Saturday, December 12, 2015

Chennai Rain next part

அனுபவம் என்பது யாதெனக் கேட்பின் - பார்ட் 4
டாக்டர் பாலசாண்டில்யன் 

எதிர் வீட்டு மாமி, மாடி வீட்டு மாமி, பக்கத்து வீட்டு மாமி எல்லோரின் சாப்பாடும் சுவைத்து சாப்பிட்டு விட்டு நன்றி சொல்லி, வீடு சுத்தம் செய்யும் பணிகள், செய்து, அக்கம் பக்கம் உள்ள கடைக் கார நண்பர்கள், வங்கி கணக்கு இருக்கும் கிளையின் நண்பர்கள் எல்லோரையும் சந்தித்து நலம் விசாரித்து முடித்தாயிற்று. அடுத்து என்ன?

தனி மனிதப் பார்வை நீக்கி ஒரு பொறுப்புள்ள தனி மனிதனாக, சமூக அக்கறை உள்ளவனாக பார்க்கும் போது பல்வேறு விஷயங்களைக் காண நேர்ந்தது. மழை வெள்ளத்தில் பத்திரங்கள் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும், எந்த அலுவலகம் செல்ல வேண்டும், எப்படி நகல் சான்றுகள் பெற வேண்டும் போன்ற நல்ல செய்திகள் ஊடகங்கள் தரத் தொடங்கி விட்டது. 

இதற்கிடையில் ஏரி நீர் எப்படி ஏன் யாரால் திறக்கப்பட்டது என்ற விவாதங்கள் கூடவே தொடங்கி விட்டன. வெள்ளத்தில் எத்தனை டன் குப்பை அகற்றப் பட்டது? அவை எங்கே கொட்டப் படுகின்றன போன்ற விவரங்கள் தாண்டி அடுத்த வாரம் இன்னும் எப்படிப் பேரிடர் நிகழலாம், மறுபடியும் வெள்ளம் வருமா போன்ற பீதிகளும் கிளம்பி விட்டன. சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாடு எப்படி செய்ய வேண்டும்? போன்ற விஷயங்களும் அலசப் படுகின்றன. 

இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது எப்படி செய்யலாம்? அதற்கான இன்சூரன்ஸ் எப்படிப் பெறலாம்? இனி வரும் காலங்களில் வீட்டுப் பொருட்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் செய்து பலன் பெறலாம் ? வெள்ளப் பகுதிகளை நிறுவனங்கள் எப்படி தத்து எடுத்து உதவலாம்? வியாபாரிகளுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது ? மழை வெள்ளம் பாதிப்பு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு, வங்கிகளில் கணக்குத் துவக்கம், தண்ணீர்ல் நனைந்த ஆவணங்களை சான்றிதழை எப்படி காய வைத்து மீட்பது? நிவாரணப் பொருட்கள் வழங்குதலில் எப்படி ஒருங்கிணைப்பு செய்யலாம் ? புத்தகம் இழந்த பிள்ளைகள் அவற்றை எங்கே எப்படிப் பெறலாம்? டெங்கு போன்ற காய்ச்சல் வந்தால் எப்படித் தப்பிக்கலாம் ? சுங்க கட்டண சலுகை நீட்டிப்பு போன்ற நல்ல அறிவிப்புகள் இவை எல்லாம் ஊடகங்களில் வலம் வரத் தொடங்கி விட்டதே ஒரு நல்ல விஷயம் தான்.

பிற்காலத்தில் இப்படி ஒரு பேரிடர் வந்தால் என்ன செய்யலாம் - கைபேசிகளுக்கு பவர் பான்க் வாங்குவது, வீட்டிற்கு இன்வேர்ட்டர் போடுவது, லாண்ட் லைன் போன் ஒன்று வைத்துக் கொள்வது, முக்கிய நபர்களின் அலைபேசி எண்களை குறித்துக் கொள்வது, முக்கிய ஆவணங்களை எப்படி பத்திரப்படுத்துவது, இணையத்திலேயே எப்படி ஆவணங்களை பத்திரமாக வைப்பது, வீட்டில் ரொக்கமாக பணம் கொஞ்சம் வைத்துக் கொள்வது, பிளாஸ்டிக் பணத்தை மற்றும் ATM தனை முழுமையாக நம்பாமல் மாற்று ஏற்பாடு செய்வது, வீட்டு பொருட்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது, முக்கிய சில பொருட்களை வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்துக் கொள்வது போன்ற நல்ல யோசனைகளை மக்களுக்கு வழங்கத் தொடங்கி விட்டனர்.

புத்தக கண்காட்சி தள்ளி வைப்பு, இசைக் கச்சேரிகள் மாற்றி அமைப்பு போன்ற பற்பல விஷயங்கள் சென்னைக்கு ஒரு தனித் தெம்பாக தெரிகிறது. 

இதற்கு நடுவே கீழ் வீட்டில் குடியிருக்கும் பலர் தமது வீட்டை காலி செய்து கொண்டு இரண்டாவது அல்லது மூன்றாவது மாடிக்கு குடி போய் விட்டனர் எனபதைப் பார்க்க முடிகிறது. சிலர் சென்னை விட்டு தமது சொந்த ஊருக்கே திரும்பிப் போய் விவசாயம் செய்யப் போவதாக கிளம்பி விட்டனர். 

எதெல்லாம் ஸ்க்ராப் விலைக்கு கிடைக்கும் என்று ஒரு கூட்டம், வண்டி மற்றும் மோட்டார் ரிப்பேர் செய்ய ஒரு கூட்டம், வீடு சுத்தம் செய்து தருகிறோம் என்று ஒரு கூட்டம், வழக்கம் போல குடி கடையில் ஒரு கூட்டம், எல்லாம் பார்க்கும் போது இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விட்டனர் என்று தான் தோன்றுகிறது. சில வங்கிகள் வட்டி இல்லா தனி நபர் கடன் வழங்கலாம் என்ற செய்தி சிலருக்கு உற்சாகம் தருகிறது. சில நிறுவனங்கள் தமது ஊழியருக்கு வட்டி இல்லாக் கடன் வழங்க முன்வந்துள்ளதாக தகவல் கசிகிறது. பள்ளி கல்லூரி வரும் திங்கள் திறக்கலாம் என்ற செய்தி இருக்கும் போது பள்ளி கல்லூரி கட்டிடங்கள் எப்படி உள்ளன? நீர் கசிவு உள்ளனவா? துர்நாற்றம் இல்லாது இருக்கிறதா? பிள்ளைகள் அமரும் இடங்கள் சுத்தமாக இருக்கிறதா? கழிப்பறைகள் சுத்தப் படுத்தப்பட்டுள்ளனவா? 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் சிறப்பு வகுப்பு வைக்க வேண்டும் என்பன போன்ற திட்டங்களும் மனதில் எழுந்துள்ளன. 

இன்னும் சில விஷயங்கள் அடுத்த பதிவில்....

No comments:

Post a Comment