Friday, November 28, 2014

Inability to tolerate makes the life miserable

கதையல்ல நிஜம் - 12
- டாக்டர் பாலசாண்டில்யன் 

ரமேஷ் கஸ்பேகர் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரி. அவர் அசிஸ்டென்ட் ஆக வேலை பார்த்த கல்பனா எனும் தமிழ்ப் பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தார். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

ஒரு நாள் ஆபீஸ் நேரம் முடிந்ததும் கல்பனா வீட்டிற்கு நிறைய பழங்கள் மற்றும் பூ வாங்கிக்கொண்டு போய் நேராக பெண் கேட்டார். கல்பனாவின் அம்மா (அப்பா இறந்து விட்டதால் அவர் தான் குடும்பத் தலைவி) வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்.

ரமேஷ் வீட்டில் கூட்டுக் குடும்பம் என்பதால் நிறைய பேர் இருந்தனர். வீட்டில் எல்லோரும் மராட்டி  மொழியில் பேசினர். கல்பனாவிற்கு ஹிந்தி தெரியும். இருப்பினும் மராட்டி மொழி புரியாததால் பல சமயம் தன்னைப் பற்றி ஏதோ தப்பு தப்பாக பேசுவதாக யூகிக்க ஆரம்பித்தாள். அந்தக் கோபத்தை ஆபீசில் காட்ட ஆரம்பித்தாள். ரமேஷ் தனக்கு நேருகின்ற அவமானங்களை மாற்ற நினைத்து கல்பனாவை வேலையை விட்டு விட சொன்னார்.

கல்பனா சரி என்று அன்றே ராஜினாமா செய்தாள். ஆனால் நேராக தனது வீட்டிற்கு சென்றாள். ரமேஷ் அன்று சும்மா இருந்தார். மறுநாள் போனில் கூப்பிட்டார். கல்பனா அங்கு இருந்தால் தானே...அவள் தனது அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு திருச்சி வந்து சேர்ந்தாள்.

கல்பனாவிற்கும் சரி அவள் அம்மாவிற்கும் சரி திருச்சியில் மும்பை அளவு சௌகரியமாக வாழ முடியவில்லை என்றாலும் ஏதோ சமாளித்து வந்தனர். ரமேஷ் கல்பனாவின் நெருங்கிய தோழி சித்ரா மூலம் திருச்சி முகவரி தெரிந்து கொண்டு ஒரு நாள் வீட்டில் வந்து நின்றார். கல்பனாவை தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சிப் போராடிப் பார்த்தார். கல்பனாவின் ஒரே பதில் தனிக் குடித்தனம் வைப்பது பற்றி தான். பாரம்பரியக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ரமேஷ் செய்வது அறியாது தவித்தார். வந்த வழியே கிளம்பினார் எதுவும் சொல்லாமல். 

மும்பை திரும்பிய ரமேஷ் தனது குடும்ப சம்மதத்தோடு தனிக்குடித்தனம் வைக்க வீடு பார்த்தார். கல்பனாவும் வந்து சேர்ந்தாள். ஆனால் ரமேஷ் அவர் வீட்டிற்கு ஒரு போதும் போகக்கூடாது, தானும் வர மாட்டாள் என்று நிபந்தனை விதித்தாள். பெண் குழந்தை பிறந்தது. அவளைக் கொண்டு போய்க் கூட ரமேஷ் பெற்றோரிடம் காட்டக்கூடாது என்றாள். போகப் போக கல்பனா - ரமேஷ் இடையில் நிறைய இடைவெளி ஆரம்பம் ஆனது. மீண்டும் கல்பனா ஒரு நாள் குழந்தையுடன் திருச்சி கிளம்பி விட்டாள்.

திரும்பி வந்த போது கல்பனாவின் அம்மாவும் இறந்து விட்டார். தனிக்குடும்பம் நடத்திய அவள் தினம் தினம் மனப் போராட்டத்துடன் வாழ்ந்தாள். ரமேஷ் நிலையும் கிட்டத்தட்ட அதே தான்....! கல்பனாவின் மகள் வளர்ந்து பெரிய பெண் ஆகி நிறைய கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள் ...!

Thursday, November 27, 2014

Value for Money and Value for Life...??!!

கதையல்ல நிஜம் - 11
- டாக்டர் பாலசாண்டில்யன் 

ராஜனுக்கு வயது 75 இருக்கும். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று விழுப்புணர்வுக்கூட்டங்கள் நடத்தி வாழ்வியல் மதிப்புகள் பற்றிய போதனைகளை சொல்லிவிட்டு வருவார். தினமுமே மனைவி செல்லத்திற்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்வார். வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பார். வீட்டிற்குச் சாமான்கள் வாங்கிப் போடுவார். உறவினர்கள் வீட்டிற்கு சில சமயம் சென்று வருவார். 

ஒரே பையன் வெளியூரில் வேலை. அவ்வப்போது வெளிநாடும் சென்று விடுவான். 

ஒரு சமயம் தனது பையன் ஊரிலிருந்து வந்திருந்த சமயம் வெகுநேரம் காலை பேசிக் கொண்டு இருந்து விட்டு தாமதமாக குளிக்கச் சென்றார். வெளியில் வரும் போது யாரோ தள்ளியது போல உணர்ந்து இடுப்பில் துண்டுடனே கட்டிலில் அமர்ந்து கொண்டார். சில நிமிடங்களில் கண்கள் சொருகும் நிலை கண்டு மனைவி செல்லமும் மகன் மகேஷும் அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டு சென்றனர். 

ராஜனை உள்ளே ஒரு படுக்கை வண்டியில் போட்டு தள்ளிக் கொண்டு விரைந்தனர். செல்லம் அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தாள். மகேஷ் தனது மாமாவிற்கு போன் செய்து விட்டு, அப்பா அட்மிஷன் செய்திட அங்கே கொடுத்த பேப்பரில் எழுதிக் கொடுத்து விட்டு பத்தாயிரம் பணமும் செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டான்.

மகேஷின் மாமா ஒரு சமூக ஆர்வலர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என்பதால் நேரே சென்று தனது உறவினரின் பெயர் சொல்லி அவர் எங்கே என்று வினவினான். தனது அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு உள்ளே நுழைந்து விட்ட போது சில நர்சுகள், மற்றும் இரண்டு டாக்டர்கள் ராஜனை நெஞ்சில் குத்திக்கொண்டு இருந்தனர். ஒரு ஊசியும் போட தயாராக இருந்தனர். மகேஷ் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு நடப்பது என்ன என்ற விபரம் கேட்ட போது புரிந்து கொண்டான் ராஜன் அங்கே கொண்டு வரும் போதே இறந்து விட்டார் என்று. 

அடுத்த அரை மணி நேரத்தில் ராஜன் பொட்டலம் கட்டப்பட்டு சடலமாக ஒப்படைக்கப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டார். ஏற்கனவே கட்டிய பணத்தில் மீதி என்று மூன்றாயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டது.

மகேஷின் மாமா அங்கே உரிய நேரத்தில் வரவில்லை என்றால் ராஜன் அந்த மருத்துவமனையில் குறைந்த பட்சம் ஒரு நான்கு நாட்கள் இருந்திருப்பார். தவிர இரண்டு மூன்று லட்சம் பணமும் செலவு ஆகி இருக்கும்.  இதனை அங்கே ராஜனை வண்டியில் ஏற்றும் போது ஒரு ஊழியர் சொன்னார்....!

Tuesday, November 25, 2014

Man Proposes....God disposes...

கதையல்ல நிஜம் - 10
- டாக்டர் பாலசாண்டில்யன் 

தவமணி கிராமத்திலிருந்து வந்தாலும் விவரமாக இருந்தான். ஆறு மாதம் ஊருக்கும் பட்டணத்திற்கும் படையெடுத்தது வீண் போகவில்லை. ஒரு நாள் நள்ளிரவு தவமணி முதல் முறையாக விமானம் ஏறி கடல் கடந்து பல மைல்கள் பயணித்தான்.

