ்லோ மோஷன் தான். 

மாறாக தோல்வியை சந்திக்க நேரிடுகிறது என்றால் அதில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். குறிப்பாக எது செய்ய வேண்டும் என்பதை விட எது செய்யக் கூடாது என்று கட்டாயம் எவருமே கற்றுக் கொள்ளுவர். அதையும் தாண்டி தோல்வி என்பது மிகவும் சிரமப்பட்டு, வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு அடுத்த அடியை எப்படி கவனமாக சரியாக திட்டமிட்டு எடுத்து வைக்க வேண்டும் என்று நமக்கு கற்றுத் தருகிறது. 

சட்டென்று கிடைத்து விட்ட ஒரு வெற்றியில் எந்த ஒரு 'த்ரில்'லும் இருக்காது. அண்மையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒரு ஊடகப் பேட்டியில் தோல்வி தான் எனது வாழ்க்கையை சீராக்கி இருக்கிறது என்று மிக உருக்கமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். பல சவால்களை தாண்டி அவர் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட தகவல் கிடைத்த பொழுது அவருக்கு அழுகை வந்ததாம், மயிர்க்கூச்சல் ஏற்பட்டதாம். தனது வீட்டு மக்களிடம் மிகுந்த தாழ்மையுடன் அந்த செய்தியை பகிர்ந்து கொண்டாராம். எனவே தோல்வியைத் தாண்டிய வெற்றி வரும் போது பணிவும் துணிவும் தானாகவே சேர்ந்து வருகிறது. 

கஜினி முகமது, தாமஸ் ஆல்வா எடிசன், பில் கேட்ஸ் ஆகியோர் தோல்வியை தழுவிய பிறகு வெற்றியை கண்டவர்கள். 

தோல்வியே வேண்டும் என்று தொழுதிட வேண்டாம். ஆனால் வெற்றி கிடைக்காத பொழுது அந்த சூழலை எப்படி 'பாசிட்டிவ்' மனப்பான்மையோடு எதிர்கொள்வது, அதில் இருந்து மீண்டு எழுவது, அடுத்த அடியை நம்பிக்கையோடு கவனமாக முன்வைத்து வெற்றியை பெறுவது இவை மிக முக்கியம். 

ஆயிரம் சீட்டுக்கள் இருக்கும் ஒரு வேலையோ படிப்போ உள்ள சூழலில் ஆயிரம் பேருக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்கள் தோல்வி பெற்றவர்கள் கிடையாது. 'பிளான் பி' என்று சொல்லக்கூடிய அடுத்த திட்டம் ஒன்றை கையில் எடுத்து அதில் வெற்றி பெறப் போகிறவர்கள். மருத்துவம் இல்லை என்றால் அடுத்து என்ன? பி காம் இல்லை என்றால் அடுத்து என்ன என்று மாற்றுத் திட்டம் ஒன்று கையில் வைத்திருங்கள். உங்கள் வெற்றி எங்கோ ஓர் இடத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆல் தி பெஸ்ட். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். 

சாலை பாதுகாப்பு வாசகங்கள்

சாலை பாதுகாப்பு வாசகங்கள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

வளைவில் முந்தாதே ....விளைவில் வருந்தாதே 

அதிக வேகம் ஆபத்தில் முடியும் 
ஆய்ந்து பார்த்தால் அர்த்தம் புரியும் 

சராசரி வேகமே நல்லது - அப்போது தான் 
நம் உயிர் நம்மது 

தலைக்கவசம் அணிவது விதி 
தவறினால் நடப்பது தலைவிதி 

விதிகளை மறந்த பயணம் 
விதியின் பயணம் மறக்காதே 

விவேகம் தருவது எதிர்காலம் 
வேகம் தருவது இறந்தகாலம் 

முகம் பார்க்க முந்துவதால் 
மிஞ்சுவது சோகம் 

முந்துவது வாழ்வில் இருக்கட்டும் 
வீதியில் எதற்கு 

கைபேசி விதவை ஆகலாமா?

கைபேசி விதவை ஆகலாமா?

