Friday, April 15, 2016

Appavithanam - my short story

'அப்பா'வித்தினம் சிறுகதை - டாக்டர் பாலசாண்டில்யன்

வண்டி வந்து விட்டது, கிளம்புங்க நேரமாச்சு  என்று சத்தம் போட்டுக் கொண்டே அமுதன் வீட்டில் எல்லோரும் கிளம்பினர். அந்தக் காருக்குள் ஏழு பேர் உட்காரலாம்.

அமுதன் உட்பட எல்லோரும் ஏறிய வண்டியில் பழங்கள், பூ, புடவை, மோதிரம் சகிதம் எல்லாமே ஏற்றப்பட்டவுடன் வண்டி மறைமலைநகர் நோக்கி நகர்ந்தது. நெரிசல்கள் தாண்டி பேசிக் கொண்டே போய் சேர்ந்தனர்.

மாப்பிள்ளை வந்தாச்சு என்ற கோஷம் கேட்க எல்லோரும் இறங்கி உள்ளே போயினர்.

முதலில் கேசரி, போண்டா பிறகு காபி எல்லாம் வந்தது. பிறகு பெண்.

பெண்ணைப் பார்க்க அமுதனை விட எல்லோரும் ஆர்வம் காட்டினர். அகிலா மெதுவாக வந்தாள். நல்ல நிறம். அளவான முகப்பூச்சு. நீல நிறச் சேலை அவளுக்கு பொருத்தமாக இருந்தது. வணக்கம் வைத்துச் சிரித்தாள். கன்னக் குழி தெரிந்தது. அதிகம் பேசவில்லை. பெண் பாடவில்லை. பெண்ணின் முடியை யாரும் இழுத்துப் பார்க்கவில்லை.

போய்க் கடிதம் போடுகிறேன் என்று பந்தா காட்டாமல், அமுதன் தனது தங்கையுடன் கண்களால் ஜாடை காட்டி விட்டு அகிலாவுக்கு டபுள் ஓகே சொல்லி விட்டான். திருமண நாளும் தோராயமாக குறிக்கப் பட்டது.

ஏழு பேர் அடங்கிய கார் மீண்டும் குதூகலமாக பெரம்பூர் புறப்பட்டது. அமுதன் சற்று வெட்கத்துடன் காணப்பட்டான். அமுதன் பெற்றோர் முகத்தில் அதீத திருப்தி தெரிந்தது.

அமுதன் தங்கை ரம்யா வள வளவென்று பேசிக் கொண்டே வந்தாள். திருமணம் எங்கே வைக்க வேண்டும், யார் யாரை கூப்பிட வேண்டும், என்ன புடைவை வாங்க வேண்டும் என்று எல்லாமே வண்டியில் விவாதம் செய்யப்பட்டது.

அமுதனுக்கு இருபதாயிரம் ரூபாய் தனியாக பட்ஜெட் என்றும் எந்த தொகையும் பெண் வீட்டாரிடம் பெறக் கூடாது என்றும் கூட அறிவிக்கப்பட்டது.

திருமண நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது.. அமுதன் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதால் தினமும் வீட்டிற்கு வருவதற்கே நேரம் ஆகும். தவிர அவன் கால் பேசும் நேரம் தனி.

அகிலாவைப் பார்க்க வேண்டும். அவளுடன் எங்காவது திருமணத்திற்கு முன்பு  வெளியே போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதற்கு அவனிடம் நேரம் இல்லை.

இருப்பினும் ஒரு நாள் எப்படியோ நேரம் ஒதுக்கி நேராக மறைமலர்நகர் சென்றான் அகிலா வீட்டிற்கு. அகிலாவை வெளியே கூட்டிப் போக நினைப்பதாக அவள் பெற்றோரிடம் சொன்ன போது ரொம்பவே தயக்கம் காட்டினர். பிறகு மனமில்லாமல் சரி என்றனர்.

அகிலாவை தனது காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பும் முன்பு அவள் வீட்டில் இருந்து சுரேஷ் என்ற ஒரு வாலிபன் வந்து காரில் ஏறிக் கொண்டான். அகிலாவின் அம்மா வலிய வந்து இவனும் வரட்டும், தப்பா நினைக்காதீங்க என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

கார் புறப்பட்டது. அகிலா ஒன்றுமே பேசவில்லை. அமுதனே ஆரம்பித்தான். “முதல்ல பீச்சு, அப்புறம் ஹோட்டல்”. அகிலா முகத்தில் பெரியதொரு  சந்தோஷம் தெரியவில்லை. சுரேஷ்,”அங்கிள் அகிலாவிற்கு தண்ணியைப் பாத்தாலே பயம், அதனாலே பீச் வேண்டாம்” என்றான்.

