Wednesday, September 13, 2017

About Suicide

ஏழையாக இருத்தல் பாவம்...கோழையாக இருத்தல் பரிதாபம்
- டாக்டர் பாலசாண்டில்யன் - கல்வியாளர்/மனநல ஆலோசகர்
மதிப்பெண் பெற்றுத் தந்த மதிப்பு, நுழைவுத் தேர்வு பெற்றுத் தந்த அவமதிப்பு இரண்டிலும் சிக்கித் தவித்த ஓர் ஏழை அறிவாளி மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி தமிழகத்தை உலுக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.
200, 199 மற்றும் 194 என்று முக்கிய சப்ஜெக்ட்களில் மதிப்பெண் எடுத்து மொத்தம் 1200 க்கு 1176 என்று சான்றிதழ் பெற்றும் அவள் இலக்கினை அடைய முடியாது என்ற சூழல் வரும் பொழுது அதனை எப்படிக் கையாள்வது என்று இந்தக் கல்விமுறை கற்றுக் கொடுக்கவில்லையே. பிறகு என்ன பயன்?
வாழ்வில் எப்போதும் பிளான் ஏ மற்றும் பிளான் பி என்று இரண்டு இருக்க வேண்டும். ஹோட்டலுக்கு போய் இட்லி இல்லை என்றால் தோசை சாப்பிடுகிறோம். பஸ் கிடைக்கவில்லை என்றால் ஷேர் ஆட்டோ பிடிக்கிறோம். தல படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தனுஷ் படம் பார்க்கிறோம். ஏன் படிப்பில் காதலில் மட்டும் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் தற்கொலையில் இறங்குகிறோம்?
வாழ்ந்து காட்டுவது தானே சரியான பழி வாங்குதல் முறை? இறக்க எவ்வளவு துணிவு தேவையோ அதில் பாதி இருந்தால் வாழ்ந்து விடலாம். இளைஞர்களுக்கு ஏன் இது புரியவில்லை? கடந்த காலம் என்பது வேஸ்ட் பேப்பர், நிகழ்காலம் என்பது ஒரு நியூஸ் பேப்பர். எதிர்காலம் என்பது ஒரு கொஸ்டின் பேப்பர். எனவே ஒழுங்காக அதனை கையாளவில்லை என்றால் நமது வாழ்க்கை ஒரு டிஷு பேப்பர் என்று எங்கோ படித்த ஞாபகம்.
எதிர்பாராததை எதிர்பார் என்பர் வெற்றியாளர்கள். எல்லாமே நாம் எதிர்பார்த்தபடி நடக்க வாய்ப்பில்லை. ஒரு பொதுத் தேர்வு மூலம் தான் அட்மிஷன் என்று அரசு அறிவித்தால், அதனை எதிர்க்கும் சக்தி பொதுமக்களுக்கு இல்லை. நம்மால் கட்டுப்படுத்த முடியாத சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் நாம் இருக்கிறோம். இங்கே அரசு செய்தது சரி என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் சிலவற்றை நாம் மாற்றலாம். சிலவற்றை நம்மில் யாராலும் மாற்ற முடியாது. அப்படி மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வது தான் புத்தி சாதுரியம். அதனை நினைத்து வேதனைப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது வீரம் அல்ல. நிச்சயம் அது கோழைத்தனம்.
நாம் என்பது நமது இனம், மொழி, நிறம், சாதி, என்கிற பிறப்பு டேக் அடையாளமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நாம் என்பது நமது ஆற்றல், நமது லட்சியத்தில் வெற்றி, அகலாத வேட்கை, கடைசியில் நாம் யார் என்று காட்டும் அணுகுமுறை. அது தான் நம் வளர்ச்சியின் டேக் அடையாளம். இதனை புரிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.
