மாமனிதன்
Thursday, July 21, 2022
மாமனிதன்
யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் திரு சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, லலிதா, குரு சோமசுந்தரம் மற்றும் ஷாஜி சென் நடித்த ப(பா)டம்.
மலையாளம் மற்றும் வங்க மொழிகளில் தான் யதார்த்தமான படங்கள் வருகின்றன என்று அங்கலாய்த்துக் கொள்ளும் நபர்களுக்கு பதில் சொல்லும் சீனு ராமசாமியின் படம் இது. ராதாகிருஷ்ணன் மற்றும் சாவித்திரி படும் சிரமங்கள் நாம் அன்றாட வாழ்வில் காண்கிற ஒரு விஷயம் தான்.
கனவு, கடன், கடமை மூன்றும் ஒரு மனிதனை அழுத்தும் போது நேர்மையாக வாழ்ந்து வளர்ந்து பழகிய யாருமே ஒரு சின்ன கவன ஈர்ப்பு அல்லது சலனத்துக்கு ஆட்படுவது சகஜம் தானே.
அப்படிப்பட்ட ஒரு சமயம் புதிய மனிதன், சூழல், பிரச்சனை எந்த அளவுக்கு ஒருவனை புயல் போல திசை மாற்றுகிறது என்பதை பெரிய ஆர்ப்பாட்டம், வசன அமர்க்களங்கள், பாட்டு, கூத்து, நடனம், சண்டை, காமெடி எதுவுமே இல்லாமல் சொல்லி இருப்பது இந்த படத்தின் மாபெரும் புதுமை, வெற்றி யுக்தி.
காண்பவர் மனதை உலுக்கும் ஒரு வாழ்க்கைச் சம்பவம் வரலாற்றுச் சம்பவமாக மாறுகிறது.
எனது தாத்தா பர்மாவில் வேலை பார்த்து, போர் மூண்ட பொழுது பெரும்பாலான பொருட்களை அங்கேயே விட்டு விட்டு மனைவி மகளுடன் நடந்தே கல்கத்தா வந்து பிறகு குளித்தலை என்ற ஒரு டவுனில் செட்டில் ஆகி வீடு வாசல் நிலம் வாங்கி, சிலரை நம்பி ஏமாந்து பிறகு ஒரே பெண்ணுக்கு திருமணம் கூட செய்யாது இறந்து போன கதையை எனது பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
பிறகு நானே வீட்டுச் சூழலை சமாளிக்க மும்பை மற்றும் மஸ்கட் சென்று அல்லல் பட்டு பணம் அனுப்பினேன்.
அது போல நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும் சூழலை நினைவூட்டும் இராதாகிருஷ்ணன் பாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தும் நபர் கலைஞர் விஜய சேதுபதி மட்டுமே. வேறு யாராவது இப்படிப்பட்ட ஹீரோயிசம் இல்லாத ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளுவார்களா என்பது சந்தேகம். முழுக்க தன்னை இயக்குனர் வசம் ஒப்படைத்து மிகச் சீரிய பெர்பார்மன்ஸ் கொடுத்துள்ள விஜய் சேதுபதி அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
அதே போல 'களத்தில் மாதவனாக' வருகிற ரியல் எஸ்டேட் அதிபர் ஷாஜி அவர்களின் நடிப்பு நிச்சயம் நம்மை கவர்கிறது. லலிதா பாட்டி அண்மையில் தான் வீட்ல விசேஷம் படத்தில் பார்த்தோம். ஆனால் இந்தப் படத்தில் அவரின் நடிப்பு மிகவும் யதார்த்தம், அற்புதம்.
காயத்ரி அவர்களையும், குரு சோமசுந்தரத்தையும் (மின்னல் முரளி பேமஸ்) நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஏமாற்றுபவன் ஒருவன் இருக்கிறான் என்றால், நிச்சயம் மிகவும் நேர்மையான ஒருவனுக்கு நேர்மையான நண்பன் கிடைப்பான் என்கிற உண்மை இதில் சொல்லப்படுகிறது.
