Wednesday, July 14, 2021

நீங்கா நினைவலைகள் - 20

 நீங்கா நினைவலைகள் - 20

- பாலசாண்டில்யன் 

நீங்கா நினைவலைகள் எனும் எனது இந்தத் தொடர் தொடங்கி இன்று 20 நாட்கள் கடந்து விட்டது. இந்த தொடரோடும் எனது நினைவுகளோடும் தொடர்ந்து பயணிக்கும் எனது முகநூல் நண்பர்களுக்கும் (இதில் பல பிரபல எழுத்தாளர்கள், முக்கிய பிரமுகர்களும் உண்டு) எனது ப்ளாகில் வாசிக்கும் நேயர்களுக்கும் இந்த நேரத்தில் தருகின்ற ஊக்கத்திற்கு ஆதரவிற்கு நல்ல கருத்து பின்னூட்டங்கள் தருவதற்கும் எனது மனப்பூர்வமான பணிவன்பு கலந்த நன்றியை தெரிவிக்கிறேன்.  

ரூவி மார்க்கெட் மிகவும் ஆச்சரியம் மிகுந்தது.  எல்லோரும் நம்ம தி நகர் கடைகள் போல கடை கடையாக ஏறி இறங்கி இஷ்டம் போல பொருள் வாங்குவதைப் பார்க்க முடிந்தது. எனக்கு மியூசிக் ரொம்ப பிடிக்கும் என்பதால் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து எனக்கு ஒரு சின்ன டேப் ரெக்கார்டர் வாங்கிக் கொடுத்தனர். அதில் காசெட் போட்டு பாட்டு கேட்கலாம். பிறகு எப் எம் ரேடியோவும் இருந்தது. பிறகு சிவன் கோவில் போனோம். மிக அருமையாக கட்டி இருந்தனர் அங்கே பல ஆண்டுகளாக தங்க வைர வியாபாரம் செய்யும் இந்தியர்கள் (குஜராத்தியர்)  அதனை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணம் செய்து இருந்தனர். அப்போது சிருங்கேரி சங்கராச்சாரியார் சென்று இருந்ததாக சொல்லப்படுகிறது. (பின்னாளில் அங்கே ஒரு கிருஷ்ணர் கோவிலும் வந்ததாக அறிகிறேன்.) கோவிலை நான் ஒரு பிரதட்சிணம் வரும் போது என் கண்ணில் பட்டார் ஒரு நண்பர். (இப்படி யாராவது தெரிந்தவர் கண்ணில் மாட்டுவது எனக்குப் புதிதல்ல). அவர் மேற்கு மாம்பலத்தை சார்ந்தவர். நான் படித்த ஆண்டில் ஏ எம் ஜெயின் கல்லூரியில் பி எஸ் சி படித்த ராமச்சந்திரன் என்ற கோபி. நான் அவரை 'கோபி' என்று கூப்பிட்டதும் அவர் அசந்து போனார். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது. சற்று குண்டாகி இருந்தார்.

ஓரிரு நிமிடங்களில் அவர் சுஹைல் அண்ட் சவுத் பவன் எனும் (அநேகமாக எல்லா தமிழர்களும் பெரிய அல்லது  நடுத்தர பதவிகளில் வேலை பார்க்கும் நிறுவனமாக அது இருந்தது) நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக சொன்னார். அடுத்த வியாழன் இரவு அவரது கெஸ்ட்டாக உணவு சாப்பிட அழைப்பு விடுத்தார். அவர்கள் நிறுவனத்தில் அப்படி கெஸ்ட்டை அழைத்து வர அனுமதி இருந்தது. அவர்களின் சாப்பாடும் வேற லெவல்.

அழைத்தால் யார் தான் விடுவார்கள்? அடுத்த வாரமே வியாழன் இரவு அவர் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ் போனேன். (அவர்கள் எல்லா பூஜைப் பொருட்களும் சென்னையில் இருந்து வரவழைத்து ஐயப்ப பூஜை எல்லாம் நடத்துவார்கள் என்று அறிந்தேன்.  அவருடைய ரூம் மிகவும் நேர்த்தியாக இருந்தது.) அடுத்து நேரடியாக கிச்சன் அட்டாச்ட் டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போனார். அன்று அடை அவியல், மற்றும் தயிர் சாதம் மாங்காய் தொக்கு, தவிர பிரூட் சாலட். "மாமா நல்ல முறுவலாக இருக்கட்டும்" என்றார் கோபி.. அசத்தல் டேஸ்ட். அங்கே சமையல் செய்தவரும் மாம்பலம் தான் என்றார். கும்பகோணத்தில் வந்து செட்டில் ஆகி இப்போது மஸ்கட்டில் பலரின் நாக்கை அடக்க முடியாது செய்து வருபவர் அவரே என்று கண்கூடாக பார்த்தேன். சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு கோபியிடம் இருந்த சில காஸெட்கள் (மகாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா, கே வி நாராயணசாமி கச்சேரிகள்) வாங்கிக் கொண்டு ராமநாதன் சார் இருப்பிடம் போனேன். அன்று இரவும் முரளி நடித்த ஒரு தமிழ் படம் ரெடியாக இருந்தது.

கோபி இடத்திற்கு மொத்தத்தில் ஒரு நான்கைந்து முறை போய் இருப்பேன். அவனை ஒரு முறை கூட எங்கள் இடத்திற்கு அழைக்கவில்லை. மாறாக எங்கள் நிறுவனத்தின் பொருட்கள் சிலவற்றை மாத்தியூஸ் சாரிடம் கேட்டு வாங்கி கொண்டு போய் கொடுத்தேன். ஆனால் இந்த ரூவி மார்க்கெட் போவது என்பது ஒரு வெள்ளிக்கிழமை விரதம் போல் ஆனது. ஒரு பெரிய சாம்சனைட் பெட்டி (குட்டி யானை என்று அழைக்கப்படும் அது இன்றும் வீட்டுப் பரணையில் தூங்குகிறது), பிறகு நிகான் எல் 35 கேமரா, சின்ன அயன் பாக்ஸ், சில பல லேடீஸ் குடைகள், சீமன்ஸ் ஹேர் ட்ரையர், சில சென்ட் பாட்டில்கள், எனக்கு ஒரு குட்டி மைனர் செயின், என் தங்கைக்கு U என்று போட்ட டாலர் இப்படி வாரா வாரம் வாங்கும் பொருட்கள் குட்டி யானை வயிற்றுக்குள் சேரத் தொடங்கியது. 

வீட்டுக்கு பணம் சில சமயம் பாங்க் மூலம் அனுப்பினேன். இரண்டு மூன்று முறை ஹவாலா மூலம் (கொஞ்சம் பணம் கூட கிடைக்கும்) காஷாக வீட்டுக்கு லோக்கல் மக்கள் மூலம் கொண்டு கொடுக்கும் வகையில் அனுப்பினேன். வாங்கிய சில பொருட்களை சொந்த ஊருக்கு சென்ற ஒருவர் மூலம் வீட்டுக்கு கொடுத்து அனுப்பினேன். அங்கே மஸ்கட்டில் சென்ற பிறகும் நான் நிறைய கவிதைகள் எழுதினேன். குறிப்பாக எனது முதல் இசைப்பாடல் காஞ்சி மகாபெரியவர் மீது எழுதினேன். அது புரந்தரதாஸரின் 'கதய கதய மாதவம்' என்ற பாடலின் ஸ்வரஸ்தானத்தில் எழுதப்பட்ட ஒன்று. ராகம் பூர்விகல்யாணி. பல்லவியில் "சரணம் சரணம் குருவே தாள் பணிந்து சரணம் சரணம்" என்று வரும் பாடல் அது. அந்த பாடலையும் ஒரு கேசட்டில் நானே பாடி பதிவு செய்து அனுப்பி இருந்தேன்.

எங்கள் சென்னை ஜெய்சங்கர் வீட்டுக்கு எதேச்சையாக  எனது பாம்பே தோழி கல்யாணி சங்கர் சென்று இருக்கிறார். அவரிடம் நான் அனுப்பிய பாடலைக் கொடுத்து சரி செய்து வாங்கினார் என் அம்மா. அந்த செய்தியை ஒரு நாள் போனில் பேசும் பொழுது சொன்னார். அப்போது  வீட்டில் போன் கிடையாது. பி பி போன் தான். கீழ் வீட்டில் இருந்தது. (பிறகு நான் காஞ்சிபுரம் நேரில் சென்று பெரியவா முன்னால் அந்தப் பாடலை பாடி ஆசி பெற்றேன் என்பது மனதில் இருந்து நீங்காத நினைவு என்பதை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்).

அலுவலகத்தில் எனக்கு மதியம் வரத் தொடங்கிய அந்த கல்யாண சாப்பாட்டை நிறுத்தினேன். ஒரு வாரம் தான் ஓடியது. காரணம் அது மிகவும் விலை அதிகம், அளவும் அதிகம். நாம் அங்கே போனதே சம்பாதித்து வீட்டுக்கு அனுப்பத் தானே ஒழிய, சாப்பிட்டு செலவு செய்து முடிக்க அல்ல என்று மனம் கூறியது.  

பாக்டரி பின்புறம் ஒரு புதிய கட்டிடத்தை நிறுவனம் வாடகைக்கு எடுத்து நான், டேவிட் (என்கிற டிசௌசா) சாம் மற்றும் ஆர் அண்ட் டி பிரிவின் இளம் விஞ்ஞானி நாயக் ஆகியோரை அங்கே போகச் சொன்னார்கள். அது மிக மிக நேர்த்தியாக இருந்தது. புதிய கட்டில், புதிய மெத்தை, சிறு கிச்சன், காமன் டிவி ஒன்று என்று வசதியாக இருந்தது. மெயின் ரோட்டைக் கடந்தால்  எதிரில் தான் நண்பர் செல்லையா அவர்களின் வீடு. அவர் வீட்டுக்கு கீழே ஒரு குட்டி சூப்பர் மார்க்கெட். காலை காபி எனது ரூமில். வழக்கம் போல பிரெட் ஆபீஸ் கேன்டீனில், மதிய சாப்பாடு சில சமயம் நாயக் கைவண்ணத்தில், நாயக் ஒரு மங்களூர் அழகன். நன்றாக கீபோர்டு வாசிப்பான். ஆனால் பிராமிஸ் செய்தது போல கடைசி வரை எனக்கு சொல்லித்தரவில்லை. சில சமயம் கேன்டீனில் எனக்காக ஸ்பெஷல் ஆக செய்து இருந்த புல்கா (சாப்ட் ரோட்டி) மற்றும் டால், தயிர் சாதம் ஊறுகாய், மற்றும் வாழைப்பழம். (எல்லாமே எனக்காக மாத்தியூஸ் சார் உபயம்).

இரவு உணவு செல்லையா சார் வீட்டில். அங்கே தோசை ஊற்றுவது, புளி இல்லாமல் தக்காளி ரசம் செய்வது (எல்லாம் பாம்பே அத்தை டியூஷன்), தயிர் சாதம் செய்வது (அதில் மாதுளை, முந்திரி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் என்று என் கையில் கிடைத்ததை போடுவேன் - அது செல்லையா சாரின் மிகவும் பிடித்த உணவாக இருந்தது), ஊறுகாய் கீழே கடையில் வாங்கிக் கொள்ளுவோம். சார் ஒரு போதும் வீட்டில் ஆபீஸ் விஷயங்கள் பற்றிப் பேச மாட்டார். அவரை பாட்டு கேட்கச் சொல்லி சில சமயம் மாற்றுவேன். அவர் என்னைப் போலவே இளையராஜா ரசிகன். இந்த விஷயங்கள் எல்லாமே (அதாவது ஆபீஸ் வேலை தவிர - சொல்லுகிறேன் ) மிகவும் நன்றாகத் தான் போனது. 

ஆபீஸில் கம்ப்யூட்டர் வாங்கும் படலம். நான் ஆபிஸ் வண்டியில் தனியாக ரூவி போனேன். எனக்குப் பிடித்த டேபிள், சேர், கம்ப்யூட்டர், பிரிண்டர், அதற்கான ஸ்டேஷனரி என்று எல்லாமே வாங்கினேன். அங்கே இருந்த விஜி (விஜயராகவன்) மற்றும் சி எம் எல் நாராயணன் மிகவும் நட்பானார்கள். இருவரும் சென்னை தான். நாராயணின் மகன் என் சித்தப்பா பையன் படிக்கும் வேங்கட சுப்பையா பள்ளியில் படிப்பதாக சொன்னார். அவர் சுமார் 20 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதாக சொன்னார். (இன்றும் சென்னை அசோக் நகரில் செட்டில் ஆகி உள்ள அவரை - சற்று உடல் தளர்ந்து  வாக்கிங் போகும் அவரை  நிறுத்தி  குசலம் விசாரிப்பேன்). 

மாலையே விஜி எங்கள் ஆபீஸ் வந்து எல்லாமே செட் செய்து விட்டார். ஷார்ட்லான்ட்ஸ் (இது யூ கே மாடல் - நம்ம டாலி போல) சாப்ட்வேர் பற்றி மிக எளிதாக சொல்லிக் கொடுத்தார். அதற்கு புத்தகம் தந்தார். பிறகு சேல்ஸுக்கு அவர்களே லோக்கலாக டெவெலப் செய்த சாப்ட்வேர் அப்லோட் செய்து  அது பற்றியும் எனக்கு ட்ரெயினிங் கொடுத்தார். பிரிண்ட் எடுப்பது பற்றியும், பேப்பர் மாற்றுவது பற்றியும் சொல்லித் தந்தார். செல்லையா சாருக்கு கம்ப்யூட்டர் மிகவும் புதிது (அவருக்கு மட்டுமா ஓ பி எம் சார் மற்றும் ஜி எம் சாருக்கும் தான்). செல்லையா ஆன வரைக்கும் சொல்லிப் பார்த்தார் டேவிட் மற்றும் சாமிடம் "நீங்களும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள், உபயோகமாக இருக்கும்" என்று. அவர்கள் 'இந்த பாலா அதற்குத்  தானே வந்திருக்கிறான், நாங்கள் எதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். இருவரும் அடிக்கடி (அவர்கள் பாம்பே காரர்கள்) மராத்தியில் பேசி என்னையும் செல்லையாவையும் கலாய்த்து பேசுவார்கள். ஆனால் எனக்கு மராத்தி புரியும் என்பது அவர்களுக்கு தெரியாது. அவர்களின் பொறாமை சில நேரம் என் காதில் புகையும், விரியும் அது சூடாக. டேவிட் அவனது கண்ணாடி இடுக்கு வழியாக எப்போதும் பிரதாப் போத்தன் போலப் பார்ப்பான். நிச்சயம் அது இரிடேடிங் ஆக இருக்கும். 

