Wednesday, October 26, 2016

பாலசுப்பிரமணியன் - பாலசாண்டில்யன் ஆன கதை

பாலசுப்பிரமணியன் - பாலசாண்டில்யன் ஆன கதை –
(தவம் அல்ல இந்தப் பெயர் வரம்)

(ஒரு சுய விளக்கம்)

1976 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் என்று நினைக்கிறேன். என் தந்தை (மறைந்த திரு E S கல்யாணராமன்) என்னை அவர்கள் எழும்பூரில் பணி புரிந்த ரயில்வே அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தார்கள். என்னை ஒரு அலுவலக அதிகாரியின் சீட்டில் உட்காரச் சொல்லி விட்டு எனக்காக கேன்டீனில் பக்கோடா வாங்கி வருவதாகச் சென்றார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. 

சுற்றிலும் பார்த்தேன், ஒரு ஈ எறும்பு கொசு கூட அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் அறிகுறி எனக்குத் தென்படவில்லை. எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். சத்த சத்தமாக ஜோக் அடித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு முதல் நாள் தான் எனது பெரியப்பாவின் மகள் அனுராதா என்னை விட ஆறு ஏழு மாதம் வயதில் பெரியவள், ஆனால் வகுப்பில் ஓர் ஆண்டு குறைந்தவள். வித்யோதயா பள்ளியில் ஆங்கிலப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் இருந்தாள். அவளது பள்ளி ஆண்டு மலரில் இரண்டு தமிழ் கவிதைகள் எழுதியதாக எல்லோருக்கும் காட்டி பாராட்டைப் பெற்றுக் கொண்டிருந்தாள். எனக்கு லைட்டாக பொறாமை என்று சொல்லவும் வேண்டுமோ? அந்த நிகழ்வினை நான் அந்த ரயில்வே அலுவலகத்தில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். அந்த சமயம் எனது பெரியப்பாவும் (ரயில்வே தான் - ஆனால் பக்கத்து அலுவலகம்) அங்கே வந்தார். "என்னடா இங்கே என்ன செய்கிறாய்? எங்கே உன் அப்பா?" என்றார். அவர் கான்டீன் போன விஷயம் சொன்னேன். அவரும் அங்கே கிளம்ப ஆயத்தமானார். அவரிடம் ஓரிரு காகிதங்களும் ஒரு பேனாவும் வாங்கிக் கொண்டேன். 

அந்த மதிய நேரத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் எனது வாழ்வில் நடந்தன. ஒன்று நான் நிச்சயம் பின்னாளில் அரசுப் பணியில் சேர மாட்டேன் என்ற முடிவு. மற்றொன்று அனுராதாவை நினைத்துக் கொண்டு அந்தக் காகிதங்களில், 'மலை', 'மயில்', 'கடல்' இது போன்ற மொக்கை தலைப்புகளில் கவிதைகள் நான்கோ ஐந்தோ எழுதினேன். அவை கவிதைகள் என்று சொல்லி மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வீடு வந்து எல்லோரிடமும் காட்டினேன். யாரும் பெரிதாக அவற்றைப் படித்து விட்டு சிலாகிக்கவில்லை. எனது அம்மா மட்டும் சொன்னார், பரவாயில்லை நல்ல முயற்சி என்று. அப்பாவிடம் நான் காட்டவே இல்லை. 

