நீங்கா நினைவலைகள் - 13
Wednesday, July 7, 2021
நீங்கா நினைவலைகள் - 13
Tuesday, July 6, 2021
நீங்கா நினைவலைகள் - 12
நீங்கா நினைவலைகள் - 12
Monday, July 5, 2021
நீங்கா நினைவலைகள் - 11
நீங்கா நினைவலைகள் - 11
Sunday, July 4, 2021
நீங்கா நினைவலைகள் - 10
நீங்கா நினைவலைகள் - 10
Saturday, July 3, 2021
நீங்கா நினைவலைகள் - 9
நீங்கா நினைவலைகள் - 9
பள்ளி வாழ்க்கை வேறு. கல்லூரி வாழ்க்கை வேறு. இப்போது ஐயா முழு பாண்ட். ஆனால் கைவசம் இரண்டு தான் ஒன்று லைட் ப்ளூ கலர் இன்னொன்று காக்கி கலர். கொஞ்சமும் மாட்ச் ஆகாத இரண்டு அரைக்கை சட்டைகள். யாரும் நம்ப மாட்டார்கள் நான் காலேஜில் படிக்கிறேன் என்றால். உயரம் ஐந்து அடிக்கும் கீழ். எடை ஐம்பது கிலோவிற்கும் கீழ். மாநிறம். அந்த பழைய விதவிதமா போட்ட அரை நிஜார் எல்லாம் இப்போது அடுத்த வாரிசுக்கு சென்றது. சிலவற்றை மட்டும் வீட்டுக்கு போட்டுக் கொள்ள வைத்துக் கொண்டேன். விதவிதமாக டிரெஸ் போடும் பந்தா காலம் நிறைவுக்கு வந்தது.
கல்லூரியில் எல்லோரும் என்னை விட உயரமாக, பருமனாக இருந்தனர். வாத்தியார் எல்லாம் ஆங்கிலத்தில் பொளந்து கட்டினர். பள்ளிக்கூடம் தமிழ் மீடியம். பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்ப்பது போல பேந்த பேந்த முழித்தேன். அங்கேயும் இடை இடையே சொல்லித்தர சில நண்பர்கள் கிடைத்தனர். சில நாட்கள் ட்ரெயினில் போனேன். ஒரே ஸ்டேஷன். பிறகு நடக்க வேண்டும். சில நாட்கள் புதூர் ஹை ஸ்கூல் பஸ் ஸ்டாப் சென்று பஸ்ஸில் போனேன். கையில் அம்மா சாப்பாடு கட்டிக் கொடுப்பார். காலேஜில் கான்டீன் சிறியதாக இருந்தது. இருந்தாலும் நான் போனதில்லை.
ஒரு நாள் நான் எனது டிபன் டப்பாவை திறந்து சாப்பிட ஆரம்பித்தேன். பக்கத்தில் ஆறடி உயரம் ஆராமுதன் வந்து "என்ன சாப்பாடு டா" என்று என் டப்பாவை எட்டிப் பார்த்தான் . "ரசம் சாதம், பொரியல்" என்றேன். அவன் "உவ்வ " என்று ஒமட்டிக் காட்டினான். வந்ததே எனக்கு கோபம். என்னடா என் சாப்பாடு அவ்வளவு கேவலமா ? அப்படியே எச்சைக் கையோடு அவன் கன்னத்தில் ஒன்று விட்டேன். அவ்வளவு தான். பாலு அடித்து விட்டான் என்று ஒரு கூட்டமே கூடி விட்டது. என் நண்பன் மைக்கேல் எனக்கு சப்போர்ட். டேய், இந்த லூசு தாண்டா அவனை உசுப்பி விட்டான். தப்பு பாலு மேல இல்ல என்று சொன்னதும் "அப்பாடா தப்பித்தோம், இல்லாவிட்டால் காலேஜ் பிரின்சிபால் முன்னால் போய் நின்று இருப்பேன்" என்று கடவுளுக்கு நன்றி சொன்னேன். ஒரு சின்ன ஹீரோ ஆனேன். டேய் அவன் பார்க்க தான் பொடியன், கோபம் வந்தா அவ்வளவு தான் என்று சிலர் பேசினர். பிறகு நானும் ஆராமுதனும் நல்ல நண்பர்களானோம். அவன் என் வீட்டுக்கு வந்து என் அம்மா சமையலை ரொம்ப சிலாகித்தான்.
