Sunday, July 5, 2015

#Papanaasam#

பாபநாசம் :

ஜீது ஜோசப் இயக்கத்தில் சுஜித் வாசுதேவ் ஒளி இயக்கத்தில் அயூப் கான் அவர்களின் எடிடிங்கில் கிப்ரான் இசை அமைப்பில் வெளி வந்துள்ள ஒரு அற்புத காவியம். இதில் ஒளிரும் நட்சத்திரங்கள் உலக நாயகன் கமல்ஹாசன், கௌதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ், கலாபவன், எஸ்தர், அனந்த் மகாதேவன், எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ், மற்றும் பலர்.

உலகநாயகன் எனும் பாராட்டு சும்மா வரவில்லை என்பதை நிரூபிக்கும் கமல் சார் கூட்டணி தந்திருக்கும் இந்த கலை விருந்து கலைத்தாய்க்கு மிகச் சரியான அர்ப்பணம். கமல் சாரின் உழைப்பு, நடிப்பின் மேன்மை, தென்காசி சாயல் தமிழ் உச்சரிப்பு, இயல்பான முகபாவங்கள், நச் நகைச்சுவைகள், நாற்காலி நுனியில் உட்கார்த்தி வைக்கும் அந்த த்ரில் என்று எதை சொல்ல எதை விட...என்றாலும் ஒரிஜினலை விட இது மேலானதா என்ற சர்ச்சைக்கு மட்டும் நான் நுழைய மாட்டேன்...இருப்பினும் தமிழ் வெர்ஷன் நிச்சயம் பல படி மேலே என்பது தான் எனது கருத்து.

சாதராண பாத்திரத்திற்கே மெனக்கெடும் கமல் சுயம்புலிங்கம் போல ஒரு அல்வா பாத்திரம் கிடைத்தால் அதில் ஒட்டிக் கொள்ளாமல் இருப்பாரா ? எது செய்தாலும் மிகச் சரியாக செய்ய வேண்டும், அதுவும் பிற மொழிகளில் செய்யப்படும் போது தனது பங்கு மேலோங்கி இருக்க வேண்டும் என்ற அந்த ஒரு வெறி வேட்கை தான் கமல் சாரை இந்த அளவிற்கு உலகநாயகனாக மாற்றி இருக்கிறது. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார் கமல் என்றால் அது மிகை அல்ல. இந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருது அல்ல உலக அளவில் விருது நிச்சயம் கிடைக்கும் என்பது என் அவா...அனுமானம். சுயம்புலிங்கமாகவே வாழ்ந்து விட்டார் கமல் சார். 

சுயம்பு ஒரு குடும்பப் பறவை, அன்பை அதிகம் பொழியும் அரிய வேதம், கஞ்சன் அல்ல சிக்கனம் என்பதை எடுத்துரைக்கும் வாழ்க்கை முறை, மனைவி குழந்தைகளுக்காக எதையும் செய்யத் துடிக்கும் ஒரு சாமானியன் என்றாலும் படம் பார்த்து தன்னை ஒரு P hD அளவுக்கு வளர்த்துக் கொண்டுள்ள உண்மை மேதை, அவரது அந்த மொழி ஆளுமை, சரியான முக பாவம், நக்கல் சிரிப்பு, காதல் பார்வை, பாசப் பொழிவு, வீறு நடை, அப்பாவி முகம், தேவையான உணர்வு வெளிப்பாடு, சரியான வசன உச்சரிப்பு என்று எல்லாமே பாராட்டுக்கு உரியது. பின்னணி இசை, ஜெயமோகனின் வசனம், காட்சி அமைப்பு, லொகேஷன், லாஜிக் என்று பார்த்து பார்த்து பாராட்ட வேண்டி இருக்கிறது.

ரீமேக் என்றாலே மக்கள் எப்போதும் ஒரிஜினல் போல இருக்கிறதா என்று ஒப்பிட்டு பார்ப்பார்கள். இருப்பினும் இயக்குனர் ஒரே மாதிரி செயல்பட்டாலும் நம்ம கமல் விரல் கேட்டால் கை முழுவதுமே தருவார் என்பதை புரிந்து கொண்டிருப்பார் போலும். அசலை மிஞ்சும் நகல் உண்டா என்றால் குருவை மிஞ்சும் சிஷ்யன் போலத் தான். பெர்பெக்ஷன் என்பது கமல் சாரின் ஒரு வியாதி போலத் தான். இது கமல் வருடம் போல. உத்தம வில்லன் பார்த்து வியந்து சற்று மூச்சு விட்டுக் கொள்வதற்குள் அடுத்த விருந்து பாபநாசம். இது சற்று கசப்பு தான் கதை அம்சத்தினால். 