ஆரம்பித்தது தலைவலி. ஜி எம், ஓபிஎம் சாரை கேட்க, ஓபிஎம் சார் செல்லையா சாரை கேட்க எனக்கு அழுத்தம் தொடங்கியது. எதற்கு என்கிறீர்களா? கம்ப்யூட்டர் வந்து விட்டதே ! அவர்களுக்கு ரிப்போர்ட் வேண்டுமாம். டைலி, வீக்லி, மன்த்லி, குவாட்டர்லி என்று. நான் கீழ் ஸ்வரத்தில் ஆரம்பித்து உச்ச ஸ்தாயி வரை விளக்கி சொன்னேன். "சார் நம்ம ரெகார்டஸ் என்டர் செய்த பிறகு தான் ரிப்போர்ட் எடுக்க முடியும்" என்று. (கார்பேஜ் இன் கார்பேஜ் அவுட் - கிகோ என்று சொல்லுவார்கள்) அவர்கள் விஜி சாரை அழைத்து செலவழித்த பணம் தண்டம் என்று கண்டமேனிக்கு பேசினார்கள் போலும். அவர் எனக்கு போன் செய்து என்ன பிரச்சனை என்று கேட்க, நான் மறுபுறம் புலம்ப, மீண்டும் அவர் பாலா சொல்லுவது சரி, நீங்கள் அவருக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள் என்றார். இந்த தமிழ்க்காரர்கள் ஒன்று சேர்ந்து நம்மை முட்டாள் ஆக்குகிறார்கள் என்று அவர்கள் நினைப்பு இருந்தது. அவர்களுக்கு இப்போது நம்பிக்கை தர வேண்டியது நான் தான். 

நானே ஒரு முடிவுக்கு வந்தேன். தொடர்ந்து வேலை பார்த்து (எனது உணவு நேர இடைவேளையைக் கூட குறைத்துக் கொண்டேன்) முதலில் வார ரிப்போர்ட் தந்தேன். பிறகு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு மணி நேரம் அதிகமாக வேலை செய்து ரெகார்ட்ஸ் எல்லாம் என்ட்ரி செய்ய மிகவும் சிரமப்பட்டேன். (எனக்கு தனியாக ஓ டி கிடைத்தது என்றாலும், உடலும் மனமும் மிகவும் தளர்ந்து போனது, சில நேரம் என்னை அறியாமல் களைத்துப் போனேன்.). இது தவிர என்னுடைய ஏற்கனவே இருக்கும் அக்கௌன்ட்ஸ் வேலை வேற இருந்தது. எனது  குவாட்டர்லி ரிப்போர்ட் ஜி எம் பார்த்துவிட்டு என்னை தனியாக அழைத்து என் தோளில் தட்டி 
பாராட்டினார். சில நேரம் நான் லேட்டாக வேலை செய்வதைப் பார்த்து என் கேபின் உள்ளே வந்து 'யூ ஆர் ஸ்டில் ஹியர்' என்று கேட்டிருக்கிறார். எனக்கு மனதுக்கு புது தெம்பு வந்தது. என் ரிப்போர்ட் எம் டி வரைக்கும் போனது. செல்லையா சாரும் என்னை ரொம்ப பாராட்டினார். ஏன் என்றால் நான் நல்ல பெயர் எடுத்தால் தான் என்னைக்  கூட்டிக்கொண்டு செல்லையா சாருக்கு நல்ல பேர். உதவிக்கு வந்த விஜி சாருக்கும் போன் செய்து நன்றி சொன்னேன். 

இப்போது அடுத்த தலைவலி, சேல்ஸ் ரிப்போர்ட்டில் நிறைய பணம் (வராமல் தங்கி இருந்தது, சில இடங்களில் சேல்ஸ் குறைந்து இருந்தது, சில சேல்ஸ்மேன்/டிரைவர் டீசல் போடும் போது பணம் அடிக்கும் விவகாரம் எல்லாமே புற்றீசல் போல வெளியே வந்தது). இதற்கு என்னை இன்டெர்னல் ஆடிட்டர் போல போடலாம் என்று முடிவானது. (யப்பா நான் எப்படியோ ஆடிட்டர் ஆகப் போகிறேன்). 

இந்த டீசல் ஊழல் விவகாரங்கள் பற்றி கண்டுபிடிக்க நான் காலை ஆறு மணிக்கே முதலில் புறப்படும் வண்டியில் ஏறி எங்கள் நிறுவன வண்டிகள் வழக்கமாக டீசல் பெட்ரோல் போடும் பங்குக்கு போக வேண்டும். துப்பறியும் சாம்புவாக மாறி அங்கே வரும் ஒவ்வொரு வண்டியின் எண், அவர்கள் எவ்வளவு டீசல் நிரப்புகிறார்கள். அவர்களின் வண்டியில் என்ன கிலோமீட்டர் காட்டுகிறது என்று எல்லாமே குறித்துக் கொள்ள வேண்டும். சுமார் இரண்டு மணி நேரம் ஆகும் அந்த வேலை முடிய. அப்போது வெயில் தொடங்கி விடும். வேலை முடிந்ததும் என்னை அழைத்துப் போக தனி வண்டி ஒன்று வரும். அப்படி போகும் நாட்களில் நான் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் தாமதமாக ஆபீஸ் வரலாம். காலையில் செல்லுவதற்கு எனக்கு தனியாக ஸ்பெஷல் ஓ டி வேறு உண்டு என்று சொல்லப்பட்டது. அங்கே அநேகமாக பலர் பிடிபட்டனர். சில சேல்ஸ்மேன்கள் என்னை ஒரு வில்லனைப் பார்ப்பது போல பார்த்தனர். ஒருவர் சொல்லவே சொன்னார், "நீ பார்க்கத் தான் சிறியவன், சாது ஆனால் பரம கில்லாடி". கணிசமான தொகை மிச்சம் ஆகும் படி இருந்தது என்னுடைய இந்த வேலையினால். பிறகு நான் ஒருவனே கஷ்டப்படக் கூடாது என்று டேவிட் மற்றும் சாம் இருவரும் கூட ஒரு வாரம் மாற்றி மாற்றி பெட்ரோல் பங்க் போக வேண்டும் என்றும் முடிவானது. 

இன்னும் த்ரில்லிங் விஷயங்கள் உண்டு. நிச்சயம் சொல்லுவேன்.  

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

Tuesday, July 13, 2021

நீங்கா நினைவலைகள் - 19

 நீங்கா நினைவலைகள் - 19

- பாலசாண்டில்யன் 

மறுநாள் எனது உயர்ந்த புருவம் கீழே இறங்கிட அதிக நேரம் ஆயிற்று. என்னுடைய ரூம் மேட்டில் ஒருவர் எங்கள் நிறுவனத்தின் போபாக் (சீஸ் கார்ன் கர்ல்ஸ்) செய்யும் ஒரு துறையின் ப்ரொடக்ஷன் இன்சார்ஜ். இன்னொருவர் எங்கள் பொட்டாடோ சிப்ஸ் துறையின் இன்சார்ஜ். அடடா எவ்வளவு எளிமையான மனிதர்கள். என்னோடு ஹிந்தியில் தான் பேசினார்கள். என்னைப் பற்றி அவர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் (முதல் நாள் வந்து இறங்கியதுமே பாட்டி இறந்த விஷயம், பிறகு கான்டீன் சாப்பாடு பிடிக்காமல் திண்டாடியது உட்பட) அதற்கு அவர்களே நல்ல உபாயமும் தந்தார்கள். அருகே 
ரூவியில் முன்கூட்டியே சொல்லி ஆர்டர் செய்து விட்டால் ( சாப்பாடு கேரியரில் சாதம், சாம்பார், ரசம், தயிர், பொரியல், அப்பளம், ஊறுகாய் என்று)  முழு சாப்பாடு  வந்து விடும். ஆனால் அது கொஞ்சம் விலை அதிகம் (ஒரு மாதத்துக்கு எனது மாத வருமானத்தில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு ஆகி விடும்) என்றனர். 

காலை மணி 7.45 இருக்கும். கான்டீன் பக்கம் போன போது பிரெட் பட்டர் ஜாம் அல்லது பிரெட் ஆம்லெட் என்று வைத்து இருந்தனர். நான் பட்டர் ஜாம் வைத்து சாப்பிட்டு விட்டு ஐம்பது ஸ்டெப்ஸ் நடந்து எனது கேபின் வந்து அடைந்தேன். அங்கே நண்பர் செல்லையா, டேவிட், சாம் மூவருமே வந்திருக்கவில்லை. என்னை காண ஸ்டோர்ஸ் இன்சார்ஜ் மாத்தியூஸ் சார், கேஷியர் பணிக்கர் சார் (இருவரும் கேரளா என்று நான் இங்கே சொல்லவும் வேண்டுமோ) வந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். நானும் தமிழ் கலந்த மலையாளத்தில் அவர்களோடு சம்சாரித்தேன். சற்று நேரத்தில் செல்லையா சார் வந்து என்னை பாக்டரி முழுவதும் சுற்றிப் பார்க்கச் சொல்லி அதற்கு ஒருவரை நியமித்தார். முதலில் போபாக் பேக்டரி (அங்கே என் ரூம் மேட் மோகன் நின்று இருந்தார்) போனேன். மோகன் என்னை அதிவேக சுற்று ஒன்றில் எப்படி சீஸ் பவுடர் மற்றும் மிளகாய் பொடி கலந்து சீஸ் கார்ன் (பொரித்து சீஸ் வாசனையுடன்) வெளியே வந்து தாமாக அளந்து மெஷினில் வரிசையாக பாக்கில் விழுந்து பாக் ஆகி கன்வேயரில் நகர்கிறது என்று விளக்கினார். காலை நேரம் என்பதால் அவர் மிகவும் பிசி. 

அடுத்தது ஜூஸ் செய்யும் பாக்டரிக்குள் நுழைந்தேன். அங்கே ஆரஞ்சு, மற்றும் லெமன் ஜூஸ், தவிர சோடா என்று எல்லாமே பாட்டிலில் எப்படி பாக் ஆகிறது என்பதை விளக்கியது ஒரு பஞ்சாப் கிங் (சாரி சிங்). அவரே மூன்று பாக்டரிக்கும் மெக்கானிக்கல் இன்ச்சார்ஜ் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். 

அடுத்து நான் சென்றது சிப்ஸ் பேக்டரி. அங்கும் என் ரூம் மேட் திரு பட் அவர்கள் இருந்தார். சிரித்தபடி வரவேற்று எப்படி உருளை உருண்டு திரண்டு (அது நல்ல கண்கொள்ளா காட்சியாக இருந்தது) வறுபட்டு மசாலாவுடன் கலந்து பிறகு தாமே எடை போட்டு பாக் ஆகிறது என்கிற அற்புதத்தை விளக்கினார். அது மட்டுமா? ஏற்கனவே கொஞ்சம் போபாக் ருசி பார்த்தாகி விட்டது. உருளை சிப்ஸ் செய்யும் இடத்தில் சுண்டி இழுக்கும் அப்படி ஒரு வாசனை. சுட சுட சுவையான சிப்ஸ் எனக்கு டேஸ்டுக்கு தரப்பட்டது. நிச்சயம் நம்ம ஊர் அக்ஷய் குமார் சொல்வது போல ஒன்றோடு அந்த சிப்ஸை நிறுத்தி விட முடியாது. அவ்வளவு ருசி.  நான் முன்னேற்பாடாக ஜூஸ் செய்யும் இடத்தில் மீண்டும் வருகிறேன் என்று சொல்லியதால் அங்கே சென்று ஆரஞ்சு ஜூஸ் ஒரு கிளாஸ் வாங்கி குடித்தேன். அது நம்ம ஊரு கோல்ட் ஸ்பாட் போல இருந்தது, கொஞ்சம் காஸ் கலந்து. 

திரும்பி வரும் பொழுது தான் புரிந்தது நான் பாம்பேயில் ஏற்கனவே பார்த்தது போல இந்தியர்கள் மட்டும் வேலை பார்க்கும் நிறுவனம் இல்லை இது  என்று. ஏனெனில் அங்கே பிலிப்பைன் ஓரிருவர், கொரியன் ஓரிருவர், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், தமிழ் என்று பல மொழிகள் பேசுகிற மக்கள் நிறைந்த சர்வதேச நிறுவனம்  என்று நினைத்த பொழுது வியந்து போனேன். ஏற்கனவே ஜி எம் ஒரு பிரிட்டிஷ்காரர், என்னை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்து வந்தவர் ஒரு பாகிஸ்தானி, முதலாளியோ அந்த ஊரின் அரபிக் பேசுகிற செல்வந்தர். சற்று தள்ளி பாக்டரி ஆபரேட்டர்கள் (அவர்கள் தமிழ், தெலுங்கு, பீகார் மற்றும் உத்திரபிரதேசம் என்று பல ஊரில் இருந்து வந்திருப்பதாக அறிந்து கொள்ள முடிந்தது) தங்குமிடம் சென்று பார்த்தேன். சென்னை டு டில்லி 3 டயர் ட்ரெயின் போல இருந்தது. எனக்கு நிச்சயம் முதல் அனுபவம் என்பதால் ஆச்சரியம் தந்தது. 

உணவு நேர இடைவேளை வரும் நேரம். என்னை செல்லையா அவர்கள் அழைத்து எனது நண்பர்கள் திரு ராமநாதன் மற்றும் திரு அழகுராஜா இருவருடனும் பேச வைத்தார். இருவரும் மிக மிக சுருக்கமாக நலம் விசாரித்து இரண்டு நாட்களில் சந்திப்போம் என்றனர். (வெள்ளிக்கிழமை தான் வார விடுமுறை). பிறகு செல்லையா அவர்கள் எனக்கான பணிகளை விவரித்தார். நிறுவனத்தில் இருக்கும் மூன்று பாக்டரி பேமெண்ட் எல்லாமே நான் பார்த்துக் கொள்ள வேண்டும், தவிர அனைவருக்கும் பேரோல், அடுத்தது நிறுவனப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சேல்ஸ் வண்டிகளை (ஒவ்வொரு வண்டியிலும் டிரைவர் கம் சேல்ஸ்மேன் அவரது உதவியாளர் - பில் போட, பொருள் இறக்கி கடைகளுக்கு சப்ளை செய்ய) சூப்பர்வைஸ் செய்வது என்றார். 

அதற்குள் மதிய நேரம் என்பதால் எனது ரூமுக்கு கிளம்பினேன் (அந்த சவுத் இந்தியன் சாப்பாடு கேரியர் ஏற்கனவே வந்து ரூம் வாசற்படியில் இருந்தது). பிரித்தவுடனேயே நல்ல மணம், சூடு வேறு. ஆனால் தெரிந்து விட்டது இது என் ஒருவனால் முடிக்க முடியாது என்று. ரூமுக்கு வந்த மோகன் சாரை சாப்பிட அழைத்தேன். அவர் தனக்கு அசைவ உணவு வேண்டும் என்று நாசூக்காக மறுத்தார். பிறகு பட் சார் வந்தார். அவரை அழைத்தேன். அவர் மறுப்பு சொல்லாமல் (உங்களுக்கே சரியாக இருக்கும் என்று சொல்லி முதலில் மறுத்தார், நான் அவருக்கு அழுத்தம் தர சம்மதம் சொன்னார்) என்னுடன் வந்து உட்கார்ந்தார். வாழை இலை போட்டு சாப்பாடு. கல்யாண சாப்பாடு. 

நாங்கள் இருவரும் சாப்பிட்ட பிறகும் அவர்கள் அனுப்பியது எல்லாமே மீதம் இருந்தது. தினமுமே என்னுடன் இணைகிறாரா என்று பட் சாரைக் கேட்டேன். அவர் 'தனக்கு தினம் இவ்வளவு ஹெவி சாப்பாடு பிடிக்காது, தவிர சப்பாத்தி,முட்டை, மீன்  அல்லது சிக்கன் நிச்சயம் தேவை என்றார். இப்போது நல்ல சாப்பாடு இருக்கிறது. ஆனால் வீண் ஆகிறது. ரொம்ப செலவாகிறது. மாத்தியூஸ் சாரிடம் கேட்டு யாராவது என்னுடன் ஷேர் செய்வார்களா என்று விசாரிக்க அடுத்த ரூமில் இருந்த அவர் ரூமுக்கு சென்றேன். அவரோ "யாரும் என்னுடன் அந்த சுத்த சைவ சாப்பாடு சாப்பிடுவோர் இல்லை" என்று கைவிரித்தார். 

மாலை நான்கு மணிக்கு முன்பே எனது கேபின் சென்று லைட் மற்றும் ஏசி ஆன் செய்தேன். (காலை எட்டு மணி முதல் இரவு எட்டு வரையான ஆபீஸ் - உணவு இடைவேளை மதியம் ஒன்று முதல் நான்கு வரை - காரணம் அந்த ஊர் மிகவும் வெயில் அதிகம் - வெள்ளி வார விடுமுறை). செல்லையா வந்து "இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன் பாலா, நீங்கள் கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட் என்பதால் நீங்கள் வந்ததும் தான் கம்பெனி அக்கவுண்ட்ஸ் மற்றும் சேல்ஸ் விஷயங்களை நீங்கள் தான் கம்ப்யூட்டரைஸ் செய்து தர வேண்டும். நாம் அடுத்த வாரமே கம்ப்யூட்டர், டேபிள், சேர் மற்றும் பிரிண்டர் எல்லாமே வாங்கி விடலாம். ஏற்கனவே கொட்டேஷன் வாங்கி அப்ரூவ் ஆகி ரெடியாக இருக்கிறது. தவிர, அந்த நிறுவனத்தில் எல்லோருமே நம்ம தமிழ்காரர்கள். அவர்களே சாப்ட்வேர் கொடுத்து உங்களுக்கு ஓரிரு நாட்கள் ட்ரெயினிங் தந்து விடுவார்கள்" என்றார். (அடப்பாவி என்னுடைய ஒரு மாத சம்பளத்தில் சுமார் மூன்று பேர் வேலையை வாங்க ரெடிமேட் திட்டம் தீட்டி விட்டீர்களா ? சரி அதையும் பார்ப்போம்). நான் சிரித்தபடி "நோ ப்ரோப்லேம் சார். எல்லாம் செய்து விடலாம்" என்று சொன்னேன்.

எம் டி திடீர் திடீர் என்று பேக்டரி வருவார் என்று அறிந்து கொண்டேன். ஆனால் எங்கள் கேபின் கிட்டத்தட்ட மெயின் கேட் அருகே என்பதால் அவரின் கார் ஹார்ன் சத்தம் பரிச்சயமாக இருந்தபடியால் ஏற்கனவே பம்பரமாக வேலை பார்க்கும் நபர்களை மேலும் முறுக்கி விட்டது  என்பதையும்  பார்த்தேன். எம் டி வந்தாலே அவருடன் சேர்ந்து நடந்து போய் விளக்குவது ஓ பி எம் (அதான் நம்ம மெய்யழகன் சார்). அவர் கிளம்பும் முன்பு ஜி எம் ரூமுக்கு போய் சிறிது நேரம் அமர்ந்து விட்டு கிளம்பி விடுவார். அந்த சில நிமிடங்கள் அதிரடி மழை பெய்து ஓய்ந்தது போல இருக்கும் என்பதை உணர்ந்தேன்.  எம் டி நல்ல உயரம், கம்பீரமான நடை, அந்த ஊர் ஷேக் (ராஜா) போல நல்ல வெள்ளை நிறத்தில் முழு ஆடை, தலையில் கருப்பு நிறத்தில் முண்டாசு போன்ற ஒன்று. 

அதற்குள் வியாழன் முடிந்தது.  செல்லையா சார் எனது பாஸ் என்ற நிலை மாறி ஒரு நண்பராக மாறினார். (அவர் நிலைமை அப்படி). எனக்கு அவர் எனக்கு முன்பே பரிச்சயம் கிடையாது. திரு ராமநாதன் சாரின் நல்ல நண்பர், அவ்வளவே.  அன்று இரவே ஒரு டாக்சி வைத்துக் கொண்டு ரூவியில் இருந்த ராமநாதன் சார் ரூமுக்கு போகப்போவதை சொல்லி இருந்தார். வெள்ளி எல்லோருமே அங்கே தான் தங்குவோம். இரவு தான் ரிட்டர்ன் என்றும் சொல்லி இருந்தார். நான் எனது இரவு ட்ரெஸ், மறுநாள் ட்ரெஸ் என்று எல்லாம் எடுத்துக் கொண்டு மிகவும் ஆவலாக ராமநாதன் சார் ரூமுக்கு செல்லையா சாருடன் போனேன். அங்கே இரவு சாப்பாடு, பேச்சு அரட்டை, பிறகு 'மோகன் நடித்த குங்குமச்சிமிழ்' படம் என்று ரெடி செய்து இருந்தனர் (நிலவு தூங்கும் நேரம் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்). வேறு சில நண்பர்கள் வேறு வந்து சேர்ந்தனர். சுமார் வெளிச்சம் சுமார் இருட்டு என்று அவர் வீடு மாறியது. அருமையாக படம் முடிந்ததும் அப்படி அப்படியே அவரவர் உட்கார்ந்த இடத்தில் கட்டய சாய்ச்சு தூங்கிப் போனோம். கையில் கிடைத்த லுங்கி போர்வை என்று எடுத்துப் போர்த்திக்கொண்டேன்.

மறுநாள் தாமதமாகத் தான் தொடங்கியது. ராமநாதன் மட்டும் எனது வேலை பற்றி மிக அக்கறையாக விசாரித்தார். ஒருவர் டீ போட, ஒருவர் பிரெட் ரெடி பண்ண (அதற்குள்  சிலர் கிளம்பி இருந்தனர்).  அப்போதுஅன்றைய அஜெண்டா வெளியானது. மதிய உணவு வெளியில் வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு  என்னைக் கூப்பிட்டுக் கொண்டு ரூவி மார்க்கெட் போவது, பிறகு அங்கிருந்த சிவன் கோவில், மாலை பாக் டு வாடிகபீர் பாக்டரி குவாட்டர்ஸ் என்று. மனம் என்னை அறியாமல் உற்சாகத்தில் துள்ளியது.  

அடுத்த இரண்டு அத்தியாயங்கள் நிச்சயம் உங்களை ஒன்றிட வைக்கும் சம்பவங்கள் நிச்சயம் உண்டு. வாசிக்கத் தவறாதீர்கள்.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

Monday, July 12, 2021

நீங்கா நினைவலைகள் - 18

 நீங்கா நினைவலைகள் - 18

- பாலசாண்டில்யன் 

என்னை வெளிநாட்டுக்கு வழியனுப்ப வந்த அம்மா அப்பா இருவருக்குமே விமான வழிப் பயணம் முதல் முறை. ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்தது போல அப்பாவுக்கு  ரயில்வே முதல் வகுப்பு பாஸ் உண்டு என்றாலும், வீட்டில் பாட்டிகளை, தம்பி தங்கைகளை தனியாக விட்டு விட்டு வந்ததால் விமானத்தில் வந்து விமானத்தில் திரும்பிட திட்டமிட்டு வந்திருந்தனர். 

வண்டி கிளம்பியது பாம்பை விட்டு. ஏர்போர்ட்டுக்கு என்னுடன் அம்மா, அப்பா, அத்தை பையன் சேகர், என் புதிய ரூம் மேட் திவாகர் சித்தப்பா எல்லோரும் வந்தனர். செக்யூரிட்டி செக் வரை அவர்கள் உள்ளே வர அப்போது அனுமதி இருந்தது. காலை நேர பிளைட். எனக்கு எல்லாமே புதுசு. பெட்டிகளை எடை போட்டு உள்ளே தள்ளி விட்டு, கையில் பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் வைத்துக்கொள்ளும் பௌச் சகிதம்  ஒரு சிறிய ஹாண்ட் லகெஜுடன்  இவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்து நின்றேன். என்னை அறியாமல் கண்ணில் நீர். முதல் முறை அப்பா வெகு நாட்களுக்கு பிறகு என் தோள் மீது கைவைத்து அழுத்தினார். "ஜாக்கிரதையா போயிட்டு வா,  பார்த்து நடந்துக்கோ" என்றார். நான் வெறுமனே 'ஹூம்' என்றேன் ஈன ஸ்வரத்தில் அவரது ஸ்பரிசத்தை உணர்ந்தவாறு. அம்மா அழுகையை அடக்கிக் கொண்டு, "அங்க சாப்பாடெல்லாம் ஒழுங்கா கிடைக்குமாப்பா? உடம்பைப் பாத்துக்கோ, முடிஞ்சா பாலா பெரியம்மா பையன் முரளிக்கு டெலெக்ஸ் அனுப்பு" என்றார். 

அதற்குள் சேகர், "சலோ பாயி அந்தர், டைம் ஓரஹா ஹை" (நேரமாச்சு உள்ளே போ பிரதர்) என்றான். நாங்கள் இருவரும் அடிக்கடி இப்படி ஹிந்தியில் தான் பேசிக் கொள்ளுவோம். கழுத்தை அவர்கள் பக்கம் திரும்பியபடி  நான் முன்னே நகர்ந்தேன் மனதில் இனம் தெரியாத பயத்தோடு. செக் செய்து உள்ளே போய் அமரச் சொன்னார்கள். பிறகு அறிவுப்பு வர எதிரில் இருந்த கேட் வழியாக வெளியே சென்று நின்றிருந்த பஸ்ஸில் ஏறி விமானம் சென்று அடைந்தேன். எமிரேட்ஸ் பிளைட். வணக்கம் சொல்லி சீட்டு வரை வந்து வழிகாட்டினார் அந்த பணிப்பெண். அவரே பெல்ட் மாட்டி விட்டார். "எவ்வளவு நேரம் எடுக்கும்?" என்று கேட்டேன். "ஒரு மணி நேரம் பத்து  நிமிடம்" என்றார் தன் இனிமைக்குரலில்.  பாம்பே நேரத்தை விட ஒன்றரை மணி நேரம் பின்னால் தான் மஸ்கட் (சுல்தானேட் அப் ஓமான்). விமானம் கிளம்பும் முன்பு காதில் வைத்துக்கொள்ள பஞ்சு கொடுத்தார்கள். பிறகு சாக்லேட் கொடுத்தார்கள். வெல்கம் ட்ரிங்க்ஸ் என்று ஜூஸ் கொடுத்தார்கள். வேண்டாம் என்றேன். படிக்க செய்தித்தாள் கொடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து வந்து குடிக்க என்ன வேண்டும் (சாம்பேன், பீர், வைன்)? என்று வினவினார் ஒரு பெண். எதுவும் வேண்டாம் என்ற எனக்கு புன்னகையுடன் ஆரஞ்சு கான் ஜூஸ் அவரே ஓபன் செய்து கொடுத்தார். குடிக்கும் போது ஆரஞ்சு சுளைகள் வந்து வாயில் தென்பட்டன. அலாதி சுவை. இன்னும் சற்று நேரத்தில் வெஜ் புலாவ், சப்பாத்தி டால், ஒரு ஸ்வீட், என்று கொடுத்தார்கள். சிலருக்கு சிக்கன் மற்றும் எக் கூட வந்தது. அதிகமாக ட்ரிங்க்ஸ் மற்றும் சிக்கன் வாடை முன்னும் பின்னும் இருந்து வந்தது. 

அந்தப் பெண்கள் எல்லோருடைய சாப்பிட்ட, குடித்த பிறகு இருந்த அந்த குப்பைகளை மிக நாசுக்காக வாங்கிச் சென்று அமர்ந்தார்கள். அதற்குள் மஸ்கட் வந்து விட்டது. மற்றவர்களை நான் அப்படியே தொடர்ந்தேன். எனது பாஸ்போர்ட்டை செக் செய்து சீல் குத்திய பிறகு, பெல்ட்டில் வந்த எனது ஒரு பெட்டி மற்றும் பெரிய பையை (அதில் நீல் கலர் ரிப்பன் கட்டி இருந்தேன்) அடையாளம் கண்டு எடுத்துக் கொண்டேன். டிராலி ஒன்று இழுத்து வந்து அதில் தூக்க முடியாமல் வைத்து தள்ளிக் கொண்டு எக்ஸிட் கேட் நெருங்கும் பொழுது அங்கே சந்தனக் கலரில் நீண்ட குர்தா பிறகு பைஜாமா (பதான் ட்ரெஸ்) அணிந்து வாட்டசாட்டமாக ஒருவர் எனது பெயர் கொண்ட கார்ட் வைத்துக் கொண்டு நின்றிருந்ததை நான் காணத் தவறவில்லை. அவரே வலிய வந்து என் டிராலியை வாங்கித் தள்ளிக் கொண்டு எங்கள் கம்பெனி பெயர் எழுதிய (அலி ஷஹானி குரூப் ஆப் கம்பெனிஸ்) ஒரு ஜீப்பில் (முன்புறம் அமர்ந்து கொள்ளும் கேபின், பின் பாதி திறந்த பகுதி அதில் லக்கேஜ்  வைக்கும் இடமாக இருந்தது.

அவர் தன்னை 'சுல்தான், பர்சோனால் மேனேஜர்'  என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். என்னைப் பார்த்து நீங்கள் பாம்பே தானா அல்லது மதராசியா என்று கேட்டார். நான் 'மதராஸி' என்ற பொழுது அங்கே கம்பெனியில் மதராஸிகள் இருப்பதாகச்  சொன்னார். பகல் நேரம் என்பதால் அந்த ரோடுகளின் சுத்தம், அழகு, சிக்னல் வரும் பொழுது மக்களின் ஒழுங்கு எல்லாமே வியப்பாக இருந்தது. நிறைய பேர் முழுவதும் வெள்ளை ஆடை அணிந்து தலையில் கருப்பு முண்டாசு அணிந்து வண்டிகளில் அமர்ந்து இருந்தனர். பெண்கள் யாருமே கண்ணில் படவில்லை. ரூவி தாண்டி இடது புறம் அல் வாதி கபீர் போர்ட் தெரியும் போது புழுதி பறக்கும் ரோட்டில் சர்ரென்று திரும்பி  பாக்டரிக்குள் கார் நுழைந்தது. எனது பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டன. என்னை அட்மின் பிளாக் முன்பு இறக்கி விட்டார் திரு சுல்தான். உள்ளே எனது உடனடி மேலதிகாரி (திரு செல்லையா, நண்பர் ராமநாதன் சாரின் நெருங்கிய நண்பர், (சற்று கட்டை குட்டையாக கண்ணாடி போட்டு புஷ்டியாக நெற்றியில் விபூதியுடன் இருந்தார், இந்த வேலைக்கு ஏற்பாடு செய்தவர்)  என்னை ஒரு ரூமின் வெளியே வந்து வரவேற்று அறிமுகம் செய்து கொண்டு உள்ளே அழைத்துப் போனார். உள்ளே எழுத்தாளர் ராஜேஷ் குமார் போல சற்று சுருட்டை முடி, மாநிறத்தை விட குறைவு, கூலிங் கிளாஸ் போட்டு (அது பவர் க்ளாஸ் தான் அதிலும் ஸ்டைல்)  அமர்ந்திருந்தார் ஆபரேஷன்ஸ் மேனேஜர் திரு மெய்யழகன் அவர்கள் என்னை முழுவதும் திறக்காத உதடுகளின் புன்னகையோடு 'வெல்கம் மிஸ்டர் பாலா' என்றார். பயணம் பற்றி விசாரித்தார். அதற்குள் காபி வரவைத்து (மூவருக்கும்) கொடுத்தார். பிறகு இன்டர்காமில் பேசி விட்டு என்னை 'வாருங்கள் பாலா, நாம ஜி எம் சாரை  மீட் செய்யலாம் என்றார். அது அதே ஹாலில் பக்கத்தில் இருந்த மிகப்பெரிய அறை. உள்ளே சிகரெட் பிடித்த ஒரு வெள்ளைக்காரர் என்னை உற்றுப் பார்த்து புன்னகைத்தார். 

நான் அவரிடம் கைகுலுக்க எனது கைகளை நீட்டினேன். அவர் எழுந்து நின்றார். அநேகமாக ஏழு அடி உயரமும், நூறு கிலோவிற்கும் மேலான எடையும் இருக்கும். சிறிய கண்கள், வெள்ளையும் சிகப்பும் கலந்து மிக நேர்த்தியாக உடை அணிந்து இருந்த அவர் பெயர் 'சீமர் திசில்வட்டே' (அப்போது நிச்சயம் அங்கே அவர் டேபிளில் எழுதி இருந்ததை, அவர் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டதை  என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனது கண்கள் அவர் எடை உயரம் மீது நின்று போனது. சில நிமிடங்களில் 'உங்களுக்கு ஓபிஎம் எல்லாம் சொல்லுவார் (அதாவது மெய்யழகன் சார்), வெல்கம் டு அலி ஷஹானி, ஆல் த பெஸ்ட்' என்று அனுப்பி வைத்தார். மெய்யழகன் சார் 'செல்லையா, பாலாவின் ரூம் ரெடியா? அங்கே கூப்பிட்டுக் கொண்டு போங்கள், மதியம் நான்கு மணிக்கு மேல் சந்திக்கலாம்' என்றார். அந்த அட்மின் பிளாக் பின்னால் தான் அலுவலர் தங்கும் ரூம்கள் வரிசையாக இருந்தன. அங்கே சுல்தான் எனது பெட்டிகளோடு ஏற்கனவே இருந்தார். 'இது உங்கள் இப்போதைக்கான ரூம், வாருங்கள் நாம சாப்பிடப் போவோம்' என்றார். செல்லையா, 'போய் சாப்பிட்டு விட்டு வந்து ரெஸ்ட் எடுங்கள். நான்கு அல்லது ஐந்து மணிக்கு என்னுடைய கேபின் வாருங்கள்' என்று நகர்ந்தார். கான்டீன் போன பிறகு அங்கே முழுக்க முழுக்க சிக்கன் வாடை வீசியது. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த பல பேரின் தட்டுகளில் இறந்த கோழிகள் அழாமல் அமர்ந்து இருந்தன கால்களாக, உடம்பாக குழம்பில் மிதந்த படி. 

எனக்கு விறைப்பாக இருந்த சாதம், மூன்று கரண்டி டால், பிறகு சூடாக ஆனால் மிக மிக கெட்டியாக ரோட்டி (தந்தூரி) இரண்டு கொடுத்து விட்டு, தயிர் ஊறுகாய் அங்கே இருக்கிறது என்று சொன்னார் அந்த கான்டீன் பையன். எனக்கு தொண்டைக்கு கீழே எதுவுமே இறங்க மறுத்தது. மிகவும் கஷ்டப்பட்டு பாதி ரோட்டி சாப்பிட்டேன். பிறகு ஊறுகாய் தொட்டுக்கொண்டு கொஞ்சம் டால் சாதம், பிறகு கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டேன். தயிர் ரொம்ப  புளிப்பு (மூளை வரை சென்றது புளிப்பு), ஊறுகாய் தாங்க முடியாத அளவுக்கு உப்பு. என் மனதில் என்னை அறியாத பயம் தொற்றிக் கொண்டது. அம்மா சாப்பாடு, அத்தை சாப்பாடு, எப் டி சி கான்டீன் சாப்பாடு, மாதுங்கா சாப்பாடு என்று எல்லாமே மனதில் வந்து போனது. 'சரி நாம நல்லாவே இங்கே மாட்டிக்கொண்டோம்' என்று முனகினேன். அந்த மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்டது. அங்கே யாருக்கும் தமிழ் புரியவில்லை என்பதால் அதைக் கவனிக்கவில்லை. நிறைய பேர் சிக்கனை கடித்து உருவி ருசித்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்க நகர்ந்து கவுண்டர் போவதை  கவனிக்கத் முடிந்தது.  முழுக்க முழுக்க சைவம் சாப்பிட்டு வளர்ந்த எனக்கு 'இந்த பாழும் வயிற்றுக்கு தானே இத்தனை தூரம் வந்திருக்கிறோம், ஆனால் நம்ம பொழப்பு நாறிப் போய் விடுமோ' என்று தோன்றியது.

என்னை இருக்க சொன்ன ரூமில் குளிர் அதிகமாக இருந்தது. அங்கே இருந்த ரக் எடுத்துப் போர்த்திக் கொண்டேன். என்னை அறியாமல் சற்று தூங்கிப் போனேன். மணியைப் பார்த்தால் ஐந்து. வேறு உடை மாற்றி, முகம் கழுவி பவுடர் போட்டு நேராக செல்லையா சார் கேபின் போனேன். அங்கே நான் சைன் போட வேண்டிய நிறைய காகிதங்கள் அங்கே அவர் டேபிளில் இருந்தது. அப்போது ஆபீஸ் பாய் ஒருவர் ஒரு காகிதத்தை கொண்டு வந்து செல்லையாவிடம் கொடுத்து இது சாருக்கு சற்று முன்பு வந்த டெலெக்ஸ் என்றான். செல்லையா அதனை என்னிடம் கொடுத்தார். "சாவித்திரி பாட்டி எக்ஸ்பயர்ட் திஸ் ஆப்டர்நூன், கால் மீ எனி டைம், முரளி" என்று இருந்தது. எனது முகம் வெளிறியதைப் பார்த்த நண்பர் செல்லையா என் கையில் இருந்த காகிதத்தை வாங்கிப் பார்த்து படித்து உச் கொட்டினார். "சார் சென்னைக்கு போன் பேச முடியுமா? ஏதாவது சார்ஜ் உண்டா?" என்றேன். அதற்குள் 'நம்பர் சொல்லுங்கள்' என்றார். கெம்பிளாஸ்ட் முரளி மறுமுனையில் இருந்து உங்க அம்மா அப்பா உன்னை வழியனுப்பி உடனேயே சென்னை வந்து விட்டனர். பாட்டிக்கு ஏற்கனவே கான்செர் இருந்திருக்கிறது. அதனால் அவர் தவறி விட்டார். என்ன நீ வர முடியுமா ? இன்று தானே போய் இருக்கிறாய் ? சரி, ஒரி பண்ணிக்காதே அப்புறம் பேசலாம்" என்று அவனே போனைத் துண்டித்தான். (சாவித்திரி பாட்டி அம்மாவின் அம்மா, வயது 72 இருக்கும் - எத்தனை வம்பு செய்து இருப்பேன் அவர்களோடு - என்ன இது கொடுமை வந்து இறங்கியவுடேனே இப்படி ஒரு செய்தியா ? மனம் தவித்தது)

சாரி பாலா என்று சொல்லி சில ஆபீஸ் பேப்பர்கள் (எல்லாம் நான் சைன் பண்ண) கொடுத்தார் செல்லையா. எனக்கு போனில் சொல்லப்பட்டதை விட சம்பளம் சற்று குறைவாக இருந்ததை கவனித்தேன். அவரே முந்திக் கொண்டார், "உங்களுக்கு 'ஓ டி' தனியாக வரும். அது இங்கே எழுதி இருக்காது" என்றார். (இப்போது ஓமானி ரியால் என்பது இந்தியன் ரூபாய் 150 முதல் 160 வரை மாறிக் கொண்டு இருக்கும் என்றார்) எனது பாஸ்போர்ட்டை ஏர்போர்ட்டிலேயே சுல்தான் சார் வாங்கிக் கொண்டு இருந்தார். அது இப்போது நினைவுக்கு வந்தது. செல்லையா சார் எனது சிறு காபின் டேபிள் சேர் எல்லாம் காட்டினார். அவர் அமர்ந்து இருந்த அதே ஹாலில் என்னைத் தவிர டேவிட், சாம் என்று இருவர் அங்கே இருந்தனர். இருவருக்கும் 25 வயது இருக்கும். சிரிக்க முடியாமல் என்னிடம் அறிமுகம் ஆனார்கள். என்னுடைய லெட்டரில் 'அக்கௌன்டன்ட் கம் சேல்ஸ் அட்மின் ஆபீசர்' என்று எழுதி இருந்தது. 

அதற்குள் மணி எட்டு ஆகி இருந்தது. 'சரி நாளை பார்க்கலாம்' என்றார் செல்லையா. கான்டீன் போனால் அதே போல சப்பாத்தி மற்றும் டால் தான். சற்று மென்மையாக இருந்தது. இருந்தாலும் பாட்டி போன சோகம் மனதைத் தாக்கியது. சாப்பிட வேண்டுமே என்று ஒரு சப்பாத்தி  மற்றும் ஒரு வாழைப்பழம் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விட்டு  எனது ரூமுக்கு வந்தேன். அதற்குள் எனது ரூமில் இன்னும் இரண்டு பேர் இருந்தனர். ரூம் ஏசியில் அப்படிக் குளிராக இருந்தது. ஒருவர் மராத்திக்காரர், ஒருவர் குஜராத்திக் காரர். அவர்களே "நீங்க ரொம்ப டயர்ட் ஆக இருக்கீங்க, தூங்குங்க காலையில் பேசுவோம். ஆனால் ஆபீஸ் காலை எட்டு மணிக்கு என்றார். வேட்டி கட்டிக்கொண்டு படுத்தேன். புரண்டு புரண்டு படுத்தேன். தூக்கம் வரவில்லை. கண் முன்னர் பாட்டி வந்து வந்து போனார். காலை எழுந்து வேலை தொடங்க வேண்டுமே என்ற கவலையுடன் சற்று கண் அசந்தேன்.
எல்லாவற்றையும் எப்படி இன்றே சொல்ல ...?

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

நீங்கா நினைவலைகள் - 17

 நீங்கா நினைவலைகள் - 17

- பாலசாண்டில்யன் 

பாம்பே என்று சொல்லும் போது இந்த விஷயத்தை எப்படி சொல்லாமல் இருக்க முடியும்? ஒன்று தாதர் ஸ்டேஷன் அருகில் நாக்கு புண்ணாகும்  அளவிற்கு சூடாக சுவையாக இருக்கும் ஆலு வடா (உருளை போண்டா) உப்பில் ஊறிய நீளமான பச்சை மிளகாயுடன், இரண்டு நம்ம ஊர் போல இல்லாமல் அங்கே கிடைக்கும் ஆனந்தமான பானி பூரி (ஒன்று ஒன்றாக நாம் திங்கத் திங்க நம் தட்டில் வைப்பார் பாருங்கள்...அடடா), அதே போல அந்த பாடிஸ் சன்னா, இன்னொன்று அந்த எலுமிச்சை இஞ்சி போட்டுப் பிழிந்த கன்னா பானி (கரும்பு ஜூஸ்) - அதுவும் பெரிய கிளாஸ் என்றால் அமிதாப் பச்சன் சிறியது என்றால் ஜெயபாதுரி. தவிர, காலை முதல் நள்ளிரவில் கூட கிடைக்கும் அதிருசியான இரானி கடை டீ (நிறைய தெருக்களில் அந்த மூலையில் இருக்கும் கடை அது தான் - கேரளாகாரர்கள் போட்டுத் தரும் டீ - அதில் மசாலா இஞ்சி இதெல்லாம் இருக்காது). அவற்றை எல்லாம் தூக்கி அடிக்கும் ஒரு டீக்கடை (பெரும்பாலும் பீகார் அல்லது உபிகாரர்கள் நடத்தும் டீ கடை) அங்கே அமதவாதி, பனாரசி, மசாலா, ஏலக்காய், இஞ்சி என்று விதவிதமான டீ, ஒவ்வொன்றும் ஒரு விலையில். எல்லா கடையிலும் சிவன் படம் நிச்சயம் இருக்கும். மிக அழகான மராத்தி கலக்காத ஹிந்தி பேசுகிற மக்கள் இருக்கும் இடம்.

அய்யோ, நிச்சயம் இந்த மறக்க முடியாத ஒரு சம்பவத்தை இங்கே நான் சொல்லியே ஆக வேண்டும். இல்லையேல் என்னை நீங்கள் ஒரு வேளை ரொம்ப புத்திசாலியோ அல்லது கிரேட் என்று கூட நினைக்கக்கூடும். FDC ல் சாப்பாடு நேரம் 1 முதல் 1.30 வரை தான். நான், ஹரிஹரன், பிரபாகரன் மற்றும் வைத்தி ஆகியோர் ஒன்றாக சாப்பிடுவோம். எங்களுக்கு கேன்டீனில் சாப்பாடு உடனே கொடுத்து விடுவார்கள். உட்காரும் இடமும் எங்களுக்கு பிக்சட். தான். சாப்பிட்ட பிறகு அட்மின் பில்டிங் அருகே நல்லதொரு கிரீன் லான் இருக்கும். நாங்கள் அங்கே சென்று அமர்ந்து அல்லது அப்படியே சாய்ந்து உட்கார்ந்து (சில நேரம் ஸ்ரீரங்க பெருமாள் கோலத்தில்) அரட்டை (அதாவது பெரிய லெவல் பேச்சு) அடிப்போம். வம்பு தும்புகள் அதில் கலந்து இருக்கும்.

அப்படி ஒரு நாள், பிரபாகர் திடீர் என்று "இந்த வருடம் குடை அலவன்ஸ் முப்பது ரூபாய் எல்லோருக்கும் தந்து விட்டார்கள்" என்றான் சம்பந்தம் இல்லாமல். உடனே நான் "தலைவரே எனக்கு வரவில்லையே" என்றேன். "விடுறா பாலா கொடுக்கச் சொல்றேன், நீ எங்கியாவது ஆபீஸ் வேலையா போய் இருந்திருப்பே" என்றான்.

மதியம் ஒரு மூன்றரை மணி இருக்கும். ஜி எம் பிரபு சார் ரூமில் இருந்து பெரிய பெரிய சத்தங்கள். கேல்கர், நாயக் எல்லோரும் உள்ளே இருந்து வெளியே வெளியே இருந்து உள்ளே என்று பல பைல்களை எடுத்துக் கொண்டு ஓடியதை பார்க்க முடிந்தது. ஏற்கனவே யூனியன் தலைகள் இரண்டு மூன்று பேர் உள்ளே நுழைந்ததையும் பார்த்த நினைவு. திடீர் என்று பியூன் வந்து என்னிடம் "பாலா சார் உங்களை ஜி எம் கூப்பிடுகிறார்" என்றார். எனக்கு வயிற்றில் புளி கரைத்தது. உள்ளே போன என் கண்ணில் சிங்கத்தை போல முகம்  சிம்ம கர்ஜனை செய்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் "ஹே பாலா உனக்கு அம்பிரெல்லா அலவன்ஸ் கிடைக்கவில்லையா?" என்று கேட்டார். நான் சூழல் புரியாமல் (இவருக்கு எப்படித் தெரியும் - டேய் பிரபாகர் இப்படி டபுள் கேம் ஆடி விட்டாயே என்று மனதில் புலம்பிய படி) "எஸ் சார் கிடைக்கவில்லை" என்று வார்த்தையை சொல்லி முழுங்கி சுற்றுமுற்றும் திருடன் போல பார்த்து திருதிருவென்று முழித்தேன். 

