Saturday, August 10, 2019

பயிற்சி வகுப்பு அனுபவங்கள்

பயிற்சி வகுப்பு அனுபவங்கள்

சுமார் எட்டு ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம். இன்று நினைத்தாலும் எனக்கு தூக்கி வாரிப் போடும். ஆச்சரியமானதொரு சம்பவம் அது.

சென்னையைச் சார்ந்த ஒரு தெர்மல் பவர் நிறுவனத்தின் சார்பாக சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா என்ற ஊருக்குச் சென்று அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு ஹிந்தியில் பயிற்சி கொடுக்கச் சென்றிருந்தேன். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தேன். 

ஒடிஷா - ஜார்ஸகுடா என்ற ஊரில் இரண்டு நாட்கள் பயிற்சி முடித்து விட்டு இரவு சுமார் எட்டு மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டோம் கோர்பா நோக்கி.  கார் டிரைவர் தமிழ்க்காரர் தான். நல்ல இளையராஜா பாட்டுகள் பல  போட்டு பயணத்தை இனிமையாக்கினார்.  உடன் வந்த மற்றொரு பயிற்சியாளர் ஒரு சில மணி நேரத்தில் களைப்புடன் தூங்கிப் போனார். நான் முன் சீட்டில் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டே பயணம் செய்தேன். வழி முழுவதும் கும்மிருட்டு. நடுவே திடீர் என்று 1000 வாட்ஸ் வெளிச்சம் தெரிந்தது. அது தான் ஜிண்டால் நிறுவனம் என்று டிரைவர் விளக்கினார்.

அந்த ஊரில் நமது உணவு கிடைக்குமா என்று கேட்டுக் கொண்டே போன போது 'சாம்பா' என்ற ஒரு ஊரின் லெவல் கிராஸிங் வந்தது. இயற்கை உபாதை நீக்கி ஒரு டீ குடித்து விட்டு மீண்டும் பயணம் தொடங்கிய போது அவர் சொன்னார், "கவலை வேண்டாம் கோர்பாவில் 'இந்தியன் காபி ஹவுஸ்' உள்ளது. அங்கே உங்களுக்கு இட்லி வடை தோசை எல்லாமே கிடைக்கும் என்றார். நாக்கில் நீர் ஊறியது.

நள்ளிரவு சுமார் 2.30 மணிக்கு ஊர் போய் சேர்ந்து ஹோட்டல் ரூமுக்குள் சென்று படுத்தோம். மறுநாள் பயிற்சி வகுப்பு காலை 10 மணிக்கு மேல்  தொடங்கும். அதே இடத்தில் கீழ் தளத்தில் இருந்த ஹாலில் என்றார்கள். 

மறுநாள் பயிற்சி அறையில் நுழைந்த பொழுது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்த துலுக்கன் சாமந்தி மாலை ஒன்றை கழுத்தில் போட்டு நெற்றியில் சந்தனத்  திலகம் கீற்றாக இட்டு வரவேற்றார்கள். பிறகு வகுப்பு தொடங்க எனது லேப்டாப் கனெக்ட் செய்து கொண்டேன். அந்த மேசையில் நடுவே கொறிக்க முந்திரி திராட்சை பாதாம் எல்லாம் வைத்திருந்தார்கள். வரவேற்பு பலம், ஏற்பாடுகள் பலம். மனம் துள்ளியது. 

வழக்கம் போல எல்லோருக்கும் வணக்கம் கூறி, ஹிந்தியில் ஒரு பிரார்த்தனை பாடல் லேப்டாப் மூலம் பாட வைத்து, பிறகு குத்துவிளக்கு ஏற்றி விட்டு, பிளான்ட் மேனேஜர் வரவேற்புரைக்கு பின்னர் பேச ஆரம்பித்தேன். "நண்பர்களே உங்கள் மொபைல் போனை சைலன்ட் மோட் அல்லது சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள்" என்றேன். உடனே ஒரு குரல் வந்தது "உங்களைப் பேச அழைத்து இருக்கிறார்கள். பேச பணமும் தருகிறார்கள். எதற்கு எங்களை இப்படி ஆணைகள் இட்டு கட்டுப்படுத்துகிறீர்கள், வந்த வேலையைப் பாருங்கள்". கேட்டதும் நான் சற்றும் மனம் தளராமல் பொறுமையாக புன்னகையோடு மேலும் பேசத் தொடங்கினேன்.