வண்டியை நிறுத்தி விட்டு அகிலாவைப் பார்த்துக் கேட்டான். என்ன பீச் வேண்டாமா? அவள் கையையும் முகத்தையும் சற்று கோணலாக்கிக் கொண்டு ஏதோ முனகினாள். முதல் முறையாக அமுதனுக்கு ஏதோ  சின்ன சந்தேகம் மனதில் வந்தது. வண்டி நேராக அவன் நண்பன் மற்றும் மனநல ஆலோசகர் டாக்டர் ரங்கன் வீட்டில்  போய் நின்றது.

இரண்டு மணி நேரம் கழித்து அகிலாவை அவள் வீட்டிற்குக் கொண்டு போய் விட்டு விட்டு ஏதுமே நடக்காதது போல தனது வீட்டிற்குத் திரும்பினான். அகிலா வீட்டிற்குப் போய் வந்ததை தனது வீட்டில் யாரிடமும் தெரிவிக்கவில்லை

திருமண நாளும்  வந்தது. அமுதன் வீட்டில் அனைவர் முகத்திலும் ஒரே மகிழ்ச்சி

மணமேடையில் அமுதன் பட்டு சட்டை, பட்டு வேட்டி சகிதம் மணையில்  வந்து  அமர்ந்து இருந்தான். அருகில் கிளிப் பச்சை நிறச் சேலையில்  ரொம்பவே அழகாக அமர்ந்தாள் அகிலா.

அமுதன் அவளைப் பார்த்து ஒரு புன்னகை வீசினான். அகிலா அதற்குப்  பதில் சிரிப்பு தரவில்லை. லேசாக அவள் மீது அமுதன் கை பட்ட போது அவளுக்குள் ஒரு உள்நடுக்கம் மற்றும் ஜில் மேனி புலப்பட்டது.

முகூர்த்த நேரம் நெருங்கியது. மங்கள இசை முழங்க அகிலா கழுத்தில் தாலி ஏறியது. அவள் கை பற்றி அக்னி வலம் வந்த அமுதன் ஒரு ஐஸ் குச்சியைப் பிடித்தது போல் உணர்ந்தான். அவளிடம் அது பற்றி மெதுவான குரலில் கேட்டான். அதற்கு அகிலா சொன்னாள், "எனக்கு உங்களைப் பாக்கவே பயமா இருக்கு". அமுதன் மனதில் ஒரு இனம் புரியாத  படபடப்பு.

முகூர்த்தப் பரபரப்பு, மற்ற சடங்குகள் முடிந்து மதிய உணவு உண்ண இருவரையும் அருகருகே அமர்த்தினார்கள் உறவினர்கள். அகிலாவின் விரல்கள் மட்டும் இலையில் விளையாடின. ஏதும் உள்ளே போகவில்லை. அமுதன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

ரம்யா சொன்னாள், "அண்ணா, அண்ணிக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு கொஞ்சம் வாயில் ஊட்டு". அமுதன் ஏதும் கேட்காமல் ஸ்வீட் ஒன்றை பிய்த்து அகிலாவின் வாயில் போட்டான். அகிலா முதல் முறையாக பேசினாள். "நல்லாருக்கு ". ஆனால் அவள் பேசியது ஒரு சின்னக் குழந்தை பேசியது போல் திக்கித் திணறி இருந்தது.

முதல் இரவு அன்றே ஏற்பாடு ஆகி இருந்தது. பால் சொம்போடு உள்ளே வந்தாள் அகிலா. வெளிர் பச்சை நிறச் சேலையில் கொஞ்சம் பலவீனமாகத் தெரிந்தாள். அமுதனைப் பயத்துடன் குழப்பத்துடன் பார்த்தாள். அருகே வா என்று கை ஜாடை காட்டி அழைத்தான் அமுதன். அவளும் வந்தாள்

"வா உட்கார்என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?" இது அமுதன் .
சற்று நேரம் யோசித்து விட்டு, " எனக்கு அப்பாவைப் பிடிக்கும்"  இது அகிலா.

அமுதன் தொடர்ந்தான் அவள் விரலைப் பிடித்தவாறு, வேறு என்ன பிடிக்கும். அகிலா சொன்னாள், தொடாதிங்க, ஆம்பிள தொட்டா பெண் பிள்ளைக்கு காது அறுந்து போகும். உங்களுக்கு மூக்கு. எங்க பாட்டி சொல்லுவாங்க.

பிறகு அமுதனே எழுந்து பால் எடுத்து வந்து தான் கொஞ்சம் குடித்து விட்டு அகிலாவுக்கு மீதியைக் கொடுத்தான். சட்டென்று வாங்கிக் குடித்து விட்டு உடனே சொன்னாள், எனக்கு  தூக்கம் வருது. ஒரு பாட்டு பாடுங்க. அமுதன் ஒரு ஆங்கிலப் பாடலை முணுமுணுத்தான். அகிலா புருவம் உயர்த்திக் கேட்டாள், இது என்ன பாட்டு ?