காலேஜில் என்னுடைய முந்திய பாட்ச்சில் மறைந்த ராமசாமி (அயோத்யா மண்டபத்தின் செயலர் மற்றும் ஸ்டெனோகிராபர் கில்ட் தலைவர்) அவர்களின் தம்பி சங்கர் தான் தமிழ் இறை வணக்கம் பாடுவார். அதாவது "ஓம் நமோ அரிஹந்தானம்" எனும் ஜெயின் பாடலுக்கு பிறகு பாடப்படும் பாடல் பாரதியின் "வெள்ளைத்தாமரை பூவில் இருப்பாள்". அந்த பாடலை நான் படித்த ஆண்டு முழுதும் பாடும் வாய்ப்பை சங்கர் ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால் கல்லூரியில் எந்த நிகழ்வு என்றாலும் நிச்சயம் அங்கே நான் உண்டு. பலருக்கு என்னைத் தெரிந்தது. கல்லூரி தாண்டி அனைத்து கல்லூரி பேச்சு போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று போய் சில பல பரிசுகள் வாங்கினேன்.
எனது தமிழ் ஆசிரியர் சுந்தர் சார் (சுட்டி பத்திரிகை ஆசிரியர் என்று பின்னால் தான் அறிந்தேன். அதுவும் எனது வகுப்புத் தோழன் சிறந்த கவிஞன் மறைந்த திருநின்றவூர் பாண்டுரங்கன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்) என்னுடைய மிகவும் பிடித்த ஆசிரியர் என்பேன். அப்போதைக்கு எனக்கு எகனாமிக்ஸ், ஜியோகிரபி தான் மிகவும் கடினமாக இருந்தது. ஈகுவேட்டர் என்றால் பூமத்திய ரேகை என்று கூட நான் அறிந்திருக்கவில்லை.
எப்படியோ கல்லூரி வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் ஒரு பிப்ரவரி மாதம் எனக்கு டைபாய்டு ஜுரம் வந்து படுத்த படுக்கையானேன். அம்மா அப்பாவால் என்னை சமாளிக்க முடியவில்லை. வீட்டில் மற்ற குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பாட்டியை பார்த்துக் கொள்ள வேண்டும். எனது பெரியப்பா "கவலைப்படாதே நான் கூட்டிண்டு போய் அவனை வெச்சுக்கிறேன்" என்று அவர் இருந்த நுங்கம்பாக்கம் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார். சுமார் ஒரு மாதம் கம்ப்ளீட் ரெஸ்ட். காலேஜ் லீவ். இளைத்துத் துரும்பானேன். உடம்பு தேறிட டானிக் கொடுத்தார்கள். ஏற்கனவே படிப்பில் புலி. இப்போது கேட்கவும் வேண்டுமோ? இன்னும் ஒரு மாதத்தில் பி யு சி பரீட்சை. நான் டிகிரி படிப்பு தேர்வு செய்ய வேண்டிய முக்கிய பரீட்சை என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ? வழக்கம் போல வீட்டில் விவாதம். இந்த ஆண்டே எழுதலாமா அல்லது ஆறு மாதம் கழித்து எழுதலாமா ? ஒரு ஆண்டு வேஸ்ட் ஆகி விடுமே என்று பல்வேறு கருத்துக்கள்.
என் நண்பர்கள் இருவர் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் பேசினர் "அங்கிள் பாலு வந்து எழுதட்டும், நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்". ஆனால் நான் ரொம்ப வீக் ஆகி இருந்தேன். முடிவெடுத்த படி பரீட்சை எழுதினேன். ரிசல்ட் வந்தது. நான் செகண்ட் கிளாஸ் (அப்படித்தானே சொல்லி சமாளிக்க வேண்டும்) அதாவது 57.5% சதவீதம். இது பி காம் சீட்டு பெற போதுமா ? எந்த காலேஜில் இடம் கிடைக்கும் ? மறுபடியும் வீட்டில் களேபரம். அப்பாவுக்கு ஆயிரத்தெட்டு டென்சன். அப்போது அவர் ஹிந்தி பரீட்சை எழுதி பாஸ் செய்ய வேண்டும். அது மிக அவசியம். தவிர, அவர் ப்ரோமோஷனுக்கு வேற முயற்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. தம்பி தங்கைகளுக்கு பீஸ் கட்ட வேண்டும். அதெல்லாம் எனக்கு பெரிதாக ஒன்றும் புரியவில்லை.
