Monday, December 29, 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025- பரிசுக்கதைகள் தொகுப்பு நூல் (மொத்தம் 35 கதைகள்)

அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025- பரிசுக்கதைகள் தொகுப்பு நூல் (மொத்தம் 35 கதைகள்) முதல் பத்து கதைகள் பற்றிய எனது கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். அடுத்த பத்து கதைகள் (இரண்டாம் பரிசு பெற்றவை) பற்றி இங்கே காணலாம். 11. நதிமூலம் - அனந்த் ரவி மிகவும் நெருடலான ஒரு கதைப்பொருளை கதாசிரியர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. அதிலும் கதைநாயகியை கோவிலில் அம்மனுக்கு சார்த்தியிருந்த புடவைகள் ஏலத்தோடு பொருத்தி எழுதியது அவரது சாமர்த்தியம். நுட்பமாக வாசித்தால் கதை நன்கு புரியும். 12. வலியும் வழியும் - அனுராதா ஜெய்ஷங்கர் இன்றைய பதின்பருவப் பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள ஒரு கதை. உளவியல் சார்ந்து சொல்லப்படும் விஷயங்கள் இன்று பெரும்பாலான குடும்பத்தில் பல பெற்றோர்கள் சந்தித்து வருகிற விஷயமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இளந்தலைமுறைக்கு செல்ப் எஸ்டீம் குறைவாகவும், செல்ப் அதிகமாகவும் இருக்கிற விஷயம் இந்த கதை வாசித்தால் புரியும். நீண்ட ஓர் ஆய்வுக்கட்டுரை விஷயத்தை நல்லதொரு கதையாக அளித்துள்ளது எழுத்தாளரின் சாமர்த்தியம். 13. நதியின் ஓட்டம் - பாலசாண்டில்யன் (இது எனது கதை என்பதால் வேறு சிலரின் கருத்துக்களை இங்கே முன்வைக்க நினைக்கிறேன்) 1. "சார் பரிசளிப்பு விழா நடந்து வீடு போனதும் முதலில் படித்தது உங்கள் கதை தான். அத்தனை மனநிறைவு. வேறு கதை இன்று வாசிக்க வேண்டாம் என்று புத்தகத்தை மூடி வைத்தேன்" - திருமதி மஞ்சுளா சுவாமிநாதன். 2. "கதை நதி போல் நடந்தாலும் அது தூண்டும் உணர்வுகள் நெஞ்சில் அன்பு வெள்ளமாய் மனதில் பாய்ந்து ஓடுகிறது. புறாவால் பிரிந்த உறவை புறாவால் சேர்த்த விதம் அருமை. உறவைக் காத்த கிளியல்ல...புறா. உறவுகளின் அருமை இழந்த பின்பு தான் புரிகிறது சிலருக்கு என்பதை கதை அழகாய் புரிய வைக்கும் விதம் அழகு" திரு பத்ரம் ரமேஷ் எனும் ரெமோ 14. சேற்று மலர்கள் - பானுமதி கண்ணன் உண்மையில் திரைத்துறையில் என்ன நடக்கிறது என்று பாமர மக்கள் புரிந்து கொள்ளும் விதம் எழுதப்பட்டுள்ள கதை. அண்மையில் கூட 'நீயா நானா' நிகழ்ச்சியில் ஒரு சின்னத்திரை மாற்றும் சினிமா நடிகை இதே போல புலம்புகிறாள் "எத்தனையோ நடித்து விட்டேன்...அந்த ஷாட் எடிட் செய்வார்கள். அல்லது நீக்கி விடுவார்கள். இருந்தாலும் நான் நம்பிக்கை தளர மாட்டேன்" என்று பேசினார் அந்த நடிகை. அதே போல இந்த கதைநாயகியின் முடிவை கிளைமாக்ஸில் "புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது" என்கிற பழமொழி மூலம் சொல்லி இருப்பது மிகவும் சிறப்பு. 