Tuesday, December 29, 2015

Who Said the Owner Managers or Rich do not require training

யார் சொன்னது செல்வந்தர் மற்றும் தொழில் அதிபர்களுக்கு எல்லாம் தெரியும் என்று...!!??
(கோபத்தில் எழுதப்பட்டது இல்லை இந்தக் கட்டுரை. பலரை வாசித்து விட்டு எழுதுகிறேன், பல ஊர் காற்றை சுவாசித்து விட்டு எழுதுகிறேன் )

- மனதுக்குள் ஒரு விவாதம் - டாக்டர் பாலசாண்டில்யன்

ஊழியர்கள் மட்டும் 
- ஒழுங்காக நடந்து கொள்வதில்லை 
- சரியாக தகவலைப் பரிமாறுவதில்லை 
- தலைமைப் பண்புகள் இல்லை 
- நல்ல மனோபாவம் இல்லை 
- நல்ல பழக்கம் இல்லை 
- குடும்ப உறவுகளை போற்றுவதில்லை 
- குழந்தைகளை சரியாய் வளர்ப்பதில்லை 
- உடல்நலத்தை பேணுவதில்லை 
- வாழ்க்கை மற்றும் வேலையைப் பிரிக்கத் தெரியவில்லை 
- சமூகப் பொறுப்பு இல்லை 
- சேமிக்கும் குணம் இல்லை 
- குழுவாக பணி ஆற்றுவதில்லை 
- ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் இவற்றில் அக்கறை இல்லை 
- பிறருக்கு உதவுதது இல்லை 
இப்படி இன்னும் கூட நீளும் பட்டியலை பல செல்வந்தர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் சொல்வதை பகிர்வதை பார்க்க முடிகிறது.

அப்போது சிரிப்பும், வேதனையும் கலந்து வருகிறது எனக்கு ஒரு பயிற்சியாளனாக, மனநல ஆலோசகராக....!

யார் சொன்னது செல்வந்தர்களுக்கு மற்றும் தொழில் அதிபர்களுக்கு 
- எந்தப் பயிற்சியும் தேவை இல்லை  
- எல்லாம் தெரியும் என…

-  படிக்காத புத்தகம் இல்லை 
- கலந்து கொள்ளாத பயிற்சி வகுப்புகள் இல்லை 
- பழகாத நல்மனிதர் இல்லை 
சொல்கிறார்கள் சிலர். அப்படியா ?

இவர்கள் எல்லோரும் 
- கெட்ட பழக்கம் தெரியாதவர்களா?
- மனைவி மக்கள் மீது பாசம் கட்டுபவர்களா?
- பணம் தவிர இவர்கள் வேறு நிறைய விஷயங்கள் சிந்திக்கிறார்களா ?
- எல்லாப் புத்தகமும் - எல்லார் புத்தகமும் வாசித்து விட்டார்களா?
- ஆரோக்கியமாக மட்டும் தான் இருக்கிறார்களா?
- சக மனிதர்களை மிகச் சரியாகத் தான் நடத்துகிறார்களா?
- தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர்களா?
- தீர்க்கதரிசிகளா இவர்கள்?
- நண்பர்கள் வட்டம், உறவினர் வட்டம் எல்லோரையும் சமமாக பாவிக்கிறார்களா?
- நேர மேலாண்மை முற்றிலும் கடைபிடிப்பவர்களா?
- மன அழுத்தம் சற்றும் இல்லாதவர்களா?
- நன்கு தூங்கி நலமுடன் விழிப்பவர்களா?