அதன் தொடர்ச்சியாக அப்போது நான் DB ஜெயின் கல்லூரியில் பி யூ சி படித்துக் கொண்டிருந்தேன். எனது தமிழ் ஆசிரியர் 'சுட்டி' தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் சுந்தர் அவர்கள். இப்போது மிகப் பிரபலமாக விளங்கும் திருநின்றவூர் பாண்டுரங்கன் எனது வகுப்புத் தோழன். நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அது மரபா அல்லது கவிதை தானா என்று கூட எனக்குத் தெரியாது. பிறகு பட்டப் படிப்பிற்கு A M ஜெயின் கல்லூரியில் சேர்ந்தேன். நான் வசித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு டைப் ரைட்டிங் பயிற்சி நிறுவனத்தில் (இன்றைய அழகிய சிங்கர் - நவீன விருட்சம்) சந்திரமௌலி என்ற என்னை விட வயதிலும் உயரத்திலும் மூத்தவர், எனது கல்லூரித் தோழன் எஸ் வி வேணுகோபாலன், மறைந்த சொர்ணவேலு ஆகியவர்கள் இணைந்து இளங்கவிஞர் இயற்றமிழ் மன்றம் ஒன்று தொடங்கி இரு வாரத்திற்கு ஒரு முறை கவிதை வாசிப்பு செய்யும் கவியரங்கம் நடத்தினர். நான் அங்கு என்ன தலைப்பிலும் வாசிக்கலாம் என்பதால் எனது கெக்க பிக்க கவிதைகளை வாசித்து விட்டு வருவேன். அப்போது ஒரு தமிழ் ஆசிரியர் புலவர் ஒருவர் எங்களுக்கு யாப்பு கொஞ்சம் கற்றுத் தந்தார். பிறகு நாங்கள் சந்திரமௌலி அவர்களின் தலைமையில் ஒரு கையெழுத்து பிரதி ஒன்றை ஆரம்பித்து அதில் எழுதி எல்லோரையும் தொல்லை செய்தோம். நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு வரும் போது அந்தக் கல்லூரியின் தமிழ் மன்ற செயலாளர் என்ற பதவி கிடைத்தது. அப்போது அனைத்துக் கல்லூரி பட்டிமன்றம் ஒன்றை நானும் நண்பர் ராஜசிம்மனும் (எங்கு இருக்கிறார் என்று தெரியாது) ஏற்பாடு செய்தோம், அதற்குத் தலைமை நமது அன்பிற்குரிய மதிப்பிற்குரிய டாக்டர் அவ்வை நடராசன் அவர்கள். அப்போது எனக்கு தமிழ் ஆசிரியர் மறைந்த நாகநந்தி (வேணுகோபாலன்) அவர்கள். அவர் தான் ஆர் எஸ் மனோகர் நாடகங்களுக்கு வசனம் எழுதியவர். 

அவ்வமயம் நானும் நண்பர் ராஜசிம்மனும் எல்லா அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று கலந்து கொண்டு டீம் பரிசாக கிட்டத்தட்ட 60 பரிசுகள் வாங்கினோம். அப்போது போட்டிக்கு வந்தவர்கள் என்னை விட சீனியர்கள் டாக்டர் சுதா சேஷன், வக்கீல் ராமலிங்கம், மணிமொழி என்று பெரிய பெரிய ஜாம்பவான்கள். 

எப்போது பார்த்தாலும் கவிதை, இலக்கியம் என்று அலைந்த என்னை ஒரு முடிவோடு எனது தந்தை எனது கடைசி பரீட்சை ஏப்ரல் 30, 1979 அன்று இரவே மும்பைக்கு மூட்டை கட்டித் துரத்தி விட்டார். அங்கே வேலை உடனே நான்கைந்து நாட்களில் கிடைத்தது. கூடவே நிறைய தமிழ் மீது பற்று கொண்ட நண்பர்கள். மும்பை மாதுங்கா தமிழ் சங்கக் கூட்டங்களுக்கு சில சமயங்கள் செல்வது உண்டு. ஒரு முறை மூத்த எழுத்தாளர் சிவசங்கரி அம்மா வந்தார்கள். அவரைப் பற்றிக் கவிதை எழுதி வாசித்து அவரிடம், "உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என்று கையொப்பம் பெற்றேன். பிறகு பத்திரிகை பலவற்றிற்கு அங்கிருந்து கவிதைகள், துணுக்குகள் என்று கபாசு மணியன் என்ற பெயரில் அனுப்புவேன். சில பத்திரிகை மும்பை வாசகர் என்பதாலோ என்னவோ அவற்றைப் பிரசுரித்தது. பிறகு அங்கிருந்து மஸ்கட் சென்றேன். தொடர்ந்து கவிதைகள், இசையுடன் கூடிய பாடல்கள் எல்லாமே எழுதி வந்தேன்.