15. கேப்டன் குக் - துரை தனபாலன் கடல் மற்றும் கப்பல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இதைவிட ஒரு பாடம் போல யாராலும் சொல்லி விட முடியாது. கடல் பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத சூழல்கள் பற்றிய விஷயங்கள் மிகவும் நேர்த்தி. "கேப்டன் குக் எனும் அந்த மாபெரும் கடலோடியை வானியல் அறிஞனை ஆய்வாளனை கடற்கரையில் வைத்தே அந்தப் பழங்குடிகள் அடித்தும், குத்தியும் கொன்றார்கள்" என்ற வரிகளை வாசிக்கும் பொழுது நம்மை மீறி கண்களின் ஓரம் நீர் பனிக்கிறது. 16. அருள்வாக்கு - கணேஷ்ராம் "நீ ஏழையாக பிறந்து இருக்கலாம். ஆனால் ஏழையாக இறக்கக் கூடாது" என்று ஒரு அறிஞர் கூறினார். அதுபோல ஏழை மக்கள் மிகச் சொற்ப வாடகை கொடுக்க கூட எப்படி சிரமப்படுகிறார்கள். அவமானத்தை சந்திக்கிறார்கள் என்று விவரமாக சொல்கிறது இந்த கதை. அது மட்டுமா? முயற்சி பலிக்காத போது ஜோசியம், சாமியார் என்று மனம் தேடுகிறது. அங்கே சொல்லப்படுகிற பரிகாரங்கள் சில நேரம் ஏர்க்கமுடியாமல் இருக்கிறது. வேறு வழியின்றி மக்கள் அதனை மூட நம்பிக்கையோடு ஏற்கின்றனர் என்பதை தனக்கே உரிய நையாண்டி கலந்து கதையை நகர்த்துகிறார் ஆசிரியர். அந்த குகை முடிவில் நிச்சயம் வெளிச்சம் வரும் என்கிற நம்பிக்கை விதையை கடைசியில் லேசாக தூவுகிறார். 17. அக்னிக்குஞ்சு - லதா சுப்பிரமணியம் மன அழுத்தம், தாமதமான திருமணங்கள், உடற்கோளாறுகள், தவறான வாழும் முறை இவற்றால் பலருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் எங்கு பார்த்தாலும் செயற்கை கருத்தரித்தல் சம்பந்தமான மருத்துவமனைகள் காண்கிறோம். அது தான் இந்தக் கதையின் முதல் முடிச்சு. ஆனால் பயன்பாட்டாளருக்கு உதவும் பெண்கள் எந்த பின்புலத்தை சார்ந்தவர்கள் என்பதை இங்கே தோலுரித்து காட்டுகிறார் கதாசிரியர். அதிலும் பெற்றோரே எப்படி இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை வாசிக்கும் போது மனம் மிகவும் கனமாகிறது. நூலாசிரியர் இப்படி ஒரு கதைப்பொருளை நூலின் மீது நடப்பது போல கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. 18. அன்னபூரணி - நத்தம் சுரேஷ்பாபு "அது அவ குணம். மாத்த முடியாதுடா . நம்ம குணம் கொடுக்குற குணம். அவ ஈரக் கேழ்வரவாகவே இருக்கட்டும். ஆனா நான் சுரக்கிற பாத்திரம்...அதை என்னால மாத்திக்க முடியாது" இப்படி யார் யாரிடம் கூறுகிறார்கள் என்று அறிய நீங்கள் இந்தக் கதையை படிக்க வேண்டும். சிலர் பணமிருக்கும் குணமிருக்காது....சிலர் எதுவும் இல்லை என்றாலும் கூட அந்த ஈகை குணம் எப்போதும் இருக்கும். இப்படியான விஷயங்கள் இந்தக் கதையில் உண்டு. பிறர் சந்தோஷத்தில் இன்பம் காணும் அன்னபூரணிகள் இன்று அரிது என்றாலும் நிச்சயம் அப்படிப்பட்டவர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது என்று கதை வாசிக்கும் பொழுது தோன்றியது. இதில் வரும் கதைமாந்தர்களை நாம் நிச்சயம் நேரில் சந்தித்து இருக்கிறோம். 