ஒரு தோல்வி பெற்ற பொறியாளன் சிறந்த பாடகர் ஆனது, ஒரு பள்ளி இறுதியில் சரியான வெற்றி பெறாத ஒருவன் மிகச் சிறந்த விளையாட்டு வீரன் ஆனது, முழுதுமே பள்ளி செல்லாத ஒருவர் மிகச் சிறந்த நடிகராகி எல்லா மொழிகளும் பேசும் வளமை பெற்றது, சின்னத்திரை நடிகை தனது முயற்சியால் அமைச்சர் ஆனது என்று எல்லாமே இந்த ஒரு சில ஆண்டுகளில் நாம் கண்டது தானே. ஏன் கண் முன் இருக்கும் இந்த நல்ல உதாரணங்களை மனதில் போட்டுக் கொள்வதில்லை நம்மில் சிலர். படிப்பறிவு சற்றும் இல்லாத நபர்கள் இன்று வணிகம் செய்து மிகச் சிறந்த வெற்றியாளர்கள் ஆகி நம் முன் நிற்பது ஏன் தெரியவில்லை?
சவால்களை ஏற்று சமாளிக்க கற்றுத் தராத கல்வி, சரியாக அதனை சொல்லி வளர்க்காத பெற்றோர், முறையாக ஊக்கமளிக்காத ஆசிரியர், இளைஞர்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு, நடந்த பிறகு மட்டும் பேசும் சமூகம் இவர்களை யார் மாற்றப் போகிறார்கள்?
இன்றைய சூழலில் ஒரே கனவு, ஒரே லட்சியம் என்பதெல்லாம் நமது கையில் மட்டும் இல்லை. நம்மைச் சுற்றி உள்ள உலகோர் கையிலும் உள்ளது என்பதை துல்லியமாக புரிந்து கொண்டால் எந்தவித சவால்களையும் சமாளித்து மீளலாம். சுய மதிப்பு, தன்னம்பிக்கை, இவற்றில் கவனமாக இருத்தல் வேண்டும். கஷ்டப்பட்டு நல்ல மதிப்பெண் எடுத்து விட்டு உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்தில் ஞாயம்?
இவ்வளவு நாள் அன்பை அறிவை பரிவை ஊட்டி வளர்த்த பெற்றோர் மனம் என்ன பாடு படும்? யோசிக்க வேண்டும். பயிர் சாய்ந்தால் கூட அடுத்த பருவத்தில் திரும்பப் பெறலாம். உயிர் போனால்...?? நமது உயிரை நாமே மாய்த்துக் கொள்ளும் உரிமை யார் நமக்கு தந்தது? வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்? சும்மாவா சொன்னார் கவிஞர் இந்த வரிகளை? கேட்கிறோம். பார்க்கிறோம். ஆனால் சரியான ஒன்றை கற்கிறோம் இல்லை.
அறிவாளி அனிதாக்கள் அரிதாகவே பிறக்கிறார்கள். அரிதாம் இந்த வாழ்வை சட்டென முடிப்பது அறிவிலிகளின் செயலே. மதிப்பெண் அதிகம் பெற்றாலும் மதிப்பு பெற வாழ்ந்து காட்ட வேண்டும். புல், பூச்சி, பறவை, விலங்கு எதுவுமே தமது உயிரை மாய்த்துக் கொள்வதில்லை. ஏன் எதற்கு என்ற பகுத்தறிவு பெற்ற மனிதன் தான் இப்படிச் செய்கிறான்.
மதிப்பெண் தாண்டிய வெற்றி உலகை கண்டறிவதே புத்திசாலித்தனம். மனதிற்கு பிடித்தது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை அடைந்து அதில் சாதனை படைக்கிற மனிதன் தான் வெற்றியாளன். தோல்விகள் கண்டு துவளாத துணிவு தனை கற்றுத் தரும் கல்வியே இன்றைய தேவை. சகிப்புத்தன்மை, பிறரோடு ஒத்துப் போதல், தோல்விகளை எதிர்கொள்ளுதல், சரியான முடிவெடுத்தல் இவை எல்லாம் கற்றுத்தரும் கல்வியை எதிர்பார்ப்போம்.

No comments:

Post a Comment