Friday, November 11, 2016

தாங்க முடியவில்லை புலம்பல்கள் :

தாங்க முடியவில்லை புலம்பல்கள் :

8 ஆம் தேதி மாலை தான் இந்த வாரத்தில் முக்கிய செலவுகள் (அப்பாவின் நினைவு நாள் உட்பட) இருப்பதால் சில ஆயிரங்கள் ஏடீமில் எடுத்து வைத்தேன். வைரமுத்து உரை கேட்டு விட்டு, பூவை செங்குட்டுவன் அவர்கள் இல்லம் சென்று விட்டு இல்லம் திரும்பிய போது, வாட்ஸ் ஆப்பில் நண்பர்கள் பிரதமர் மோடி பேசுகிறார், 500 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பை சொல்கிறார் என்ற ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பத் தொடங்கினர். வீடு வந்ததும் டிவி ஆன் செய்து பார்த்தேன். ஆமாம் என்ன இது நடக்கிறது.

பிறகு தினத்தந்தி டிவியில் பாண்டே அவர்கள் மட்டும் மற்ற சேனல் போல குழப்பாமல் தெளிவாக சில விஷயங்களை எடுத்து வைக்க விஷயங்கள் புரிந்தது.

உடனே, நானும் எனது இரண்டாவது மகளும் எங்கள் ஏரியாவில் உள்ள அனைத்து ஏடிம் - களுக்கும் சென்று எதில் வரிசையும் கூட்டமும் குறைவோ அங்கு சென்று 1600 ரூபாய் (4 முறை 400 வேறு வேறு கார்டுகளில்) எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் பொழுது ரொம்பவே லேட்டாக ஆகி இருந்தது. அந்த பொழுதிலும் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர் தூங்காமல். இது முதல் கட்டம்.

அடுத்த கட்டம், எடுத்த கையில் உள்ள செல்லாத பணத்தை மாற்றிட நேற்று நிரம்ப கூட்டமாக இருக்கும் என்று கண்டறிந்து, இன்று சென்றேன். 

எடுத்த பணத்தை கணக்கில் கட்டி விடலாம், (ATM ல் இன்று 50, 100 ரூபாய் நோட்டுகள் வந்து விடும் என்று பேப்பரில் போட்டதால்) என்று முடிவு செய்து, கனரா வங்கிக்கு சென்றேன். கேவீபீ யில் கூட்டம் தள்ளு முள்ளு குறையவில்லை என்பதால். பணம் மாற்றிக் கொள்ள ஒரு வரிசை. பணம் டெபாசிட் செய்ய வேறு வரிசை. பணம் கட்டும் வரிசையில் போய் நின்று கொன்டேன். 

கூட்டத்தில் பல விதமான நபர்கள். எப்படி சலான் எழுதுவது, எத்தனை பணம் செலுத்தலாம், பிறகு எப்படி எடுக்கலாம், பணம் மாற்று என்றால் எப்படி என்று ஏற்கனவே டிவியில் பேப்பரில் வந்த செய்திகளை அங்கு வந்த பல நிபுணர்கள் பலவாறு எடுத்துக் கூறிய வண்ணம் இருந்தனர். பொருளாதார விவாதம், தனி நபர் கஷ்டம், அமெரிக்க கஷ்டம், சரவணா, போத்தீஸ் கஷ்டம் என்று பற்பல விவாதங்கள். 

இதற்கிடையில் எனக்கு அடுத்து நின்று கொண்டிருந்த ஒரு அப்பாவி சாதாரணர் நிறைய சந்தேகங்கள் கிளப்பினார். அதில் முக்கியமாக ஏன் இன்று 2000 ரூபாய் கொடுக்கவில்லை, ஏன் பழைய 100 ரூபாய் கொடுக்கிறார்கள் என்று கேட்கத் தொடங்கினார். பிறகு அவரது வேட்டிக்குள் இருந்த நிஜார் பாக்கெட்டுக்குள் கை விட்டு ஆறு 5 ரூபாய் நோட்டுக்களை வெளி எடுத்து இவை எல்லாம் செல்லுமா? இவற்றை மாற்ற முடியுமா? இதற்கு என்ன வழிமுறை என்று கேட்டார். அங்கே இருந்த பொருளாதார நிபுணர் 500 மற்றும் 1000 மட்டுமே செல்லாது, மீதம் எல்லா நோட்டுக்களும் செல்லும் என்று விளக்கியும் அவர் சந்தேகம் தீரவில்லை. 