19. கோபுர வாசல் - எம் எஸ். பெருமாள் இன்று ஆத்திக நாத்திக அரசியல் கோவில்களில் மக்கள் மனதில் நுழைந்து இருப்பதை இந்தக் கதையில் வருகிற காட்சிகள், நடவடிக்கைகள் எல்லாமே மிகவும் நாசுக்காக அதே சமயம் நேர்த்தியாக அழுத்தம் திருத்தமாக பதிவாகி இருக்கிறது. கதாசிரியர் தமது அனுபவத்தில் இப்படியான எத்தனை விஷயங்களை கேட்டிருப்பார், பார்த்திருப்பார் என்பது அவர் எழுத்து நிதர்சனமாக எடுத்து முன்வைக்கிறது. அந்த கிராமத்து பேச்சு நடை, மக்களின் போக்கு எல்லாமே காட்சிகளாக கண்முன் விரிவது கதாசிரியரின் எழுத்தாற்றலை சான்றாக பறைசாற்றுகிறது. இதோ இன்று இந்த பதிவை எழுதும் நாள் அதே டிசம்பர் 31. கோவில்கள் திறக்குமா ...? புத்தாண்டு வாழ்த்துக்கள் 20. பெயர் தெரியாத பெண்மை - ரத்னமாலா புரூஸ் சிலர் மட்டும் தான் கதை சொல்லும் பொழுது வர்ணனை மூலம் பல விஷயங்களை காட்சிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறார்கள். கதைநாயகி மட்டுமல்ல கதையில் வருகிற ஒவ்வொருவரையும் நாம் நேரில் பார்க்கிற அனுபவம் இந்தக் கதையில் கிடைக்கிறது. நமது மனத்தீர்ப்பு அல்லது பிறர் பற்றிய மதிப்பீடு எப்போதும் சரியாக இருப்பதில்லை. கதையின் ஆரம்பத்தில் ஒரு நெகட்டிவ் பாத்திரமாக குறிப்பிடப்பட்ட ஒருவர் கடைசியில் நமது மனதில் விஸ்வரூபம் எடுத்து காக்கும் கடவுளாக காட்சி தருவது போல அமைந்து உள்ள கதை. கதை நீளம் என்றாலும், காட்சிகளின் மாட்சிமை நம்மை வியக்க வைக்கிறது. கண்ணால் காண்பதும் பொய்...காதால் கேட்பதும் பொய் என்கிற நீதி இந்த கதையில் உள்ளது. அடுத்த பகுதி வரும். இது எனது முகநூல் பகுதியிலும் எனது பிளாக்கிலும் கூட வாசிக்கலாம். Blog: shortcut : Bala's Desk Blog: visionunlimitedchennai.blogspot.com
அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025- பரிசுக்கதைகள் தொகுப்பு நூல் முதல் 10 கதைகள் பற்றிய எனது கருத்து: 1. குணவதியம்மாள் - ஆங்கரை பைரவி "காக்காவுக்கு பதிலா செத்தவங்களுக்கே சோறு போடுறத இன்னிக்குத் தான்பா பார்க்கிறேன்" என்று முடிகிற கதையில் குணமே இல்லாத பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய் குணவதியம்மாள் கதை வலிமையானது. வலி மிகுந்தது. 2. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து - பானுமதி சேர்ந்து ஏழடிகள் எடுத்து வைத்தாலும் இரு நாட்களில் தனியாக ஆறடிக்கு கீழே போனாள் கதாநாயகி. காலையில் மணம். மாலையில் மணமுறிவு. அவளுக்கேன் சிரார்த்தம் ....என் மனதில் நீங்காத கேள்வி. 3. குப்பை - கீதா கடாசும் வேலை பற்றி இத்தனை நகாசு வேலை சேர்த்து எழுத முடியுமா? 'ஆறு பெட்டிக் குப்பையை வெளியே தள்ளிட்ட... உன் மனதிற்குள் புதைந்து கிடைக்கும் குப்பையை எப்படி வெளியேற்றப் போற" (மனம் வெளுக்க வழியேயில்லை என்றான் பாரதி) தத்துவச் சாறு இந்தக்கதை. சுய ஆய்வில் அனைவரையும் தள்ளுகிறது. (கிட்டத்தட்ட இந்த சுப்ஜெக்ட்டில் எனது 'எங்கே நிம்மதி' என்று ஒரு கதை தினமணிகதிரில் வெளியானது. 