சௌதி அரேபியா இப்படி உள்ளது ...தனது வேலை இப்படி உள்ளது ...என்பதையெல்லாம் பத்தி பத்தியாக கடிதமெழுதி ஊருக்கு அனுப்பினான். அவ்வப்போது போனிலும் அழைத்து தன் பெற்றோரிடம், மனைவியிடம் பேசினான்.

சூரியன் உதிக்க மறந்தாலும் தவமணியின் தபால் வராமலே இருக்காது. வீட்டில் டிவி பிரிட்ஜ் வாங்கிப்போட பணம் அது தவிர மாதா மாதம் பத்தாயிரம் டிராப்ட் எடுத்து வேறு அனுப்பினான்.

ஒரு நாள் தவமணியின் மனைவியின் தலையில் இடி - அவள் மனத் தொலைகாட்சியின் பிக்சர் டுயுபே வெடித்து விடுவது போல்...

தவமணி ஆபீஸ் வேலையாக போகும் போது ஆபீஸ் ஜீப்பிலிருந்து விழுந்து தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனான். தொலைபேசி செய்தி எல்லோரையும் அதிர வைத்தது.

இனி தபாலும் வராது. டிராப்டும் வராது. 

தவமணியின் சடலம் சொந்த ஊர் வர ஏற்பாடு ஆகயுள்ளதாக மற்றொரு தகவல் வந்தது. நடந்தது நடந்து போனது ...ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று தவமணியின் குடும்பம் மனதைத் தயார் செய்து கொண்டார்கள்.

ஆனால் தவமணியின் சடலம் அவன் கிராமம் வந்து சேர ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் செலவு என்று பில் தரப்பட்டது.

தவமணி பத்தாயிரம் பத்தாயிரம் ரூபாயாக சரியாக ஓராண்டு அனுப்பி இருந்தான். ஒருவேளை அது இதற்குத் தானோ...

தவறு செய்தால் சவுதியில் தண்டனையாமே ...தவமணி செய்த தவறு 
தான் என்ன ?

Divine astrologer Thanjai Padma

Today's appreciation:
When people face trouble, they feel less confident or problems are beyond control - they look for external help such as Saints, Astrologers etc. Especially astrologers are approached without hesitation with blind faith. That is the time astrologers take advantage of the situation. Here is a wonderful person who is the third gen divine astrologer who is attached to SSMatri (Sai Sankara Matrimonials for over 2 decades) and rendering professional service for over 6 decades. She is none other than Jothida Rathna Mrs. (Thanjai) Padma. She has been facilitating lots of people on normal horoscope guidance, palmistry, ayurveda medicines, face reading, teaching music apart from almost accurate predictions. There are lots of success stories in her bag with regard to the predictions - which include even the final day of Swami Sathya Sai Baba.  She is already 75+ and is still very active and wanting to reach many and guide people who are in trouble. She was born rich and later lost huge money in her life. She is not money-minded. Her divine predictions are truly admirable. When I recently visited MR. Panchapakaesan, I had the opportunity to meet her. She said a few things about me voluntarily just by seeing my face - 100% true. I was just taken a back. What a person she is. She requested me to inform people about her selfless service. I admire her today for her sincere service in enabling and guiding people to lead their life confidently. For appointments and to contact her - Mobile : 9381248900
எப்போதெல்லாம் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களோ அப்போதெல்லாம் கோவில் குளங்களுக்கு போகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள், சாமியார்களை நாடிச் செல்கிறார்கள் அல்லது ஜோதிடரிடம் செல்கிறார்கள். இந்த கடினமான மக்களின் சூழலை சரியாகப் பயன்படுத்தும் வியாபார சாமியார்கள், ஜோதிடர்கள் மிக அதிகம். அப்படி அல்லாமல் கிட்டதட்ட மூன்றாவது தலைமுறையாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதகம், கைரேகை, முக லட்சணம், மருத்துவம், இசை என்று பல்வேறு விதமாக மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு அற்புதப் பெண்மணி ஜோதிட ரத்னா திருமதி தஞ்சை பத்மா அவர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை சாய் சங்கரா மாட்ரிமோனியல்ஸ் நிறுவனத்தில் இணைந்து சேவையாற்றி வருகிறார். பிறந்தது முதல் வசதியான குடும்பத்தில் பிறந்து பிறகு சூழல் காரணமாக மிகப் பெரிய பண நஷ்டம் ஏற்பட்ட இவருக்கு பணத்தின் மீது சிறிதும் நாட்டம் இல்லை. அண்மையில் நண்பர் பஞ்சாபகேசன் அவர்களை சந்திக்க சென்ற போது இவரது அறிமுகம் கிடைத்தது. என்னைப் பார்த்ததுமே சில பளிச் உண்மைகளை புட்டுப் புட்டு வைத்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பிறகு சில மணித்துளிகள் பேசிய போது அவரது வாழ்வில் நடந்த பல்வேறு அதிசயங்களில் சிலவற்றை என்னோடு பகிர்ந்து கொண்டார். பகவான் ஸ்ரீ சத்யா சாய் பாபா என்று இறைவனோடு இணையப் போகிறார் என்று கணித்து குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் சொன்னதாக கூறியது புருவம் உயர்த்தியது. ஏற்கனவே 75 வயதை தாண்டிய இவர் இன்னும் பலருக்கு தன்னால் இயன்ற அளவுக்கு வாழ்வில் உதவி நம்பிக்கை தர வேண்டும் என்ற தனது இலட்சியத்தை சொன்னார். பணம் இவரது நோக்கம் அல்ல என்பதை நிச்சயம் உணர்ந்தேன். அதனால் தான் இவரைப் பற்றி இங்கே பகிர்கின்றேன். வாழ்க இவர் தம் அரும்பணி. இவரது தொலைபேசி எண்:  9381248900

