Saturday, December 21, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 42


உண்மையும் பொய்யும் வேறல்ல 
மறைக்கப்பட்ட  உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள். இந்த கட்டுரை ரகசியம் பற்றியது இல்லை என்பதால் உண்மையைப் போட்டு உடைக்கவே விருப்பம்.  முன்னேற்றத்தின் ரகசியமே தொடங்குவது தான். தாழ்வு மனப்பான்மையை உடைப்பதன் ரகசியமும் சரியாகத் தொடங்குவது தான். தடைகளைத் தாண்டி சிறிய செயல்கள் மூலம் தொடங்குவது.
நாம் பார்ப்பதோ ஒருவன் நினைப்பதோ அல்ல அவன். எதை மறைக்க முயல்கிறானோ அது தான் அவன். நாம் மறக்க நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் நமது ரகசியங்களை விட நம்மை வேறெதுவும் தனிமைப்படுத்தி விட முடியாது. ரகிசயங்களை பொதுவெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்ளுவது ஒன்றும் புதிதல்ல, புதிரல்ல. பெயர் இல்லாத மொட்டைக்கடிதங்கள் பத்திரிகை ஆசிரியருக்கு, அரசியல்வாதிக்கு ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு தானே இருக்கின்றன. உலகோரோடு நாம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை வைத்து நம்மை கண்டு பிடித்து விட முடியாது. மக்கள் அந்த ரகசியத்தில் மூழ்கிப் போகும் போது சொன்னவரை மறந்து போவர். 
நமது ரகசியங்களை மறைப்பது புத்திசாலித்தனம். அதனை சொல்லி விட்ட பிறகு கேட்டவரும் அதனை மறைக்க வேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். ரகசியம் என்பது யாருடனும் எந்த தருணத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாதது. சொல்லாதவரை நாம் எஜமான். அதனை சொன்ன பிறகு நாம் அடிமை. 
ரகசியம் பலவகைப்பட்டது. அடுத்த வாரம் திருமணம். பிள்ளையின் பிறந்த நாளுக்கு வாங்கி வைத்திருக்கும் பரிசு. காதல் செய்வது பெற்றோருக்கு தெரியாமல் இருப்பது. புதிதாக ஏற்பட்டிருக்கும் (புகைத்தல்) பழக்கம். இப்படி எல்லாமே ரகிசியம் தான். ஒரு ரகசியத்தை காப்பது என்பது வைத்திருக்கும் சொத்தைக் காப்பதை விட கடினம். மனதுக்குள் பூட்டி வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. யாரிடம் இருந்து ஒரு ரகசியத்தை மறைக்க நினைக்கிறோமோ அவர்களிடம் பழகும் போது பேசும் போது ஏற்படும் மன அழுத்தம் சொல்லில் அடங்காதது.
உங்களைப் பற்றிய ரகசியம் ஏதேனும் உண்டா? அதை மறைக்கிறீர்களா ? இல்லை சொல்லி விட்டீர்களா? மேலே வாசியுங்கள். ஒரு ரகசியத்தை சொல்லாமல் காப்பதை விட அதைப் பற்றி ஒரு நாளைக்கு எத்தனை முறை நினைக்கிறோம் என்று யோசியுங்கள். ரகசியங்கள் ஒருவரை நங்கூரம் போல முடக்கிப் போடும். செயலிழக்க வைத்து விடும். ஒருவரின் உடல்நலம் சரியில்லை என்பது ரகசியம். அதனை மிகவும் நெருக்கமானவர்களிடம் இருந்து மறைக்கும் போது அந்த நோயின் தன்மையே அதிகம் ஆகிறது என்கிறது பல ஆய்வுகள்.
உங்களிடம் ஒருவர் தனது ரகசியத்தை பகிர்ந்து கொண்டார் என்பது சந்தோஷம். அதே சமயம் மிகவும் மனதின் பாரமும் கூட. உங்களை நம்பி ஒருவர் சொல்லி இருக்கிறார் என்பது நல்ல விஷயம் தான். அதனை நீங்கள் எப்படி பாதுகாப்பீர்கள் என்பது நமது கவலை தானே ஒழிய ரகசியம் சொன்னவரது அல்ல. ஏற்கனவே நீங்கள் மறைத்து வைத்திருக்கும் உங்கள் ரகசியம், கூடுதலாக பிறரின் ரகசியம் வேறு; அப்பப்பா மனதின் பாரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. வளர்த்துக் கொள்ளும் மனஉறுதி தான் நமது நற்பெயர் மற்றும் நம்பகத்தன்மை இரண்டையும் காப்பாற்றும். திரைப்படத்தில் வரும் ஜனகராஜ் போல நம்மில் பலருக்கு பிறரிடம் சொல்லவில்லை என்றால் மண்டையே வெடித்து விடும் அபாயம் உண்டு.