நான் பார்த்துள்ளேன் :
- பிடி பிடியாக இவர்கள் மாத்திரை தின்பதை 
- புத்தகம் கையில் வைத்திருப்பதை 
- விலை உயர் கடிகாரம் அணிந்திருப்பதை 
- மற்றவரை ஏற இறங்க பார்ப்பவரை 
- தங்கும் இடங்களில் எது கிடைத்தாலும் அள்ளி தனது பெட்டியில் போடுபவரை 
- பிச்சைக் காரர்களை விரட்டுபவர்களை 
- குப்பை கூளங்களை எங்கு வேண்டுமானாலும் வீசுபவர்களை 
- மீட்டிங் என்ற பெயரில் அமிர்தம் பருகுவதை 
- மிருகம் போல ஓட்டுனரை, உணவு விடுதி ஊழியரை நடத்துவதை 
- வேலை பார்ப்பவரை சக்கையாக பிழிவதை 
- கடவுளுக்கு நெருக்கமானவர் போல் காட்டிக் கொள்வதை 

ஏன் இந்த முகமூடி? நான் கிழிக்க விரும்பவில்லை. அதற்காக இதை எழுதவும் இல்லை .

இவர்கள் பிறவி ஞானம் நிறைய பெற்று பிறந்தவர்களா?
தாராள குணம் மட்டும் கொண்டவர்களா?

சமூக அக்கறை மட்டும் தான் இவர்கள் மனதில் உள்ளதா? 

உண்மையில் அப்படித்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்றால், மன்னிக்கவும். எனது பார்வைக் கோளாறு தான் இதன் காரணம். வேறு இல்லை. 

உலகம் உய்ய தொழில் அதிபர்கள் செல்வந்தர்கள் தேவை. 
மாற்றுக் கருத்து இல்லை. 

ஆனால் உலகம் பலவித மக்களால் உருவானதே ! என்ன செய்வது?

உழைப்பவன், இரந்து கேட்பவன், வறியவன், திருடன், ஏமாளி, கோமாளி, ஏமாற்றுபவன், சேவை செய்பவன், உண்மையாவன், பக்திமான், முற்றும் துறந்தவன், என பலர் இருக்கும் போது இவர்களும் தானே சமூகத்தில் இணைக்கப்பட வேண்டியவர்கள்..??

மாற்றுக் கருத்து உங்களுக்கு இருக்கலாம். தவறில்லை. ஏற்கத் தயார். 
ஏற்பதில் தவறு இல்லை. இழப்பது எதுவும் இல்லை. 

என்னைப் பொறுத்த வரை எல்லோருமே தினம் தினம் கற்க வேண்டும்.
அதன் படி நிற்க வேண்டும். 
கற்பதற்கு சிறந்த பாடம் நமது வாழ்க்கை 

அனுபவம் தான் நமது ஆசான். 
தினம் கற்போம். 

உலகோரை நேசிப்போம். சமமாக பாவிப்போம். 

எல்லோரும் நலம் வாழ வாழ்த்துக்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நலமும் வளமும் பெருகட்டும். 


Saturday, December 12, 2015

Chennai Rains - Final part

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின் - நிறைவுப் பகுதி - (5)
டாக்டர் பாலசாண்டில்யன் 

அரசுக்கு என்னென்ன சவால்கள் என்று ஒரு எழுத்தாளனாக, பயிற்சியாளனாக, மன நல ஆலோசகராக, பிசினஸ் ஆலோசகராக, சமூக ஆர்வலராக யோசித்துப் பார்த்தேன். 

இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மத்திய அரசு கேட்ட அளவு நிவாரணத் தொகை வழங்கவில்லை. இன்னும் நிறைய பேருக்கு மாற்று வசிக்கும் இடம் ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது, குப்பை கூளங்கள் இன்னும் பல வீதிகளில் அள்ளப் படவில்லை. 

தாழ்வுப் பகுதி வசிக்கும் மக்களை அகற்ற என்ன செய்யலாம்? அவர்களை எங்கே கொண்டு பத்திரமாக வைக்கலாம்? எவ்வளவு சீக்கிரம் அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கலாம்? இயல்பு வாழ்க்கைக்கு அவர்களை எவ்வளவு விரைவில் திரும்பக் கொண்டு வரலாம்? 

