Thursday, March 1, 2018

சிந்திக்க சில நொடி

சிந்திக்க சில நொடி 

- டாக்டர் பாலசாண்டில்யன்
(மனநல ஆலோசகர்)

கணினி வந்த பொழுது எல்லோருக்கும் வேலை போய் விடும் என்று பயந்து போனோம். ஆனால் இன்று கணினி முன்னால் தான் அமர்ந்திருக்கிறோம். அல்லது உள்ளங்கையில் கணினியை வைத்திருக்கிறோம்.
எல்லா வங்கிகளையும் இணைத்து கோர் பாங்கிங் செய்த பொழுது எல்லோரும் கிளர்ந்து எழுந்தனர். பிறகு இன்று அந்த வசதியை எல்லோரும் பயன்படுத்துகிறோம்.
WiFi வந்தவுடன் ப்ரொவ்சிங் சென்டர் எல்லாம் படுத்து விடும் என்று தான் நினைத்தோம். அப்படி ஒன்றும் பெரிதாக நிகழவில்லை
கால் டாக்ஸி வந்தால் மற்ற நபர்களுக்கு தொழில் போகும் என்று ஒரு புறம் மக்கள் கூறினாலும் எல்லோரும் காரில் ஆட்டோவில் போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள்
பர்கர், பிஸ்ஸா வந்தால் இட்லி வடை பொங்கல் விற்காது என்று ஒரு சிலர் சொன்னாலும், எல்லாரும் எல்லாம் சாப்பிடுகிறார்கள்
மால் வந்துவிட்டால் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் கூட்டம் குறைந்து விடும் என்றனர். இருப்பினும் எல்லா இடங்களிலும் கூட்டம் தான்.
ATM மற்றும் மொபைல் ஆப் வந்து விட்டால் யாரும் பாங்க் பக்கம் போக மாட்டார்கள் என்று சொன்னவர்கள் இருந்தாலும் நாம் பணம் போட பணம் போட வங்கி செல்கிறோம்.
கார்கள் அதிகமாகும் பொழுது பெட்ரோல் டீசல் தேவை. வீடுகள் மக்கள் தொகை பெருகும் பொழுது நமக்கு மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு தேவை.
நிலக்கரி, தங்கம், வைரம், பெட்ரோல், டீசல், தண்ணீர் எல்லாமே நிலம் தரும் வரம். அவை குறைந்து கொண்டே வரும் பொழுது அதற்கேற்ற மாற்று விஷயங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. நாமும் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
அதன் விளைவு தான் சோலார் பவர், அணு சக்தி, ஜெனெரேட்டர், இன்வெர்டர், பேக்கிங் தண்ணீர் போன்ற விஷயங்கள். இன்னும் மாற்றங்கள் வரும். நாம் அதற்கேற்ப மாற வேண்டும். நமது பிள்ளைகளுக்கு இன்னும் கடினமான வாழ்க்கை காத்திருக்கிறது.
எப்படிப்பட்ட உலகை நாம் விட்டுப் போகப் போகிறோம். எப்படிப்பட்ட அடுத்த தலைமுறை மக்களை நாம் விட்டு விட்டு போகிறோம் என்று இரண்டையும் தான் பார்க்க வேண்டும்.
உலக வெப்பமயம் ஆதல், உணவு தட்டுப்பாடு, நீர் தட்டுப்பாடு, காற்று மாசுப்படுத்தல், மனித குலத்தின் நீழ்ச்சி (மருத்துவ முன்னேற்றம் தருவதால்), என்று சவால்கள் நிறைந்த உலகில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வரும், எதிர்ப்பும், ஏற்பும் ஒரே சமயத்தில் நடைபெறாவிட்டாலும், சில காலம் கழித்து நிலை மாறும். நாமும் இருந்து தானே ஆக வேண்டும். மாறினால் வளர்ச்சி என்று பார்க்கலாம். மாறினால் வீழ்ச்சி என்றும் பார்க்கலாம்.
அறிவியல் ஆக்கமும் தரும். அழிவும் தரும். நம்மை பொருத்தும் அது மாறும். நெடுவாசல் மாறலாம், நரிமணம் மாறலாம். வீடுவாசல் தப்பிக்க என்ன செய்ய ..! தொடர்ந்து சிந்திப்போம். போராட்டங்களை விட தொடர் சிந்தனைப் போராட்டங்கள் நிறைய தீர்வுகளை நமக்கு எடுத்து முன்வைக்கும். அறிஞர்களை அரசும் மக்கள் இயக்கமும் நாட வேண்டும். அவர்களை நம்ப வேண்டும்.
அரசனை விட மதிமந்திரி (சாணக்கியர்கள்) இன்று மிக முக்கியம். நல்ல வழி பிறக்கட்டும். நம்புவோம்.
சரியாக வரும் வராது என்பது யூகம், எதிர்பார்ப்பு மற்றும் கணிப்பு.
சரியாக வரும் என்பது சில சமயம் பின்னாளில் அனுபவம், நல்நினைவு (மெமரி), மற்றும் நம்பிக்கை ஆக மாறும். அந்த நம்பிக்கை பற்றித் தான் இங்கே சொல்ல நினைக்கிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை.