- டாக்டர் பாலசாண்டில்யன் - மனநல ஆலோசகர் 

உங்களை விட அதிகமாக லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் இவற்றில் அதிக நேரம் செலவிடுகிறாரா உங்கள் கணவர்...பெண்களே உஷார்! ஒரு காதல் ஒழிஞ்சிச்சோ ஒரு காதல் செத்துச்சோ?

இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின் கவனத்தைத் திருப்ப சற்று சிரமம் தான். வீட்டில், வெளியில், ஹோட்டலில், டிவி பார்க்கும் பொழுது, நாம் பேசும் பொழுது, ட்ரிங் ஓசை கேட்டு போனை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு மெசேஜை மட்டும் பார்த்து விட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாரா என்றால் இல்லை என்பது தான் பதில். ஏன் எனில் போனை கையில் எடுத்தவுடன் அடுத்து அடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை. 

உள்ளங்கை அளவில் ஒரு எதிரி என்றால் அது ஸ்மார்ட் போன் தான். நம்மை அவர் கவனிக்கவில்லை என்பதை விட நம்மை அவர் ஒதுக்கி வைத்து விட்டார் என்ற உணர்வு சில நேரம் தலை தூக்குகிறது. நீங்கள் ஒரு கணவன் இருந்தும் கைவிடப்பட்ட கைபேசி கைம்பெண் ஆகலாமா?

சில நேரம் சில பெண்கள் கேட்கிறார்கள்? நமக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகி உள்ளன. இப்போது தான் நமக்கு ஒரு குழந்தை பிறந்து உள்ளது. எப்படி சிரிக்கிறது பாருங்கள்? அப்படி என்ன தான் இந்த சனியன் போனில் உள்ளது? ஆரம்பிக்கிறது ஓர் உரையாடல்.

பட்டென்று வருகிறது பதில். இவ்வளவு நேரம் எனது பாஸ் உயிர் எடுத்தான். இப்போது தான் உலகத்தில் என்ன நடக்கிறது, எனது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்று கூட பார்க்க எனக்கு உரிமை இல்லையா? நேற்று நமது திருமண நாள் போட்டோ முகநூலில் போட்டிருந்தேன். யார் என்ன சொல்லி வாழ்த்தி இருக்கிறார்கள் ..உனக்கு அதில் விருப்பம் இல்லையா?

சில கணவர்கள் காதில் இப்படி விழுகிறது. நீங்கள் பேசாமல் என்னை திருமணம் செய்து கொண்டதற்கு பதில் இந்த போனை கட்டிக்கொண்டு இருக்கலாமே? என்னை ஏன் உயிர் எடுக்கிறீர்கள்? 

மனநல ஆலோசகர்களிடம் பெரும்பாலும் பெண்கள் சொல்லும் புகார் என்ன தெரியுமா? என் கணவர் முன்பு போல இல்லை. என்னிடம் இப்போது அதிகம் பேசுவது இல்லை. சாப்பாடு, உறக்கம், செல்போன், ஆபீஸ் இது தான் அவர் உலகம் என்றால் நான் எதற்கு இடையில்? 

ஆனால் பெண்களும் இப்படி ஆகி வருவதும் பார்க்க முடிகிறது. ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டால் வேறு எங்காவது சந்தோஷம் கிடைக்குமா என்று தேடவும் நேரிடுகிறது. இது ஆபத்தானது. 

மனக்கிலேசங்கள் வரும் பொழுதே உரையாடல் மூலம் அவற்றை சரி செய்ய வேண்டும். மனதில் போட்டு புதைத்து வைத்தால், பிறகு சிக்கல் அதிகமாகும். இருவருமே வேலை பார்க்கும் இன்றைய நாட்களில் உணவு, காய்கறி, வீட்டு சாமான், காஸ் புக்கிங், பண பரிவர்த்தனை இவற்றிற்காக கையில் எடுக்கும் போன் கீழே வைக்கப் படுவதில்லை. ஏனெனில் அதில் தான் நேரம் பார்ப்பது, பாட்டு கேட்பது, போட்டோ எடுப்பது, டிவி ரிமோட், வீடியோ பார்ப்பது, மெயில் செக் செய்வது, எல்லாம் நடக்கிறது. யாரை இங்கே குற்றம் சொல்வது? தொழில்நுட்பம் இயல்பு வாழ்வை சாகடித்து விட்டது. 