Complaint boxes - a mere formality

கதையல்ல நிஜம் - 9
- டாக்டர் பாலசாண்டில்யன் 

சந்தைக்குப் போன செங்கமலம் எங்கு போனாள்?  கோவிந்தன் தேடாத இடம் இல்லை. இரவுகள் பல தூங்காமல் தவித்தான். பேசிப் பேசி புலம்பினான் கோவிந்தன்.

ராமசாமி அறிவுரைப்படி ஊர்ப்பஞ்சாயத்து புகார் பெட்டியில் செங்கமலம் காணாது போன விவரம் கடிதமாய் போடப்பட்டது. தினமும் கோவிந்தன் ஆவலாய் நல்ல செய்தியை எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்ப்பு வீண்.

புதிய பஞ்சாயத்து தலைவர் தேர்வான செய்தி ஊரையே கலக்கியது.

கோவிந்தனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை இலை மனதில் துளிர்த்தது. செங்கமலம் கிடைத்து விடுவாள். நிச்சயம் கிடைத்து விடுவாள். அவள் மீது மீது உயிரையே வைத்திருந்தான். காதலித்து செய்து கொண்ட திருமணம் ஆயிற்றே...! இருவரும் கழித்த இனிமைப் பொழுதுகள் எண்ணிடலங்காது.

புதிய தலைவர் பதவியேற்ற மறுநாளே புகார்பெட்டியை திறந்து பார்க்க முடிவு செய்தார். பெட்டிக்குள் இருந்த மொத்தக் கடிதம் பத்து.

எல்லாமே கோவிந்தன் எழுதியது. ஒன்று செங்கமலம் காணாமால் போனது பற்றி. மீதமெல்லாம் புகார் பெட்டியைத் திறந்து உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பது பற்றி...

கோவிந்தனின் ஏமாற்றம் தொடர்ந்தது. அவனின் கடிதங்கள் புதிய தலைவர் பார்வைக்கு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாவம் ....அவனுக்குத் தெரியமா என்ன? செங்கமலத்தை (சிறை) வைத்திருப்பது புதிய தலைவர் தானென்று....?!

Monday, November 24, 2014

Systems seldom work

கதையல்ல நிஜம் - 8
- டாக்டர் பாலசாண்டில்யன் 

விழாக்கால தள்ளுபடி என்றால் இது தானோ ? உஸ்மான் ரோட்டில் ஒருவரை ஒருவர் முட்டி மோதித் தள்ளிக் கொண்டிருந்தனர். ஒரு பிரபல ஜவுளிக் கடையில் நுழையும் போது ராமுவைத் தடுத்தது அங்கு நின்றிருந்த செக்யூரிட்டி. பல மொழிகள் பேசும் மக்கள் உள்ளே போன வண்ணம் வெளியே வந்த வண்ணம் இருந்தனர்.

கையில் இருக்கும் பையை அந்த செக்யூரிட்டியிடம்  கொடுத்து டோகன் வாங்க வேண்டும். ராமுவிற்கு அந்தப் பையை கொடுக்க தயக்கம். "கொடுங்க சார், எல்லோரும் கொடுக்கிறாங்க, உங்களுக்கென்ன ? உள்ளே இதை கொண்டு போகக் கூடாது!" அரை மனதோடு அந்தப் பையை கொடுத்து விட்டு நூற்றுப் பதினொன்று என்ற நம்பர் போட்ட சிவப்பு பிளாஸ்டிக் வில்லையை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டு உள்ளே போனார் ராமு. 

உள்ளே குழந்தைகள் பகுதிக்குப் போனால் சென்னையின் பாதி மக்கள் இங்கு தான் உள்ளனரோ என்ற பிரமை ஏற்பட்டது. ஏசி வேலை செய்யற மாதிரி தெரியலை. நிறைய பேர் கையை வளைத்து நுழைத்து துணிகளை எடுத்தனர். மூச்சு விட முடியாத சில குழந்தைகள் பொறுமையில்லா குழந்தைகள் கத்திப் பிலாக்கணம் வைத்தனர். இந்த அமர்க்களத்தில் சட்டை பாக்கெட்டை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டார் ராமு ...அந்த பிளாஸ்டிக் டோக்கன் பத்திரமா இருக்கிறதா என்று. அது வெறும் டோக்கன் கிடையாதே...!

ஒரு சட்டையும் ஒரு சுடிதாரும் வாங்கிவிட்டு பணம் கட்டி துணி வாங்கும் கியுவில் நின்றார் ராமு. ஒரு வழியாக ராமுவின் பை கிடைத்தது. 

பிறகு கேட்டை நோக்கி நடைபோட்ட ராமுவிற்கு பகீர் என்றது. டோக்கனைக் காணோம். செக்யூரிட்டியிடம் நிலமையை விளக்கி தனது நம்பர் நூற்றுப் பதினொன்று, மஞ்சள் பை என்ற விவரம் சொன்னார். ராமுவின் பை போலவே வெங்கடாசலபதி படம் போட்ட மஞ்சள் பை நான்கு இருந்தது. பச்சை டோக்கனில் அதே நம்பர் கொண்ட மஞ்சள் பை ஒன்றைக் காட்டி "இதுவா" என்ற செக்யூரிட்டி. "காஷ் கவுன்டரில் ஜோஷ்வா சாரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள் பிறகு தருகிறேன்" என்றார். ஜோஷ்வாவிடம் கெஞ்சிக் கூத்தாடி மஞ்சள் பை ஒரு வழியாக கிடைத்தது. 

அவசரமாக ஆட்டோ பிடித்து மாம்பலம் என்றார் ராமு. ஆட்டோ புறப்பட்டதும் மெதுவாய் மஞ்சள் பைக்குள் கையை விட்டுத் துழாவிப் பார்த்தார். அவர் மகளுக்கு ஆசையாக வாங்கிய நெக்லஸ் பெட்டி இருக்கிறதா என்று. ராமுவின் கைகள் சில்லிட்டுப் போயிற்று. அந்தப் பைக்குள் ஒரு துண்டு, வெற்றிலைப் பொட்டலம், ஒரு நீள இரும்பு சாவி, சின்ன சில்லரைப் பர்ஸ். 

நூற்றுப் பதினொன்று என்ற டோக்கன் நம்பர் நெஞ்சை அழுத்தியது. பையைத் திருப்பிய போது வெங்கடாஜலபதி சிரித்துக் கொண்டு இருப்பது போல் பட்டது ராமுவிற்கு. வீட்டிற்கு முகத்தை தொங்கப் போட்டவாறு நுழைந்த ராமு ரொம்ப நேரம் பேசவே இல்லை...!

Sunday, November 23, 2014

Never lose your hope...you can lose anything...