1987 ஆம் ஆண்டு, சென்னை திரும்பி விட்டேன். மேற்கு மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் எனது வீடு (வாடகை வீடு). எதிர் வீட்டு ஸ்வயம்வராலயா ஜானகிராமன் அண்ணா எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது எனது அடுத்த வீட்டில் தான் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் ஐயா குடியிருப்பதாக சொல்லி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று நான் எழுதிய கவிதைகளை தொகுத்து 'தலையுதிர்காலம்' என்று சிறு புத்தகம் வெளியிட ஆசையோடு அவரை சந்தித்தேன். எனது இயற்பெயரை சொல்லி விட்டு, எனது புனைபெயர் 'பாலசாண்டில்யன்' என்று சொன்னேன். உடனே ஐயா அவர்கள் அதன் காரணம் கேட்டார். நான் சாண்டில்ய கோத்திரம் என்று சொன்னேன். எல்லா புகழும் ஒரிஜினல் சாண்டில்யனுக்கு போய் விடும், பெயரை மாற்றிக் கொள்ளேன் என்றார் அன்பொழுக. நான் பிடிவாதமாக, துணிச்சலாக அவரிடம் மறுத்து விட்டேன். பின்னர் எனக்கு நல்லதொரு அணிந்துரை கொடுத்தார். பிறகு இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா. மறுநாளே என்னை திரு ஜானகிராமன் ரொம்ப சஸ்பென்ஸ் கொண்டு ஒரு விழாவிற்கு கூட்டிச் சென்று என்னை ஒரு சிலருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் தான் உரத்த சிந்தனை திரு உதயம் ராம் மற்றும் திரு ராஜசேகர். அன்று அவர்களின் ஆண்டு விழா, அதிலே திருமதி பத்மாமணி அம்மையார் ஜீவீ விருது பெற்றார்கள். நானும் ஒரு நாள் இந்த விருதினை பெறுவேன் என்று மனதில் பேராசை கொண்டேன். (அப்படியே எனக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு GV அவர்கள் கையாலேயே கிடைத்தது)

நான் அஸ்வினி நட்சத்திரம் என்பதால், அசுவதி, சாருரூபன் (எனது பெரியம்மா பெண்ணின் பெயர் சாரு), கபாசு என்றெல்லாம் எழுதிய போது யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. கொட்டும் மழையில் எழிலகம் அலுவலகத்தில், மெரினா கடற்கரையில் எழுத்தாளர்கள் சுபா, ஐயா ஏர்வாடி ஆகியோர் உட்பட 13 பேர் முன்னிலையில் எனது கவிதை புத்தகம் வெளியானது. உரத்த சிந்தனை மூலம் அது நூற்றுக் கணக்கானவர்களுக்கு பின்னாளில் போய் சேர்ந்தது. கவிதை உறவு நடத்திய கவிதை இரவில் பங்கு பெற்று பல கவிதைகள் வாசித்தேன். பல பிரமுகர்களை சந்தித்தேன். 

இருப்பினும் முகமும் முகவரியும் எனக்குத் தந்து என்னையும் ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடலாசிரியராக, டிவி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக ஆக்கி பன்முகத் தன்மை தந்தது உரத்த சிந்தனை தான். அப்படி பாலசாண்டில்யன் ஆன பிறகு எல்லாமே ஏறுமுகம் தான். எனது தந்தை கவிதை நான் அன்று எழுதியதை விரும்பாதவர் பின்னாளில் நான் கவிஞர் எழுத்தாளர் பாலசாண்டில்யனின் தந்தை என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டார் (அவர் பப்ளிக் ஹெல்த் சென்டரின் துணைத் தலைவர் என்றாலும்)

பாலசாண்டில்யன் ஆன பிறகு, வளர்தொழில், ஏற்றுமதி உலகம், தொழில் முன்னேற்றம், பொருளாதாரம், ஆனந்த விகடன், அமுதசுரபி, கலைமகள், மங்கையர் மலர், வானொலி, பொதிகைத் தொலைக்காட்சி எல்ல்லாவற்றிலும் எனது கவிதை, கட்டுரைகள், தொடர்கள், சிறுகதைகள், எல்லாமே வெளிவந்தன. மணிமேகலை பிரசுரத்தின் பிரபலமானவர் புத்தகத்தில் எனது பெயர், முகவரி அச்சில் வந்தது. அது மட்டுமா? உலகநாயகன் கமல்ஹாசன், விசு சார், டெல்லி கணேஷ் சார், எஸ்பிஎம் சார், எஸ்வி சேகர், கிரேசி சார், மற்றும் பல பிரபலங்கள் பத்திரிகைத்துறை, சினிமாத்துறை, எல்லோரிடமும் பாலசாண்டில்யன் என்ற பெயர் பரிச்சயம் ஆனது. தீபாவளி மலர்களில் எனது படைப்புகள் வெளிவந்தன. உரத்த சிந்தனை அமைப்பில் பொறுப்பு, பத்திரிகையில் பொறுப்பு என்று என்னை சிறு சிறு உளி கொண்டு செதுக்கிய பெருமை உடன் பிறவா சகோதரர் உதயம் ராம் அவர்களுக்கும், அவருடன் மெளனமாக என்னை எல்லாப் பணிகளிலும் சேர்த்துக் கொண்ட தலைவர் எஸ்விஆர் அவர்களை நான் எனது உயிர் உள்ளவரை மறக்க முடியாது.