நான் ஹிந்தி கிளாஸ், டைப் ரைட்டிங் என்று சில வகுப்புகளுக்கு வேறு சேர்ந்து இருந்தேன். எல்லாம் அப்போது எல்லோரும் செய்த விஷயம் தான். நல்ல வேளை ஷார்ட் ஹாண்ட் கிளாசுக்கு போகவில்லை. தவிர, கொஞ்சம் கவிதைப் பைத்தியமும் சேர்ந்து கொண்டது.
இப்போது இரண்டொரு மாதம் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். ஆனால் டிகிரி படிக்க எந்த காலேஜில் அப்ளிகேஷன் வாங்க வேண்டும் என்ற கேள்விகள். பதில் ஒரே மாதிரி தான். ரயில் எங்கே போகுமோ அதைப் பார்த்து வாங்கு என்பதே அது. எனக்கு அப்போது இருந்த சாய்ஸ் லயோலா கல்லூரி, கிறிஸ்டியன் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஏ எம் ஜெயின் கல்லூரி. இப்போது இந்த நான்கு கல்லூரி அப்ளிகேஷன் வாங்கியாகி விட்டது.
எங்கிருந்து நமக்கு அட்மிஷன் கார்ட் வரும் ? மனதில் படபடப்பு தொடங்கியது. எனது ஜுரம் பற்றிய விஷயம் அப்பாவிற்கு நினைவுக்கு வரவில்லை. நான் ஒரு 70% மார்க் வாங்கி இருந்திருக்கலாமே என்று மட்டுமே அவருக்கு தோன்றியது. அந்த எதிர்பார்த்த அட்மிஷன் கார்ட் வந்தது. இப்போது அடுத்த கட்டம். எந்த கல்லூரி ? என்ன படிப்பு ? சொல்லுவோம்ல.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.
Friday, July 2, 2021
நீங்கா நினைவலைகள் - 8
நீங்கா நினைவலைகள் - 8
நீங்கா நினைவலைகள் - 7
நீங்கா நினைவலைகள் - 7
அப்போது எமெர்ஜென்சி சமயம். அரசு அலுவலங்களில் மிகுந்த கெடுபிடி. சில நேரம் அப்பா அவரது நண்பர் வீட்டில் திருச்சியில் தங்கி சரியான நேரத்திற்கு ஆபீஸ் போக வேண்டும் என்று தங்கி விடுவார். அந்த சமயம் நான் சமாளிக்க வேண்டியது எனது பாட்டிகளை மட்டுமே எனது லூட்டிகளை தொடர, வாழ்வை என்ஜாய் பண்ண.
பாட்டிக்கு நான் எப்போதும் செல்லம் தான். ஸ்கூல் போகும் போது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போகிற வழியில் திங்க முறுக்கு, சீடை, கடலை மற்றும் பொட்டுக்கடலை உருண்டை எல்லாம் செய்து தந்து விடுவார். இந்த பாட்டிகள் (மொத்தம் மூவர் - எனது அம்மாவின் அம்மா, அவரின் இரண்டு அக்காக்கள் - அதாவது பெரிய பாட்டி) சமையலே ரொம்ப வித்தியாசம். அழுகின வடுமாங்காய் பச்சடி, நெல்லி முள்ளி பச்சடி, மாம்பழம் முழுதாக போட்டு குழம்பு, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரைக் கூட்டு, சுண்டைக்காய் வத்தக்குழம்பு, கொத்தவராங்கா வத்தல், மோர் மிளகாய், மாகாளிக்கிழங்கு, சுண்டைக்காய் குழம்பு, வாழைத்தண்டு பொரியல், வாழைத்தண்டு மோர்க்கூட்டு, வாழைக்காய் பொடி, வாழைப்பூ உசிலி கறி, ஆரஞ்சு பழத்தோலி போட்ட குழம்பு, அங்காயப்பொடி, தேங்காய் பொடி, எலுமிச்சை ரசம் இப்படி பகலில் அசத்துவார்கள். இதெல்லாம் நான் சென்னையில் இருந்த பொழுது சாப்பிட்டதில்லை. எல்லாமே படு ருசியாக இருக்கும். இவற்றில் பல அயிட்டங்கள் இப்போது பலருக்கு செய்யத் தெரியாது. ஹோட்டல்களிலும் கிடைக்காது.