கேரளாவில் பாத்ரூம் கழுவுகிற காட்சி, காசியில் சாதாரண உணவு பரிமாறுகிற நபரை நடிக்கும் காட்சி மனதை உருக்குகிறது. விஜய் சேதுபதி ஐந்துக்கு நான்கரை மதிப்பெண் வாங்கி விடுகிறார்.
படத்தில் இசைஞானி மற்றும் யுவன் இன்னும் கூட மனதில் நின்று போகிற ஓரிரு பாடல்கள் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் வருகிறது. என்ன செய்ய. இயக்குனர் டிமாண்ட் செய்து வாங்கவில்லையோ...படம் நிச்சயம் நல்ல பாடல்கள் பெற வல்லவை தான்.
நேர்மை மற்றும் ஒழுக்கம் உள்ள மனிதன் ஒவ்வொருவரும் மாமனிதனாக மதிக்கப்படுவதில்லை. மேலும் மேலும் அவஸ்தைக்கு தான் உள்ளாகிறான். இங்கே இராதாகிருஷ்ணன் மாமனிதன் ஆவது அவனின் நல்ல எண்ணங்களால் தான் (குட் இண்டென்ஷன்).
இதுவரை பார்க்கவில்லை என்றால் கட்டாயம் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். மசாலா, ஹீரோயிசம், காதல், காமெடி, சண்டை, கனவு பாட்டு எதுவுமே இல்லை ஆனாலும் பார்ப்பேன் என்று முடிவெடுங்கள்.
Wednesday, July 20, 2022
வீட்ல விசேஷம்
வீட்ல விசேஷம்
எல் கே ஜி, மூக்குத்தி அம்மன் என்ற இரண்டு படங்களுக்குப் பிறகு 'போனி கபூர்' போன்ற பெரிய தயாரிப்பாளர் ஆதரவோடு ஆர் ஜே பாலாஜி இயக்கி வசனம் எழுதி நடித்துள்ள படம் இது. அட இந்த இளைஞருக்கு இவ்வளவு திறமையா?
படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் எப்படி சிறப்பாக நடிக்க முடியும்? ஆச்சரியம் ஆனால் உண்மை. அதுவும் தேவையான சற்றும் மிகையில்லாத நடிப்பு. அறுபதிலும் காதல் வரும் என்ற பழைய பாடல் வரிகளை ஒட்டி இங்கே திருமண வயதில் ஒரு பையன் இருக்கும் பொழுது பெற்றோர் இன்னொரு பிள்ளை பெறுகிற சூழல். வீட்டில் உள்ளவர், அக்கம்பக்கம், உறவினர் எல்லோரும் அதனை எப்படி பார்க்கிறார்கள், பிறகு ஏற்கிறார்கள் என்பது தான் கதை.
முதிர்ச்சியான அர்த்தம் பொதிந்த வசனங்கள், (கண் பார்வையற்ற) திரு ஜெயராமன் அவர்கள் பாடியுள்ள - நூறு தெய்வம் தேவை இல்லை பாடல் நம்மை விடாமல் முணுமுணுக்க வைக்கிறது. இவர் ஏற்கனவே 'மூக்குத்தி அம்மன்' படத்திலும் அருமையான பாடல் ஒன்றை பாடியுள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நல்ல இசை விருந்து படைத்திருக்கிறார்.
'பதாய் ஹோ' என்ற தேசிய விருது பெற்ற ஹிந்தி படத்தின் ரீமேக். ஏற்கனவே வெற்றி பெற்ற மீண்டும் உருவாக்குவது (அதிலும் தமிழ் ஆடியன்ஸ்க்கு ஏற்ப உருவாக்குவது மிகவும் கடினம். அந்த சவாலில் பிரமாதமாக ஜெயித்திருப்பது ஆர் ஜே பாலாஜி அவர்கள். அப்படியே ஒரிஜினல் போல இல்லை என்ற கமெண்ட் இங்கே வந்தாலும், ஆர் ஜே வின் வெர்ஷன் மிகவும் சிறப்பு. சிரிப்பு. குடும்பத்தோடு அமர்ந்து நெளியாமல் தயங்காமல் பார்க்கலாம்.
நான் மிகவும் நயந்து வியந்து பாராட்டுவது சத்யராஜ், ஊர்வசி, லலிதா பாட்டி மற்றும் ஆர் ஜே அவர்களின் சிறப்பான நடிப்பை. நீங்களும் கண்டு மகிழுங்கள்.
Tuesday, July 19, 2022
தோழன்
தோழன்
உயிர் காப்பான் தோழன்
உடன் இருந்து கவுப்பவன் அல்ல
எதுவும் எதிர்பாராதவன் தோழன்
எதிரி போல பார்ப்பவன் அல்ல
இடர் வரின் இறைபோல் ஒரு தோழன்
இடையூறு என நினைப்பவன் அல்ல
தனக்கெனப் பாராதவன் தோழன்
தனதே எல்லாம் என்பவன் அல்ல
மூழ்கினாலும் மூச்சாவது தோழன்
மூச்சடைக்க வைப்பவன் அல்ல
முன்னால் பேசுபவன் தோழன்
முதுகில் எழுதுபவன் அல்ல
எப்போதும் ஒரே மாதிரி தோழன்
எதிர்பாராததை செய்பவன் அல்ல
சகோதரனை விட ஒருபடி மேல் தோழன்
சட்டென்று கழட்டி விடுபவன் அல்ல
தோழன் இருந்தால் தோணி வேண்டாம்
தொடலாம் கடலின் அந்தக் கரை - அக்கறை
காசி வேண்டாம் பாவம் போக நல்ல தோழன் இருந்தால்
காசு பார்ப்பதே புண்ணியம் என்றால் தொழலாம் அவன் திசை.
Wednesday, July 13, 2022
RRR v/s Vikram:
RRR v/s Vikram:
முதலிலேயே சொல்லி விடுகிறேன் நான் கமல் சாரின் பெரிய பெரிய விசிறி.
பதினாறு வயதினிலே, நிழல் நிஜமாகிறது, நாயகன், மரோசரித்ரா, எக் துஜே கே லியே, சாகர சங்கமம், மன்மதலீலை, சத்யா, காக்கி சட்டை, பின்னர் தெனாலி, பஞ்ச தந்திரம், காதலா காதலா, வசூல்ராஜா, அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள், உன்னால் முடியும் தம்பி, அன்பே சிவம், பாபநாசம், உத்தம வில்லன் என்று பல்வேறு படங்களை வெறி கொண்டு பலமுறை பார்த்தவன் நான்.
ஆனால் எனக்கு இரண்டு மூன்று முறை பார்த்தும் புரியாமல் போனவை ஹே ராம், விஸ்வரூபம், மும்பை எக்ஸ்பிரஸ், போன்ற படங்கள்.
அதைவிட கோடிக் கணக்கில் வசூல் செய்த அண்மைப் படம் 'விக்ரம்' எனக்கு பெரிய ஏமாற்றம். ஆங்காங்கே கமல் சாரின் நடிப்பு மிகவும் சிறப்பு... பத்தல பத்தல பாடல் உட்பட.
பகத் பாசில் நடிப்பு அருமை. மற்றபடி விஜய்சேதுபதி, சூர்யா போன்ற கலைஞர்கள் இதே போன்ற நடிப்பை இதற்கு முன்னர் கூட வழங்கி விட்டனர்.
பற்பல விமர்சனங்கள் படித்து விட்டு பெரிய எதிர்பார்ப்பில் உட்கார்ந்து பார்த்து பெருத்த ஏமாற்றம் அடைந்தேன். (ரஜினி சாரின் காலா போல இது எனக்கு செட் ஆகலை.)
300+ கொலை நடக்கின்றது. அவ்வளவு வன்முறை. மணிரத்னம் படத்தை தூக்கி சாப்பிடும் அளவு படத்தில் இருட்டு. அய்யோ நல்ல வேளை தியேட்டர் போய் சில ஆயிரம் இழக்கவில்லை.