உதயம் ராம் அவர்கள் எனக்கு கொடுத்தது புதிய பொறுப்புகள் மற்றும் பரிமாணங்கள், சன் டிவியில் திரு சோ சாருடுடைய 'சோவின் பஞ்சாயத்து' மற்றும் ராஜ் டிவியில் 'துக்ளக் தர்பார்' மற்றும் டிஎன் சேஷன் அவர்கள் கலந்து கொண்ட 'சென்சேஷன்', சிவசங்கரி அம்மாவின் நேற்று இன்று நாளை, விசு சாரின் 'அரட்டை அரங்கம்', மற்றும் மறைந்த திரு ஜெயகாந்தனின் 'ஒரு பிரஜையின் குரல்', மற்றும் எஸ்வி சேகர் அவர்களின் 'இனிமே நாங்க தான்', பிறகு அபஸ்வரம் ராம்ஜி அவர்களின் 'பேச்சுக் கச்சேரி' போன்ற அனைத்து டிவி நிகழ்வுகளிலும் என்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இணைத்துக் கொண்டு எனது பெயர் டைட்டில் கார்டில் வரவழைத்து பார்த்து பெருமைப்பட்டார், பெருமைப் படவைத்தார். இது வரை 400 முறைக்கு மேலாக நான் எல்லா டிவி சானல்களிலும் வந்துள்ளேன் என்றால் அதற்கு 'பாலசாண்டில்யன்' என்ற பெயரும் அதற்கு அங்கீகாரம் கொடுத்த உரத்த சிந்தனையும் தான் காரணம். 

கூடவே எனக்கு எப்போதும் உற்சாகம் மற்றும் ஆதரவு கொடுத்தது இலக்கிய ஆசான் திரு விக்கிரமன் ஐயா, ஏர்வாடி ஐயா, கிரிஜா ராகவன் அவர்கள், திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், கீழாம்பூர் அவர்கள், லோகநாயகி அவர்கள், என்றால் மிகையல்ல. அவர்கள் அனைவர்க்கும் எனது கோடான கோடி நன்றி மலர்களையும் வணக்கங்களையும் இந்த கட்டுரை வாயிலாக சமர்ப்பிக்கிறேன்.

இந்த கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் சொல்ல வேண்டிய தகவல் என்னவென்றால் 'பாலசாண்டில்யன்' என்ற இந்தப் பெயர் வைத்துக் கொள்ள நான் எனது வீட்டில் கூட யாருடைய அனுமதியும் யோசனையும் கேட்கவில்லை. ஆனால் அவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது எங்கள் குடும்பத்தில் பிறந்துள்ள சில குழந்தைகளுக்கு இந்த 'சாண்டில்யன்' என்ற பெயரை இணைக்கிறார்கள்.

இந்தப் பெயர் வைத்துக் கொண்டதால் அன்று முதல் முதல் விக்கிரமன் அவர்கள் சொன்னது போல பல பேர் என்னைக் கேட்காமலே நான் திரு சாண்டில்யன் அவர்களின் மகன் என்றே நினைத்து யூகித்தார்கள். நானே வலியச் சென்று நான் அவர் மகன் இல்லை என்று விளக்கம் சொல்லுவேன். பிறகு தேடி அறிந்து சாண்டில்யன் அவர்களின் மகள் (இசைக்கலைஞர்) மற்றும் மகன் (பேராசிரியர்) என்று தெரிந்து கொண்டேன். 