கதையல்ல நிஜம் - 7
- டாக்டர் பாலசாண்டில்யன் 

அருண் - படிப்பு MA - வயது 27 - ஒரு வேலையில்லா பட்டதாரி . பார்க்க நல்ல உயரம். வாட்ட சாட்டமான உடல்வாகு. இருந்தாலும் நல்லதொரு வேலை கிடைக்கவில்லை.

தினமும் அருகிலுள்ள லைப்ரரிக்கு சென்று செய்தித்தாள் பார்த்து வேலைக்கு விண்ணப்பிப்பதே அருணின் முக்கியப்பணி. வேலைக்கு முயற்சிப்பதே முழுநேர வேலையாகிவிட்ட நிலையில் அருணின் பெயரே வெட்டிப் பயலாகவும் தண்டச்சோறாகவும் மாறிவிட்டது. அதனால் பேசுவதை சாப்பிடுவதைக் கூட குறைத்துக் கொண்டான்.

தெரிந்த நண்பர்களிடமெல்லாம் மனுப் போட்டான். தபால்காரன் அருண் தொல்லை தாங்க முடியாமல் இவன் கேட்கும் முன்பே 'உனக்கு இன்னிக்கும் தபால் இல்லை' என்று சொல்லி இவன் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டான்.

அருணுக்கு தொடர்ந்து அடுத்த ஒரு வாரம் முழுவதும் இன்டெர்வியூவிற்கு வரச் சொல்லி கடிதம் வந்தது. தினம் இன்டெர்வியூவிற்குபோவதும் சோர்ந்து சோகமாய் வீடு திரும்புவதும் வாடிக்கையானது.

அருண் வீட்டு வாசலில் தீடிரென ஒரே கும்பல். போலீஸ் ஜீப் வேறு வந்தது. அருண் தற்கொலை செய்து கொண்டு விட்டான். போலீஸ் ஏதோ ஒரு கடிதத்தை கண்டு பிடித்தார்கள்.

"என்னை மன்னித்து விடுங்கள் அப்பா ! நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவன். உங்களையெல்லாம் திருப்திப்படுத்த நானே சில இன்டெர்வியு லெட்டர்களை எழுதி நம் வீட்டு விலாசத்திற்கு போஸ்ட் செய்தேன். சாவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை"

அருணின் காரியங்கள் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.

"சார் போஸ்ட்"...போஸ்ட்மேன் குரல்.
வாங்கிப் பிரித்துப் பார்த்தார் அருணின் அப்பா. 

"அருண், நீ அதிர்ஷ்டம் கெட்டவன் இல்லையடா" என்று கத்தினார். கதறினார். 
வந்திருந்தது பாங்க் வேலைக்கான ஆர்டர்...!

Saturday, November 22, 2014

Bullying Power Office - to stay away.

கதையல்ல நிஜம் - 6 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

மூர்த்தி சென்னையில் உள்ள மிகப் பெரிய ஐ டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். பிஸ்சா, பக்கோடா, கோல்ட் காபி, போண்டா என்று சாப்பிட்டுக் கொண்டே வேலை பார்த்து வந்ததால் கொஞ்சம் தொப்பை அதிகம்.

கல்யாணப்படலம் வந்த போது திருவாரூர் நந்தினி மனைவியானாள். கொஞ்ச நாள் வேலை பார்த்து வந்த நந்தினி, மூர்த்தி மற்றும் அவன் பெற்றோர் சொன்னதைக் கேட்டு வேலையை விட்டாள். சாதாரண வேலை, சுமார் சம்பளம் தான் என்பதால் உடனே ஒப்புக்கொண்டாள். மூர்த்தி-நந்தினி தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர். மூர்த்தி ஒரு பிளாட் வாங்க முடிவு செய்தான். பல புதிய வேலைகளுக்கு மனு போட்டான். பெங்களூரில் நல்ல வேலை கிடைத்தது.

சென்னையில் வாங்கிய பிளாட்டை க்ரஹபிரவேசம் முடித்த கையோடு வாடகைக்கு விட்டு விட்டு பெங்களூருக்கு குடி பெயர்ந்தான் மூர்த்தி. மூர்த்தி-நந்தினி இருவருக்கும் பெங்களூர் புதுசு. மூர்த்தியை நைட் ஷிப்டில் போட்டார்கள். இங்கு தான் சிக்கல் தொடங்கியது.

