Monday, November 7, 2016

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - About my Wife Sukeerthy

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
- டாக்டர் பாலசாண்டில்யன்

சில காலம் இப்போ என்ன அவசரம், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இன்னும் செட்டில் ஆகலை என்று சொல்லி நானாகவே தள்ளிப் போட்ட நாட்கள் தாண்டியது. அடடா இன்னும் வயதாகிக் கொண்டே போகிறேதே, எவ்வளவு நாள் தான் பொறுத்திருப்பது, சீக்கிரம் சட்டு புட்டுன்னு முடிக்கணும் என்கிற நிலை வந்தது. எப்போ சாப்பாடு போடப்போறே என்கிற பல பேரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வேறு

இவள் வந்தால் சரி தான் என்று நான் சொன்ன ஓரிரு வீடுகளுக்கு எனது அம்மாவும் சித்தப்பாவும் சென்று வந்து வயது, தனியார் வேலை என்ற சாக்குப் போக்குகளால் ரிஜெக்ட் ஆகிட திருமண வாய்ப்பு தள்ளிப் போனது. காதல் கத்திரிக்காய் எல்லாம் என் அப்பாவிற்குப் பிடிக்காது.  எனவே ஜரூராக கும்பகோணத்தில் பார்த்தார்கள், மாயவரத்தில் பார்த்தார்கள், பிலாயில் கூடப் பார்த்தார்கள். நட்சத்திரம், கோத்திரம், குண்டு, ஒல்லி, படிப்பு, நிறம், வயது, ஜாதகம் என்று சேர்க்கப் பார்த்ததை விட தள்ளப் பார்த்தது தான் அதிகம். எல்லாம் எனது பெரியப்பா அவர்களின் கைவண்ணம். அவர் தான் எங்கள் வீட்டு ஆஸ்தான ஜோதிடர்.

அப்போது தான் நான் வசித்து வந்த காலனியின் பக்கத்துத் தெருவில் இருந்தே ஒரு ஜாதகம் வந்துள்ளது என்று அம்மா சொன்னார்கள். இப்போது பெரியப்பாவின் நேரம். முதலில் எனது கசின் ஒருவனுக்குத் தான் இந்த ஜாதகம் பொருந்தும் என்று சொன்ன பெரியப்பா இரண்டொரு நாட்கள் கழித்து பல்டி அடித்தார். இந்த ஜாதகம் எனக்குத் தான் பொருந்தியுள்ளதாக ஒரே போடு போட்டார். முதல் கட்டமாக எனது அம்மாவும் பெரியம்மாவும் போய் பார்த்து விட்டு போட்டோ வாங்கி வந்தார்கள். அப்போதெல்லாம் நான் பேக்டரி ஒன்றின் ஜிஎம் என்பதால் தினமும் வீடு வந்து சேர மிகவும் தாமதம் ஆகும். வந்தவுடன் எனது மூட் பார்த்து சாப்பாட்டிற்கு பிறகு ஒரு போட்டோவை எனது அம்மா காட்டினார். ரொம்ப ஒல்லி, நல்ல கலர்,  நல்ல லட்சணம், அரைகுறையாக சரி என்று சொல்லி விட்டுத் தூங்கச் சென்றேன்

அடுத்த நான்கு நாட்களில் பெண் பார்க்கும் படலம் என்று அறிவிப்பு வெளியாகிட, பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் வேண்டாம், காபி மட்டும் போதும் என்று  கண்டிஷன் போட்டுவிட்டு பெண் பார்க்க சென்றேன். பெண் பார்க்கும் நேரம் பார்த்து அந்த ஒரு சில நிமிடங்களில் பெரியப்பா ஆடி ஆடிப் பேசி அவள் முகத்தை சரியாக பார்க்க முடியாமல் செய்தார். எல்லோருக்கும் பிடித்துள்ளது என்று சொல்ல நானும் சரி என்று சொல்லி விட்டேன். அவள் பெயர் சுகீர்த்தி. சில பல முறை சொல்லிப் பார்த்தேன். மீண்டும் ஒரு முறை ஆவல் மேலோங்க போட்டோவை எடுத்துக் பார்த்தேன். எடுத்து நினைவாக ஆபிஸ் பையில் வைத்துக் கொண்டேன். அங்கே எனது நெருங்கிய சகாக்கள் இருவரிடம் காட்டிய போது, நல்ல பொருத்தம் என்றார்கள் அவர்கள்