அதே போல இரவு உணவுக்கு சத்துமா உருண்டை, மோர்க்கூழு, கல்லு கொழுக்கட்டை, மோர்க்கூழு புளி இஞ்சி, அரிசி உப்புமா பிடி கொழுக்கட்டை, அடை அச்சு வெல்லம், வெல்ல தோசை, புளிமா, புளிப்பொங்கல், புளி அவல், வெல்லவல் , குணுக்கு, கோதுமை தோசை, இன்னும் என்னென்னமோ - அதெல்லாம் அவ்வளவு இப்போது நினைவுக்கு வரவில்லை. குழந்தைகளுக்கு டேஸ்டேக்கு தான் இந்த டிபன் ஐட்டம்கள். மற்றபடி அவர்கள் தினமுமே ஒரு பொழுது என்பதால் அவர்களுக்கான உணவு அது. எங்களுக்கு எப்போதும் போல சாதம் தான். சாப்பிட கொல்லையில் இருந்து பெரிய பெரிய பாதாம் இலை, இல்லை என்றால் வாழை இலை, அதுவும் இல்லை என்றால் குச்சி வைத்துச் சேர்த்த மந்தார இலை. அந்த மாதிரி இலையில் சாப்பிட்டால் இலையின் ருசியும் சேர்ந்து கொள்ளும். நினைத்தால் இன்றும் மணக்கிறது நெஞ்சம்.
எதிர் வீட்டு ரகு அண்ணா, கல்யாண் அண்ணா, கிட்டு என்கிற க்ரிஷ் ஆகியோர் ரேடியோவில் கிரிக்கெட் கமென்டரி கேட்பர். ராமமூர்த்தி, அப்துல் ஜப்பார், என்று அசத்தலாக இருக்கும். கேட்கும் போதே பந்து எப்படி நகர்கிறது என்று உணர முடியும். நான் போகவில்லை என்றால் அவரகளே என்னை கூப்பிட்டு அவர்களோடு உட்கார வைப்பர். அவர்கள் எல்லோரும் ஏற்கனவே பட்டப்படிப்பு முடித்தவர்கள். தமது பண்ணையின் விவசாய மேற்பார்வை செய்தார்கள். இதெல்லாம் எனக்கு எங்கே புரிந்தது? அவர்கள் எப்படி ஜாலியாக விளையாடுகிறார்கள் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்த்தேன் நான்.
பாட்டியும் அம்மாவும் 'படி படி' என்று அலறுவார்கள். நான் "எல்லாம் எனக்குத் தெரியும்" என்பேன். வாசல் திண்ணை கதவைப் பூட்டி அதன் சாவியை தனது இடுப்பில் சொருகி வைத்திருப்பார் சுப்பாளு பாட்டி. அதை எப்படியாவது எடுக்க நான் அவர் மீது பட்டு விட்டால் அவர் பாவம் மீண்டும் குளிக்க வேண்டும். அதனால், நான் பக்கத்து வீட்டு குட்டி மண் சுவர் ஏறிக் குதித்து கொல்லைப்புறம் வழியாக மணி அய்யர் வீட்டு வாசலில் அத்துமீறி நுழைந்து விளையாடப் போய் விடுவேன். இதைப் பார்த்து எனது தம்பி தானும் வருவேன் என்று அடம் பிடித்து அழுவான். வீடே அமர்க்களப்படும். அதெல்லாம் எனது காதில் விழுந்தாலும் விழாது. நான் எனது காரியங்களில் மிக கவனமாக இருப்பேன்.
ஒரு நாள் எதிர்வீட்டு கல்யாண் அண்ணா என்னை அழைத்து அருகில் அமர்த்தி "ஏண்டா நீ இப்போது பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்று வந்து விட்டாய், எங்களைப் பார் நாங்கள் நல்ல மார்க் எடுத்து பட்டம் முடித்து விட்டோம். ராமமூர்த்தி அண்ணா எம் ஏ கூட முடித்து விட்டான். நீயும் அப்படிப் படிக்க வேண்டாமா? உன்னுடைய அப்பா உன்னை நினைத்து மிகவும் கவலைப் படுகிறார்" என்று காதில் வேதம் ஓதினார். அதே போல எனது செல்ல மாமா மற்றும் அவரது மனைவியும் எனக்கு புத்தி சொன்னார்கள். டியூஷன் வகுப்பில் பாலு சாரும் இதே போக்கில் பேசினார். ஓ மை காட் - என் அப்பா இவ்வளவு அண்டர் கிரௌண்ட் வேலை பார்த்துள்ளாரே என்று வியந்து போனேன். அப்போது தான் எனக்கு என்னுடைய எதிர்காலம் கண்ணில் தெரிய ஆரம்பித்தது. நான் என்னுடைய நண்பர் நரசிம்மனிடம் நிறைய சந்தேகங்கள் கேட்டு சற்று தெளிவு பெற ஆரம்பித்தேன். அவர் படிப்பில் படு சுட்டி. நரசிம்மன் வீட்டுக்கு வெளியே பெரிய கிரௌண்ட். அங்கே தான் நான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன். ஆனால் வீட்டில் ஒரே ஒரு சைக்கிள். அப்பா தான் ஓட்டுவார். அதை விட கொடுமை, எனக்கு பெடல் எட்டாது. குரங்கு பெடல் போட அப்பா அனுமதிக்க மாட்டார். சைக்கிள் துடைப்பது மட்டும் என் வேலை. அதே போல அப்பா செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸில் தன்னார்வ சேவை செய்வார். அன்று அவருக்கு சம்பளத்தோடு விடுப்பு கிடைக்கும். அவரை பழனி, மதுரை என்று கோவில் பணிகளுக்கு அனுப்புவார்கள். அவர் போடுகிற காக்கி ட்ரெஸ்ஸில் அந்த ஸ்டார் பாட்ஜ் மாட்டுவது, அதனை போலிஷ் செய்வது எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த வேலை.