"கெட் அவுட், ஐ டோன்ட் வாண்ட் டு சி யு" என்றார். அவர் முகம் மேலும் சிவந்து கிடந்தது. இது போல நான் அவரைப் பார்த்ததில்லை. அவர் குரல் ரூமை விட்டு ஹாலில் எல்லாம் எதிரொலித்தது. எனக்கு கால் எல்லாம் உள்நடுக்கம் கொண்டு நடுங்கியது. நாயக்கிடம் "சீ ஹவ் யுவர் பாலா ஹாஸ் ஸ்பாயில்ட் எவெரிதிங்". என்றார். அப்போது தான் அந்த யூனியன் லீடர் (ஏற்கனவே சொன்னதை) மீண்டும் சொல்லி கொக்கரித்தான்,  "நான் சொன்னது சரி தானே, ஜெ எம் டி செகரட்டரிக்கே பாலாவுக்கே கொடுக்கவில்லை என்றால் எங்களுக்கு எப்படி நேரத்தில் கிடைக்கும்". 

வெளியே வெளிறிய முகத்துடன் மெதுவாக வந்து என் சீட்டில் உட்கார்ந்தேன். எனக்கு நிச்சயம் ஒன்றுமே புரியவில்லை. என்னை பிரபாகர், வர்ஷா, எலிசபெத், ஹரி எல்லோரும் பாவமாக பார்த்தனர். வைத்தி எனக்கு குடிக்க ஒரு க்ளாஸ் தண்ணி கொடுத்தான். சற்று நேரத்தில் என் தோளில் தட்டி தனது ரூமுக்கு அழைத்தார் நாயக். "டேய் நீ மதியம் லானில் பேசும் போது உன் பின்னால் யூனியன் லீடர் நின்று கொண்டிருந்தது கவனிக்கவில்லையா ? ஏண்டா இப்படி சொதப்பி விட்டாய், உன் மீது இருக்கும் கோபம் குறைய பல நாட்கள் ஆகும். நான் வேறு வேலையை விட்டு வெளிநாடு கிளம்புகிறேன், ஐ ஆம் வெரி மச்  டிஸ்அப்பொய்ன்டெட் மை பிரென்ட்"  என்று மீண்டும் என் தோளில் தட்டி போகச் சொன்னார்.

அடுத்த ரெண்டு நாளில் நான் சென்னை செல்ல பத்து நாள் லீவ் அப்ளை செய்து இருந்தேன். அதன் படி நான் கிளம்பி விட்டேன். ஊருக்குப் போயும் நார்மலாக இருக்க முடியவில்லை. இதை எல்லாம் யாரிடம் சொல்லுவது? அங்கே சேகருக்கு மட்டும் போனில் சொன்னேன். 'எல்லாம் சரியாகி விடும் ..இதெல்லாம் பார்ட் ஆப் ஆபீஸ் பாலிடிக்ஸ், உனக்கு தான் புதுசு, இன்னும் நிறைய பார்ப்பே' என்றான். அவன் சேல்ஸ் லைன் என்பதால் இது போல தினம் தினம் பார்த்திருக்கிறான். சிலவற்றை என்னிடம் சொல்லுவான். அதனால் அவன் சில வேலைகளை கூட மாற்றி இருக்கிறான்.  நான் லீவு முடிந்து மீண்டும் வேலைக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் எல்லாமே தலைகீழ் ஆகி இருந்தது. இருப்பதிலேயே மொக்கை டிபார்ட்மென்ட்க்கு என்னை ட்ரான்ஸ்பர் செய்து இருந்தனர். தினம் வருகிற செக்கை என்ட்ரி போட்டு, பாங்க் சலான் பில் செய்து கேஷியரிடம் கொடுக்க வேண்டும். பிறகு பணம் வராத கஸ்டமருக்கு ஏற்கனவே இருக்கும் ரெடிமேட் கடிதத்தை பில் நம்பர் போட்டு தபாலில் அனுப்ப வேண்டும். சிலருக்கு போன் செய்து பேமெண்ட் கேட்டு நச்சரித்து துரத்த வேண்டும். 

நாயக் சார் கிளம்பி விட்டார். புதிதாக சேர்ந்த அக்கௌன்ட்ஸ் தலைவர் ஸ்வாமிநாதன் சாரை (ரொம்ப சாது, பட்டை பட்டையாய் விபூதி, ரொம்ப சாத்வீகம், ஒரு நாற்பது வயது இருக்கும்) போய் பார்த்தேன். அவருக்கு எல்லாமே தெரிந்து இருந்தது. அவர் சொன்னார் "பாலா இப்போது நீ பைனான்ஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமாவும் முடித்து விட்டாய், கம்பெனி பிக்சட் டெபாசிட் வேலையை உன்னிடம் கொடுக்க போகிறேன். அவற்றை எல்லாம் கம்ப்யூட்டரைஸ் செய்ய வேண்டும். அதற்கு நீ தான் இன்சார்ஜ். உன் வேலை மூலம் தான் நீ இழந்தவற்றை பெற முடியும், நான் இருக்கேன் பயப்படாதே" என்றார். சற்று  நிம்மதியாக இருந்தது (சரி, நம்ம ஆளு ஒருத்தர் இருக்கார் 
என்று ). பிறகு நானே சொன்னேன் "சார் என்னிடம் இப்போது நிறைய நேரம் இருக்கிறது, நம்ம கம்பெனி சின்ன சின்ன கவொர்ன்மெண்ட் கிளினிக்குக்கு மருந்து சப்ளை செய்து வர வேண்டிய பாக்கி சுமார் எட்டு லட்சத்தை தாண்டி இருக்கிறது. நீங்கள் அனுமதித்தால் நான் அவற்றை நேரில் சென்று வசூல் செய்கிறேன், இப்போது அதனை ஒரு ஏஜென்ட் ஒருவர் அரையும் குறையுமாக செய்து நல்ல கமிஷன் வாங்குகிறார், அதை மிச்சம் செய்யலாம்"  என்றேன். அவரும் 'சரி' என்றார்.

சுமார் மூன்றே மாதத்தில் என்னாலேயே நம்ப முடியாத அளவு ஐந்து லட்சம் வரை வசூல் செய்து விட்டேன். போன இடத்தில் எல்லாம் யாரும் வந்து கேட்கவில்லை, இதோ நீங்கள் வந்து இருக்கிறீர்கள், இருந்து அந்த செக்கை வாங்கிக் கொண்டு போங்கள் என்று சொல்லி சில இடங்களில் டீ வேறு கொடுத்து அனுப்பினர்.  ஜெ எம் டி ரூமில் ஜி எம் பிரபு சாரும் ஸ்வாமிநாதனும் இருந்தனர். என்னை உள்ளே அழைத்தார்கள்.  ஜி எம் பிரபு சார் "வெல் டன் மை பாய், அன்று நடந்ததை மனதில் வைத்துக் கொள்ளாதே, உனக்கு ஸ்பெஷல் இன்கிரிமெண்ட் கிடைக்க இருக்கிறது என்று சொல்லத் தான் கூப்பிட்டேன். யாரிடமும் சொல்லி விடாதே"  என்று கண்ணடித்து சிரித்தார். என்னை அறியாமல் என் பின்னால் யார் இருக்கிறார் என்று திரும்பிப் பார்த்தேன். 'அப்பாடா நான் இழந்ததை பெற்று விட்டேன்' என்று மிகவும் பெருமையுடன் வெளியே வந்தேன். பிரபாகர், ஹரி, வைத்தி, வர்ஷா எல்லோரும் ஏற்கனவே தெரிந்தது போல என்னைச் சுற்றி நின்று தோளில் தட்டிக் கொடுத்து பார்ட்டி கேட்டனர். மிகவும் மகிழ்ந்து போனேன். 

நான் தங்கி இருந்த ரூமுக்கு எதிரில் ராமநாதன் மற்றும் அழகுராஜா என்று இரு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் குடியிருந்தனர். நாங்கள் முதல் சந்திப்பிலேயே நல்ல நண்பர்கள் ஆனோம். அவர்களின் சிநேகம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ராஜா அடுத்த மாதம் மஸ்கட் போகப் போகிறேன் என்றார். என்னையும் ஒரு பாஸ்போர்ட் எடுக்கச் சொன்னார். பிறகு தான் தெரிந்தது அடுத்து ராமநாதன் சாரும் கிளம்புகிறார் என்று. எனது புதிய பயோடேட்டா (ஒரு டிகிரி, ஐந்து டிப்ளமா படிப்பு, சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், வாலிட் பாஸ்போர்ட்  என்று அதைப் படிக்கும் போது எனக்கே ஒரு கிக்காக இருந்தது). என்னுடைய பாஸ்போர்ட் காபி மற்றும் பயோடேட்டா அவரிடம் கொடுத்து அனுப்பினேன். (அந்த நண்பர் ராமநாதனை வெகு அண்மையில் முகநூல் மூலம் தொடர்பில் கொண்டு மகிழ்ந்தேன். இப்போது அவர் துபாயில் 'சோனா ராம்'. ஒரு எப் எம் ரேடியோவின் தலைவர், மற்றும் ஒரு பெரிய செயின் ரெஸ்டாரண்ட் ஓனர்).

என் ரூம் மேட் சேகர் எனக்காக வீணை கிளாஸ் சேர்ந்து (வீணை ஜுரம் வந்தது போல போர்த்திப் படுத்து கிடக்கும் - ஒரு நாள் கூட அவன் வாசித்து நான் பார்க்கவில்லை). என்னுடன் சில நாள் கிளாஸ் வருவான். திடீர் என்று எனக்கு சென்னை மாற்றல் ஆகி விட்டது என்று சொல்லி திருவல்லிக்கேணி சேகர் (இன்னொரு சேகரா)  என்று ஒருவரை எனது ரூம் மேட் ஆக்கி அறிமுகம் செய்தான். இப்படி ஒருவர் ஒருவராக கிளம்பிடும் போது நான் தான் அவர்களுக்கு 'சென்ட் ஆப்' கவிதை எழுதி வாசிப்பேன். 

எனக்கு இன்டெர்வியூ எதுவுமே இல்லாமல் விசா, ஜாப் ஆர்டர் (அக்கௌன்டன்ட் கம் அட்மின் மேனேஜர் போஸ்ட்) வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அது நடந்தது. இப்போது வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு அதிகம் பிளஸ் ஓ. டி, இருக்க குவாட்டர்ஸ், இலவச சாப்பாடு  வேறு உண்டு என்று ராமநாதன் போனில் சொன்னார். இப்போது மும்பையை விட்டு விட்டு மஸ்கட் கிளம்ப வேண்டும். என்னை FDC ல் ரிலீவ் செய்வார்களா? இது நல்ல வேலையா? இப்போது தான் இங்கே எல்லாம் சரியாகி விட்டதே. அப்பா இதற்கு ஒத்துக்கொள்ளுவாரா ? 

பல கேள்விகள் மனதுக்குள். எல்லாவற்றிற்கும் விடை கிடைக்காமலா போகும்? "நல்ல காலம் பிறந்தது" என்று சொன்னான் அத்தை பையன் சேகர். அத்திம்பேரும் 'நல்ல சான்ஸ். போய் விட்டு வா எல்லாம் நல்லபடி நடக்கும்' என்றார். எனது இடத்தில் சாயின் தம்பி திவாகர் (என்னுடைய குட்டி சித்தப்பா) கோவையில் இருந்து வந்தான். என்னுடைய 'சென்ட் ஆப்' கவிதை அவன் தான் எழுதப் போகிறான் என்பது இறைவன் ஏற்பாடு. 

ஸ்வாமிநாதன் சைன் போட்டு ஜி எம் பிரபு சாரிடம் அனுப்ப எனது ராஜினாமா ஏற்கப்பட்டு எனக்கு செட்டில்மென்ட் ஏற்பாடு ஆனது. நண்பர்கள் நிறைய கிப்ட் கொடுத்து ஆபிசில் ஒரு சின்ன 'சென்ட் ஆப்' ஏற்பாடு செய்தனர். ஜெ எம் டி, மற்றும் ஜி எம் பிரபு சார் இருவரின் ஆசி பெற்றேன். பிரபு சார் கேட்டார் "ஏதோ என்னுடைய சீட்டு கேட்டாய், வேறு ஊரில் கிடைத்து விட்டதா?" என்று என்னை கிண்டல் செய்து கண்ணடித்தார். அது அவர் ஸ்டைல்.

நடுவில் மஸ்கட் கிளம்பும் முன் பாம்பே நண்பர்கள் சிலர் வீட்டுக்கு போய் அவர்களின் வாழ்த்து பெற்றேன். அப்போது  நான் பாம்பேவுக்கு நிரந்தர டாட்டா காட்டப்போவது தெரியவில்லை. அப்பா அம்மா இருவரும் சென்னையில் இருந்து பிளைட் பிடித்து பாம்பே வந்தனர் என்னை வழி அனுப்ப. சில பல பொடிகள், விபூதி, சாமி படம், சட்டை பாண்ட், புது உள்ளாடைகள், என்று வாங்கி பாக்கிங் செய்யும் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. இனி கிளம்ப வேண்டியது தான் பாக்கி. டிக்கெட் கூட அங்கிருந்து வந்து விட்டது. 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

Saturday, July 10, 2021

நீங்கா நினைவலைகள் - 16

 நீங்கா நினைவலைகள் - 16

- பாலசாண்டில்யன் 

முதலில் வேலை பார்த்த இடம் மத்திய அரசு ஆபீஸ். அங்கே எல்லாமே ஒரே மாதிரி ரொட்டீன் வேலை. எல்லோருமே சாய்குமார், சந்தானம், வெங்கட்ராமன், சேஷாத்திரி என்று  தமிழ்க்கார்கள். அடுத்த வேலை மார்வாடி நிறுவனம். அங்கே ஊழியர்கள் எல்லாம் பிஹாரி அல்லது உபி காரர்கள், அதற்கு அடுத்த ஒர்லி தலால் கம்பெனி ஒரு குஜராத்தி நிறுவனம். அங்கே சில தமிழர்கள், மலையாளிகள், மராத்தி மற்றும் குஜராத்தி மக்கள் இருந்தனர். இங்கே இந்த மருந்துக் கம்பெனியில் (1936 ல்  தொடங்கிய நிறுவனம் - சந்தாவார்கர் அவர்களால் தொடங்கப்பட்டது).  மராத்திக்காரர்கள், குஜராத்தி, கொங்கணி பேசுகிறவர்கள், தவிர பாலக்காட்டு தமிழ் பேசுபவர்கள், ஏழெட்டு தமிழ் பேசும் நண்பர்கள் இருந்தனர்.

ஜிஎம் பிரபு சாரின் செகரெட்ரி ஹரிஹரன், ஜெ எம் டி யின் செகரெட்ரி பிரபாகர், எம் டி யின் செகரெட்ரி வர்ஷா மற்றும் டோராத்தி,  பர்ஸானல் மேனேஜரின் செகரெட்ரி எலிசபத். அவர்கள் மத்தியில் தான் எனது சீட்டு. அதற்கு காரணம் இருந்தது. எனது மூன்று மாத ப்ரோபேஷன் முடிந்த பிறகு என்னை ஜெ எம் டி (எம் டியின் தம்பி மோகன் சந்தாவார்கர்) அவர்களின் தனிப்பிரிவு (விற்பனை பிரிவு) செயலாளர் ஆக்கினார். எனக்கு நேரடி அதிகாரி என்றால் அது சீப் அக்கௌன்டன்ட் நாயக் சார் மற்றும் ஜெ எம் டி தான். பின்னாளில் நாயக் சார் வெளிநாடு வேலை கிடைத்து கிளம்பும் போது எனது மேலதிகாரி நம்ம ஊர் ஸ்வாமிநாதன் (அவரும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்). அங்கே கஸ்பேகர், நவ்ரே, குல்கர்னி என்று மூன்று சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இருந்தனர். எதிரில் பர்சேஸ் டிபார்ட்மென்ட்டில் ஒரு சுப்பு எனக்கு நல்ல நண்பனாக ஆனார்.

எனக்கு எல்லாமே புதுசு தான். காரணம், கேசுவல் லீவ், மெடிக்கல் லீவ், எர்ன் லீவ், போனஸ், எக்ஸ்க்ரேஷியா, மெடிக்கல் அலவன்ஸ், எல் டி ஏ எனும் லீவ் ட்ராவல் அலவன்ஸ் எல்லாமே உண்டு. தவிர, கம்பெனி தயாரிக்கும் மருந்துகள் சில இலவசமாக (மாதம் ரூபாய் 200 க்கு ) பெற்றுக் கொள்ள தனி கார்டு உண்டு. போனில் ஆர்டர் கொடுத்தால், வெளியே போகும் கேட்டில் பேக் செய்து வைத்திருப்பர். அவர்களின் தயாரிப்பு என்று பார்த்தால் எலெக்ட்ரால் (ஓரல் டீஹைட்ரேஷன் பொடி), கண்ணுக்கு ட்ராப்ஸ், இருமல் சிரப், ப்ரோ சோயால் எனும் குழந்தை சாப்பாடு பவுடர், எநேர்சால் என்று பல பார்முலேஷன் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக அது இருந்தது. ஓரிரு முறை பாக்டரிக்குள் அந்த வெள்ளை கோட் வெள்ளை தொப்பி எல்லாம் போட்டுக் கொண்டு பார்த்திருக்கிறேன். கோடௌனில் இரண்டு தமிழ் பாய்ஸ் உண்டு. சில நேரம் அங்கே சென்று அரட்டை அடிப்பது உண்டு. 

தவிர, ரோஹா எனும் (மஹாராஷ்டிராவில் உள்ளது) இடத்தில் இருந்த பல்க் ட்ரக் - இந்திய விற்பனைக்கு என்னை தேர்வு செய்தனர். அந்த பாக்டரியில் ஜுரம் தலைவலிக்கு பயன்படுத்தும் பாராசிட்டமால், தூக்க மாத்திரைக்கு பயன்படுத்தும் டயசபம், இருமல் சளி மாத்திரைகளில் (பாக்ட்ரிம் டி எஸ் போன்ற) பயன்படுத்தும் சல்பா மெதோக்சஜால் மற்றும் ட்ரைமெதோபேரிம், தீ காயங்களுக்கான ஆயிண்ட்மென்டில் பயன்படுத்தும் சில்வர் சல்பா டயஸின் (அப்போதே அது பயங்கர விலை - ஒரு கிலோ சுமார் 18000/-) இவற்றை எல்லாம் (சென்னையில் இருந்த டாப்லெட்ஸ் நிறுவனம், அமெரிக்கன் ரெமெடிஸ் போன்ற பல நிறுவனங்களுக்கு) நேரடி விற்பனை எல்லாமே போனில் முடிக்கும் எளிதான வேலை தான். மாதாமாதம் அல்லது எப்போதெல்லாம் ஜெ எம் டி கேட்கிறாரோ அப்போது அவருக்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். தவிர, பாக்டரியுடன் பேசி ஆர்டரை சீக்கிரம் முடிக்கச் சொல்லி முடுக்கி விட வேண்டும். முக்கால்வாசி நிறுவனம் அட்வான்ஸ் பணம் கொடுத்து விட்டுக் காத்திருப்பார்கள். இது தவிர ரோஹா பிளான்டின் அக்கௌன்ட்ஸ் கூட நான் பார்க்க வேண்டும். என்னுடைய வேலைப்பளு அதிகமானால் வைத்தி உதவுவார். எனக்கு வேலை மிகவும் பிடித்துப் போனது. அப்போது எனக்கு வயது 23 இருக்கும்.

அந்த டிப்ளமோ இன் பிசினெஸ் மேனேஜ்மென்ட் படிப்பை வகுப்பிலேயே முதலாவதாக வந்து எனக்கு காஷ் அவார்டு கூட கொடுத்தார்கள். நாயக் சார் சொல்லி பாம்பே யூனிவர்சிட்டி வழங்கும் டிப்ளமோ இன் பைனான்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர்ந்தேன் (அது தபால் வழிக் கல்வி). அதனால் எங்கும் நான் அலைய வேண்டாம். ஆனால் எனக்கு சில பாடங்கள் புரியவில்லை. மிகவும் கடினமாக இருந்தது. கஸ்பேகர் அல்லது நவ்ரே சார் இருவரும் எனக்கு சொல்லித்தருவர். 

அது மட்டுமா? அந்த நிறுவனத்தில் எல்லோருமே கிரிக்கெட் பைத்தியம். ஒவ்வொருவரும் நாளைக்கு எனக்கு தலைவலி ஜுரம் என்று லீவு போட்டு மாட்ச் பார்ப்பார்கள். என் ரூமில் டிவி கிடையாது. ஆனால், வேறு ஒரு விஷயம் நான் பிறரோடு சேர்ந்து செய்தேன். யார் ஜெயிப்பார்கள் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பெட் கட்டுவர். ரொம்ப கிடையாது பத்து ரூபாய் இருபது ரூபாய் போலத்தான். நான் ஒருவரிடம் தோற்கும் என்று கட்டுவேன். வேறு இருவரிடம் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுவேன். எப்படியாவது பணம் வந்து விடும். அல்லது ரொம்ப குறைவாக போய் விடும். தீபாவளிக்கு சிலர் வெள்ளி பேலா, சின்ன வெள்ளி டம்ளர், ட்ரை பிரூட்ஸ், காஜூ கத்திலி என்று கொண்டு வந்து கொடுப்பர். இது அல்மோஸ்ட் எல்லா ஆஃபீசருக்கும் தருவார்கள். நான் வேண்டாம் என்றால் மேஜை மீது வைத்து விட்டு ஹாப்பி தீபாவளி ஹாப்பி நியூ இயர் என்று சொல்லி நகர்ந்து விடுவார் அந்த கிளையண்ட்.. இது அங்கே ரொம்ப சகஜமான ஒரு விஷயம்.  

நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட் டயானா (ஆமாம் அவள் ராணி டயானா போல அழகு தான் - திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாய் போலவே இருக்க மாட்டாள்). அவளின் வேலையே ஒரு பதினோரு மணிக்கு அங்கே இருந்த காமன் ஆடியோ சிஸ்டம் மூலம் வாத்திய இசை போட வேண்டும். பாட்டு கேட்டுக் கொண்டே வேலை பார்த்தால் மக்களின் உற்பத்தித்திறன் கூடும் என்று நிறுவனம் நம்பியது. அதே போல யாருக்கு போன் வந்தாலும், அவர்கள் சீட்டில் இல்லை என்றால் அவர்களின் பெயர் சொல்லி அனௌன்ஸ் பண்ணுவார் டயானா. இதெல்லாமே எனக்கு மிகவும் புதிது. மிகவும் பிடித்தது. நான் இன்டெர்வியூ சென்ற போதும் டயானா தான் என்னை மிகவும் உபசரித்து ஆசுவாசப்படுத்தினார். 

பாட்டு கிளாசில் லட்சுமி கணபதி மேடம் மிக வேகமாக கீர்த்தனை வந்து விட்டார் (எங்கள் பாட்ச்சில் நான்கு பேர் தான் - ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள்). கீர்த்தனத்திற்கு முன்பு அந்த ராகத்தின் ஆரோஹணம் அவரோஹணம் சொல்லிக் கொடுப்பார். பிறகு சொந்தமாக ஆலாபனை செய்ய வேண்டும். எனக்கு சின்ன வயதில் கேட்டது, அத்திம்பேர் பாடியது, தவிர ஸ்பூலில் மகாராஜபுரம் பாடியது என்று எல்லாமே ஒலிக்கும். 'ஹூம்' பரவாயில்லேயே என்று சீக்கிரம் ஓகே வாங்கி விடுவேன். சாகித்யம் முடிந்த பிறகு சொந்த கற்பனையில் 'நிரவல் ஸ்வரம்' பாட வேண்டும். நான் அந்த நாள் மட்டும் ரயிலில் வரும் போதெல்லாம் மனதுக்குள் முனகி முனகி பாடிச் சில ஸ்வரங்களை மனப்பாடம் செய்து வைப்பேன். இருந்தாலும், டீச்சர் மிக லாவகமாக எனக்கு சொல்லிக் கொடுத்து திருத்துவார். எனக்கு இருந்த சவாலே மடியில் தாளம் போட்டுக் கொண்டு பாடுவது. நிச்சயம் தாளத்தோடு பாடினாலும், மடியில் தாளம் தப்பாக போட்டு திரும்பப் பாடும்படி ஆகி விடும். டீச்சர் என்னைப் பார்த்து ரொம்ப களைப்பாக இருக்கே. கவலைப்படாதே. நிச்சயம் நன்றாக பாடுவாய் என்று உற்சாகப்படுத்துவார்.

ஷண்முகானந்தாவில் வருடம் தோறும் பாட்டுப்போட்டி நடக்கும். பாட்டு படிக்கிற எங்களைப் போன்றவர்களுக்கு அதனை நேரில் பார்வையிட அனுமதி உண்டு.  அதில் வெல்லுபவர்களுக்கு ஒரு தம்பூரா பரிசாக கிடைக்கும். அது ஒரு பெரிய கெளரவம் தான். ஒரு வருடம் செம்பூரில் வந்து பாம்பே ஜெயஸ்ரீ என்றார்கள். அடுத்த வருடம் அனுராதா ஸ்ரீராம் அவர்களின் கணவர் ஸ்ரீராம் பரசுராம் வென்றார். அடுத்த வருடம் ஏற்கனவே எனக்கு நல்ல தோழியாக இருந்த கல்யாணி சங்கர் வென்றார்.  (அவர் தான் இசை பற்றிய பல சந்தேகங்களுக்கு எனக்கு விளக்கம் தருவார். ஓரிரு முறை அவர் வீட்டுக்கு சென்று இருக்கிறேன். அவர் அம்மா டிபன் காபி கொடுத்து உபசரிப்பார். கல்யாணியின் அக்கா இருவர் அங்கே ஏற்கனவே மாதுங்கா சிஸ்டேர்ஸ் என்று ரொம்ப பிரபலம்) 

அந்த போட்டிகள், கச்சேரிகள் என்று எல்லாம் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்றால் அந்த நினைவுகள் இன்றும் சுகமானவை.பசுமையானவை. நான்  ஏற்கனவே இருக்கும் மெட்டுக்கு சில பாடல்கள் எழுதி அவற்றை டீச்சருக்கு பாடிக் காட்டுவேன். அத்தை வீட்டுக்கு போனால் அவருக்கும் பாடிக் காட்டுவேன்.

மஹாதேவன் அண்ணா என்னை மாதுங்கா தமிழ் சங்கத்திற்கு எழுத்தாளர் சிவசங்கரி வருகிறார் என்று ஒரு முறை கூப்பிட்டுப் போனார். அந்த கூட்டம் முடியும் வரை அமர்ந்து இருந்து நான் சிவசங்கரி அம்மாவைப் பற்றி எழுதிய ஒரு கவிதையை பரிசாக அளித்தேன். அவர் என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் 'பாலா உனக்கு பெரிய எதிர்காலம் இந்த துறையில் காத்திருக்கிறது. ஆல் தி பெஸ்ட்' என்று எழுதிக் கொடுத்து கையொப்பம் இட்டார். அவருக்குத் தான் எவ்வளவு பெரிய மனசு. (அது மட்டுமா அவர் வாக்கு ஞானி பாரதி வாக்கு போல) அதனை எடுத்துக் கொண்டு வந்து அத்தை, சேகர், அவன் மனைவி (எனது அக்கா) அனுவிடம் காட்டி மகிழ்ந்தேன். பிறகு அம்மாவிற்கு அது பற்றி கடிதம் எழுதி தெரிவித்தேன். 

அதற்கு பிறகு க பா சு மணியன், பாம்பே என்ற பெயரில் துணுக்குகள், ஜோக்குகள், சிறு கவிதைகள் என்று பத்திரிகை அலுவகங்களுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். சில படைப்புகள் பிரசுரம் ஆயின. ஆவலாக சென்று ஹோட்டல் ஆனந்த பவன் வாசலில் இருந்த தமிழ் கடையில் சென்று பத்திரிகைகளை புரட்டிப் பார்ப்பேன் என்னுடைய கவிதை வந்திருக்கிறதா என்று...! மஹாதேவன் மற்றும் அவர் மனைவி ரேவதி மன்னியும் எனது வாசகர்கள். அவர்கள் இருவரும் நல்ல ஆதர்ச தம்பதியர்கள். ரேவதி மன்னி சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆஃபீசர். மஹாதேவன் தனியார் துறை அதிகாரி. இன்றும் அவர்கள் (தானேவில் பேரன் பேத்தி என்று சந்தோஷமாக உள்ளனர்) தொடர்பில் உள்ளனர்.

மழை பெய்தால் நிச்சயம் தவித்துப் போவோம். சில சமயம் குடை, ரெயின் கோட் எல்லாம் போதாது. தெருவெல்லாம் வெள்ளம் வந்து சில மணி நேரங்களில் வடிந்து விடும். பேப்பர் விளம்பரங்கள் மழை அடுத்த வாரம் வரும் என்பதை சொல்லி 'உங்கள் கார் டயரை மாற்றுங்கள்' என்பர். சில நேரம் எலக்ட்ரிக் ரயில்கள் ஓடாது. 1984 ஆம் ஆண்டு ஒரு நாள் நான் பாந்திரா ஸ்டேஷன் வரை வந்து விட்டேன். பிரதமர் இந்திரா அம்மையார் இறந்து விட்டார் என்று ஒரே அமர்க்களம். வண்டிகள் அப்படியே நின்று விட்டன. நான் பாந்திராவில் இருந்து மாஹிம் வழியாக சயான் வரை மணிக்கணக்கில் நடந்தே வீடு வந்து சேர்ந்தது இன்றும் எனக்கு நினைவில் உண்டு. 

வேறு சில முக்கிய விஷயங்கள் பகிர்வதற்கு இருக்கிறது எனது பாம்பே வாழ்க்கையில். நிச்சயம் அடுத்த பகுதியில் அது முடியும் என்றே கருதுகிறேன்.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

Friday, July 9, 2021

நீங்கா நினைவலைகள் - 15

 நீங்கா நினைவலைகள் - 15

- பாலசாண்டில்யன் 

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. வழக்கம் போல வீடு சுத்தம் செய்யும் படலம், இசை அமர்க்களம் என்று வழக்கமான சிறப்பு மூடில் இருந்தது எனது அத்தை வீடு. ஸ்பூல் டேப் ரெக்கார்டர் பாட, கூடவே அத்திம்பேர் பாடிக்கொண்டிருந்தார். நான் மட்டும் சற்று மூட் அவுட். ஓசைப்படாமல் என்னுடைய பொருட்களை இரண்டு பெட்டியில் பாக்கிங் செய்து கொண்டிருந்தேன். அதைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தார் அத்திம்பேர். என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. 