மே 15, 1992 அன்று திருமணம் என்று நாள் குறிக்க முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. ராதா கல்யாணம், பஜனை எல்லாம் வைத்து தடபுடலாக எல்லாம் நல்லபடி முடிந்தது. திருமணத்திற்கு முன்பு சில பல கண்டிஷன்கள் போட்டேன், நோ வரதட்சணை, நோ சங்கிலி, கோட்டு சூட்டு காசி யாத்திரை செருப்பு தடி கூட நான் தான் வாங்குவேன் என்று. பார்க்க சற்று கோபக்காரராக தெரிந்த எனது மாமனார் அரைமனதாக ஓகே சொன்னார். திருமணத்திற்கு முன்பு இரண்டு முறை மட்டும் 'அவளை' பார்த்தேன். ஒன்று நான் அலுவலக வேலை காரணமாக வெளிநாடு செல்லும் முதல் நாள், சில நிமிடங்கள், அன்று உண்மையிலேயே மிக அருகில் சரியாகப் பார்த்தேன். கன்னத்து குழியுடன் அவளின் அந்த வசீகரப் புன்னகை எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்த முறை எனது கல்யாண கோட்டு சூட்டு ஷூ வாங்கிட 'அவளை' அவளின் பெற்றோர் அழைத்து வந்தனர். எனது டூவீலரில் ஏற்றி மவுண்ட் ரோடில் போனேன். அதற்கு முன்பு உட்லாண்ட்ஸ் டிபின் ரூம் (பனகல் பார்க் அருகே) சென்று ஆப்பிள் பஜ்ஜி, வாழைப்பழ மில்க் க்ஷேக் வாங்கிக் கொடுத்தேன். பிடித்ததா என்று கூட கேட்கவில்லை

சொன்ன தேதியில் திருமணம் வெகு சிறப்பாக  நடந்தது. பணமா பாசமா என்று ஒரு பட்டிமன்றம் வேறு. பாலரமணி சார், ஏர்வாடி சார், உதயம் ராம் சார், இதயகீதம் சார், பிரபாகரபாபு சார் எல்லோரும் பட்டிமன்றத்தில் பேசினார்கள். NKT முத்து சார், கீழாம்பூர் சார், பாரதி காவலர் சார் என்று திருமண வரவேற்பில் மிக அதிக விஐபி கூட்டம். அன்று இரவே மண்டபத்தை காலி செய்யும் அளவிற்கு ஓர் அசம்பாவிதம். எனது மாமா திருமண நாள் அன்றே இறந்து போனார். அதனால் பெரிய கொண்டாட்டம் வீட்டில் இல்லை. முதல் இரவு, ஹனிமூன் எல்லாமே ஒரு வாரம் தள்ளிப் போனது

வீடு மிகச் சிறியது. சாமான்கள் அதிகம். மனிதர்களும் அதிகம். கூட்டுக்குடும்பம் வேறு. எல்லாமே அட்ஜஸ்ட் செய்து கொண்டு மாறாத புன்னகையுடன், பயத்துடன், தயக்கத்துடன் வலம் வந்தாள் எனது மனைவி சுகீர்த்தி.

ஒரு பட்டாளமாக எட்டு பத்து டிக்கெட் வாங்கி நாடோடி தென்றல், சிங்கார வேலன் இரண்டு படங்களும் அடுத்த அடுத்த வாரங்களில் பார்த்தோம். தனியாகப் போகவில்லை என்று அவள் எந்தக் குறையும் சொல்லவில்லை. நான் உண்டு என் ஆபீஸ் உண்டு என்று இருந்தேன். அவள் மட்டும் எனது வீட்டுக் கூட்டத்தில் சிக்கித் தவித்தாள். நடுவில் ஒரு முறை நானே போன் செய்தால் உண்டு. இரவு லேட்டாக வருவேன். அது வரை சாப்பிடாமல் காத்திருப்பாள். எனக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம். அவளை பெரிதாக பார்க், பீச், கோவில், ஷாப்பிங் என்று கூட்டிப் போகவில்லை. அதற்குள் எனது மூத்த மகள் அவள் வயிற்றில். டெலிவரிக்கு நான் அவளை தாய்வீட்டிற்கு (சென்னை அம்பத்தூருக்கு அவள் வீடு மாறி விட்டது அப்போது) அனுப்பி வைக்கவில்லை