பெண்களே நானும் முக்கியம், கையில் இருக்கும் அந்த போனும் முக்கியம் என்று மெதுவாக அன்பாக அழகாக பேசிப் புரிய வையுங்கள். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள். பிறகு இழந்த நேரத்தை இளமையை வாழ்க்கை இன்பங்களை திரும்பப் பெற முடியாது. 

இன்று வேலை வாழ்க்கை போன் இவை மூன்றையும் மிகச் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு புத்தி சாதுரியம் மட்டும் போதாது. இழந்த தருணத்தை கரணம் போட்டாலும் திரும்பப் பெற முடியாது. இருக்கும் நமது நேரத்தில் உண்பது, உறங்குவது, வேலை பார்ப்பது, பயணிப்பது, பொழுது போக்கிற்காக டிவி பார்ப்பது, நண்பர்களோடு பேசுவது, உறவினர் இல்லம் செல்வது, பிரார்த்தனை, உடற்பயிற்சி, தியானம், பாட்டு கேட்பது, குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது, குடும்பத்தோடு வெளியே செல்வது, திட்டமிடுவது, பெற்றோரோடு பேசுவது, அழகு ஆரோக்கியத்தை காப்பது, சமூக பொறுப்புகள் ஏற்பது, தொழிலை மேம்படுத்துவது, இடையே சற்று காதல் செய்வது எல்லாமே தான் அவசியம். அதற்கு அந்தந்த செயல் அந்தந்த தருணத்தில் என்பது போல சரியான நேரம் ஒதுக்கி நேர மேலாண்மையோடு செயல்படுதல் அவசியமாகிறது.

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் காதல் காமம் அன்பு கருணை எல்லாவற்றிற்கும் சற்று நேரம் ஒதுக்க வேண்டும். இல்லையேல் மன முறிவு மற்றும் மண முறிவு இரண்டுமே தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். கவனம் தேவை மக்களே.உங்கள் போன் உங்கள் கையில். அதே போல உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். ஆல் தி பெஸ்ட். 

விடை தருவார் யாரோ?

நாமென்ன ஒட்டு வங்கி மட்டுந்தானா ? (விடை தருவார் யாரோ?)

ஏன் இப்படி நடக்கிறது? நம்மை சாதியாலும் மதத்தாலும் பிரிக்க நினைக்கும் நாடகம் தினம் தினம் அரங்கேறுகிறது. பேசும் எல்லாவற்றிலும் மதங்கள், இனங்கள், பிரிவினைகள் பற்றியே இருக்கின்றனவே. நினைத்தாலும் புரியவில்லை இவர்கள் நோக்கம். நெடுநாட்களாக நமக்கு சொல்லித் தரப்பட்டவை இவை தானா ? யார் சொல்லி இப்படி நடக்கிறது? யாருடைய உள்நோக்கம் இது? ஒரு வினாடி நின்று நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும். 

கிறித்துவர்கள் அனைவருமே மத மாற்றம் செய்ய வந்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோருமே கெடுதல் செய்பவர்கள், ஹிந்துக்கள் எல்லோரும் நாட்டை உலகை ஆளப் புறப்பட்டு விட்டார்கள்? எங்கிருந்து கிளம்பியது இந்த சித்தாந்தங்கள்? கிளப்பி விடக்கூட ஓர் அளவு வேண்டும் அல்லவா ?

எப்போது கடைசியாக ஓர் அரசியல்வாதி மிகவும் நாகரீகமாக பேசியுள்ளார்? நினைவில் உள்ளதா? நமது வேலை, விவசாயிகள், பொருளாதர வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை, நீராதாரம், அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, மக்களின் சிரமங்கள் பற்றி? நமது அமைச்சர்கள், முதல்வர்கள், அதிகாரிகள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக் கொண்டு இருக்கும் நிலையை  தானே நாம் தினம் தினம் வேடிக்கை பார்க்கிறோம்?