சிக்கல் இல்லாமல் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கலாம்? இழந்த சான்றிதழ்கள், மற்றும் ஆவணங்கள் மக்கள் பெற்றிட எப்படி பணியை முடுக்கி விடலாம்? வங்கி கடன் வழங்க மற்றும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேலைகளை எப்படி துரிதப் படுத்தலாம் ? உடைந்து போன, சிதைந்து போன சாலைகளை எவ்வளவு சீக்கிரம் சரி செய்யலாம்? எந்த முக சுளிப்பும், புகாரும் இல்லாமல் மக்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை போன்றவை எப்படி வழங்கலாம்? அவதூறு பேசுகிறவர்களை எப்படி சமாளிக்கலாம்? 

மீண்டும் மழை பெய்தால் எப்படி முன் ஜாக்கிரதையாக இருக்கலாம்? 

தள்ளிப் போன பள்ளி, கல்லூரி பரிட்சைகளை எப்படி செவ்வனே நடத்தலாம்? இழந்த உற்பத்தி சேதங்களுக்கு எப்படி உழைத்து மீளலாம்? தடை இல்லா மின்சாரம் வழங்க, பெட்ரோல் காஸ் மக்கள் பெற எப்படி நடவடிக்கை எடுக்கலாம்? மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு எப்படி கவுன்செலிங் மூலம் ஆற்றுப்படுத்தலாம்? 

நனைந்து போன அரசு ஆவணங்களை எப்படி மீட்கலாம்? விரிசல் விட்டிருக்கும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இவற்றை எப்படி சீர் செய்யலாம்? 

ஏற்கனவே பெற்றிருக்கும் நிதி ஆதாரங்களை எப்படித் திட்டமிட்டு செலவு செய்யலாம்? இன்னும் எவ்வளவு நஷ்ட ஈடு மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும்? 

எல்லா அணைக்கட்டுகளின் நிலை என்ன? கால்வாய் நிலை எப்படி உள்ளது? விவசாயிகளின் இழப்பு எவ்வளவு? எவ்வளவு பயிர் நாசம்? 

முறையின்றி கட்ட்டப்பட்டுள்ள வீடுகளை எப்படி முறைப் படுத்தலாம்? ஏரி, குளங்களில் பிளாட் போட்டுள்ள நிறுவனங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்? 

மருத்துவ ரீதியாக முன் எச்செரிக்கை நடவடிக்கை என்னென்ன செய்ய வேண்டும்? இந்த பேரிடரில் எந்தெந்த இடங்கள் பாதிக்கப் பட்டன? அடுத்து இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அதனை எப்படி எதிர் கொள்ளலாம்? பிளாஸ்டிக் மற்றும் இயற்கை மாசு இவற்றை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வரலாம்? மக்கள் நம்பிக்கையோடு மீண்டு வந்து தமது வாழ்வை எப்படி எதிர் கொள்ளச் செய்யலாம்? இந்த இடர் சமயத்தில் ஏற்பட்ட மத நல்லிக்கணத்தை எப்படித் தொடரலாம்? நிதி அளித்து உதவிய தனி நபர்கள், நிறுவனங்கள், வேற்று மாநில அரசுகள் அவர்களுக்கு எப்படி நன்றி செலுத்தலாம்? 

பேரிடர் சமயத்தில் எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் போன்ற பயிற்சிகள் ஏற்பாடு செய்வது, இளைய சமூகத்திற்கு மழை மற்றும் இயற்கை குறித்த விஷயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்த ஆவன செய்தல், வலைத்தளம், மொபைல் இவை தாண்டிய மனித நேயம் கொண்ட வாழ்வை எப்படி வருங்கால சந்ததியர் வாழ வேண்டும் என்பதை எப்படி பள்ளிக் கூடங்களிலேயே எடுத்துச் சொல்லலாம் ? 