முன் வரிசையில் அமர்ந்து இருந்த ஒருவர் மிகவும் சிகப்பாக ஹிந்தி திரைப்பட நடிகரைப் போல இருந்தார். "உங்களை இது வரை எந்த தயாரிப்பாளரும் பார்க்கவில்லையா?" என்று கேட்டு எனக்கு போட்ட மாலையை அவருக்கு அணிவித்து அனைவரின் கைதட்டல்களை பெற்றேன். அவருக்கும் பெற்றுத் தந்தேன். அப்போது சற்று முன்பு பேசிய நபரின் போன் மணி அடித்தது. அவர் எடுத்து சத்தமாக பேசினார். மாறாத புன்னகையுடன் சற்று வெளியே போய் பேசி விட்டு வாருங்களேன் என்றேன். அதற்கு அந்த நபர், "உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எனது வேலையை நான் பார்க்கிறேன்" என்றார்.

அங்கே இருந்த பிளான்ட் மேனேஜர், எச்ஆர் மேனேஜர், மற்றும் சூப்பர்வைசர் மூவரும் மௌனமாக நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தனர். மூவரும் தமிழ்காரர்கள் தான். எனக்கு சூழல் புரிந்தது. சரி சமாளிப்போம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொண்டேன்.

நான் மீண்டும் அவரைப் பற்றி மனதில் 'வையாமல்' வகுப்பைத் தொடர்ந்தேன். கதைகள், விடீயோக்கள், சிற்சில எளிய விளையாட்டுகள் என்று வகுப்பு நகர்ந்தது. மீண்டும் அவர் போன் ஒலி கேட்டது. அவர் இன்னும் சத்தமாக அவர் இருக்கையில் அமர்ந்தவாறு பேசி வகுப்பை தொந்தரவு செய்தார். நான் யார் கழுத்தில் மாலை போட்டேனோ அவர் எழுந்து போய் அந்த நபரிடம், "சார் நமக்காக சென்னையில் இருந்து வந்து அருமையாக பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறார். உனக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியே போ என்று ஏக வசனத்தில் ஓரிரு கெட்ட வார்த்தைகள் சொல்லி கிட்டத்தட்ட அவரை கழுத்தைப் பிடித்து வெளியே அனுப்பி விட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வகுப்பை தொடரச் சொன்னார்.

ஐந்து நிமிடங்களில் தேநீர் இடைவேளை வந்தது. அங்கே இருந்த மூன்று மேனேஜர்களும் என்னை நோக்கி ஓடி வந்து எனது கையைப் பிடித்து "சார் உங்களுக்கு எப்படித் தெரியும் அவர் தான் இங்கே யூனியன் தலைவர் என்று... அவருக்கு சரியாக மாலை போட்டு கவனித்தீர்கள்?" என்று கேட்டனர். நானோ "எனக்கு என்ன தெரியும்....இதெல்லாம் எனது மனதில் 'அவன்' தோன்றி உணர்த்தி இருக்க வேண்டும்" என்றேன். அவர்கள் என்னை ஆச்சரியமாக பார்த்தனர். ஆம் இப்படி பலமுறை எனது இண்ட்டியூஷன் எனக்கு (உள்ளுணர்வு - தெய்வ வழிகாட்டல்) நடந்துள்ளது. அன்றும் அப்படியே நடந்தது. இருந்தாலும் அன்றைய அனுபவம் இன்றும் மறக்கவியலாதது. நன்றி கடவுளே. 




No comments:

Post a Comment