சாப்பாடு முடிந்து மதியம் மணி மூன்றைத் தாண்டியது. அத்தை அத்திம்பேரை நிற்க வைத்து நமஸ்காரம் பண்ணினேன். அவர்கள் கேட்பதற்கு முன்னரே சொல்லி விட்டேன். "உங்க பிரென்ட் ராஜகோபாலன் மாமா இருக்கிற சயான் ஈஸ்ட்ல  'பாரடைஸ் 2' வில் மாடியில் பாச்சிலர் ரூம் பார்த்து இருக்கேன். வாடகை குறைவு தான். இங்கே சேகருக்கு பிரைவசி வேண்டும் அல்லவா?  அதனால ....ஹுஹும்  அங்கே போவதற்கு என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்" என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்து மனப்பாடம் செய்ததை அப்படியே சொன்னேன். அத்தை சற்று கண் கலங்கி, என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு "நிச்சயம் இது முன்னேற்றம்தாம்பா. நீ இன்னும் மேல மேல வாழ்க்கையில நல்லா வரணும்" என்றார். அத்திம்பேர் "இங்கே இருப்பது போலத்தான் ராஜகோபால் வீடும். தைரியமாக போ. இதோ உன்னை சேகர் வந்து கொண்டு விடுவான். வீக் எண்டுக்கு எங்கியும் போகாதே. இங்கே தான் நீ சாப்பிட வரணும். புது வேலையை நன்னா செய். நீ நல்ல உழைப்பாளி, புத்திசாலி.  இன்னும் முன்னுக்கு வரணும். இது நல்ல முடிவு தான். பகவான் ஒன்னை நன்னா வச்சுப்பான்" என்றார்.

"அத்திம்பேர் நீங்க குடுத்த அன்பு, ஆதரவு, உதவிகள், அத்தையோட பாசம் எதுக்குமே நான் ஜஸ்ட் தாங்க்ஸ் சொல்லி முடிக்க மாட்டேன். அத என் வாழ்நாள் முழுசுமே நெனெச்சுண்டு இருப்பேன்" என்றேன். அத்திம்பேர், 'இது என் கடமைப்பா, எனக்கு சேகர் வேற நீ வேற இல்ல' என்று நா தழுதழுத்தார். (அவருக்கு ரவி என்று இன்னொரு மகன் பிறந்து தவறி இருந்தான், நான் பார்த்தது இல்லை - அவனை நினைத்துப் பார்த்தேன்)

நானும் சேகரும் ஆளுக்கு ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு மனதில் ஒரு பயமும் நடக்கத்துடனும் மெயின் ரோடு கிராஸ் செய்து 'பாரடைஸ் 2' வந்து சேர்ந்தோம். இது வரை இது போல நான் தனியாக இருந்ததில்லை. சேகர் மாடிக்கு வந்து பெட்டியை வைத்து விட்டு 'வா கீழே ராஜு மாமா வீட்டுக்கு போகலாம்' என்றான். இறங்கும் போது கேட்டான், "டேய் தனியா மேனேஜ் பண்ணுவியா" என்று. கீழ் பிளாட்டில் மகாதேவன் (அண்ணா), பிரபாகர், ரவி, மாமா, மாமி எல்லோரும் இருந்தனர். மாமா சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு பளபள என்று இருந்தார். 

சேகர் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு புறப்படும் போது என் ரூம் மேட் நியூ இந்தியா சேகர் (மஹாதேவன் உறவினர்) வந்தான். அவனையும் பார்த்து பேசி விட்டு சேகர் நகர்ந்தான். வெளியே போய் பாய் ஜமுக்காளம் தலையணை, பக்கெட், மக் எல்லாம் வாங்கி வந்தேன். இரவு பாயில் படுத்தேன். எதிரில் ரயில்வே லைன். அடிக்கடி (பத்து நிமிடத்திற்கு ஒரு முறை) எலக்ட்ரிக் ரயில் போவதும் வருவதும் இரவு சுமார் பனிரெண்டரை வரை தொடர்ந்தது. மீண்டும் விடியற்காலை நான்கு மணிக்கே மீண்டும் தொடங்கியது. தலையில் தட தட எனும் சத்தம். அப்படியே பால்கனி கூட அதிரும் ஓசை கேட்டது. நான் தூங்காது புரண்டு புரண்டு படுப்பதைப் பார்த்த சேகர் சொன்னான் 'கொஞ்ச நாளில் பழகி விடும்' என்றான் பால்கனியில் காலை நீட்டிக்கொண்டு ஸ்டைலாக கையில் ஒரு குண்டு ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக்கொண்டு.

உண்மையில் அது எனக்குப்  பழக ஆரம்பித்தது. கீழே காலை காபி மஹாதேவன் வீட்டில் தான். அந்த மாமி எது செய்தாலும் அவ்வளவு சுவையாக இருக்கும். வா வா என்ன சாப்பிடறே என்று அப்படி உபசரிப்பார். சில இரவுகளில் மழை, பந்த், வேறு ஏதாவது பிரச்சனை என்றாலும் எனக்கு அவர்கள் வீட்டில் தான் சாப்பாடு. நிச்சயம் நான் காலை நேரத்தில் அத்திம்பேர் தரும் டீயை மிஸ் செய்தேன். அப்போது தான் மஹாதேவன் அண்ணாவிற்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். வாக்கிங் போய் ட்ரிம் ஆக வேண்டும் என்று நினைத்தவர் என்னையும் தினம் அந்த சயான் ஈஸ்ட் (கிங்ஸ் சர்க்கிள்) முதல் வடாலா  சென்று பாஞ்சு கார்டன் (ஐந்து பூங்கா) வரை மாங்கு மாங்கு என்று நடந்து விட்டு வந்தவுடன் அவர் வீட்டில் மணக்கும் சுவையான காபி கிடைக்கும். 

எட்டு மணிக்கு ஆபீஸ் புறப்பட வேண்டுமே என்று  மாடிக்கு வந்தால் தூக்கம் தூக்கமாக வரும். ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு காக்கா குளி குளித்து, துணி துவைத்து உலர்த்தி மிக அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் போவேன். வழக்கம் போல பாந்திரா வரை ஒரு ரயிலில் சென்று பிறகு பிளாட்பார்ம் மாறி ஜோகேஷ்வரி போவேன். அங்கிருந்து ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடம் நடந்தால் தான் பேக்டரி வரும். சில நேரம் ஆபீஸ் நண்பர்கள் இருவர் சேர்ந்து கொண்டால் ஓர் ஆட்டோ பிடித்து போய் விடுவோம். அது எப்போதாவது தான். என்ன கையில் சாப்பாடு டப்பா கிடையாது. மேலும், முதல் வகுப்பு சீசன் பாஸ் மூன்று மாதத்துக்கு எடுத்து விட்டபடியால், டிக்கெட் வாங்கிட தினம் வரிசையில் நிற்க வேண்டாம். முட்டி மோதி ரயிலில் ஏற வேண்டாம். 

அங்கே அலுவலக காண்டீனில் இருந்து நமது மேசைக்கே டிபின் கொண்டு வந்து கொடுப்பார்கள். பிக்சட் மெனு என்பது போல (திங்கள் இது செவ்வாய் இது என்று) சாம்பார் இட்லி, சாம்பார் வடை, உருளை போண்டா, அவல் உப்புமா எனும் போஹா, வாரத்தில் சனி அன்று ஜவ்வரிசி வடை அல்லது வெங்காய பக்கோடா மற்றும் கேசரி என்று கொடுத்து விட்டு எல்லோரிடமும் கூப்பன் வசூல் செய்வான் ஒரு பையன். பிறகு டீ காபி இரு முறை வரும். மதிய சாப்பாடு 75 பைசாவில் - அருமையாக பூரி அல்லது சப்பாத்தி டால், சாதம், பொரியல், சாம்பார், தயிர், ஊறுகாய் என்று வக்கணையாக இருக்கும். அது கொங்கணி (மங்களூரு கம்பெனி) நிறுவனம் என்பதால் சாப்பாடு உடுப்பி ஸ்டைலில் அருமையாக இருக்கும். வீட்டில் இருந்து வருகிறவர்கள் கூட அவற்றை வாங்கி சாப்பிடுவார்கள். ரொம்ப மலிவு விலை. நல்ல டேஸ்ட் மற்றும் தரம் தான் காரணம். எனக்கு சில நேரம் பக்கத்தில் இருக்கும் வர்ஷா பட் அல்லது எலிசபத் அல்லது வைத்தியநாதன் ஸ்பான்சர் செய்வர். எல்லாம் ஒரு பாசம் தான். வர்ஷா திருமணம் ஆனவர். வைத்தி நம்ம விக்ரம் படத்தில் வருகிற அம்பி போல. 

ராமதுரை சார் சொன்ன அந்த 'டிப்ளமோ இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்' படிப்பில் சேர்ந்தேன். ஆனால் அது மாலை சர்ச் கேட் வரை போக வேண்டும். அதாவது பாம்பேயின் முதல் கோடி எனலாம். வருகிற ஏதாவது ரயிலில் ஏறி அடுத்த ஸ்டேஷன் அந்தேரியில் இறங்கி அங்கிருந்து பாஸ்ட் ட்ரெயின் (நிறைய ஸ்டேஷன்களில் அது நிற்காது) பிடித்து சர்ச் கேட் போய் நான் படிக்கும் அந்த காலேஜ் போக வேண்டும். கொஞ்சம் மிஸ் செய்தால் கூட டென்சன் தான். அதனால் அந்த 5.30 மணி சைரன் ஊதியதுமே நான் எழுந்து ஓடுவேன். வழியில் பசிக்கும். ரோட் கடைகள் நிறைய உண்டு. பெரும்பாலும் 'வெஜ் சான்ட்விச்' சாப்பிடுவேன். ரொம்ப சுவையாக இருக்கும். இல்லையேல் தஹி பூரி, பாவ் பாஜி, வடா பாவ் என்று  ஏதாவது ஒன்று சாப்பிடுவேன். நேரம் இருந்தால் தமிழ்க்காரர் கடை ஒன்றில்  பட்டர் தோசை அல்லது மினி மசாலா தோசை சாப்பிடுவேன். 

பிறகு கிளாஸ் முடித்து திரும்பி மாதுங்கா வெஸ்ட் ஸ்டேஷனில் இறங்கி மேல் பிரிட்ஜ் வழியாக நடந்து அங்கே உள்ள ஏதாவது ஒரு சவுத் இந்தியன் சாப்பாடு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு நடந்து போக வேண்டும். எனக்கு விலையைத் தாண்டி இலை நிறைய சிலர் சாதம்  போட்டிக்கொண்டு வளைத்து சாப்பிடுவர். நான் கொஞ்சமாக போட்டு கொறிக்கும் டைப். (அங்கே எனக்கு பிடித்த மாதிரி ரசம் சாதம் நெய் பொரியல், தயிர் சாதம் ஊறுகாய் மட்டும் கிடைக்கும் ஒரு உடுப்பி ஹோட்டல் கண்டுபிடித்தேன், அங்கே  விலை கொஞ்சம் குறைவு, ருசி மற்றும் கவனிப்பு அதிகம்.  வீடு வந்து மஹாதேவன் வீட்டில் ஒரு விசிட், சின்ன அரட்டை பிறகு சற்று மாடிக்கு போய் ட்ரெஸ் மாற்றி படிப்பு, தூக்கம் எல்லாம். தூங்குவதற்கு முன்பு பிரார்த்தனை உண்டு. அப்போதும் ரூம் மேட் சேகர் வந்திருக்க மாட்டான்.

அவன் கோலிவாடா குவாட்டர்ஸ்ல வீடு காலி, யார் தங்கைக்கு ஜாதகம் வேண்டும், யாருக்கு வேலை வேண்டும் என்று பல இலவச சேவைகள் செய்து விட்டுத் தான் வருவான். அவனுக்கு நண்பர்கள் குழாம் மிக அதிகம். நானும் அவனும் சந்திப்பதே மிக துர்லபம்.

நாங்கள் குடியிருந்த 'பாரடைஸ் 2' விற்கு எதிரில் தான் பம்பேயின் மிகவும் பிரபலமான 'ஷண்முகானந்தா ஹால்' இருந்தது. வாரக்கடைசி மாலைகளில் பிரபல பாடகர்களின் கச்சேரி உண்டு. ஆயுள் உறுப்பினர்கள் ரைட் ராயலாக நுழைவார்கள்.சிலர் டிக்கெட் வாங்கி நுழைவார்கள். ரூம்மேட் சேகர் கொடுத்த ஐடியாவில் நானும் அங்கே வாலன்டியர் ஆக சேர்ந்து கொண்டேன். வருகிறவர்களின் டிக்கெட் செக் செய்து அவர்களை உள்ளே அனுப்புவது, பிறகு கச்சேரி தொடங்கி விட்டால் வேலை இல்லை. நாமும் உள்ளே அமர்ந்து கச்சேரி கேட்கலாம் இலவசமாக. அது தானே இங்கே முக்கியம். நடுவே சூடா போண்டா காபி வேறு. 

மூன்றே வாரங்களில்  அங்கே தொடங்கிய புதிய பாட்ச்சில் கர்நாடக இசை வகுப்பில் சேர்ந்தேன். வாரம் மூன்று வகுப்புகள். அங்கே படிக்கும் இசை மாணவர்களுக்கு கச்சேரி கேட்க கட்டணம் இல்லை. இந்த பாட்டு கிளாசில் சேருவது எனது ஜென்ம சாபல்யம் மாதிரி. எனது டிப்ளமோ வகுப்பும் வாரம் மூன்று வகுப்புகள் என்பதால் எந்த தொந்தரவும் இல்லை.  சரளி வரிசை, ஜண்டை வரிசை, கீதம், கீர்த்தனை என்று சுமார் மூன்றரை வருடம் அங்கே முறையான சங்கீதம் கற்றுக்கொண்டேன். எனது டீச்சர் ஓர் ஆல் இந்தியா ரேடியோ ஆர்டிஸ்ட்.- லட்சமி கணபதி அவர் பெயர். மிகவும் பொறுமைசாலி, திறமைசாலி, கிட்டத்தட்ட எனது அம்மா வயது. இடையிடையே நிறைய கச்சேரிகள் கேட்பது பரமசுகம்.

இதற்கு நடுவே வாரக் கடைசியில் செம்பூரில் இருந்து பிஎச்இஎல் சாய் (அதான் என் சித்தப்பா), அத்தை பையன் சேகர் மற்றும் நான் மூவரும் த்ரீ இடியட்ஸ் போல நல்ல கூட்டணி. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா ஜிதேந்திரா நடித்த மாவாலி, தோபா போன்ற  படங்கள், கமல் நடித்த  ஏக் துஜே கே லியே, சனம் தேரி கசம், சாகர், பிறகு ரேகா நடித்த குப்சூரத், சில் சிலா, உம்ராவ் ஜான் என்று படங்கள். டிக்கெட் செலவு எல்லாமே சாய் கணக்கு தான். பிறகு சாப்பிட அத்தை வீட்டுக்கு வருவோம். 