அமுதனுக்கு கவலை வந்து கவ்விக் கொண்டதுஅழகாக இருக்கிறாள். நன்றாக சிரிக்கிறாள். என்ன பாவம் செய்தாள் இவள்?

அகிலா தூங்குவதைப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு இவனும் தனது மொபைலில் மெயில் பேஸ்புக் செக் செய்தான். இவன் கல்யாண போட்டோவிற்கு எக்கச்சக்க லைக். அப்படியே கட்டையை சாய்த்தான். வெகு நேரம் தூக்கம் வரவில்லை. எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது.

காலையில் குளித்து விட்டு ஒரு கையில் காபி, மறு கையில் ஹிந்து வைத்துக் கொண்டு பால்கனியில் உட்கார்ந்தான். அகிலா குளித்து விட்டு தனது கையில் ஒரு கப்புடன் மெதுவாக நடந்து வந்தாள். என்ன குடிக்கிறாய் என்று அமுதன் கேட்க, கஞ்சி என்றாள்.

பேப்பர் படிக்கிறாயா எனக் கேட்டு வம்பு இழுத்தான். அகிலா பதிலுக்குச் சொன்னாள், இதைக் கடையில தானே போடுவாங்க, அதுல என்ன படிக்கிறீங்க

திடீர் என நாம இன்று ஜூவுக்கு போகலாமா என்றாள். கொஞ்சம் காபியை தனது சட்டையில் சிந்திக் கொண்டு ஆவலுடன் அகிலாவைப் பார்த்தான் அமுதன்.  தொடர்ந்தாள் அகிலா.  எங்க அப்பா தான் சொன்னங்க கல்யாணம் ஆனா உன் புருஷன் உன்னை ஜூவிற்கு, பொம்மை கடைக்கு எல்லாம் கூட்டிப் போவான் என்று.


அமுதன் எதுவும் பதில் சொல்லாமல் எழுந்து போனான். ரெடியாகி ஆபிஸ் கிளம்பினான். வீட்டில் எழுந்த பல ஆட்சேபணைகளுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் நேராக அகிலாவிடம் போய், நான் ஆபிஸ் போகிறேன், சாயங்காலம் வந்து உன்னை ஜூ அழைத்துப் போறேன் என்ற படி புறப்பட்டான். அகிலா ஒரு பெரிய கோணல் சிரிப்பை அவனுக்குப்  பதிலாக  அளித்தாள்.

மாலை சீக்கிரமே வீடு வந்தான் அமுதன். அகிலா ஒரு நாய்க் குட்டி பொம்மையுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். அகிலா இந்தா உனக்கு ஒரு கிப்ட் என்று ஒரு பெட்டியைக் கொடுத்தான். அதைப் பிரிக்கக் கூட பயந்தாள் அவள்.

அகிலா ஒரு சிறப்புக் குழந்தை, மனநலம் குன்றிய  பெண் என்று  அன்று  டாக்டர் ரங்கன் சொல்லித் தெரிந்த போது அவளைப் பற்றிப் புரிந்து போனது. அவள் எப்படிப் பட்டவள், அவளை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும், அவள் நடவடிக்கை எப்படி இருக்கும், அவளது அறிவு வளர்ச்சி எப்படி உள்ளது என்று எல்லாமே கேட்டுத் தெரிந்து கொண்டாலும் மனதில் மட்டும் பொறுப்பு கலந்த கவலை வந்து வந்து போனது

யாரை இப்போது குற்றம் சொல்வது? பெண் பார்க்கும் தினத்திலிருந்து தானும் தனக்கு வரப்போகும் மனைவி பற்றி சரியாக விசாரிக்காமல் அந்த திருமணத் தரகர் மற்றும் பெற்றோர்  பேச்சை அப்படியே நம்பியது புரிந்தது.

இருப்பினும் முடிவு தான் எடுத்த ஒன்று தானே? இருப்பினும் மனதில் குழப்பம் இருக்கத் தான் செய்தது ஏன் இப்போது கவலைப் பட வேண்டும்நீ அவளுக்கு வாழ்க்கை கொடுக்கப் போகிறாய், சந்தோஷமாய் அமைதியாய் இரு என்றது அதே மனம்அது டாக்டர் ரங்கன் அவனுக்குத் தந்த தைரியம் மற்றும் உற்சாகம்

அகிலா எழுந்திரு வா வெளியே போகலாம் என்றான். உடனே அவள் துள்ளிக் குதித்துக் கிளம்பினாள்  

வீடு திரும்பியதும் யாரிடமும் பேசவில்லை. குளித்தான். சாப்பிட்டான். தூங்கச் சென்றான். அகிலாவும் அவன் பின்னாலேயே போனாள். ஒரு குழந்தையைப் போல சுருண்டு படுத்தாள். ஒரு போர்வை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டான்

