Tuesday, December 21, 2021

சமாதானம்

 சமாதானம்

- குறுங்கதை
- பாலசாண்டில்யன்
நகரம் முழுவதும் டிராபிக் இருக்கிறது என்று அறிந்து குறித்த நேரத்திற்கு ரொம்ப முன்னரே வந்து பிளாட்பார்ம் நம்பர் ஏழில் அங்கே இருந்த டீ ஷாப்பில் சி 11 எங்கே வரும் என்று உறுதி செய்து கொண்டு பொறுமையாக அமர்ந்து இருந்தேன் எனது மனைவியுடன்.
சரியான குளிர். மிகவும் ஸ்டைலாக விசில் ஊதியபடி சுமார் 4.07 க்கு சென்னை செல்லும் சதாப்தி வண்டி வந்து சரியாக நாங்கள் காத்திருந்த இடத்தில் நின்றது.
எங்கள் சீட் தேடி அமர்ந்து கொண்டோம். யாரும் பயன்படுத்தும் முன்னர் பாத்ரூம் பயன்படுத்தி விட்டு ரிலாக்ஸ்ட் ஆக உட்கார்ந்தோம். மிகச் சரியாக 4.15 க்கு வண்டி புறப்பட்டது.
இப்போதெல்லாம் கொரோனா காரணமாக வண்டியில் சூப், பேப்பர், தண்ணீர், உணவு என்று எதுவுமே தருவதில்லை என்பது அறிந்து கையில் ஒரு பிளாஸ்க் டீ, மிளகாய் பொடி தடவிய இட்லி, தண்ணீர் எல்லாம் கொண்டு போய் இருந்தோம். இட்லியை ஒரு ஐந்தரை மணிக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று குட்டித்தூக்கம் போட வசதியாக சீட்டை இழுத்து விட்டுக்கொண்டோம். கொண்டு போன பத்திரிகை, போன் எதையும் கையில் எடுக்கவில்லை.
தூக்கம் வரவில்லை என்றாலும் கண் மூடியும் திறந்தும் தவநிலையில் இருந்தேன். என் மனைவி தூங்கியே போனாள். சுற்றும் குஜராத்தி, ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என்று கலந்து கட்டியாக எல்லா மொழியிலும் பேச்சு கேட்டது.
முன் சீட்டில் ஒரு பெண்மணி. அந்தக்கால நடிகை ஸ்ரீப்ரியா போல இருந்தார். அந்த வரிசையில் யாரும் இல்லை என்பதால் அவர் ஒருவரே கால்களை நீட்டிக்கொண்டு கிண்டில் எடுத்து டேப்பில் ஏதோ வாசிக்க ஆரம்பித்தார்.
பின் சீட்டில் செல்வந்தர் ஜோடியாக தான் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என்று எல்லா மொழியிலும் வீட்டு விஷயம், அலுவலக விஷயம், சில வம்பு தும்புகள் என்று எல்லாமே பேசினர். சென்னையில் கார் பிக் அப்புக்கு போன் செய்து விட்டு பேசினர், தூங்கினர்...
எதிர் பக்கம் இளம்பெண் மொபைல் போனில் படம் பார்த்துக் கொண்டு கையில் கொண்டு வந்த பொட்டலங்களை கொரிக்க ஆரம்பித்தார். ஒரு வரிசை முன்பு மூன்று நான்கு பெண்மணிகள் பெரிது பெரிதாக சிரித்து பேசி கொட்டம் அடித்துக் கொண்டிருந்தனர்.
டீ, தண்ணீர் மற்றும் சிப்ஸ் மட்டும் வந்து வந்து விற்க முயற்சி செய்தனர். ஓரிருவர் மட்டும் டீ வாங்கிக் குடித்தனர்.
ஒரு இஸ்லாமிய கணவர் வருவது எல்லாமே வாங்கி தந்து தனது மனைவியை குஷிப் படுத்தினார். அவர்களுக்கு ஒரு வால் முளைக்காத சுறுசுறுப்பு வாண்டு படுத்தி எடுப்பது என்ற முடிவுடன் அம்மா மடியில் உட்கார்ந்து இருந்தான்.
எனக்கு முன்னால் இருந்த ஸ்ரீப்ரியா மூன்று சீட்டுகளை அனுபவித்தது கண்டு அந்த இஸ்லாமிய நண்பர் தனது புர்கா போட்ட இளம் மனைவியை அங்கே போய் அமரச் சொல்லி, தனது இளவரசனுக்கு தனி சீட்டு கொடுத்தார்.
நடுநடுவே ஒரு மொட்டை போட்ட சிறுமி அங்கும் இங்கும் ஓடுவதும் அவள் பின்னால் அவள் தந்தை ஓடுவதும் தொடர்ந்தது. போகும் போதும் வரும் போதும் அந்த சிறுமி இஸ்லாமிய இளவரசரை தொட்டு வம்பு இழுத்து விட்டு ஓடினார்.
இவர் சிணுங்க தொடங்குவதை பொறுக்காத தந்தை அவருக்கு பிஸ்கட் கொடுத்தார். இளவரசர் கிரீம் மட்டும் தின்று விட்டு, பிஸ்கட்டை தந்தைக்கு பரிசளித்தார்.