என்ன ரொம்ப நீளமாகி விட்டதா ? கவலை வேண்டாம். மீதியை அடுத்த பகுதியில் பார்ப்போம். 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

Thursday, July 8, 2021

நீங்கா நினைவலைகள் - 14

 நீங்கா நினைவலைகள் - 14

- பாலசாண்டில்யன் 

எங்கள் அத்தை வீடு ஒரு அபார்ட்மெண்ட். வீட்டு மூன்றாவது மாடியில் இருந்தார் வீட்டு ஓனர். அவர் நம்ம ஊர் வாலி சார் போல. பிரபல மராத்தி பட திரையிசைப் பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதும் கவிஞர் மங்கேஷ்  பாட்கோங்கர். ஏற்கனவே அவர் குடியரசுத் தலைவரிடம் பத்ம விருது பெற்றவர். (இப்போது அவர் உயிரோடு இல்லை). அவரது கவிதைகள் இப்போதும் பள்ளியில் மராத்தி பாட புத்தகத்தில் உள்ளன. அவர் என் அத்திம்பேரிடம் வாரம் இரு முறை தமிழ் கற்றுக்கொண்டார் என்பது வரலாறு. அவர் பையன் அபய் எனது அத்தை பையன் சேகருக்கு மிகவும் நெருக்கமானவன். ஒரு முறை என்னை மாடிக்கு அழைத்துப் போய் "இது என் கசின் பாலா மதராஸி, அப்பொப்போ கொஞ்சம் கவிதை எழுதுவான், நான் மட்டும் தான் வாசிப்பேன். பஸ் டிக்கெட்டில் கூட கவிதை எழுதுவான். வாசிக்கா விட்டால் விடமாட்டான் என்று சொல்லி சிரித்து அறிமுகம் செய்தான். நானும் அவரை காலைத் தொட்டு கும்பிட்டு சில கேள்விகள் கேட்டு பேட்டி எடுத்தேன். அவர் பார்க்க குறுந்தாடியுடன் ஒரு விஞ்ஞானி போல இருந்தார். 

எனது அத்தை சமையலில் கில்லாடி, தவிர வீட்டு நிர்வாகம், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், புத்தகம் வாசித்தல், தேவை இல்லாமல் அக்கம் பக்கத்தில் அரட்டை அடிக்காது இருத்தல் என்று சிறப்பான செயல்பாடுகளில் மிளிர்ந்தார். என் மீது பாசமாக இருப்பார்.

அத்திம்பேர் எதுவுமே சொல்லித்தரும் தலைவர் அல்ல. ஒரு நல்ல செய்து காட்டும் இன்ஸ்பிரஷனல் லீடராக இருந்தார். தினம் விடியற்காலை எழுந்து கைகால் சற்று அசைத்து உடற்பயிற்சி செய்து விட்டு, பால் காய்ச்சி டீ போட்டு பிறகு அத்தையை எழுப்புவார். கிச்சனில் உட்கார்ந்து படிக்கும் எனக்கும் டீ போட்டுத் தருவார். சிங்க்கில் இருக்கும் பாத்திரங்களை குழப்பிப் போடுவார். பிறகு வெகு நேர்த்தியாக காய்கறிகள் கத்தியால் நறுக்குவார். நான் பார்த்து அசந்து போவேன். குளித்து விட்டு வரும் போது பாத்ரூமில் இருக்கும் எல்லா துணிகளையும் எடுத்து பளிச்சென்று தோய்த்து மடிக்கோலால் பால்கனி கொடியில் அழகாக உலர்த்துவார். தினமுமே குளித்தவுடன் பாத்ரூம் டைல்ஸ் தேய்த்து பளிச்சென்று வைத்து விட்டுத் தான் வெளியே வருவார். 

சில நேரம் அடுத்தவர் குளிக்க பக்கெட்டில் வெந்நீர் பிடித்து வைப்பார். பிறகு சப்பாத்தி மாவு பிசைந்து அவரே சப்பாத்தியும் இட்டுத்தருவார். அத்தை அதை எடுத்து புல்கா (உப்பி வரும் போது அதன் மண்டையில் ஒரு சொட்டு நெய் விட்டு தடவுவார்) செய்வார். பிறகு எல்லோருக்கும் டப்பா ரெடி ஆகும். அத்திம்பேர் சாப்பாடு எடுத்துச் செல்ல டப்பாவாலா வருவார். இடையில் அவர் நெற்றியில் சந்தனம் அழகாக இட்டுக்கொண்டு சுவாமி முன்னால் அமர்ந்து பூஜை அபிஷேகம்  செய்வார். மிக நேர்த்தியாக உடை அணிந்து ஆபிஸ் கிளம்புவார். மாலை வந்ததும் அத்தையை கூட்டிக் கொண்டு சின்ன வாக்கிங் போய் வருவார்.

ஞாயிறு என்றால் காலையில் சமையல் அறைக்கு விடுமுறை. நானோ என் அத்தை பையன் சேகரோ மாதுங்கா சென்று சவுத் இந்தியன் சொசைட்டியில் சாம்பார் ரசம் கூட்டு கறி அப்பளம் ஊறுகாய் எல்லாமே டிபின் காரியரில் வாங்கி வருவோம். அது நான்கு பேருக்கு போதுமானதாக இருக்கும்.  சாதம் மட்டும் வைத்துக் கொண்டால் போதும். சில சமயம் நான் ஆசைப்பட்டால் எனக்கு குக்கர் வைப்பது, பால் காய்ச்சுவது எல்லாம் அத்தை சொல்லித்தருவார். (காலையில் வாங்கி வந்த ரசம் அத்தை கைமணத்தில் ரிப்பேர் ரசமாக மணக்கும்.) எனக்குத் தான் வீட்டில் பாட்டிகள் இருந்தபடியால் சமயக்கட்டுக்குள் ஆம்பளைக்கு அனுமதி கிடையாதே.

ஞாயிற்றுக்கிழமைகளில் அத்திம்பேரே ஸ்டூலில் ஏறி மின்விசிறி சுத்தம் செய்வது, சிப்பன்டைல் அலமாரி துடைப்பது, ஜன்னல்களை, பால்கனி கம்பிகளைத் துடைப்பது, பிரிட்ஜ் துடைப்பது என்று பயங்கரமாக இறங்கி வேலை செய்வார். இந்த பிஸிக்கல் வேலையே எனக்கு வராது. நான் போய் அவர் அருகில் நின்று ஸ்டூல் பிடித்துக் கொள்ளுவது, ஸ்டூல் நகர்த்திக் கொடுப்பது, கீழே துணி விழுந்தால் எடுத்துக் கொடுப்பது போன்ற அதி சில்லறை வேலைகள் பார்ப்பேன். இதற்கு நடுவில் ஒரு இசைக்களம் நடக்கும். அது தான் அவரிடம் அப்போது இருந்த ஒரு சோனி ஸ்பூல் டேப் ரெக்கார்டர், மற்றும் நூற்றுக் கணக்கில் அவரிடம் இருந்த இசை கச்சேரி ஸ்பூல்கள். ஒன்றை எடுத்துப் பாட வைத்தால் அது மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை பாடும். அடிக்கடி போடும் சில ஸ்பூல்களின் நம்பர்கள் (ஆம் எல்லாமே அவர் நம்பர் போட்டு அட்டவணை வைத்துக் கொண்டு இருப்பார்) எனக்கு மனப்பாடம் ஆனது. மறக்க முடியாத நம்பர் 5. அது தான் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் கச்சேரி. அதில் அவரே எழுதிய பாடல்கள், அவரே கண்டுபிடித்த ராகங்கள் கொண்ட பாடல்கள் இருக்கும்.

குறிப்பாக, 'உன்னை நினைந்திருக்கையிலே முருகா', சில தில்லானாக்கள், உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், சதாசிவ ப்ரம்மேந்திரா கீர்த்தனைகள் சேதக ஸ்ரீராமம், மோகன ராகத்தில் 'ஒற்றுமை சேர்வது மெய்யினையே', மஹதி ராகத்தில் 'மகனீய மதுரமூர்த்தே' எல்லாமே மறக்க முடியாதவை. அப்போதே அவர் எனக்கு அவர் அனுமதி இல்லாமல் மானசீக குரு ஆகிவிட்டார். அதே போல லால்குடி அவர்களின் தில்லானாக்கள், மகாராஜபுரம் சந்தானம் பாடல்கள், எம் எஸ் கோபிலகிருஷ்ணன் அவர்களின் வயலின் கச்சேரி என்று நாள் முழுவதும் ஓடும் அத்திம்பேருக்கு மூடு வந்து விட்டால் கல்யாணி, காம்போதி, சங்கராபரணம், பைரவி என்று ஆலாபனை செய்து அசத்தி விடுவார். ஏன் இந்த ஞாயிறு இவ்வளவு சீக்கிரம் முடிகிறது என்று தோன்றும். நான் சிறு வயதில் அயோத்தியா மண்டபத்தில் கேட்ட பாடல்கள் இன்னும் சரியாக புரிய ஆரம்பிக்கும். அத்திம்பேருக்கு மிகவும் பிடித்த இன்னொரு கலைஞர் கே வி நாராயணசாமி. அவருடைய 'மாஞ்சி' போன்ற அரிய ராகங்கள், பிறகு மதுரை மணி அய்யரின் 'சரஸ சாம கான - காபி நாராயணி' பாடல், மற்றும் காபாலி பாடலும் வீட்டில் முழங்கும். அத்திம்பேர் பாடும் போது மதுரை மணி அய்யரின் ஜாடை நிறைய இருக்கும். 

இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் பாம்பே ரஞ்சனி காயத்திரி சகோதரிகளின் தந்தை பாலு மாமா அத்திம்பேருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் மாதுங்காவில் இருந்தார். அவர் சில சமயம் இரவு ஏழரை எட்டு மணிக்கு இருவரையும் கூட்டிக்கொண்டு வருவார். இருவரும் மிக மிக சின்ன குழந்தைகள். ஆனால் இருவரும் மழலை மேதைகள். பாலு மாமா இசை பற்றி மட்டும் பேச மாட்டார். அவர் சில ராகங்களை முனகிக் காட்டுவார். அந்தக் குழந்தைகள் மழலையில் ராகம் பெயர்களை உடனே சொல்லும். அதிலும் காயத்ரிக்கு வாயில் கூட ராகம் பெயர் நுழையாத வயது. இன்று அவர்கள் இவ்வளவு பெரிய வித்துவான்கள் ஆனதை அருகில் பார்த்த அதிர்ஷ்டசாலி நான் என்று சொல்லிக் கொள்ளலாம். (அவர்களுக்கு முழுமையாக நினைவு இருக்குமா என்று தெரியாது). அவர்கள் இவ்வளவு தூரம் வந்தமைக்கு அவர்களின் அயராத உழைப்பு, அவருடைய அம்மா (சிறந்த பாடகி) மற்றும் அப்பாவின் உழைப்பு மற்றும் தியாகம் தான் காரணம். 

நிற்க, ராமதுரை சார் என்னிடம் ஒரு நாள் நீ இங்கே இருந்து சிறப்பாக வேலை செய்தாய். போதும், நான் பட் சாரிடம் சொல்லி உன்னை ரிலீவ் செய்கிறேன். உனக்கு வேறு சிறப்பான வேலை ஏற்பாடு செய்து விட்டேன் என்ற நல்ல செய்தியை சொன்னார். அது மட்டுமா? அவர் சொன்னது இன்று FDC என்று இருக்கும் Fairdeal Corporation என்கிற பார்மசூட்டிக்கல் கம்பெனி, அங்கே சீப் அக்கௌன்டன்ட் சாரின் நெருங்கிய நண்பர் நாயக் சார். அவரும் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட். அங்கே எனக்கு ஆஃபீசர் கேடரில் வேலை. சம்பளம் ஏற்கனவே இருப்பதை விட இரு மடங்கு. ஆனால் என்ட்ரன்ஸ் டெஸ்ட், இன்டெர்வியூ எல்லாம் நீ பாஸ் ஆக வேண்டும் என்று பீடிகை போட்டார். அங்கே எனக்கான ஏற்பாடுகள் எல்லாமே அவர் செய்து இருந்தார். அந்த பேக்டரி மற்றும் ஆபீஸ் ஜோகேஷ்வரி (கோரேகாவ் முந்திய ஸ்டேஷன்). அதே வெஸ்டர்ன் ரயில்வே தான்.

 என்ட்ரன்ஸ் டெஸ்ட், முடிந்து அதில் சிறப்பான மதிப்பெண் (நாயக் தான் ஏற்கனவே சில விஷயங்களை சொல்லிக் கொடுத்து விட்டாரே), அதற்கு பிறகு பெர்சோனல் மேனேஜர் கேல்கர், அதற்கு பிறகு டைகர் ஜி எம் பிரபு சார் எல்லோரும் சேர்ந்து. பிரபு சார் என்னைப் பார்த்து, "உன்னுடைய லட்சியம் என்ன" என்று கேட்டார். யாரும் சொல்லித் தரவில்லை. ஆனால் நான் ஏதோ சாமி வந்தது போல 'உங்கள் சீட்டு' என்றேன். அவர் நாற்காலி நுனிக்கு வந்து 'என்னப்பா பாலா வந்ததுமே என் சீட்டுல கை வெப்பியா' என்று ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தார். பிறகு 'என்ன டெஸ்டில் இவ்வளவு மார்க் வாங்கி இருக்கே, முன்னாலேயே கேள்வியெல்லாம் தெரியுமா' என்று கேட்டார். நான் இல்லை என்று புன்னகைத்தேன். அது என்னை அறியாமல் இயல்பாக இருந்தது போலும். 'யு ஆர் அப்பாயின்டெட்' என்றார். சிறிது நேரம் காத்திருக்க சொல்லி ஆர்டர் கொடுத்தார். அந்த சம்பளம் பார்த்து ஒரு முறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

ஏற்கனவே நான் வீட்டுக்கு மாதா மாதம் பணம் அனுப்புவேன். தவிர வருடா வருடம் சென்னை வரும் போது தங்கை தம்பிக்கு ட்ரெஸ் வாங்கி வருவேன். அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு மட்டும் அங்கேயே லோக்கலில் அவருக்கு பிடித்த மாதிரி சட்டை வாங்குவேன். தவிர, உறவினர்கள் பலருக்கு சின்ன மிக்ஸி அட்டாச்மெண்ட், சாரி ப்ரோச்சர் என்று வாங்கி வந்து அசத்துவேன். 

இப்போது இந்த புதிய வேலையால் அம்மா அப்பாவை லேக் வியூ ரோடு வீட்டை காலி செய்து இன்னும் பெரிய வீட்டுக்கு போகச் சொன்னேன். ஜெய்சங்கர் தெருவில் நல்லதொரு வீடு கிடைத்தது. குளித்தலை பாட்டிகளும் சென்னை வந்து சேர்ந்து கொண்டனர். அந்த வீட்டை வாடகைக்கு விட்டனர்.  

என் அத்தை பையன் எங்கள் பெரியப்பா பெண்ணை விரும்பினான். அவனுக்கும் முறைப்பெண். அந்த கல்யாணப் பேச்சு அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. சரி எப்படி இந்த சின்ன இடம் போதும் என்ற எண்ணம் எனக்குள் எழ ஆரம்பித்தது.  யோசிப்பதற்குள் சேகருக்கு திருமணம் ஆகிவிட்டது. இடம் போதவில்லை. என்னுடைய சம்பளம் வேறு ஏறி விட்டது. நான் அத்தை வீட்டை விட்டு பேச்சிலர் ரூமுக்கு போக முடிவெடுத்தேன் அத்தை அத்திம்பேர் ஆசியுடன். 

பாம்பே கதை இன்னும் இருக்கு. இனிமே தான் சுவாரசியம்.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.