நிறைவாக ஒரு கொசுறு செய்தி.அண்மையில்  கிரி ட்ரேடிங் திரு சுரங் டிஎஸ் ரங்கநாதன் அவர்களின் குரலில், கண்ணன் (தமிழ்ப்படம் எனும் படத்தின் இசை அமைப்பாளர்) இசையில், எனது பாடல் வரிகளில், சிவசங்கரி அம்மா அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டு திரை இயக்குனர் திரு வசந்த் சாய் அவர்கள் பெற்றுக் கொண்டார். அந்த சிடியில் எனது இயற்பெயராகிய 'பாலசுப்பிரமணியன் கல்யாணராமன்' என்று வெளியானது - பாலசாண்டில்யன் என்று அதில் இல்லை. விழாவின் போது சிவசங்கரி அம்மா, உரிமையாக கூப்பிட்டு, "என்ன இது 'பாலசாண்டில்யன்' என்று போடாமல் நீட்டி முழக்கி வேறு பெயர் போடப்பட்டுள்ளது.  யாருக்கு தெரியும் இந்தப் பெயர், எல்லோருக்கும் உங்களை பாலசாண்டில்யன் என்றால் தானே தெரியும், அடுத்த பதிப்பு சிடியில் சரி செய்யுங்கள்  என்று சொன்னார். அந்த விஷயத்தை திரு ரங்கநாதன் அவர்களின் காதில் போட்டு வைத்தேன் ஒரு விண்ணப்பமாக. அந்த விழாவில் சிவசங்கரி அம்மாவின் எனது மும்பை 1980 களில் ஏற்பட்ட சந்திப்பை, அவரது ஆசியை நினைவு கூர்ந்து பேசினேன். அவர் உடனே எழுந்து 'இப்போது சொல்கிறேன், பாலசாண்டில்யன், நீங்கள் நிச்சயம் மிகப் பெரிய அளவில் இனி அறியப் படுவீர்கள்' என்று ஆசி கூறினார். கண்கள் குளமாகின எனக்கு. 

பெயரியல் நிபுணர் திரு ராஜராஜன் ஒரு முறை சொன்னார், நீங்கள் யாரைக் கேட்டீர்கள் என்று தெரியாது, ஆனால் இந்தப் பெயர் உங்களுக்கு நிச்சயம் மிகப் பெரிய பலம் என்று வாழ்த்தினார். இந்தப் பெயர் எனக்கு மனதில்  தோன்ற வைத்த இறைவன், அதனை நிலைக்க வைத்த உரத்த சிந்தனை, இன்னும் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் எனது பெற்றோர்கள்,  எனது அக்கா அனுராதா (கவிஞர் ஆக்கியவர்), அனைவர்க்கும் இன்று நான் நன்றி சொல்கிறேன். கடைசி ரகசியம் என்னவென்றால் - எங்களுக்கே அண்மையில் தான் தெரியும் எனது தாயார் லட்சுமி அவர்கள் 100 க்கும் மேலாக பாடல்கள் எழுதி இசை அமைத்து வைத்து டைரியில் எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த எழுதும் திறமை நிச்சயம் ஜீனில் உள்ளது. தாங்க்யூ அம்மா. திருமணத்திற்கு பிறகு எனது முதல் வாசகி திருமதி சுகீர்த்தி பாலசாண்டில்யன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. 
என்னை முன்னேற்றியவர்கள் பெயர் ஏதாவது விடுபட்டுப் போய் இருந்தால் எனது வயது தான் அதன் காரணம் - அதனால் மறதி.


Thursday, October 13, 2016

Tamil Quotes by Balasandilyan

சந்தோஷமாக இருப்பவர்கள் குறை சொல்வதில்லை, அதிகம் நோய்களுக்கு ஆட்படுவதில்லை, எளிதில் முடிவெடுப்பவர்கள்.

ஒவ்வொரு மலரிலும் தேன் இருப்பதைத் தேனி கண்டறிவதைப் போல பழகும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் நற்குணங்களை கண்டறிந்து நாமும் கற்றல் சிறப்பு.


மகிழ்ச்சியாக இருக்கும் போது
தேவை இல்லாதவற்றை நினைக்க மாட்டோம்
தேவையானவற்றை கூட நினைக்க மாட்டோம்

அன்பும் ஆக்ஸிஜனும் குறைந்து வருகிறது. மரங்களும் மனங்களும் அதிகம் காயப்பட்டு வருவதால்..!!

செய்ய நினைக்கும் அந்த நல்ல விஷயங்களை உடனே தயங்காமல் தொடங்குங்கள். தடை செய்ய நீங்களே முன் நிற்கலாம்.