ஒரு அமைதியான மகிழ்வான குடும்பம் ஒரு தேவை இல்லாத நிகழ்வினால் எப்படி நிலை குலைந்து போகிறது என்கிற விஷயம், போலீஸ் என்றால் எப்படி எல்லாம் யோசிப்பர், ஒரு படிக்காதவன் எப்படி புத்திசாலியாக இருக்க முடியும் போன்ற பல விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. குடும்பமாக வாழ்பவர்கள் யாவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு முக்கியப் படம். ஒரு சவால் என்று வரும் போது எப்படி அமைதியுடன் நிதானமாக உணர்ச்சிகளை கையாள வேண்டும், சமயோசிதம் எப்படி பயன்படும், குடும்பத்தில் எல்லோரும் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது போன்ற பாடங்கள் நிறைய உண்டு இப்படத்தில். 

எங்கேயும் கோபப்படாமல், எல்லோரிடமும் அன்பாக நட்பாக பழக வேண்டும், கஷ்டப் பட்டு எப்படி முன்னுக்கு வர வேண்டும், பாசமாக எப்படி குடும்பத்தில் நடக்க வேண்டும், மாமனார் வீட்டில் எப்படி மரியாதை தர வேண்டும், செலவுகளை எப்படி திட்டமிட வேண்டும், என்று கற்றுக் கொள்ளும் விஷயங்களை பட்டியல் போடலாம். 

இரட்டை வசனம், தேவை இல்லாத பாடல், சண்டை, அடிதடி, வெட்டு குத்து, முகம் சுளிக்கும் நடனம் என்று எதுவும் இல்லாமல் குடும்பம் முழுதும் ஒன்றாய் உட்கார்ந்து பார்க்கும்படி ஒரு படம்.

பாடல் எனும் போது ஹரிஹரன் குரலில் நா முத்துக்குமார் வரிகளில் வரும் வினா வினா எனும் பாடல் மனதை மிக வருடுகிறது. நிச்சயம் முத்துகுமார் அவர்களுக்கு இன்னொரு விருது உறுதி. 

பாறை மேலே தேரே போனால் பாத சுவடு இல்லையே
வேறை போலே உண்மை கூட வெளியே வந்தால் தொல்லையேகூறா மனமே ரகசியம்உலகில் உறவே அவசியம்வினா வினா ஒரே வினாவிடாமலே எழும் வினாநிறைவுறா ஒரே கனாஇறைவனா மனிதனாஆற்றில் செல்லும் நீரில்நேற்றின் வெள்ளம் எதுநேற்றெல்லாம் மாயையேசூறை காற்றின் ஊடாய்சாயா நாணல் காடாய்வேண்டும் ஓர் மேன்மையேபூபாளம் கேட்கிறதோஆகாயம் நம் தீபம ஆகாதோ - இந்த வரிகள் மனதை நிச்சயம் பிசைகிறது.
கமல் சார் தவிர அனந்த் மகாதேவன், ஆஷா சரத், நிவேதா தாமஸ், கலாபவன், எஸ்தர், எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ் என்று யாரைப் போற்றுவது யாரை விடுவது? தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியுடன் போட்டி போடும் இதர கலைஞர்கள் போல இந்தப் படத்திலும் அவரவர் பாத்திரத்தில் அப்படியே பதிந்து போய் மிகச் சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக ஆஷா சரத் அவர்களின் தத்ரூப நடிப்பு மிகவும் பாராட்டுக்கு உரியது. படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கமல் ஆஷா இருவருக்கும் நடக்கும் நடிப்புப் போட்டி.
கடைசி காட்சி இரவு வந்து படுத்த போது எத்தனை முறை எனது கண் முன் வந்து போனது. ஒரு தந்தையாக கணவனாக நான் நினைத்துப் பார்க்கும் போது இப்படிப் பட்ட சிக்கல்கள் யாருக்கும் வரக் கூடாது என்று தோன்றியது. 
கமல் சாரின் இது போன்ற படங்கள் நிறைய வர வேண்டும். தமிழ் திரை உலகம் வானின் உச்சிக்கு செல்ல வேண்டும். பாபநாசம் கிளம்புங்கள். பார்த்து மகிழுங்கள் குடும்பத்துடன். நீங்களும் படம் முடியும் போது எல்லோரையும் போல எழுந்து நின்று கை தட்டுவீர்கள். அது தான் நான் நேற்று பார்த்த போதும் நடந்தது. ஒரு கலைஞனுக்கு வேறு என்ன வேண்டும் ?

No comments:

Post a Comment