ஆஹா ஓஹோ என்று சொல்ல சில விஷயங்கள்: இந்த வயதில் கமல் சாரின் ரிஸ்க் கலந்த நடிப்பு, தோனி போல தன்னை பின்னிறுத்தி மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் தந்த பெருந்தன்மை, வயதிற்கேற்ற பாத்திரம்.
எல்லாம் தாண்டி எனக்கு புரியல படம். பிரம்மாண்டமான படம். இருந்தாலும் ஏதோ மிஸ்ஸிங்...
இரண்டு நாட்கள் கழித்து RRR பார்த்து முடித்த பின்னர் ஏறிய புருவங்கள் இறங்க மறுத்தன. பீரியட் படம் என்றாலும் படத்தின் பிரம்மாண்டம், நடிகர்களின் சண்டைக் காட்சிகள், செட் அமர்க்களம்... கடைசி முப்பது நிமிடங்கள் சீட் நுனியில்... அது தான் படத்தின் வெற்றி. தேச பக்தியை மனதில் விதைத்த காட்சிகள். கூடவே பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் இந்திய சுதந்திர போராட்டம் இருந்தது போல இந்த கதையில் இராமாயண காட்சிகள் இருந்தது தெலுங்கு படங்கள் நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்துகின்றன என்பதற்கு சாட்சி...சில காட்சிகள். நிச்சயமாக நான் வியந்து பாராட்டும் படம் இதுவே (ஒப்பீடு சரியில்லை என்றாலும்) விக்ரம் அல்ல...
சாரி இது எனது அபிப்பிராயம். பின்னூட்டத்தில் பலர் திட்டலாம். பிளாக் செய்யலாம். சே இவ்வளவு தானா உங்கள் சினிமா அறிவு என்று கைகொட்டி சிரிக்கலாம்.
பரவாயில்லை. துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே...
நிச்சயமாக கமல்ஹாசன் இந்த வெற்றி களிப்பில் அடுத்த படம் நல்லதாக, பலரின் பாராட்டை இன்னும் பெறுவதாக தருவார் என்று அவரின் பரம ரசிகனாக நம்புகிறேன். விரும்புகிறேன்.
அனந்தம் - ஜீ டிவி டெலி சீரியல்
அனந்தம் - ஜீ டிவி டெலி சீரியல் - இயக்கம் வி பிரியா
மகிழ்ச்சி புதைந்திருக்கும் வீடு - முக்கிய பாத்திரமாக இருப்பது - அனந்தம் எனும் வீடு. இந்த சீரியலில் காதல், சோகம், துரோகம், வெற்றி, சிரிப்பு, திகில், துணிவு என்று அந்த வீட்டில் குடியிருக்கும் பல குடும்பங்களின் கதைத் தொகுப்பாக இருக்கிறது.
நாம் இருக்கும் வீட்டின் அக்கம்பக்க வீடுகளில் பல்வேறு குடும்பங்கள் வந்து குடியேறும் போது பலவிதமான கதாபாத்திரங்களை நாம் பார்த்திருப்போம். அவர்கள் வாழ்க்கை சூழல், பின்னணி, வாழ்க்கை அணுகுமுறை, குடும்பத்தார் மத்தியில் நடக்கும் பல உணர்ச்சிகரமான சம்பவங்கள் நிச்சயம் கவனித்திருப்போம்.
அப்படிப்பட்ட ஒன்றை இந்த சீரியல் காட்டுகிறது.
முக்கிய கதாபாத்திரம் வெங்கடேசன் (பிரகாஷ் ராஜ்) - நிச்சயம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் அளவிற்கு ஒரு பர்பார்மன்ஸ். அதே போல இதில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் அனந்த் (சம்பத் ராஜ்), தவிர ஜான் விஜய், விவேக் ராஜகோபால், சம்யுக்தா (பிக் பாஸ் புகழ்), வினோத் கிஷன், இந்திரஜா, விவேக் பிரசன்னா, வினோதினி, அஞ்சலி ராவ், மாதுரி, அர்விந்த் சுந்தர் போன்று பல கலைஞர்கள் மிகவும் உயிரோட்டமாக நடித்து உள்ளனர்.