அப்பாவுக்கு மீண்டும் சென்னை மாற்றல் ஆகி விடும். நான் பி யு சி படிக்க சென்னை தான் போய் ஆக வேண்டும் என்ற செய்தியும் வெளியாயிற்று. சூடு பிடித்தது எனக்குள். யார் விளையாடக் கூப்பிட்டாலும் போவதில்லை என்று முடிவெடுத்து படிப்பில் முழு கவனம் செலுத்தினேன். ஆனால் அது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போலத்தான் இருந்தது. அது என்னை மீறிய விஷயமாக இருந்தது. வீட்டு திண்ணை கதவு திறந்தே இருந்தாலும் நான் வெளியே போகவில்லையே. எனது நண்பர்களும் விசில் அடித்துக் கூப்பிடுவார்கள். ஒரு முறை மட்டும் என்னுடைய பழைய பேய் எனக்குள் புகுந்து எனது பள்ளிக்கூட கிரௌண்டில் கிரிக்கெட் மாட்ச் விளையாடப் போனேன். பக்கத்து மணத்தட்டை அஹ்ரகாரத்திற்கும் எங்களுக்கும் போட்டி. நான் ஸ்லோ ஆப் ஸ்பின் போல சுமார் பௌலிங் போடுவேன். கிலோசிங் பீல்டிங் சுமாராக செய்வேன். அந்த மாட்சில் மறக்க முடியாத ஒரு காட்ச் பிடித்தேன். ஒரு விக்கெட் எடுத்தேன். பனிரெண்டு ரன் வேறு எடுத்தேன். அது எனது முதல் மற்றும் கடைசி மேட்ச். மறக்க முடியாத ஒன்று.
பிறகு வெகுநாட்களுக்குப் பிறகு என் வீட்டு வாசலில் சில பிள்ளைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் கெஞ்சிக் கேட்டு ஒரு ஓவர் காஜ் அடித்தேன். ஒரு ஓவர் பௌலிங் போட்டேன். இரண்டு விக்கெட் வேறு எடுத்தேன். எனக்குப் பிடித்த விளையாட்டு கேரம்போர்ட் மற்றும் செஸ். இதெல்லாம் கல்யாண் அண்ணா, ரகு அண்ணாவிடம் கற்றவை.
குளித்தலை வைகைநல்லூர் வீட்டுப் பின் தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் வீட்டில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் அடிக்கடி திருட்டுப் போகும். எனது பாட்டி அதற்கு முள்வேலி கட்டி பாதுகாப்பார். இது அக்கம்பக்கத்தில் கூட இருக்கும் கம்பிளைன்ட் தான். சில சமயம் வீட்டு மொட்டை மாடியில் இருந்து முத்தத்தில் சில கற்கள் பாதி ராத்திரியில் வீசுவார்கள். நான் மற்றும் எனது தம்பி தங்கைகள் நடுங்கித் தான் போவோம்.
மிக முக்கியமாக, இதை தவிர்க்க முடியுமா ? பப்ளிக் எக்ஸாம் என்ன ஆயிற்று ? அதில் என்னுடைய பவுசு என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள ஒருவேளை ஆவலாக இருக்கலாம். இருந்தாலும் ஒரு நாள் காத்திருந்து தான் ஆக வேண்டும்.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.