பிறர் நம்மிடம் ஒரு ரகசியத்தை சொல்லுகிறார் என்றால் அது சிறியதா அல்லது பெரியதா என்று பார்க்க வேண்டும். பெரியது என்றால் உங்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மிகவும் அதிகம் என்று அர்த்தம். நீங்கள் காக்க வேண்டியது இரண்டையும் தான். சில ரகிசயங்கள் சட்ட ரீதியானதாக இருக்கலாம். சில ரகசியங்கள் வணிக ரீதியாக இருக்கலாம். அவை கசிந்து விட்டால் தெரிந்திருக்கும் நமது நிலைமை பற்றி தெரியாமல் போகலாம். குறிப்பாக பிரபலங்களின் மறைவு வாழ்க்கை, சேர்த்திருக்கும் சொத்து, சேர்த்த விதம், செய்யும் தொழில் என்று எல்லாமே ரகசியம் தான். அவை நமக்கு தெரியாதவரை நல்லது தான். அப்படிப்பட்ட சில ரகசியங்களை நம்மால் மனைவி அல்லது கணவரிடம் கூட சில நேரம் சொல்ல முடியாது. அதனை மறைக்க நாம் படும் பாடு மிகக் கொடுமையானது.
நமது சொந்த ரகசியம் என்றால் எவ்வளவு காலம் அது மறைக்கப்பட வேண்டும். யாரிடம் இருந்து மறைக்கப்பட வேண்டும். சில நேரம் அது நிரந்தரமாக மறைக்கப்பட வேண்டிய ஒன்றாக கூட இருக்கலாம். ஆனால் எந்த ரகசியமும் ஒரு நாள் போட்டு உடைக்கப்பட்டு அதன் காலாவதி நாளை அல்லது இறுதி நாளை நெருங்கி விடும்.  சில நேரம் நமது மன நிம்மதிக்காக கண்ணாடி முன்பு நின்று ஒரு முறை சொல்லி விடலாம். ஆனால் அருகில் யாரும் இருந்து விடக்கூடாது. சில நேரம் நமது டைரியில் எழுதி வைக்கலாம். அது யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது. எதுவும் தெரியாதது போலவே நடிப்பது என்பது ஒரு கலை. சிலருக்கு மட்டுமே அது கைவந்த ஒன்று. நம்மில் பலருக்கு நடுங்கும் கைகளும் சிமிட்டும் கண்களும் காட்டிக் கொடுத்து விடும். நேர்மையாக இருக்க நிறைய தைரியம் வேண்டும். ஒரு ரகசியமே இல்லாத திறந்த புத்தகமாக வாழ்ந்து மறைந்தவர் வெகுசிலரே.
அந்தக் காலத்தில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கப் போவது மிகுந்த ரகசியமாக இருக்கும். ஒரு புதையல் கிடைத்தால் அது பற்றி கப்சிப் என்று இருப்பது மிகவும் கடினம். இந்த காலத்தில் இரவு எட்டரை மணி வரை 'இனி நோட்டுக்கள் செல்லாது' என்று அறிவிக்கும் வரை அந்த செய்தி எவ்வளவு ரகிசியமாக வைக்கப்பட்டது. அதனை மனதில் போட்டு பூட்டி வைத்து இருந்தவரின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். 
எந்த விளையாட்டு வீரரை ஒரு அணி எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப் போகிறது ஐபிஎல் விளையாட்டில் என்பது அண்மையில் ஏற்பட்ட ரகசிய நிகழ்வு. இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்து அப்படி என்ன பேசி இருப்பார்கள். அதனை தெரிந்து கொண்டு முந்தித் தரத் துடிக்கும் ஊடகம் ஒன்றிற்கு அது கிடைத்து விட்டால் எவ்வளவு ரகசியம்? அய்யோடா அந்த நிருபர் எத்தனை பாடு படுவார் மனதளவில்?
தெரிந்த ஒரு ரகசியத்தை எப்போது வெளியே சொல்லலாம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு முக்கிய தலைவர் இறந்து விட்டார் என்றால், அதனை எப்போது எப்படி சொன்னால் பல்வேறு பொதுவெளி தொல்லை தொந்தரவுகள் வராமல் சட்ட ஒழுங்கைக் காக்கலாம் என்று அரசும் அதிகாரிகளும் சிந்திப்பர்.
சொல்லக்கூடாத ஒரு ரகசியத்தை தவறிச் சொல்லி விட்டு என்னாகுமோ ஏதாகுமோ என்று பாதிக்கப்படும் மனநிலையில் தவிப்பவர்ளை நாம் பார்த்திருப்போம். இப்போதெல்லம் ஒரு படத்தில் யார் நடிக்கிறார்கள், என்ன வேடத்தில் நடிக்கிறார்கள், அதன் கதை என்ன, தலைப்பு என்ன எண்று ரகசியம் காக்கும் நிலையினை பார்க்கிறோம். ரகசியம் பற்றிய திறந்த ரகசியங்களும் உண்டு. அதாவது ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார். எப்போது என்பது தான் தெரியாது. ரகசியத்தினை மறைக்கும் ஒரு நபரின் நடவடிக்கைகள் வினோதமாக இருப்பதை வைத்தே அவர் மீது சந்தேகம் வரக்கூடும். வேண்டாத விளக்கங்கள், தேவையற்ற புன்னகைகள், சமாளிப்புகள், வஞ்சக் கதைகள் எல்லாமே ஒருவரைக் காட்டிக் கொடுத்து விடும். 