எல்லாம் கிடக்க, சார் அங்கே பாருங்கள், ரூபாய் மாற்றும் வரிசை வேகமாக நகர்கிறது. நான் இந்தப் பணம் கட்டும் வரிசைக்கு பதிலாக அதில் சென்று இருக்க வேண்டும். உடனே கேட்கப் பட்டது. உங்களுக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும். அவர் சொன்னார் 10000. அவரிடம் சொன்னார்கள் எனது பின்னால் நின்றவர்கள் உங்களுக்கு 4000 மட்டுமே இன்று கிடைக்கும். மீதி 6000 நீங்கள் கட்டத் தான் வேண்டும். 

இதற்குள் அங்கே வங்கி அதிகாரி ஒருவரை போனில் அழைத்து, நீங்கள் நேற்றே 4000 ரூபாய் பெற்று விட்டீர்கள். இன்று வேறு 4000 பெற்று இருக்கிறீர்கள். உடனே வந்து அந்த பணத்தை வங்கியில் செலுத்துங்கள். ஒருவரே இரு முறை பெறக்கூடாது. அதற்கு மறுமுனை அதெல்லாம் வர முடியாது. உடனே வங்கி கிளை மானேஜர் அழைக்கப் பட்டார். அவர் அதே விஷயத்தை சொல்லி விட்டு, நீங்கள் வந்து திருப்பி செலுத்தவில்லை என்றால், உங்கள் மீது FIR போடுவேன் என்றார். அதற்கு மறுமுனையில், போட்டுக் கொள்ளுங்கள் என்று பதில் வர மானேஜர் கோபமாக இந்த கஸ்டமரை FIR லிஸ்டில் வைத்து ஆவன செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு கோபமாக சென்றார்.

என்ன நடக்கிறது..! நமது பணத்தை மாற்றிக் கொண்டால், அதுவும் இரண்டு முறை தக்க பாரம் பில் செய்து விட்டு மாற்றிக் கொண்ட அந்த கஸ்டமர் பெரிய குற்றம் செய்து விட்டாரா என்று வரிசையில் நின்ற அனைத்து பொது மக்களுக்கும் ஒரு பீதி, சந்தேகம், பயம் எல்லாம் தொற்றிக் கொண்டது. மாற்றம் நல்லது தான். ஆனால் மாற்றங்களுக்குள் நிறைய ஏமாற்றங்களும் அடங்கும் என்பது உண்மை. 

எனது வேலை முடிந்து வெளியே வந்த போது அந்த 5 ரூபாய் நபர், மற்றொரு நபரிடம் இது செல்லுமா என்று விசாரித்துக் கொண்டு இருந்தார். வீடு வந்த போது எங்கள் வீட்டில் சுத்தம் செய்து கொண்டு இருந்த ராமு, சார் டீ மற்றும் மதிய சாப்பாட்டிற்கு 40 ரூபாய் கொடுங்கள் என்றார் - தன்னிடம் கொஞ்சம் கூட பணம் இல்லை என்பதால். கொடுத்து அனுப்பினேன். சில்லறை இருந்தால் நீங்கள் பணக்காரர்கள். 500 1000 வைத்திருந்தால் நீங்கள் ஏழைகள் தான். இன்று ATM பூட்டிக் கிடக்கிறது. சொன்னபடி திறக்கவில்லை. மாற்று வாங்கியவர்களுக்கு 2000 புதிய நோட்டுக்கள் கிடைக்க வில்லை, மாறாக பழைய 100 ரூபாய் தான் கிடைத்தது. முகத்தில் ஏமாற்றம், திருப்தி இரண்டும் கலந்த உணர்வு வரிசையில் இருந்து வந்தவர்களிடம் பார்க்க முடிந்தது. பலரின் செல்ஃபி கனவு உடைப்பில் விழுந்தது. 

புலம்பல்கள் என்று தணியும்? 50 கொடு 100 கொடு எனும் கடன் நச்சரிப்புகள் என்று தீரும்? இதுவே ஒரு சாமினியன் பார்வை, மற்றும் கேள்வி. 

No comments:

Post a Comment