அவள் எனது மனைவியானவுடன் தான் எனது இரண்டு தம்பி மற்றும் ஒரு தங்கை, பெரியப்பா மகன், சித்தப்பா மகன் மற்றும் மகள் எல்லோரின் திருமணம் நடந்தது. ஒவ்வொன்றிலும் அவளின் பங்கு மிகவும் மகத்தானது. அவளின் திட்டமிடுதல், கட்டு செட்டாக பொருள் வாங்குதல், பெரியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுதல், வீட்டிற்கு வரும் மிகப் பெரிய விருந்தினர் கூட்டத்தை சமாளித்தல், எனது சற்று முன் கோபக்கார அப்பாவை கவனித்துக் கொள்ளுதல், அப்பாவின் அம்மா (படுத்த படுக்கையாக இருந்த எனது பாட்டி -வயது 86) அவர்களை கவனித்துக் கொள்ளுதல், இதற்கு இடையில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு என்று 5 வருடங்கள் வெற்றிகரமாக படித்து முடித்தாள். இரண்டாவது மகளும் வந்தாள்எனது அம்மா, சித்தி, பெரியம்மா, அத்தை, தங்கைகள், தம்பிகள் எல்லோரையும் அட்ஜஸ்ட் செய்து ரொம்ப அனுசரணையாக நடந்து கொண்டாள்.

வீட்டின் நல்லது கெட்டது என்று எல்லாவற்றிலும் அவளின் பங்கினை பார்க்காது இருக்க முடியாது. ஓயாது உழைப்பாள். சுவையாக சமைப்பாள். இன்டர்நெட் மூலம் பார்த்துத் தெரிந்து கொண்டு புதிய புதிய ரெசிப்பிகளில் சமைத்து குழந்தைகளை, உறவினர்களை அசத்துவாள். எனது அலுவலக நண்பர்கள், உரத்த சிந்தனை நண்பர்கள், உறவினர்கள் என்று யார் வந்தாலும் முகம் சுளிக்காமல் அப்படி உபசரிப்பாள். அவளின் கைமணத்தில் காபி குடிக்கவே ஒரு சில குடும்ப நண்பர்கள் வருவதுண்டு

வம்பு பேச மாட்டாள். கோபப்பட மாட்டாள். பொறாமைப்பட மாட்டாள். எந்த ஒரு பண்டிகையின் முறைகளையும் விட்டு விட மாட்டாள். தேவையற்ற செலவு செய்ய மாட்டாள். நானே அதிக விலையில் புடவை அல்லது பரிசு வாங்கிக் கொடுத்து விட்டு அவளின் அன்புக் கோபத்திற்கு ஆளாவேன். பார்த்ததை எல்லாம் கேட்க மாட்டாள். பார்த்து பார்த்துத் தான் வீட்டிற்கு வாங்குவாள். குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டாள். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவள் ஆடிப் போய் விடுவாள். என்னை மிகுந்த அக்கறையுடன் கவனிப்பாள். எனது நண்பர்களின் பெயர், அவர்களின் பிறந்த நாள், திருமண நாள் எல்லாம் அவளுக்குத் தெரியும். திருமணத்திற்கு பிறகு தாய் வீட்டிற்கு போய் என்னை விட்டு விட்டு ஒரு நாள் கூடத் தங்கியதில்லை.