மணி ரத்தினம் அவர்களின் உதவியாளராக இருந்த வி பிரியா அவர்கள்
தான் இயக்கம். மொத்தம் 8 அத்தியாயங்கள். ஒன்றுக்கு ஒன்று பிணைப்புடன் வருகிறது. இதில் நடித்துள்ள சிலர் நாம் பல்வேறு படங்களில் வில்லன் பாத்திரத்தில் அல்லது போலீஸ் பாத்திரத்தில் பார்த்து இருக்கிறோம். ஆனால் இதில் அவர்கள் நடிப்பு வேற லெவல். குறிப்பாக வினோத் கிஷன், விவேக் ராஜகோபால் மற்றும் வினோதினி மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
பாத்திரப்படைப்பு, கதையம்சம், வசனங்கள், நடிப்பு, கவிதை போன்ற கதை நகர்வு, முழுக்க முழுக்க பாரதியார் பாடல்கள் என்று நம்மை சுண்டி இழுக்கும் ஒரு சீரியல். அதில் சைந்தவி பிரகாஷ் பாடி இருக்கும் 'நின்னைச் சரணடைந்தேன்' பாடல் நமது மனதை உருக்கி விடும்.
பார்வையற்ற ஒரு பெண்மணி படும் அவஸ்தை, குழந்தை பாலியல் வன்கொடுமை, விவாகரத்து, விசித்திரமான ஜோடிகள், இளைய ஆண்கள் இருவரின் உறவுமுறை, வயதான பெண்மணி ஒருவருடன் இளையவர் ஒருவரின் உறவுமுறை, ஒவ்வொரு பகுதியுடன் இணைப்பு, சில பகுதிகளின் தொகுப்பு எல்லாமே மிகவும் ஜாக்கிரதையாக கையாண்டு இருக்கிறார்கள்.
வக்கிரம், ஆபாசம் எதுவுமே கிடையாது.
ஒவ்வொரு பகுதி பார்க்கும் பொழுதும் அவர்கள் நமது வாழ்வின் ஓர் அங்கமாக மாறுவது போல நமக்கு தோன்றுவது மிகவும் அழகு, நேர்த்தி மற்றும் அரிதான ஒன்று எனலாம்.
உணர்ச்சி கொந்தளிப்பு மிக்க சில காட்சிகளில் மிக அனாயாசமாக நடித்துள்ளனர் பிரகாஷ் ராஜ் மற்றும் சம்பத் ராஜ்.
அந்த வீட்டின் நினைவுகள் மற்றும் மர்மங்கள் நம்மை ஒவ்வொரு பாகத்திலும் கட்டிப் போடுகின்றன.
சினிமா கதைகளில் வினோதமான உறவுகளின் உணர்வுபூர்வமான சித்தரிப்புகளில் 'அனந்தம்' மிகவும் முக்கியமான ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆங்கில 'சப் டைட்டிலை' தாங்கி வருகிற இந்த டெலிசீரியல் நிச்சயம் காண்பவர்களுக்கு நல்ல அனுபவத்தை, ஆனந்தத்தை, வியப்பை, புதிய ஆச்சரியங்களை தருகிறது என்பதே உண்மை.
என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு சற்று பொறாமை ஊட்டுகிற அளவிற்கு மிகவும் அற்புதமான கதையோட்டம். நான் வியந்து போனேன் என்பது நிதர்சனம். பாருங்கள் உங்களுக்கும் அப்படி ஓர் ஆனந்தம் மற்றும் அனுபவம் கிடைக்கும்.