 நாயும் நரியும் முதலில் ஒன்று போலத் தெரிந்தாலும் அதன் குட்டு ஒரு நாள் வெளிப்படும். முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முடியாது என்பது போல ஒரு நாள் ரகசியம் வெளியே வந்தே தீரும். சில சமயம் அவருள் இருக்கும் அவருடனேயே புதைக்கப்படுவதும் உண்டு.  இங்கே ரகசியம் பற்றி நான் எதுவுமே மறைக்கவில்லை. உண்மைகள் இங்கே தோல் உரிக்கப்பட்டு இருப்பதை காணலாம். எனவே சொல்லப்படாத  உண்மைகளும் மறைக்கப்பட்ட ரகிசயங்களும் பொய்யாகவே கருதப்படுகின்றன.

Friday, December 20, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 41


 புறச்சவால்களும் பிற சவால்களும் 
முயற்சி எல்லா வேளைகளிலும் இன்பம் பயப்பதில்லை. ஆனால் முயற்சியின்றி இன்பம் ஒருபோதும் பிறப்பதில்லை.

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் தன்  பொல்லாச் சிறகை விரித்து” என்பது போல அவர் செய்கிறார் இவர் செய்கிறார் என்றெல்லாம் தொழில் தொடங்குவதால் நிச்சயம் நஷ்டத்தில் தான் கொண்டு போய் நிறுத்தும். 

எல்லா இடங்களிலும் எல்லா வயதினராலும் பகிர்ந்து கொள்ளப்படும் கனவு சுதிந்திரமாக இருப்பது தான் (Being free). கண்டிப்பு, இறுக்கம், வரம்புக்கு உட்படுதல், இவையெல்லாம் கைதியாக்குவது போல உணர்வது உண்டு. சுதந்திரமாக இருத்தல் என்பது ஓர் அகநோக்கு. ஒருவன் சுந்தந்திரமாகச் செயல்பட அவனிடம் சிறிதளவு தைரியம், திறமை அவசியமாகிறது. வாழ்க்கையில் நம்பிக்கை மிக்க அடியை எடுத்து வைத்தல், சுயமாகச் சிந்தித்தல், செயல்படல், தனது வாழ்க்கைப் பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளல், வெற்றி தோல்விகளை பயமின்றி துணிவுடன் எதிர்கொள்ளல் - எல்லாமே சுதந்திரமாக இருத்தலில் அடங்கும். அப்படிப்பட்டவர்கள் தான் தொழில்முனைவோர்களாக உருவாகிறார்கள். மெல்லிய காற்றுக்கே பொசுக்கென சாயும் ஊசி மரங்கள் போல அவர்கள் அல்லர். என்ன பிரளயம் ஆனாலும் அப்படியே நிற்கும் பனை மரங்கள் போல...!

இன்று போட்டிகளை சமாளிப்பது எப்படி? வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புகளை எதிர்கொள்வது எப்படி ? அரசின் கட்டுப்பாடுகள், தீடிர் விதி மாற்றங்களை சமாளிப்பது எப்படி போன்ற சவால்கள்  ஏராளம். தொழில் முனைவோர்கள் இன்று பெரும்பாலும் அவசரப்படுகிறார்கள்....மிக விரைவில் பெரிய தொழிலதிபராக ஆகி விட வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். 

இன்றைய சூழலில் நுகர்வோர் தேர்வு மற்றும் விருப்பம் மிகவும் மாறிவருகிறது. அவர்களின் சந்தை நிலவரம் மற்றும் சூழல் அறிவு அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள் மக்கள் பணம் செலவழிப்பது தொடருமா? எல்லாத் தொழிலும் குதூகலம் அடையுமா? வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்களா? நம்பிக்கையுடன் களத்தில் தொடரலாமா ? இவை தான்.