அந்த சிறுமி அதை தட்டி விட்டு சிரித்தார். இளவரசர் மறுபடியும் அழுகை ஆரம்பித்தார். சீட்டு மாறிய இளவரசர் தாயார் மிகவும் அமைதியாக மொபைலில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தார், இளவரசரை கவனிப்பது கணவர் வேலை என்று.
ஒரு சாக்லேட் உரித்து கொடுத்து ஊட்டி விட்டார் தந்தையார். இளவரசர் கீழே போட்டு இறங்கி அதை எடுத்து வாயில் போட முயற்சி செய்தார். தந்தை அதை பிடுங்கி ஒரு டஸ்ட் பையில் போட்டு விட்டு மீண்டும் இன்னொரு சாக்லேட் கொடுத்தார். மறுபடியும் அதுவே தொடர்ந்தது.
இடையிடையே அவர் வீடியோ பார்த்தார். மகனுக்கும் காண்பித்தார். ஒரு தொப்பி அணிவித்து அவரை போட்டோ எடுத்து அவருக்கு காண்பித்தார். அதற்குள் சிறுமி வந்து ஒரு சாக்லேட் துண்டு ஒன்றை கொடுப்பது போல கொடுத்து பாவ்லா காட்டி விட்டு அவளே வாயில் போட்டுக் கொண்டு ஓடினாள்.
இளவரசர் சீண்டல் தாங்காமல் மீண்டும் அழுகையை தொடங்கினார். விளையாட மொபைல் கேட்டார். தந்தையோ அதைத் தவிர எல்லாமே கொடுத்தார்.
தந்தை அவரை தூக்கி தோள் மீது வைத்து ஜன்னல் வழியே காட்சிகள் காட்டினார். இரண்டு நிமிடம் கூட தாண்டி இருக்காது, இளவரசர் மீண்டும் சிணுங்கினார். அப்பாவின் மொபைலை வாங்கி கீழே போட்டார். அவர் பொறுமையாக குனிந்து எடுத்து அதை ஆப் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
இப்போது சிறுமியின் அட்டகாசம் தொடர, அவள் தந்தை அவளை தூக்கி பெட்டிகள் அடுக்கும் இடத்தில் உட்கார்த்தி வைக்க, இளவரசர் அதை மிகவும் ரசித்தார்.
இளவரசருக்கு சரியாக பேச்சு வரவில்லை. எல்லாமே ஊங்கொட்டி பாஷை தான். இப்போது அவர் என்ன கேட்கிறார் என்று தந்தைக்கு புரிந்தது, இருந்தாலும் தர மறுத்தார். எவ்வளவு நடந்தாலும் அவற்றை சற்றும் சட்டை செய்யாமல் அவர் அம்மா மொபைல் விளையாட்டில் மும்முரம் காட்டியது ஆச்சரியமாக இருந்தது.
இளவரசர் தந்தையின் தோளுக்கு சென்றார், பாக்கெட்டில் இருந்து மொபைல் எடுக்க முயற்சி தோற்கவே கீழே இறங்கினார், மீண்டும் மேலே அமர்ந்தார், மறுபடியும் சாக்லேட் துண்டுகளை உடைத்து உடைத்து அப்பா ஊட்டி விட ஒரு சில சமயம் சாப்பிட்டார், சில சமயம் துப்பினார். பொறுமையாக வாய் துடைத்து விட்டார் தந்தையார். வேறு ஒரு தொப்பி எடுத்து மாட்டி அழகு பார்த்தார். இவரோ தொப்பியை கழட்டி கீழே போட்டார்.
இப்போது இளவரசர் தாயார் தனது கணவரைப் பார்த்து ''மொபைலை கொடுங்கள் அவன் ஒன்றும் செய்ய மாட்டான்' என்றார். குழந்தையைப் பார்த்து ஜாடையில் மொபைலை கீழே போடாமல் வைத்து விளையாடுமாறு சொன்னார். இப்போது மட்டிலா அமைதி. இளவரசர் இருக்கும் இடம் தெரியவில்லை.
இந்த
அருமையான
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு குட்டித்தூக்கம் குறட்டையுடன் போட்டார் இளவரசரின் தந்தை.
அந்த தந்தையின் சமாதான செயல்பாடுகள், பொறுமை மற்றும் அந்த சைக்கிள் காப்பில் ஒரு தூக்கம் இவற்றை கவனித்த என்னால் மனதுக்குள் வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அந்த மொபைல் கிடைக்க அந்த இளவரசர் என்ன பாடு பட்டார். என்ன பாடு படுத்தினார், அவற்றை எப்படி தந்தையார் கையாண்டார் என்பது எந்த எம் பி ஏ படிப்பிலும் சொல்லித்தராத பாடம்.
அதற்குள் காட்பாடி வந்தது. இளவரசரும் ஒரு தொப்பி அணிந்து கொண்டார். மூன்று பைகளை தந்தையார் தூக்கிக் கொண்டு, மகனையும் பிடித்துக் கொண்டு நடந்தார். இளவரசரின் தாயார் மிக அழகான சின்ன லெதர் பாக் ஒன்றை பிடித்துக் கொண்டு லாவகமாக நடந்தார்.
என் மனம் சமாதானமாக நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. இளவரசர் போலவே சற்று அடம் பிடித்தது.

No comments:

Post a Comment