சமரசம் இல்லாத சங்கதிகளும் சமரசம் பெற விரும்பாத சந்ததிகளும் இன்று கட்டுப்படவுமில்லை. மட்டுப்படுத்தவும் முடியவில்லை

பார்த்ததை எல்லாம் வாங்கத் துடிக்கும் (தேவையா எனப் பார்க்காமல்) நுகர்வோர் மனப்பான்மை தனிநபரை கடனில் தள்ளும். நிறுவனங்கள் லாபம் அள்ளும்.

கண்ணீர் விட்டு கரைக்க முடியாது கவலைகளை. தண்ணீர் விட்டு அமிழ்த்த முடியாது உறவுகளை. மலர்ச்சியுடன் சந்திப்போம் சவால்கள் நிறை வாழ்வினை.

விதை நிசப்தமா௧ முளைக்கும்  விருட்சம் சத்தமா௧ விழும்
௮ழிவில் சத்தம் ௨ண்டு  ஆ௧்௧த்தில் ௮மைதி ௨ண்டு

ஒருவருக்கு அலங்காரம், அகங்காரம் வேண்டாம். ஆனால் அங்கீகாரம் நிச்சயம் தேவை.

எங்கே விழுந்தாய் என்று பார்ப்பதை விட எங்கே சறுக்கினாய் என்று பார்ப்பதுவே சிறந்த அணுகுமுறை.

அறிவுபூர்வமாக சட்டபூர்வமாக அதிகாரபூர்வமாக பேசுவதை விட
அபூர்வமாக பேசினால் மதிப்பு அதிகம்

௨யர்வான வாழ்க்கை முறை நேற்றைய பேச்சு... ஒயர் தான் வாழ்க்கை இன்றைய மூச்சு

வலையில் மீன்களும்
வலைத்தளத்தில் மனிதர்களும்
சிக்கினால் மீண்டு வருவதில்லை...

இளங்கன்று பயம் அறியாது
இளம்பிள்ளை டயம் அறியாது

ஆழ்ந்து அமைதியாக இருக்கப் பழகினால் ஆற்றலுடன் செயலாக்கம் தானாக நிகழும்

மீன்களை மரங்கள் ஏறச் சொல்லி ஒரு போதும் வற்புறுத்தி பயனில்லை. அது காகித மலரில் தேன் எடுப்பது போலத்தான்.

உண்மை அதிக நேரம் இருட்டில் இருக்காது
பொய் அதிக நேரம் வெளிச்சத்தில் இருக்காது

வாழ்கையை தேடுங்கள் வறுமை தாமாகவே தொலைந்து விடும்...!


மாற்றம் வந்த பிறகு மாறுவோர் பிழைத்துக்கொள்வர். மாற்றம் ஏற்படும் போதே மாறுபவர்கள் வெற்றி பெறுவர். மாறாக மாற்றம் கொண்டு வருபவரே தலைமை தாங்கி நிற்பர்.

வானிலை போலத் தான்  மனநிலையும்  வெப்பம் அதிகம் என்று  உணரும் போதே  மழை பெய்கிறது ...

ஆபத்தில் நமக்கு உதவியவர்கள், நமது குறைகளை பெரிதுபடுத்தாதவர்கள், நமது நலம் விரும்புபவர்கள் - இந்த மூவரையும் ஒருபோதும் மறக்கக்கூடாது.

தெரியாதவங்௧ பண்ணி பண்ணி பாப்பாங்௧. தெரிஞ்சவங்௧ பாத்து பாத்து பண்ணுவாங்க. ௭ப்புடி?

சொல்லும் செய்தி ஒன்று. ஆனால் புரிந்து கொள்வது மற்றொன்று. ௧ேட்பதில் புரிதல் இல்லை என்பது தான் சிக்கல்.

கூட்டினாலும் பெருக்கினாலும் மாறாதது மனப்பாங்கு

எது சரியோ அதை செய்வது நல்லது
எது சுலபமோ எது மலிவோ அதை அல்ல....!

என்ன தான் வேகமாக கால்கள் ஓடினாலும் வெற்றி கோப்பை பெறுவது என்னவோ கைகள் தானே...!

