Saturday, June 25, 2016

From the pen of Balasandilyan

பொய்யும் துரோகமும் பல தடயங்களை விட்டுச்செல்லும்..
உண்மை ஊமையாக இருந்து உலகையே உலுக்கி விடும்...!
காமமும் காதலும் தான்  ஆக்கமும் அழிவும்... 
உள்ளத்தைச் சொல்ல உயிரெடுக்கலாமா 
உள்ளதைச் சொல்ல உருக்குலையலாமா!? 

பெரும்பாலும் வழங்குபவர்களே 
மகிழ்ச்சியானவர்கள் பெறுபவர்களை விட...!!

வலைத்தள வர்த்தகம் படுகுழி என்று காலை விடும் போது தெரிவதில்லை. மூச்சு முட்டும் போது புரியும் தொல்லை

சில மாடுகள் கறக்கும் போது 
சில பறவைகள் பறக்கும் போது 
சில மிருகங்கள் சப்தமிடும் போது 
சில பூச்சிகள் கடிக்கும் போது 
சில மனிதர்கள் பழகும் போது 
சில ஆடைகள் நனையும் போது 
வெளிப்பட்டு விடும் 
உண்மை ஸ்வரூபம்...!!

தெரிந்த முகம் தெரியாத வேடம். 
தெரிந்த கதை தெரியாத நீதி
தெரிந்த திறன் தெரியாத பலன்
எல்லாம் சுவாரஸ்யம் தான்.

இலவசப் பிரசாதம் பெற 
பொழுதுபோக்காக 
தேவைகளை கேட்க 
பழக்க தோஷத்தினால் 
துணையாக நிற்க 
நேர்த்தி கடனுக்காக 
வீட்டுக்கு அருகிலிருப்பதால் 
சந்திப்புக்காக
கோயிலுக்கு போக
காரணங்கள் பல...

நீ விழுந்தால் 
நிச்சயம் அங்கு 
நானிருப்பேன் 
சொன்னது தரை...!! 

நீங்கள் இனி இயலாது என்று இயம்புவீர்கள் என மற்றவர் நினைக்கும் போது விடாமல் நின்று வென்று காட்டுவதே வலிமை வல்லமை !

புன்னகை ஒன்றும் புதிய ஆயுதம் அல்ல இதயம் வெல்ல ! காயங்கள் என்றும் அன்பானவரையும் வீழ்த்தும் ஏவுகணை என நான் என்ன புதிதாய் சொல்ல..!!

இரவு பிடிக்கும் என்றாலும் சில மணி நேரங்களில் பகலாக மாறுவதை ஏற்கிறோம் அதுபோல வாழ்வின் தவிர்க்க முடியாத பிற மாற்றங்களை ஏற்க வேண்டும்...!

வலைத்தள வாழ்க்கை ஜாலி என்று இருக்கும் சூழலில் தரைத்தள இயல்பு வாழ்க்கை காலி..

அழுக்காக இருக்கும் போது வெள்ளையாகவும்
சுத்தமாக இருக்கும் போது கறுப்பாகவும் இருப்பது எது தெரியுமா ? கரும்பலகை தான்....!
கடனே துணை, என் பணி கடன் பட்டுக் கிடப்பதே என்று இருக்கும் பிளாஸ்டிக் பணக்காரர்கள் மனப்பான்மை மாற வேண்டும் உடனே..தெம்புடனே..!!

கல்லைச் செதுக்கும் உளிக்கும் வலிக்கும். அப்படித்தான் பார்த்து பார்த்து வளர்க்கும் பெற்றோருக்கும். கல்லுக்கு மட்டும் வலி என்பது அறியாமை.

நம்மை வைத்து கதவை மூடினால் சிறை. 
நாமே உள்ளே சென்று கதவை மூடினால் அறை.


இல்வாழ்க்கைக்கு முன்பே illவாழ்க்கையை தேர்வு செய்யும் இளைய சமூகத்திற்கு மருந்தே உணவாகுமோ..!!

வருந்தி வாழ்வதை விட திருந்தி வாழ்வதே மேல்

முரண் இல்லையேல் சரண் எனும் நிலை மாறி சுமுகம் ஆகட்டும் உறவின் அரண்.

கலக்கம் விலக்கு - நீ கலங்கரை விளக்கு
வெட்கம் அகற்றுநீ வேண்டியவை கற்று
தயக்கம் விரட்டு - நீ  ஜெயித்து விட்டு
ஐயம் எதற்கு - நீ ஜெயிப்பதற்கு

நாடுகளுக்கிடையே மட்டுமல்ல.. நபர்களுக்கு இடையேயும் எல்லை வேண்டும். அது மீறப்படும் போது தொல்லை தான்.

இரக்கம் இல்லா மனநிலை
இல்லாமையைக் காட்டும்
உறக்கம் இல்லா உடல்நிலை
இயலாமையைக் காட்டும்

பொய்யை மெல்ல சொல்ல வேண்டும்
மெய்யை சொல்லி மெல்ல வேண்டும்

பிரார்த்தனை என்பது அன்பின் குரல், நட்பின் பிரதிபலிப்பு, உறவுமுறையின் ஆதாரம். கும்பிடுவது மட்டுமல்ல நம்பிடுவதும் தான்.

சரியான முடிவு உங்கள் நம்பிக்கையையும் தவறான முடிவு உங்கள் அனுபவத்தையும் இரட்டிப்பாக்கும் !

ஏமாந்தவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது. இது பழசு. ஏமாற்றுபவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது. இது அரசு.

உதடுகள் நிரந்தரம்
சிரிப்பு வந்து செல்லும்
உள்ளம் நிரந்தரம்
எண்ணம் வந்து செல்லும்
வாசல் நிரந்தரம்
உறவு வந்து செல்லும்
வங்கி நிரந்தரம்
பணம் வந்து செல்லும்
முயற்சி நிரந்தரம்
வெற்றி வந்து செல்லும்
கடற்கரை நிரந்தரம்
அலைகள் வந்து செல்லும்
வானம் நிரந்தரம்
நிலவு வந்து செல்லும்
பூமி நிரந்தரம்
உயிரினம் வந்து செல்லும்
மலை நிரந்தரம்
காற்று வந்து செல்லும்
தண்ணீர் நிரந்தரம்
தாவரம் வந்து செல்லும்
இதயம் நிரந்தரம் - அதில்
(
இனி)யவளும் நிரந்தரம்..!