ஷியாம் சின்ஹா ராய்
ஷியாம் சின்ஹா ராய்
- நானி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள வித்தியாசமான திரைப்படம்
படத்தில் பின்னூட்டமாக காட்டப்படும் பீரியட் பகுதிகள் கண்களுக்கு விருந்து. படத்தில் நானி மற்றும் சாய் பல்லவி இருவரின் ரெட்ரோ லுக் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. சாய் பல்லவி சிவப்பு நிற சேலையில் ஆடுகிற ஒரு பாரம்பரிய நடனம் மிகவும் அற்புதம்.
சில கனவுகள் மற்றும் இலக்குகளை அடைய ஒரு ஜென்மம் போதாது என்கிற வினோதமான ஆனால் நாம் அனைவரும் நம்புகிற விஷயம் தான் கதையின் முக்கிய கரு.
பூர்வ ஜென்மத்தில் மிகச் சிறந்த கதாசிரியராக மற்றும் சமூக விஞ்ஞானியாகவும் வாழ்ந்த ஒருவரின் கோர மரணத்திற்கு பிறகு அவரே வேறு ஒருவராகப் பிறந்து சினிமா இயக்குனராக ஆகிறார். வெற்றிப் படம் தருகிற இயக்குனர், ஏற்கனவே எழுதி பிரபலமாக இருந்த எழுத்தாளரின் கதையை அச்சு அசலாக எடுத்து நகல் செய்கிறார் என்று அவர் மீது வழக்கு பதிவாகிறது.
அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார், மற்றும் எப்படி அவரின் பூர்வ ஜென்மம் இருந்தது என்பது மிகவும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டு இருக்கிறது.
நானி மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு அதியற்புதம். தேவ தாசிகளை மீட்டெடுக்கும் விஷயம் இந்த படத்தின் உயிர்நாடி. தவிர, தீண்டாமை, சாதி இன பேதங்கள் இவற்றை உடைத்தெறியும் கதாபாத்திரமாக வருகிறார் நானி.
ஒரு கம்யூனிஸ்ட் ஆக வலம் வருகிற கதாநாயகன் நமக்கு மகாகவி பாரதியாரை நினைவூட்டுகிறார். மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் கதாபாத்திரம்.
வார்த்தையே வாழ்க்கை என்று வாழ்ந்த எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட ஓர் எழுத்தாளரின் கதை இது.
நான் மிகவும் ரசித்தேன். எனக்கு மரோசரித்ரா, சங்கராபரணம், சலங்கை ஒலி போன்ற படங்கள் நினைவுக்கு வந்து போயின.
Composition on love (Dil tho ithna paagal)
முட்டாள் மனது ரொம்ப முட்டாள் மனது - எத்தனை
முட்டிக் கொண்டாலும் உன்னை ஏற்றும் இறக்கும்
முட்டி மோதி மீண்டும் உன்னை அதில் ஏற்றும்
முனகி ஓடிடும் உன்னை என் மனம் தாங்கிச் சுமக்க
முட்டாள் மனம் அது வீணாய் தினம் ஏங்கித் தவிக்க ....!
எங்கே நீ போனாலும் என் மனம் அங்கே தான் புரியுமா ?
என் பேச்சை அது கேட்காது உனக்கது சற்றும் தெரியுமா ?
மனமெனும் வாகனம் பயணம் போக வீதி
எங்கே உண்டு ?
மனதை கட்டி வைக்க ஒரு விதி தான்
எங்கே உண்டு ? (முட்டாள்)
நிற்காது நீ போ எனக்குக் கவலையில்லை ஏனோ
நிற்கும் என் மனம் ஓடும் புது தூங்காவனம் தானோ
நிழல் தான் உனது எந்தன் மனது முட்டாள் மனது
நீங்காது அது உனை விட்டு சிறிது ஒரு பொழுது (முட்டாள்)
உன் மனம் வேறு என் மனம் வேறு புரியாததற்கு
உன்னுள் உறைவது எந்தன் நினைவு தெரியாததற்கு
உயிரே இரண்டு என்றாலும் மனங்கள் இணைந்த ஒன்று
உனக்குள் இருக்கும் என்னைச் சுமக்கும் காதல் தினம் தின்று (முட்டாள்)
Subscribe to:
Posts (Atom)