அன்றாடம்  வங்கிகள் பணம் இழந்த கதை, தொழிலதிபர்கள் ஓடிப் போன கதை படிக்கிறோம். யாருடைய பணம் அது ? நமது தானே? உண்மையான கவலை உள்ள ஒருவரை காண முடிகிறதா?

அரசாங்கம் நமக்கு தர வேண்டியது கல்வி, மருத்துவம், சுத்தமான நீர் மற்றும் உணவு. யார் இவற்றைப் பற்றி பேசுகிறார்கள்? யார் கவலைப் படுகிறார்கள்? மிகப் பெரிய செல்வந்தருக்கு கூட நல்ல கல்வி, நல்ல உணவு, நல்ல குடிநீர், சுத்தமான காற்று இல்லை. இது தான் இன்றைய நிலை. இது மிகைப்படுத்தப் பட்ட விஷயம் இல்லை. உண்மை. யதார்த்தம். ஆனால் தினந்தோறும்  ஊடகங்களில் பேசப்படுவது நமது வித்தியாசங்கள், பிரிவினை, மக்கள் செய்யும் போராட்டங்கள், ஏமாற்று விளையாட்டுகள், நடிகர் நடிகையர் விஷமங்கள்  பற்றித் தான். 

மழையை மழையாக யார் பார்த்தார்கள்? காட்டை மரத்தை இயற்கையை யார் கவனித்தார்கள்? சிலைகளுக்கு மாலைகள், பேசி வைத்தவர்களுக்கு விருதுகள் என்று ஒருபுறம், வரி கட்டினாலும், சட்டங்களுக்கு கட்டுப்பட்டாலும், கஷ்டப்பட்டாலும் மனிதனை மனிதனாக இங்கே யார் பார்க்கிறார்கள்? ஒட்டு அடிப்படை எண்ணிக்கையாக தான் பார்க்கிறார்கள்? ஓட்டளிக்க சொல்லி வாட்ஸ் அப் செய்திகள், காகித மடல்கள், சுவரொட்டிகள், தொலைபேசி அழைப்புகள்  எல்லாம் வருகிறதே!

இவர்கள் பேச்சை எப்போது நாம் புறந்தள்ளப் போகிறோம்? நமது மத இன உணர்வை வியாபாரமாக மாற்றும் இவர்களை நாம் ஒதுக்கி வைக்க முடியுமா? காற்று மற்றும் நீர் மாசுபடுதல், நீராதாரங்கள் அழிக்கப் படுதல், மணற்கொள்ளைகள், தனிநபர் சொத்து பறிப்பு, முறையற்ற கல்வி வழங்கப்படுதல், கலப்படம், கற்பழிப்பு, கொலை, இவற்றை எப்போது குறைக்கப் போகிறார்கள்? 

இறக்கும் குழந்தைகள், வேலை இல்லா இளைஞர்கள், ஏமாற்றும் நிறுவனங்கள், லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள், கல்வி மற்றும் மருத்துவத்தில் வணிகம், அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராம மக்கள், அடுத்த சந்ததியர் படவிருக்கும் மத இன சிக்கல்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல்கள், குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் சுரண்டல்கள், இவற்றை பற்றி நோக்காமல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தல் மட்டுமா இவர்கள் வேலை?

விழித்து எழும் வேளை வந்து விட்டது. நம்மை நாமே உணர்ந்து புரிந்து கொள்ள...நாம் ஒன்றும் வெறும் ஓட்டுச்சீட்டு அல்ல. ஒட்டுமொத்த தேசமே நாம் தான். நமக்காக தான் இவர்கள். நம்மால் தான் இவர்கள். நாற்காலி ஏறும் முன்பு ஒரு பேச்சு, ஏறிய பிறகு வேறு பார்வை, பேச்சு இதற்கு வைக்க வேண்டும் முற்றுப்புள்ளி. இவை எல்லாம் சரியானால் தேசம் நமக்கு. இல்லையேல் சேதம் நமக்கு. யார் செய்யப் போகிறார்கள் இதற்கு வைத்தியம்? யார் தரப்போகிறார்கள் இதற்கு தீர்வு? யார் வந்து இதனை சீர்செய்யப் போகிறார்கள்? கேள்விகள் பல உண்டு. விடைகள் தான் இல்லை இங்கு.