சாப்பாட்டுக்காக உழைப்பவர் தரித்திரன். சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் சாமானியர்கள். சாதனைக்காக பணிகள் செய்பவர்கள் அற்புதமான மனிதர்கள்.

வசதி வட்டம் ரொம்ப Bore தான்.
சவால் வட்டம் தினசரி போர் தான்
திட்டவட்டம் வெற்றிக்கு வேர் தான்.

உண்மையும் வெளிப்படைத்தன்மையும் சற்று அசௌகரியமாக இருந்தாலும் அவை இரண்டும் வதந்திகளை விட என்றும் சிறந்தவையே

இன்பம் என்பது போராட்டத்திலும் செயல்பாட்டு முயற்சியிலும் இடையில் வரும் இடர்பாடுகளிலும் கூட இருக்கிறது... வெற்றியில் மட்டுமல்ல...!

எல்லா விஷயங்களையும் எல்லாரிடமும் சொல்லி சம்பந்தமில்லா சம்பாஷனையில் லயிக்கும் நாம் விழித்தெழுந்தால் உண்டு நன்மை.

தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளுவது அல்ல, பிறர் நம்மைப் பாராட்டுவது தான் - புகழ் என்பது.

திறமையற்றவர்கள் செய்யும் பெரிய செயல்கள் கூட நீர்க்குமிழி போல சிறிது நேரத்தில் மறைந்து விடும். ஆனால் புத்திசாலிகளும் திறமைசாலிகளும் செய்யும் சிறு செயல்கள் கூட கல்லில் செதுக்கிய சிலைகள் போல நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

சரியான விடை பெற சரியான கேள்வி கேள். சும்மா விடை பெற கையை மட்டும் அசை.

ஒவ்வொருவருக்கும் சில முட்டாள்களின் துணை தேவைப்படுகிறது...தன்னை புத்திசாலியாக வெளிப்படுத்திக்கொள்ள..!!
பூமியோடு ஒட்டி இரு. எளிமையாக சிந்தி. முரண்பாடுகளில் விசாலமாய் நினை. விரும்பிய பணியில் லயித்திரு. குடும்பத்தில் மனம் செலுத்து. இறையிடம் சரணடை.

மனசுக்குள் போட்டு வைத்த கவலை பெட்டிக்குள் பூட்டி வைத்த சேலை
இரண்டும் பாழ் தான் எடுத்து வெளியே வீச வேண்டும்

சட்டங்கள் அறியாத மனது திட்டங்கள் தீட்டும். திட்டங்கள் தீட்டும் மனது நட்டங்கள் அறியாது. இட்டம் போல் இருப்பது இந்தியனுக்கு அழகல்ல.

எப்போது நீ மிகச் சரியாக இருக்கிறாயோ அப்போது உலகம் உன்னை அதிகமாக குறை சொல்லும். சுய சந்தேகம் வேண்டாம்.

அன்பு இருப்பவரை பிடிக்குமா நீங்கள் இறைவனைப் போல. பணம் இருப்பவரைப் பிடிக்குமா நீங்கள் ஒரு பாமர மனிதன்.

வேடிக்கை பார்ப்பவர் எல்லாம் வேதனை உணர்வதில்லை. வேதனை கேட்பவர் எல்லாம் வேதனை தீர்ப்பவரில்லை.

வெற்றிப்பயணத்தின் இடையே சில நட்புகளை இழக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் வளரவில்லை என்றே பொருள்...

சரி சாரி இரண்டு வார்த்தைகள் இரண்டை ஒன்றாக்கும்

நான் சத்தமாக பேசுவதால் யுத்தம் செய்வதாக பலர் நினைக்கிறார்கள். என் குரல் தான் உயருகிறது. கருத்து தாழ்மையுடன் தான்...!! நினைத்ததுண்டா இப்படி?

உழைப்பவரின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழைந்து விடத் துணியாது

தொடர்ந்து அறிவை விருத்தி செய்து கொண்டு பயன்படுத்தாமல் இருப்பது, மொட்டை மண்டைக்கு தினம் ஒரு ஷாம்பூ பாட்டில் வாங்கி வைப்பது போலத்தான்...

நமக்குள்ளேயே வழி உள்ளது இருப்பினும் பழி ஏன் பிறர் மீது!?! உங்கள் சாய்ஸ் முடக்கும் பாதையா முன்னேற்றப் பாதையா?