மூர்த்திக்கு குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும். நைட் ஷிபிட் முடித்து வீடு வந்து சேர விடியற்காலை ஐந்தரை மணியாகி விடும். பால்காரனைப் போல் வந்து மணி அடிப்பதும் பாதி தூக்கத்தில் நந்தினி கதவைத் திறப்பதும் வழக்கமானது.

ஆபீசிலிருந்து வந்ததும் மூர்த்திக்குப் பசிக்கும். ப்ரேக் பாஸ்ட், காபி கட்டாயம் வேண்டும். சாப்பிட்ட பிறகு கறுப்புத் துணி பர்தா போட்ட கும்மிருட்டு அறையில் போய் படுத்துத் தூங்கத் தொங்குவான். மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குத் தான் எழுந்திருப்பான். எழுந்ததும் பேப்பர், டிவி, பக்கத்தில் உள்ள காய்கறி கடைக்குச் செல்லுதல் போன்ற வழக்கமான அலுவல் முடிந்தால் மீண்டும் நைட் ஷிபிட் ஆபீசுக்கு கிளம்ப வேண்டியது தான். 

நந்தினி குளித்தாளா? சாப்பிட்டாளா ? இவன் தூங்கும் போது அவளுக்கு எப்படிப் பொழுது போகிறது ? என்ற கவலையெல்லாம் மூர்த்திக்கு வந்தது இல்லை. இந்த வாழ்க்கை நந்தினிக்கு அலுப்பும் வேதனையும் ஆனது. ஒரு நாள் மூர்த்தி ஆபீஸ் முடித்து வீட்டிற்குள் நுழையும் போது பற்றிக் கொண்டது. நந்தினியின் விஸ்வரூபத்தை அன்று தான் மூர்த்தி பார்த்தான். பயந்தே போனான். மூச்சு வாங்க சண்டை போட்டு முடித்து விட்டு கையில் பெட்டியுடன் நந்தினி புறப்பட்டு விட்டாள். நிஜமாகவே திருவாரூர் போய் விட்டாள். மூர்த்தி நொடிந்து போனான். எத்தனை போன் செய்தும் நந்தினி பேசுவதாயில்லை.

மூர்த்தி வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தான். நந்தினிக்குத் தகவல் சொன்னான். நந்தினி இறங்கி வருவதாக இல்லை. இரண்டு மாத கடும் முயற்சிக்குப் பிறகு மூர்த்திக்கு மஸ்கட்டில் நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. திருவாரூர் போய் கிட்டத்தட்ட நந்தினி காலிலேயே விழுந்து கெஞ்சினான் மூர்த்தி. பெரியவர்கள் தலையீட்டோடு நந்தினி மஸ்கட் வர சம்மதித்தாள். 

நல்ல வேளை. நல்ல வேலை. மூர்த்திக்கு மஸ்கட்டில் ஐந்து நாள் வேலை, இரண்டு நாள் விடுமுறை, மேலும் காலை சென்றால் மாலை வீடு வந்து விடுவான்.

பிழைத்தது ஒரு தாம்பத்தியம்...!

My recent poems

அனைவரையும் விரும்புகிறேன்
சிலரோடு இருக்க
சிலரோடு சிரிக்க
சிலரைத் தவிர்க்க
சிலரோடு ஜெயிக்க
சிலரோடு பயணிக்க
சிலரோடு பகிர
சிலரை ரசிக்க
சிலரை சகிக்க
விரும்புகிறேன்....
- பாலசாண்டில்யன்

அறிவாளிகளாக
அறிவிலிகளாக
அழகானவர்களாக
அழகு குறைந்தவர்களாக
அன்பானவர்களாக
அன்பற்றவர்களாக
அக்கறையுள்ளவர்களாக
அக்கறையற்றவர்களாக
அளிப்பவர்களாக
அள்ளுபவர்களாக
அகிலத்தில் மனிதர்கள்
அவர்களில் நாம் எப்பக்கம்?!
-
பாலசாண்டில்யன்