இப்படி இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இந்த ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது. நாம் பெற்றதை விட இழந்தது அதிகம் என்றால் மிகை ஆகாது. நிறைய முக்கியப் பிரமுகர்கள், கலைஞர்கள், இந்த ஆண்டு இயற்கை எய்தி இருக்கிறார்கள். வரும் ஆண்டு நல்லதாக அமைய, புத்தாண்டு மற்றும் பொங்கலை மக்கள் இன்முகத்தோடு எதிர்கொள்ள கூட்டுப் பிரார்த்தனைகள் நிறைய நடைபெற வேண்டும். எல்லோரும் இந்த இழப்பிலிருந்து மீண்டு புதியதொரு நல்ல வாழ்வினை ஏற்படுத்திக் கொள்ள அரசு, சமூகம், ஊடகம், நாம் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். 

Chennai Rain next part

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின் - பார்ட் 4
டாக்டர் பாலசாண்டில்யன் 

எதிர் வீட்டு மாமி, மாடி வீட்டு மாமி, பக்கத்து வீட்டு மாமி எல்லோரின் சாப்பாடும் சுவைத்து சாப்பிட்டு விட்டு நன்றி சொல்லி, வீடு சுத்தம் செய்யும் பணிகள், செய்து, அக்கம் பக்கம் உள்ள கடைக் கார நண்பர்கள், வங்கி கணக்கு இருக்கும் கிளையின் நண்பர்கள் எல்லோரையும் சந்தித்து நலம் விசாரித்து முடித்தாயிற்று. அடுத்து என்ன?

தனி மனிதப் பார்வை நீக்கி ஒரு பொறுப்புள்ள தனி மனிதனாக, சமூக அக்கறை உள்ளவனாக பார்க்கும் போது பல்வேறு விஷயங்களைக் காண நேர்ந்தது. மழை வெள்ளத்தில் பத்திரங்கள் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும், எந்த அலுவலகம் செல்ல வேண்டும், எப்படி நகல் சான்றுகள் பெற வேண்டும் போன்ற நல்ல செய்திகள் ஊடகங்கள் தரத் தொடங்கி விட்டது. 

இதற்கிடையில் ஏரி நீர் எப்படி ஏன் யாரால் திறக்கப்பட்டது என்ற விவாதங்கள் கூடவே தொடங்கி விட்டன. வெள்ளத்தில் எத்தனை டன் குப்பை அகற்றப் பட்டது? அவை எங்கே கொட்டப் படுகின்றன போன்ற விவரங்கள் தாண்டி அடுத்த வாரம் இன்னும் எப்படிப் பேரிடர் நிகழலாம், மறுபடியும் வெள்ளம் வருமா போன்ற பீதிகளும் கிளம்பி விட்டன. சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாடு எப்படி செய்ய வேண்டும்? போன்ற விஷயங்களும் அலசப் படுகின்றன. 

இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது எப்படி செய்யலாம்? அதற்கான இன்சூரன்ஸ் எப்படிப் பெறலாம்? இனி வரும் காலங்களில் வீட்டுப் பொருட்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் செய்து பலன் பெறலாம் ? வெள்ளப் பகுதிகளை நிறுவனங்கள் எப்படி தத்து எடுத்து உதவலாம்? வியாபாரிகளுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது ? மழை வெள்ளம் பாதிப்பு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு, வங்கிகளில் கணக்குத் துவக்கம், தண்ணீர்ல் நனைந்த ஆவணங்களை சான்றிதழை எப்படி காய வைத்து மீட்பது? நிவாரணப் பொருட்கள் வழங்குதலில் எப்படி ஒருங்கிணைப்பு செய்யலாம் ? புத்தகம் இழந்த பிள்ளைகள் அவற்றை எங்கே எப்படிப் பெறலாம்? டெங்கு போன்ற காய்ச்சல் வந்தால் எப்படித் தப்பிக்கலாம் ? சுங்க கட்டண சலுகை நீட்டிப்பு போன்ற நல்ல அறிவிப்புகள் இவை எல்லாம் ஊடகங்களில் வலம் வரத் தொடங்கி விட்டதே ஒரு நல்ல விஷயம் தான்.