நாம் கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் பிறரின் அபிப்ராயமே ஒழிய உண்மை அல்ல. நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயமும் மற்றவர் நோக்கு மற்றும் பார்வையே தவிர நிஜம் அல்ல.

தினமும் குனிந்து நிமிருங்கள். சுமக்கும் பாவ மூட்டைகள் கீழே விழட்டும். வாய் விட்டு இறை நாமம் சொல்லுங்கள். கெட்ட எண்ணங்கள் வெளியேறட்டும்.






Wednesday, September 7, 2016

உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence)

உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence)
- டாக்டர் பாலசான்டில்யன் (9840027810)
Thought Leader/Transformation coach and CEO of Vision Unlimited
உணர்வுசார் நுண்ணறிவு என்பது ஒரு தனிமனிதனின் சிறப்புதிறமை - குறிப்பாக அடுத்தவரை நிர்வகிப்பதில், கையாள்வதில், உத்வேகபடுவதில், புரிந்து கொள்வதில், பிறர் செய்கை அல்லது வார்த்தைக்கு எப்படி பதிலளிப்பது என்பது தினம் தினம் நாம் வாழும் சூழலில் ஒரு சவாலாக உள்ளது. இது மனிதர்க்கு மனிதர் வேறுபடும்.
உணர்வுசார் நுண்ணறிவு என்பது மிகவும் மென்மையாக நடந்து கொள்ளல் என்பதை விட மேன்மையாக நடந்து கொள்ளுதல் எனலாம். உணர்ச்சிகள் தமைக் கையாள்வதில் தனித்திறன் அல்லது சாதுரியமாக இருத்தல் எனலாம்.
நமது உணர்ச்சிகளில் இருந்தும் பிறரது உணர்ச்சிகளில் இருந்தும் நமக்கு கிடைக்கும் பல்வேறு அனுபவங்கள் கொண்டு பிறரை மற்றும் நம்மை வெவ்வேறு சூழலில் எப்படி சமாளிக்கலாம் என்பதே இங்கு முக்கியமாகிறது.
பொதுவாக பிறரது உடல் மொழியை கவனித்தல், உன்னிப்பாக கவனமாக கேட்டல், குறைவாக பேசி நிறைய புரிந்து கொள்ளுதல், பிறர் நிலையில் நம்மை இருத்திப் பார்த்தல், ஆர்வமாக இருத்தல், கோபம் தவிர்த்தல், ஆக்ரோஷம் தவிர்த்தல், நெகடிவ் உணர்ச்சிகளை நுட்பமாக கையாளுதல், பிறர் சொல்ல நினைப்பதை அவர் முக ஜாடை, கண் அசைவு கொண்டு கூட அறிந்து கொள்ளல், எல்லாமே ஆகும்.
பிறரோடு இணைந்து செயல்படுதல், பிறரைப் பாராட்டுதல், குறிப்பாக குறைகளை ஏற்றுக் கொள்ளுதல், குறைகளை காது கொடுத்துக் கேட்டல் இவையும் ஆகும்.
உணர்ச்சிகள் என்பது தொற்றிக் கொள்வது ஆகும். நாம் சிரித்தால் எதிராளி சிரிப்பார். முறைத்தால் முறைப்பார்.
நாம் ஒரு சூழலில் ஆதிக்கம் செலுத்தினால் அடுத்தவர் எதிர்க்க ஞாயம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிறரை நமது வாக்கு அல்லது செயல் செல்வாக்கால் மாற்றும் வல்லமை மிகவும் தேவை.
உணர்ச்சிகள் இல்லையென்றால் நாம் ஒரு ரோபோ போலத் தான். நமது உணர்வுகளும் உணர்ச்சிகளும் தான் நமது விருப்பு வெறுப்பு இவற்றை வெளிப்படுத்துகிறது. நமது மகிழ்வையும் சோகத்தையும் கூடத்தான். திருப்தி, அதிருப்தி என்பதைக் கூட பிறர் மனம் நோகாமல் வெளிப்படுத்த முடிந்தால் நாம் திறமைசாலி தான்.
நமது உடல்நலம் மற்றும் மனநலம் நமது உணர்வுசார் நுண்ணறிவு தான் தீர்மானிக்கிறது என்பதால் இந்த சூட்சமத்தை எப்படியாவது கற்றிட வேண்டும்.
அதுவே நமக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரும்.