தொழில் செய்வது என்பது ஒரு தவம் போல. நாடி, நரம்பு, செல் என்று ஒவ்வொன்றிலும் தொழில் பற்றிய வீரியமான எண்ணம் ஓங்கி இருத்தல் வேண்டும். பசி நோக்கார், கண் துஞ்சார் என்பது போல எப்போதும் பிசினெஸ் பற்றிய சிந்தனை இருந்தால் மட்டுமே தொடர்வேற்றி பெற முடியும்.

கச்சாப்பொருள் விலை ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், ஊழியர் ஊதிய மாற்றம், புதிய பொருட்களின் சந்தை வரவு, அரசு மான்யம் பெற சங்கடம், தொடர் மின்சாரம் பெறுவதில் சிக்கல், வங்கி வட்டி விகித மாற்றம், இறக்குமதி பெற்ற விலை குறைந்த பொருட்களின் வருகை, ஆட்சி மாற்றங்கள்,  தொழில் கொள்கைகளில் அரசின் புதிய கண்ணோட்டங்கள் போக்குவரத்து செலவுகளின் ஏற்றம், ஏற்றுமதி  தொழில் என்றால் மாறிக் கொண்டே இருக்கும் அந்நிய செலாவணி நிலை, வாடிக்கையாளர்களின் மாறி வரும் டேஸ்ட், தினம் தினம் மாறும் தொழில்நுட்ப மாற்றம், கண்கவர் பாக்கிங் மாற்றங்கள், சமூக வலைத்தளங்களின் ஆக்கரமிப்பு, சந்தைப்படுத்தலில் வந்து நிற்கும் புதிய யுக்திகள், தரக்கட்டுப்பாட்டு சிக்கல்கள் என்று நீளும் பட்டியலில் அனைத்துமே புறச்சிக்கல்கள் தான். இவற்றில் எதுவுமே தொழில் முனைவோர் கட்டுப்பாட்டில் இல்லை. இவற்றை சமாளித்திட நவீன அணுகுமுறை தொழிலில் தொடர்ந்து தேவை.

கண்களை மற்றும் காதுகளை திறந்து வைத்துக்கொண்டு செயல்படும் தொழில் முனைவோர்கள் நிச்சயம் இத்தகைய சவால்களை எளிதில் சமாளிக்கிறார்கள். எந்தவித மாற்றம் நிகழ்ந்தாலும் அவற்றிற்கேற்ப தமது சூழலை மாற்றிக் கொள்ளும் ஒரு விவேகம் தேவைப்படுகிறது. தொழில் முனைவோர்கள் தம்மைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டு பிறரையும் உற்சாகப்படுத்த வேண்டும். தன்னைத் தொடர்ந்து வெற்றியாளராக நிலைநிறுத்திக் கொள்ள தேவையான பயிற்சி எடுத்துக் கொள்ளுதல், பிசினெஸ் சம்பந்தமான பத்திரிகைகள் படித்தல், தொழில் அமைப்புகளில் உறுப்பினராக இருத்தல், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், போட்டியாளர்களை தொடர்ந்து கண்காணித்தல் இவை அனைத்துமே கட்டாயம் அவசியமாகிறது. 

இயலும் என்றால் வாக்குறுதி கொடுத்தல், அதன்படி நிறைவேற்றுதல்,  மகிழ்வுடன் இருத்தல்,  எந்தவொரு வலியோ கவலையோ ஏமாற்றமோ  புன்னகையை அகற்றி விடாதபடி பார்த்துக் கொள்ளுதல்,   பிறரது அபிப்ராயம்  மனதுக்குள் செல்ல அனுமதிக்காது இருத்தல், நஷ்டங்களை, தளர்ச்சியை, வீழ்ச்சியை கண்டு ஒருபோதும் துவளாது இருத்தல், அதிக எதிர்பார்ப்பு இன்றி இருத்தல் எல்லாமே இன்றைய கால கட்டத்தில் மிக மிக  அவசியமாகிறது.

பண விஷயத்தில் ஈட்டல் கடினம், ஈட்டியதைக் காத்தல் அதனினும் கடினம். பண ஒழுக்கம் என்பது எப்போதும் அவசியம். எதற்காக வங்கிக் கடன் வாங்கினோமோ அந்த விஷயத்திற்கு செலவிடாது பணத்தை வேறு திசை திருப்பினால் புறச் சூழல்கள் தரும் தொல்லைகள் மிகப் பெரிய சவாலாக மாறும்.எல்லாவற்றை விட மிக முக்கியம் செலுத்த வேண்டிய வரிகளை நிலுவை இல்லாமல் செலுத்துதல், வெளிபடையாக இருத்தல், ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருத்தல் ஆகும்.

சரியான முறையில் செய்யப்படும் முயற்சி எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள். அச்சம் தரும் புறச் சூழலிலும் செயல்களை தொடர்ந்து செய்யுங்கள். சக்தி தானாகவே வரும்.