Monday, November 20, 2017

பாடம் நடத்தாத ஆசான்கள்

பாடம் நடத்தாத ஆசான்கள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

அழகிப் பட்டங்களை 
சட்டை செய்யாமல் 
அடுத்த மலருக்கு தாவுகின்றன 
பட்டாம்பூச்சிகள்.....

அழுக்கு மூட்டை 
ஏற்றினாலும் முகம் சுளிக்காமல் 
பொதி சுமக்கின்றன 
கழுதைகள் ...

யார் திட்டினாலும் 
புத்தி மாறாது மழைக்கு 
கானம் பாடுகின்றன 
தவளைகள் ....

மழையோ வெயிலோ 
உழைத்த படி இருக்கின்றன 
WiFi கோபுரங்கள் ...

யார் சோறு வைத்தாலும் 
அவர்கள் திருப்திக்காக 
சற்று உண்டு செல்கின்றன 
காக்கைகள்....

குடிசை மாற்று வாரியங்கள் 
தடுத்துச் சொன்னாலும் 
தமது கோவில்களை விடுவதில்லை 
புறாக்கள் ...

காந்தித் தாத்தா சற்று 
பொக்கை வாய் காட்டிச் சிரித்தால் 
போக்கை மாற்றுவது என்னவோ 


மனிதன் மட்டுமே...!!

Saturday, September 30, 2017

On Friendship - a poem by Balasandilyan

நட்பு 

நினைவு எனும் சாவி போட்டு 
மனதைத் திறந்த பொழுது 
உலகின் எந்த மூலையில் எனது 
உன்னத நண்பர்கள் இருக்கிறார்களோ ?
யோசித்தாலும் விடை கிடைக்கவில்லை.
சில நினைவுகள் மட்டும் 
சிந்தனை தூண்டும் 
மணம் வீசும் புது மலரகளைப் போல 
அந்த வாய்க்கால் கரைகள் 
நதிக்கரை மணல்வெளிகள் 
பின்னர் கல்லூரி கட் அடித்துப் 
பார்த்து நின்ற கமல் படங்கள் 
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. 
தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரே 
தொடர்பில் இல்லாத நண்பர்கள் எங்கிருக்கிறாரோ 
எல்லாம் மாறிவிட்டது...வாழ்க்கை முறைகள் 
வாழும் முறைகள் ...இயந்திரமாய் இறுக்கமாய் ..
சிலருக்கு வேலையில் இருந்து ஓய்வு இல்லை 
சிலருக்கு நட்பு உறவுகள் தேவை இல்லை 
மாறிவிட்ட உலகில் இன்று நமக்கு நாமே 
மாறினோம் உறவாக...நட்பாக...இல்லையேல் 
முகவரி கூட தெரியாத முகநூல் நண்பர்கள் நடுவில் 
மூழ்கிய தினங்கள்...மாயமாகும் நிமிடங்கள் 
என்று மாறி விடுமா நமது அனுதினங்கள் 
கொஞ்சம் கொஞ்சமாக வயது கூடி ஆயுள் குறைகையில் 
வாழக்கை நினைவுகளின் புத்தகமாகி விட்டது 
பக்கங்கள் யாவும் பழைய நினைவுகள் 
பக்கத்தில் இருப்பவர் முகநூல் பக்கத்தில் இருப்பவர் 
அக்கறை இருப்பினும் ஏதோ ஒன்று குறைகிறதே 
என்றாலும் இன்று தேர்ந்து எடுத்த எனது நண்பர்களின் 
நட்பும் அன்பும் நான் செய்த தவமே...நான் பெற்ற வரமே...
சில நேரம் அந்த முகம் மறந்த ..பெயர் மறந்த 
நண்பர்கள் குழாம் நினைவுக்கு வந்தாலும் 
நினைவுகளுக்கும் வயதான விஷயம் புரிகிறது 
அவ்வப்போது நினைத்து நான் சிரிக்கும் தருணம் 
அட புதிய நண்பர்கள் எத்தனை பேர் 
ஆயிரம் ஜென்மங்கள் பழகியது போல இன்று கிடைத்துள்ளது  
ஆண்டவன் என் மீது காட்டிய கருணை தானே 
அபூர்வம் தானே இப்படி கிடைக்கும் நட்புகள் உறவுகள் 
அதனால் தான் இருக்கிற  எனது நட்பு பொக்கிஷங்களை 
ஆழ அகலமான நூலாக எழுதினேன் ...தினம் ஒருவராய் 
அவர்களை பெற்றதும் அவர்களிடம் கற்றதும் 
ஆனந்தம் தான் நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு 
அற்புத தருணமும் ...ஆன்மா ஆனந்தமாக சிரிக்கிற
அமைதியாக உதிர்க்கிற நீண்ட மூச்சுக்களின்   
அழகை உணர்கிறேன் ...அழகாய் உணர்கிறேன் 
நட்புகள் அனைவருக்கும் பணிவன்புடன் 
இதோ உங்கள் பாலசாண்டில்யனின் சமர்ப்பணம் இந்நூல்
இன்றே படியுங்கள்...நீங்களும் இது போல் ஒன்று வடியுங்கள் 
இன்பமுறட்டும் உங்கள் ஆன்மா ...இதமுறட்டும் இதயம்.!!