4. எங்கிருந்தோ வந்தான் - எம் ஹாரி கிருஷ்ணன் மனிதர்கள் மனிதர்களாவது எத்தனை கஷ்டம் என்பதை யதார்த்த வாழ்வைப் புட்டுப் புட்டு வைக்கும் கதை. (மக்களே போல்வர் கயவர் என்று குறளாசான் அன்றே சொன்னான்) பெற்றோரை 'லக்கேஜாக' கருதும் விஷயத்தைப் புரிய வைக்கும் நல்ல கதை 5. இலையுதிர்காலம் - லோகு பிரசாத் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இன்று நிறைய குறும்படங்களும் திரைப்படங்களும் வருகின்றன. அப்படி ஜானகி தனது மாமியாரோடு சேர்ந்து மீண்டும் மெஸ் ஆரம்பிக்கும் முடிவோடு கிளம்புகிற காட்சி கதைக்கு உயிரூட்டுவது மட்டுமல்ல இளைய தலைமுறையின் உயிரை அசைகிறது. 6. உதிரத்தில் கலந்த உதிரம் - நெய்வேலி பாரதிக்குமார் உலக வரலாறு புரிந்தால் இந்தக் கதை எளிதில் புரியும். ராமன் கிருஷ்ணன் கதாபாத்திரங்கள் நமக்கு பரிச்சயம். விட்டலி ஸ்காகுவன் மற்றும் மிகயிலா என்கிற கதாபாத்திரங்கள் நம்மை கண்டம் தாண்டி கடத்திச் செல்கின்றன. திரில்லர் படம் போல ஒரு கதை. போராட்டம் தான் வாழ்க்கை என்று எண்ண வைக்கிறது. 7. ஈரம் - பரிவை குமார் ரயில் சிநேகம் வழியே 'அப்பா இன்னிக்கு கடல்ல கரைஞ்சி போயிருவாரு....அதுவரைக்கும் என் மடியில் இருக்கட்டுமே' என்று நம்மை ராமேஸ்வரம் கடலுக்குள் கொண்டு செல்லும் கதை. அழ வைக்கிறது. பாசமும் நேசமும் இன்னும் சாகவில்லை. 8. சுருதிபேதம் - வ வே சு இசையுலகில் ஏற்கனவே உண்மையாகவே இருக்கும் கலைஞன் இந்தக் கதையில் கதைமாந்தராக வலம் வருகிறான் என்பது இசையுலகை கவனிப்போருக்கு நிச்சயம் புரியும். அவன் விஸ்வேஸ்வரன். அவனை 'விஸ்வா ஆக்கி அவன் பெயரில் இருந்த ஈஸ்வரனை எடுத்துட்டேன் என்று குரு சொல்லும் இடத்தில் கதாசிரியரின் சித்து விளையாட்டு ரசித்து மகிழலாம். கதைநாயகன் தருகிற பேட்டி மூலம் தனது மன ஆதங்கத்தை இசை மீது இருக்கும் தனது மரியாதையை கொட்டித் தீர்க்கிறார் கதாசிரியர். கதையின் முடிவு அருமை. 9. மன்னிப்பாயா - வேல்முருகன் தந்தை மகன் இருவருக்கும் நடக்கும் உரையாடல்கள் தான் இந்தக்கதையின் மெயின் கோர்ஸ். யார் யாரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். என்ன காரணம் என்கிற சஸ்பென்ஸ் மற்றும் கதையின் கிளைமாக்ஸ் திரைப்படத்தில் வருவது போல எதிர்பாராத ஒன்று. பிரமாதமாக உள்ளது. இப்படியும் மனிதர்கள் என்று வாசிக்கும் பொழுது உணரலாம். 10. இலக்கணப்பிழை - விஜி சிவா 'அர்த்தநாரீஸ்வரராக மாறிய சிவனை வணங்குகிறோம். மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை வணங்குகிறோம். ஆனா இவங்களைப் பாத்தா மட்டும் ஒதுங்குறோம் ஏன் இந்த முரண்பாடுன்னு யோசிடா'....இந்த வசனம் தான் கதையின் அடிநாதம். கதைநாயகி கார்த்திகா எனும் திருநங்கையின் சிறந்த செயல்பாட்டை இந்த கதை எடுத்துச் சொல்கிறது. எனது பிளாகிலும் இதனைப் படிக்கலாம். Short cut to my blog: Bala's Desk Blog: visionunlimitedchennai.blogspot.com