பிற்காலத்தில் இப்படி ஒரு பேரிடர் வந்தால் என்ன செய்யலாம் - கைபேசிகளுக்கு பவர் பான்க் வாங்குவது, வீட்டிற்கு இன்வேர்ட்டர் போடுவது, லாண்ட் லைன் போன் ஒன்று வைத்துக் கொள்வது, முக்கிய நபர்களின் அலைபேசி எண்களை குறித்துக் கொள்வது, முக்கிய ஆவணங்களை எப்படி பத்திரப்படுத்துவது, இணையத்திலேயே எப்படி ஆவணங்களை பத்திரமாக வைப்பது, வீட்டில் ரொக்கமாக பணம் கொஞ்சம் வைத்துக் கொள்வது, பிளாஸ்டிக் பணத்தை மற்றும் ATM தனை முழுமையாக நம்பாமல் மாற்று ஏற்பாடு செய்வது, வீட்டு பொருட்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது, முக்கிய சில பொருட்களை வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்துக் கொள்வது போன்ற நல்ல யோசனைகளை மக்களுக்கு வழங்கத் தொடங்கி விட்டனர்.

புத்தக கண்காட்சி தள்ளி வைப்பு, இசைக் கச்சேரிகள் மாற்றி அமைப்பு போன்ற பற்பல விஷயங்கள் சென்னைக்கு ஒரு தனித் தெம்பாக தெரிகிறது. 

இதற்கு நடுவே கீழ் வீட்டில் குடியிருக்கும் பலர் தமது வீட்டை காலி செய்து கொண்டு இரண்டாவது அல்லது மூன்றாவது மாடிக்கு குடி போய் விட்டனர் எனபதைப் பார்க்க முடிகிறது. சிலர் சென்னை விட்டு தமது சொந்த ஊருக்கே திரும்பிப் போய் விவசாயம் செய்யப் போவதாக கிளம்பி விட்டனர். 

எதெல்லாம் ஸ்க்ராப் விலைக்கு கிடைக்கும் என்று ஒரு கூட்டம், வண்டி மற்றும் மோட்டார் ரிப்பேர் செய்ய ஒரு கூட்டம், வீடு சுத்தம் செய்து தருகிறோம் என்று ஒரு கூட்டம், வழக்கம் போல குடி கடையில் ஒரு கூட்டம், எல்லாம் பார்க்கும் போது இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விட்டனர் என்று தான் தோன்றுகிறது. சில வங்கிகள் வட்டி இல்லா தனி நபர் கடன் வழங்கலாம் என்ற செய்தி சிலருக்கு உற்சாகம் தருகிறது. சில நிறுவனங்கள் தமது ஊழியருக்கு வட்டி இல்லாக் கடன் வழங்க முன்வந்துள்ளதாக தகவல் கசிகிறது. பள்ளி கல்லூரி வரும் திங்கள் திறக்கலாம் என்ற செய்தி இருக்கும் போது பள்ளி கல்லூரி கட்டிடங்கள் எப்படி உள்ளன? நீர் கசிவு உள்ளனவா? துர்நாற்றம் இல்லாது இருக்கிறதா? பிள்ளைகள் அமரும் இடங்கள் சுத்தமாக இருக்கிறதா? கழிப்பறைகள் சுத்தப் படுத்தப்பட்டுள்ளனவா? 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் சிறப்பு வகுப்பு வைக்க வேண்டும் என்பன போன்ற திட்டங்களும் மனதில் எழுந்துள்ளன. 

இன்னும் சில விஷயங்கள் அடுத்த பதிவில்....