எங்கள் இந்த அந்நியோன்னியத்தை பார்த்து நண்பர்கள் சிலர் எங்களுக்கு காதல் திருமணம் என்று தான் நினைப்பது உண்டு. இவ்வளவு ஏன்? சும்மா சொல்லாதீங்க அப்பா, அம்மாவும் நீங்களும் லவ் மேரேஜ் தானே என்று இன்னும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் எனது இரண்டு மகள்களும். அதற்குள் 25 ஆவது திருமண நாள் வந்து விட்டது. இன்னும் சில மாதங்களே உள்ளனஎனது சொந்த வாழ்க்கையின் கஷ்ட நஷ்டம், நண்பர்கள் வட்டமாக இருக்கும் சமுக வாழ்க்கை, அடிக்கடி வெளியூர் செல்லும் எனது பணி வாழ்க்கை, கோப தாபங்கள், குழந்தை போல எப்போதும் கம்பளைண்ட் செய்யும் எனது குணாதிசயம், எதிலும் பர்பெக்க்ஷன் கேட்கும் எனது வழக்கம்எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் எனது மனைவி மிகவும் பாராட்டுக்குரியவள் தான்

நினைத்துப் பார்க்கிறேன். அவள் எனக்கு செய்ததில் பத்தில் ஒரு பங்கு கூட நான் அவளுக்கு எதுவும் செய்து விடவில்லை. எனது பூர்வ புண்ணிய பலன் தான், இறைவனின் வரம் தான் அவள் எனக்கு மனைவியாக அமைந்தது. அடுத்த ஜென்மங்களில் அதிக நம்பிக்கை எனக்கு இல்லை என்றாலும், எத்தனை ஜென்மங்கள் நான் மனித பிறவி எடுத்தாலும் சுகீர்த்தி எனும் இந்த தேவதை தான் எனக்கு மனைவியாக வாய்க்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனை

கோபம் தவிர்க்க வேண்டும், தேவை இல்லாமல் பேசி விடக் கூடாது, பகைவரே என்றாலும் அவரை அன்புடன் ஏற்க வேண்டும், ஏழை மக்களிடம் பரிவும் கனிவும் காட்ட வேண்டும், தயங்காமல் தானம் தருமம் செய்ய வேண்டும், எதிர்காலத்தினை திட்டமிட வேண்டும், உடல் உழைப்பிற்கு அஞ்சக் கூடாது, பணியாட்களிடம் கூட மரியாதையாகப் பேச வேண்டும், எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் - இவை எல்லாம் நான் அவளிடம் கற்றுக் கொண்ட பாடங்கள்

அவப்பெயர் சொல்லி காயப்படுத்தினாலும், வீண்பழி சுமத்தி மனவருத்தம் தந்தாலும், அவர்கள் வீட்டிற்கு வரும் பொழுது இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தல் என்பது நான் இன்னும் அவளிடம் இருந்து முழுமையாக கற்காத ஒன்று. அதே போல உடல்நிலை சுகவீனம் என்றால் சற்று மாய்ந்து தான் போவேன் சுய பச்சாதாபத்துடன், ஆனால் என் மனைவியோ முதலில் தனது கடமை ஆற்றிய பிறகு சற்றும் முடியவில்லை என்றால் மட்டும் மெதுவாக அந்த வேதனையை பகிர்ந்து கொள்ளுவாள். அந்தப் பொறுமையும் கடப்பாடும் எனக்கு சுட்டாலும் வராது என்று தான் எண்ணுவேன். அவளை இந்த விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும்


இயன்ற அளவிற்கு அன்பும் பாசமும் காட்டி உள்ள நான் அவளுக்கு இன்னும் நிறைய சந்தோஷத் தருணங்களைத் தர வேண்டும்.. அவள் எனக்கு தாரம் மட்டும் இல்லை. இன்னொரு தாயும் தான். எத்தனை நன்றி சொன்னாலும் போதாது அவளுக்கும், அவளை எனக்குப் பரிசாக வழங்கிய இறைவனுக்கும். எனது முதல் வாசகி, முதல் விமர்சகி சுகீர்த்திக்கு இந்தக் கட்டுரையை காணிக்கையாக்கி மகிழ்கிறேன். வெறும் போட்டிக்காக எழுதவில்லை இந்தக் கட்டுரையை. அவள் என் மீது காட்டும் அன்புக்கு போட்டி போடும் விதமாகத் தான் அவளைப் பற்றி எழுதி உள்ளேன்

No comments:

Post a Comment