Monday, December 29, 2025
அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025- பரிசுக்கதைகள் தொகுப்பு நூல்
முதல் 10 கதைகள் பற்றிய எனது கருத்து:
1. குணவதியம்மாள் - ஆங்கரை பைரவி
"காக்காவுக்கு பதிலா செத்தவங்களுக்கே சோறு போடுறத இன்னிக்குத் தான்பா பார்க்கிறேன்" என்று முடிகிற கதையில் குணமே இல்லாத பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய் குணவதியம்மாள் கதை வலிமையானது. வலி மிகுந்தது.
2. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து - பானுமதி
சேர்ந்து ஏழடிகள் எடுத்து வைத்தாலும் இரு நாட்களில் தனியாக ஆறடிக்கு கீழே போனாள் கதாநாயகி. காலையில் மணம். மாலையில் மணமுறிவு. அவளுக்கேன் சிரார்த்தம் ....என் மனதில் நீங்காத கேள்வி.
3. குப்பை - கீதா
கடாசும் வேலை பற்றி இத்தனை நகாசு வேலை சேர்த்து எழுத முடியுமா? 'ஆறு பெட்டிக் குப்பையை வெளியே தள்ளிட்ட... உன் மனதிற்குள் புதைந்து கிடைக்கும் குப்பையை எப்படி வெளியேற்றப் போற" (மனம் வெளுக்க வழியேயில்லை என்றான் பாரதி) தத்துவச் சாறு இந்தக்கதை. சுய ஆய்வில் அனைவரையும் தள்ளுகிறது. (கிட்டத்தட்ட இந்த சுப்ஜெக்ட்டில் எனது 'எங்கே நிம்மதி' என்று ஒரு கதை தினமணிகதிரில் வெளியானது.
4. எங்கிருந்தோ வந்தான் - எம் ஹாரி கிருஷ்ணன்
மனிதர்கள் மனிதர்களாவது எத்தனை கஷ்டம் என்பதை யதார்த்த வாழ்வைப் புட்டுப் புட்டு வைக்கும் கதை. (மக்களே போல்வர் கயவர் என்று குறளாசான் அன்றே சொன்னான்) பெற்றோரை 'லக்கேஜாக' கருதும் விஷயத்தைப் புரிய வைக்கும் நல்ல கதை
5. இலையுதிர்காலம் - லோகு பிரசாத்
உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இன்று நிறைய குறும்படங்களும் திரைப்படங்களும் வருகின்றன. அப்படி ஜானகி தனது மாமியாரோடு சேர்ந்து மீண்டும் மெஸ் ஆரம்பிக்கும் முடிவோடு கிளம்புகிற காட்சி கதைக்கு உயிரூட்டுவது மட்டுமல்ல இளைய தலைமுறையின் உயிரை அசைகிறது.
6. உதிரத்தில் கலந்த உதிரம் - நெய்வேலி பாரதிக்குமார்
உலக வரலாறு புரிந்தால் இந்தக் கதை எளிதில் புரியும். ராமன் கிருஷ்ணன் கதாபாத்திரங்கள் நமக்கு பரிச்சயம். விட்டலி ஸ்காகுவன் மற்றும் மிகயிலா என்கிற கதாபாத்திரங்கள் நம்மை கண்டம் தாண்டி கடத்திச் செல்கின்றன. திரில்லர் படம் போல ஒரு கதை. போராட்டம் தான் வாழ்க்கை என்று எண்ண வைக்கிறது.
7. ஈரம் - பரிவை குமார்
ரயில் சிநேகம் வழியே 'அப்பா இன்னிக்கு கடல்ல கரைஞ்சி போயிருவாரு....அதுவரைக்கும் என் மடியில் இருக்கட்டுமே' என்று நம்மை ராமேஸ்வரம் கடலுக்குள் கொண்டு செல்லும் கதை. அழ வைக்கிறது. பாசமும் நேசமும் இன்னும் சாகவில்லை.
8. சுருதிபேதம் - வ வே சு
இசையுலகில் ஏற்கனவே உண்மையாகவே இருக்கும் கலைஞன் இந்தக் கதையில் கதைமாந்தராக வலம் வருகிறான் என்பது இசையுலகை கவனிப்போருக்கு நிச்சயம் புரியும். அவன் விஸ்வேஸ்வரன். அவனை 'விஸ்வா ஆக்கி அவன் பெயரில் இருந்த ஈஸ்வரனை எடுத்துட்டேன் என்று குரு சொல்லும் இடத்தில் கதாசிரியரின் சித்து விளையாட்டு ரசித்து மகிழலாம். கதைநாயகன் தருகிற பேட்டி மூலம் தனது மன ஆதங்கத்தை இசை மீது இருக்கும் தனது மரியாதையை கொட்டித் தீர்க்கிறார் கதாசிரியர். கதையின் முடிவு அருமை.
9. மன்னிப்பாயா - வேல்முருகன்
தந்தை மகன் இருவருக்கும் நடக்கும் உரையாடல்கள் தான் இந்தக்கதையின் மெயின் கோர்ஸ். யார் யாரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். என்ன காரணம் என்கிற சஸ்பென்ஸ் மற்றும் கதையின் கிளைமாக்ஸ் திரைப்படத்தில் வருவது போல எதிர்பாராத ஒன்று. பிரமாதமாக உள்ளது. இப்படியும் மனிதர்கள் என்று வாசிக்கும் பொழுது உணரலாம்.
10. இலக்கணப்பிழை - விஜி சிவா
'அர்த்தநாரீஸ்வரராக மாறிய சிவனை வணங்குகிறோம். மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை வணங்குகிறோம். ஆனா இவங்களைப் பாத்தா மட்டும் ஒதுங்குறோம் ஏன் இந்த முரண்பாடுன்னு யோசிடா'....இந்த வசனம் தான் கதையின் அடிநாதம். கதைநாயகி கார்த்திகா எனும் திருநங்கையின் சிறந்த செயல்பாட்டை இந்த கதை எடுத்துச் சொல்கிறது.
எனது பிளாகிலும் இதனைப் படிக்கலாம்.
Short cut to my blog: Bala's Desk
Blog: visionunlimitedchennai.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment