Wednesday, December 8, 2021

தொடரும் வைபவம்

 தொடரும் வைபவம் 

குறுங்கதை 
- பாலசாண்டில்யன் 

விபவ் நான்கு வயதுச் சிறுவன். அவனின் அப்பா அம்மா இருவருமே கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து (ஒர்க் பிரம் ஹோம்) செய்து வருகிறார்கள்.

விபவுக்கும் ஒரு லேட்டஸ்ட் டாப் வழங்கப்பட்டு அவனும் அதன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தான். சில நேரம் உற்சாகமாக பாடுவான், ஆடுவான், யோகா செய்வான். ஹோம் ஒர்க் கொடுத்தால் மட்டும் ரொம்ப டென்க்ஷன் ஆகி விடுவான். 

இவற்றை எல்லாம் கவனிக்க அவன் அப்பா அம்மாவுக்கு நேரமில்லை. அவனுடைய தாத்தா பாதி நேரம் நியூஸ் பார்த்துக் கொண்டு இருப்பார். பாட்டி பல நேரம் சமையல், பூஜை மற்றும் டிவி சீரியல்களில் பிஸி. இவனோடு பேச யாருக்கும் அவகாசம் இல்லை. 

கடந்த ஒரு மாதமாக விபவ் சரியாக தூங்குவதில்லை, எது கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை. ஆன்லைன் கிளாஸிலும் அவன் உற்சாகமாக இல்லை. எப்போதும் அடம் பிடிப்பது, அழுவது, கோபமாக கத்துவது என்று எல்லாமே அண்மையில் வெட்ட வெளிச்சமானது. 

அதுவும் அவன் ஸ்கூல் டீச்சர் போன் செய்து குற்றப்பத்திரிகை வாசித்தார். 'விபவ் குட் மார்னிங் சொல்வதில்லை, கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை, ஹோம் ஒர்க் செய்வதில்லை, யூனிபார்ம் போடுவதில்லை' என்று ஓயாத பட்டியல் அது. 

விபவின் பாட்டி மிகவும் தயக்கத்துடன் தனது மருமகளிடம் இந்த விஷயத்தை சொல்லி டீச்சரிடம் ஒரு முறை பேசும் படி வற்புறுத்தினார். இரண்டு நாள் கழித்து  டீச்சருக்கு போன் போட்டு பேசினார் ஜெயஸ்ரீ, விபவின் அம்மா. 

மிகுந்த கவலையுடன் இந்த விஷயத்தை தனது கணவருடன் விவாதித்தார் ஜெயஸ்ரீ. இருவரும் சேர்ந்து விபவை அழைத்து அன்புடன் பேசி, பிறகு அதட்டி, பின்னர் முதுகில் ஒன்று கொடுத்து விசாரித்தனர். தொடர்ந்து அழுத விபவ் பதில் ஏதும் சொல்லவில்லை.  அவன் விசும்பல் நிற்கவில்லை. அன்று முழுவதும் அவன் சாப்பிடவில்லை. தூங்கவில்லை. தொட்டால் அவனுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. 

அடுத்த நாள்  எதேச்சையாக வீட்டுக்கு வந்த ஜெயஸ்ரீயின் தங்கை தனஸ்ரீ அங்கே நடந்தவற்றை கேளிவிப்பட்டு  விபவை வெளியே கூட்டிச் சென்று அவனுக்குப் பிடித்த குட்டிக்கார், எலிகாப்டர் மற்றும் சாக்கோ கேக்  வாங்கிக் கொடுத்து மெதுவாக பேச்சு கொடுத்தார். தனஸ்ரீ ஒரு மனநல ஆலோசகர். தான் கற்ற மொத்த பாடங்களையும் இறக்கி வைத்தாள். நிதானம், பொறுமை, கனிவு என்று எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தினாள்.

விபவ் சொன்ன விஷயங்கள் அவளை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'நான் எனது டீச்சரை நேரில் பார்க்க முடியவில்லை, எனது பிரெண்ட்ஸ் அகில், ஆதி, சுனில் மிகவும் மிஸ் செய்கிறேன், எனக்கு ஸ்கூல் போனால் கொடுக்கும் வழக்கமான  லஞ்ச் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை, கார்ட்டூன் பார்க்க டிவி கிடைப்பதில்லை, ஆன்லைன் கிளாஸ் சுத்தமாக பிடிக்கவில்லை, அப்பா அம்மா என்னோடு பேசுவதில்லை, எக்கச்சக்க ஹோம் ஒர்க் எனக்கு பிடிக்கவில்லை, எனக்கு ஸ்கூல் போக வேண்டும்' என்று விபவ் சொன்ன எல்லாமே அவளால் தீர்க்க முடியாதவை தான். 

வீட்டுக்கு திரும்பிய அவள் ஜெயஸ்ரீயிடம் ஒரு வரியில் சொன்னாள், 'விபவ் நீட்ஸ் எ பிரேக், அவனை என்னோடு ஒரு வாரம் கூட்டிப் போகிறேன்'. அனைவரின் சம்மதத்தோடு விபவ் தனஸ்ரீயோடு கிளம்பினான். அவள் முழுமையாக விபவ் மீது கவனம் செலுத்தினாள். ஓரளவு நல்ல மாற்றங்களை விபவிடம் காண முடிந்தது.

ஜெயஸ்ரீக்கு போன் செய்து நடந்த எல்லாமே விவரமாக எடுத்துச் சொன்னாள். விபவ் மீண்டும் பழையபடி மாற வேண்டும் என்றால் நிச்சயம் அவனுக்கு பெற்றோரின் அரவணைப்பு தேவை என்று தெளிவாக புரிய வைத்தாள்.

வீடு திரும்பிய விபவ் தினமும் ஒரு அரை மணி நேரம் அகில், ஆதி, சுனில் மூவரோடும் வீடியோ கால் பேசினான். இருந்தாலும், சாப்பாடு, தூக்கம் இவற்றில் பழைய சுணக்கம் தொடர்ந்தது. தனஸ்ரீயே அவனுக்கு பள்ளிக்கூடத்தில் பத்து நாளைக்கு விடுமுறை பேசி வாங்கினாள். 

ஜெயஸ்ரீ மற்றும் அவள் கணவன் ராகவ் இருவரும் கூட பத்து நாட்கள் லீவ் போட்டனர். எல்லோர் கவனமும் இப்போது விபவ் மீது தான். நிலைக்குமா விபவின் உற்சாகம்..?

No comments:

Post a Comment