Monday, December 6, 2021

பொருளிலார்க்கு

 பொருளிலார்க்கு 

குறுங்கதை 
- பாலசாண்டில்யன் 

டாக்டரை சந்தித்து விட்டு பிசியோ எடுத்துக்கொள்ள பணம் கட்டி விட்டு, ஜுரம் செக் செய்து விட்டு அந்த பார்மை கையில் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தார் அந்தப் பெரியவர். வயது 75 இருக்கும். கையில் வாக்கிங் ஸ்டிக், கண்ணாடி, இன்னும் மிடுக்கு குறையாத உடை என்று இருந்தார் அவர்.

'நியூரோ டாக்டரை பாத்தீங்களா ? மாடி எப்படி ஏறிப் போக முடிஞ்சுது இந்தக் காலோடு?' என்றார் அந்த பிசியோ செய்யும் இளம்பெண். மேலும், 'இன்னைக்கும் நாளைக்கும் உள்ள தூரத்தை விட ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் இடையே தூரம் இருக்குமே ' என்றார். பெரியவர்  'ஹூம்' என்று புன்னகைத்தார். 

'பயப்பட ஒன்றும் இல்லை. எல்லாம் வயது தான் காரணம். எதுக்கும் ஒரு தடவை 'ஆர்த்தோ'வை வேணும்னாலும் பார்த்திருங்க' என்றார் விடாப்பிடியாக.

'தனியா எங்கயும் போகாதீங்க, ஊருக்கு போனா  எஸ்கலேட்டர் ஏறும்போது கையில் எதையும் வைத்துக். கொள்ள வேண்டாம்' என்றார். அவற்றை கேட்ட பெரியவர் கண்ணின் ஓரத்தில் சற்று ஈரம். துடைத்துக் கொண்டார். 

'இவ்வளவு அக்கறை காட்ட இன்னும் உங்களை போல இருக்கிறார்கள், அதனால் தான் மழை பொழிகிறது' என்றார் பெரியவர். 

'மெதுவா ஏறி படுங்க, இதுல  கொஞ்சம் ஹீட் வரும். ஜாஸ்தியா இருந்தா சொல்லுங்க, நாளைக்கு வரும் போது வீட்டில் இருந்து ஒரு டவல் கொண்டு வாங்க' என்று கூறி அவர் அருகில் சிறிது நேரம் நின்றார். "சூடு சரியா இருக்கா?, ஜாஸ்தினா சொல்லுங்க, ரொம்ப சூடு என்றால் கொப்புளம் ஆயிடும்' என்றார். அந்த பெரியவர் 'சரியா இருக்கு' என்று பதில் சொன்னார். 

பக்கத்து பெட்டில் படுத்தவாறு நான் இவற்றை கவனித்துக் கொண்டு இருந்தேன். என்னிடமும் இப்படியான அக்கறை தான் காட்டினார் மற்றுமொரு இளைஞர். இவர்கள் எல்லோருமே ஆசிரியர் - மாணவர் மனநலம் தெரிந்து வைத்திருப்பது போல, நோயாளிகளின் மனநலம் பற்றியும் படித்து இருக்க வேண்டும் என்று தோன்றியது.

பதினைந்து நிமிடம் ஆனது எனக்கு. பெரியவர் படுத்து இருந்த பெட்டுக்கு மாற வேண்டும் நான். காத்திருந்தேன். அவருடைய பதினைந்து நிமிடமும் ஆனது. 

'ஒருக்களித்து மெதுவாக எழுந்திருங்கள், நான் சில எக்ஸைஸ் சொல்லித் தருகிறேன், முடிந்தால் வீட்டில் செய்யுங்கள்' என்று அந்த பெண்மணி சொல்லிக் கொண்டு இருந்தார். 

அப்படியே எழுந்த அந்த பெரியவர், அந்தப் பெண்மணி சற்றும் எதிர்பார்க்காத போது அவர் கையைப் பிடித்து, 'உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தான் நினைக்கிறேன், என்னுடைய மருமகளாக வருவாயா? எனது மகனுக்கு 32 வயது ஆகிறது. கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறான். சொந்த வீடு, கார் வைத்திருக்கிறான்'.

'நீ உடனே சொல்ல வேண்டாம், யோசித்து ஒரு நல்ல முடிவாக நாளை சொல்லு, நீ சரி என்றால் உன் வீட்டுக்கு வந்து உன் அம்மாவிடம் பேசுகிறேன்' என்றார் பெரியவர். 

சற்றும் ஷாக் ஆகாமல் நிதானமாக சொன்னார் அந்த பெண்மணி, "நான் இந்த நிலைக்கு வர எனது அம்மா மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார், அவரை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் உங்களைப் போன்ற வயது வலி உள்ளவர்களுக்கு சேவை புரிய வேண்டும், இதுவே எனது லட்சியம், எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, சாரி சார்"

அந்தப் பெரியவர் மெதுவாக கிளம்பிப் போனார். 

மறுநாள் அவர் வந்த போது அவருக்கு அதே கரிசனத்தோடு சேவை புரிந்தது எனக்கு சேவை செய்த அந்த இளைஞர். அந்த பெண் அடுத்த ஷிப்ட்டுக்கு வருவார் என்று அறிந்தேன்.

கன்னத்தில் வழியும் பிசுபிசுப்பைத் துடைத்துக் கொண்ட அந்த பெரியவரை நான் பாவமாகப் பார்த்தேன். 

No comments:

Post a Comment