பிரிவுகள் என்பது யாராலும்
ஆற்ற முடியாத காயம்...எனினும்
நினைவுகள் என்பது யாராலும்
திருட முடியாத மாயம்....எனவே
பத்திரப்படுத்துவோம் அவற்றை.
பார்த்தது சரியில்லை எனும்போது
பார்வையும் நோக்கும் சரியில்லையென
தேற்றிக் கொண்டால்
பாதகம் நமக்கு தான்....!!
பரிட்சைகள் என்பது
காதலி போலத்தான்
கடினமான கேள்விகள்
நீளமான விளக்கங்கள்
திருப்தி இல்லா திருத்தம்
வினா எதுவானாலும்
விடை சரியென்றாலும்
விளைவு வெற்றி அல்ல
வீண் தோல்வி தான்
வாடிய முகம்
மீண்டும் முயற்சி
-
பாலசாண்டில்யன்
சிலர் சொல்லில் வைப்பார் முள்ளை.
சிலர் சொல்லில் வைப்பார் கள்ளை.
சிலர் சொல்லில் இன்பம் கொள்ளை
சிலர் சொல்லில் இன்றும் பிள்ளை
இல்லை என்பது தான் இருக்கிறது
என்றால்
இருக்கிறது என்பது எல்லாம் ஏன்
இல்லை என்றானது...
கனவுடன் சிலர்
கவிதையுடன் சிலர்
கற்பனையில் சிலர்
கலக்கத்தில் சிலர்
கலகத்தில் சிலர்
கவுந்தடித்து சிலர்
காதலுடன் சிலர்
காட்சி தரும் சிலர்
கவலையில் சிலர்
கண்மறைவில் சிலர் - அனைத்தும்
கலந்தவர்களின் உலகம்..!!
-
பாலசாண்டில்யன்
கடலுக்குள் உப்பு மட்டுமா?
இல்லை....!
மீன் முத்து இன்னும் உண்டு. 
அது போலத்தான்...
நமக்குள் தப்பு மட்டுமா?
யார் சொன்னது?!
அளப்பரிய ஆற்றல் அறிவு
ஆண்டவன் தந்தது-
உணர்வோம் உவகையோடு...!
-
பாலசாண்டில்யன்
ஈட்டுவது
சேமிப்பது
பெறுவது
மட்டும்
வருமானமல்ல
வீண் குறைப்பு
கூட
உபரி தான்...
நிறைய உழைப்போம்
நிறைய ஈட்டுவோம்
தேவையானதை நுகர்வோம்
வீணடிப்பு துரோகம்...
உணர்வோம்
மூடிய கைத்துண்டுக்குள்
முடிந்து போகும் பேரம்
மாறி இடம் பெயர்வது 
கால்நடைகள் !
தேடிய வலைவீச்சுக்குள்
முடிந்து போகும் வரன்
மாறி குடி பெயர்ந்திட
கல்யாணங்கள்.....!!
இரு வேறு சந்தைகள்...!!
இடம் மாறும் விந்தைகள்!!
-
பாலசாண்டில்யன்
கண்ணில் படுவது நேசம்
கலங்கி நிற்கும் சுவாசம்
யார் அறிவார்?!
முகர்ந்து அறிவது வாசம்
கசங்கி மடிந்தன வாசமலர்கள்
யார் அறிவார்?!
கண்ணில் படுவது வெற்றி
கலைந்து போன உறக்கம்
யார் அறிவார்?!
-
பாலசாண்டில்யன்
மழையில் வந்த மகளிடம்
அடி நனைந்தாயா 
இந்தா துண்டு என்றேன் 
அவளோ....என்
அடினியம் செடி
நனைகிறது பார் 
உள்ளே கொண்டு வா என்றாள்
-
பாலசாண்டில்யன்
அமைதியான குளத்தில் 
சிறியதோர் கல்
விழுந்தாலும்
வட்டங்கள் தோன்றும்...
அமைதியான மனமும்
அப்படியே...!
கலங்காதிருப்பது நம் கடன்...திறன்
-
பாலசாண்டில்யன்