மறுநாள் அமுதன் அலுவலம் விட்டுத் திரும்பிய போது வீட்டில் அகிலா இல்லை. அவள் எங்கே என்று தனது அம்மாவிடம் கேட்க அவள் ரம்யாவுடன் கோவிலுக்குப் போய் இருப்பதாகத் தெரிந்து கொண்டான். வீடு திரும்பிய ரம்யா  எல்லோரிடமும் அந்த விஷயத்தைப் போட்டு உடைத்தாள். தனது அண்ணி ஒரு குழந்தை போன்றவள்,  அவள் மிகவும் பாவம் என்று

காரணம், அகிலா கோவிலில் ஐயரிடம் பேசிய விஷயம் தான். அவள் தனக்குப் பிரசாதம் கொடுப்பதற்கு பதில் கடவுளிடம் இருந்து ஒரு குழந்தை கொண்டு வந்து தருமாறு கேட்டாள். ஏன் என்றால் அகிலாவின் பாட்டி அடிக்கடி சொல்லும் விஷயம் தான் அது,குழந்தை என்பது கடவுள் தரும் ஒரு பரிசு என்று. அந்த ஐயர் சிரித்துக் கொண்டே சொன்னார், உன் கணவன் தான் உனக்குத் தெய்வம், அவரிடம் போய்க்  கேள் என்று

அமுதனும் இந்த ஒரு வாரத்தில் நடந்த பல விஷயங்களையும், அவன் நண்பன் டாக்டர் ரங்கன மூலம் அகிலா பற்றித் தனக்கு  ஏற்கனவே  தெரிந்த விஷயத்தையும் சொன்னான்ஆனால் என்ன ஆச்சரியம்? யாருமே வீட்டில் அந்த விஷயம் கேட்டு பிரமிப்பு அடையவில்லை. மாறாக இது தெரிந்து கொள்ள உனக்கு ஒரு வாரம் ஆயிற்றா என்று வேறு கேட்டனர்.

ரம்யா முகத்திலும் ஒரே அதிர்ச்சி. எப்போதும் தன்மையாக இருக்கும் கோபமே வராத அமுதன் கண்கள் சிவந்தன. இயன்ற வரை கத்தித் தீர்த்தான். அவன் கத்துவதைப் பார்த்த அகிலாவின் உடம்பு முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் வாய் மட்டும் ஓம் ஓம் என்று சொல்லியதை அமுதன் கவனிக்கத் தவறவில்லை

அவன் அம்மா தீர்க்கமாக ச்  சொன்னாள், கவலைப்படாதே, அகிலாவின் எல்லா சொத்தும் உனக்குத் தான். கூடிய சீக்கிரம் உனக்கு வேறு ஒரு திருமணம் முடிக்கலாம். அகிலா பாட்டுக்கு  நம் வீட்டிலேயே ஒரு பக்கம் இருக்கட்டும், ஏன் கவலைப்படுகிறாய்

தூக்கி வாரிப் போட்டது அமுதனுக்கு. எல்லாம் தெரிந்து. இப்படி ஒரு காரியத்தை செய்த தனது பெற்றோரை அவனுக்கு பார்க்கவும் பிடிக்கவில்லை. பேசவும் பிடிக்கவில்லை.  ..இப்படி ஒரு நாடகமா? உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு எனது வாழ்க்கையை விட பணம் தானே பெரியதுகத்தினான் ஆத்திரத்தோடு.

மிகத் தெளிவான குரலில் சொன்னான், அகிலா  எனது மனைவி இல்லை. நான் பெற்றெடுக்காத  மகள். அவளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம். இது எனது தெளிவான இறுதியான முடிவு புரிந்ததா என்று கேட்டான் அழுத்தம் திருத்தமாக

அகிலாவைக்  கை பிடித்து தனது அறைக்கு கூட்டிச் சென்றான் மிகுந்த அக்கறையோடு. அமுதன் மாறினான் ஒரு தாயுமானவனாய். காயம் போனது மாயமாய், மேலும் ஆகியது நேயமாய். அகிலாவிற்கு கிடைத்து விட்டார் இன்னொரு அப்பா.

நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று. முற்றிலும் ஏமாந்து போனவர்களாக அமுதன் பெற்றோர் அவனையே உற்றுப் பார்த்தனர். ரம்யா மட்டும் தனது அண்ணியைக் கனிவோடு பார்த்தாள்.

அமுதன்  பெற்றோரை அசைத்துப் போட்டது  அவனின் இந்த முடிவு. ஏனெனில் இது அவர்கள் கொஞ்சமும் எதிர்பாராதது.அவர்களின் சொத்து பற்றிய கனவில் இடி விழுந்தது


No comments:

Post a Comment