Wednesday, May 9, 2018

மந்தை மனநிலை

மான்களின் மனநிலை
- டாக்டர் பாலசாண்டில்யன் 

குடும்பத்தோடு வெகுநாள் கழித்து ஒரு திரைப்படம் காணச் சென்றனர் எனது நண்பரும் அவர் இல்லத்தாரும். படம் தொடங்கப் போகிறது. விளம்பரம் திரையில் ஓடிக் கொண்டு இருக்கிறது. தியேட்டரில் இவர்களைத் தவிர யாருமே இல்லை பால்கனியில். எனது நண்பரின் மகன் பால்கனி வழியாக கீழே எட்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம். அங்கும் யாருமே இல்லை. என்ன வினோதம். நமது குடும்பம் மட்டும் பார்க்கும் படமா? தப்பு பண்ணி விட்டோமா அப்பா? என்று கேட்டான். 

அட ஒரு ஹோம் தியேட்டர் மாதிரி நமக்கு மட்டும் ஒரு படம். யாரும் இல்லை நம்மை தொந்தரவு செய்ய என்று நினைக்கத் தோன்றவில்லை. ஏன் ஏனில் எப்போதும் முதல் சீன் அல்லது டைட்டில் போடும் போதே விசில் சத்தம் வரும். ஹீரோ அறிமுகம் போது கைதட்டல் மற்றும் விசில் சத்தம் கேட்கவும் வேண்டுமோ? அப்படித் தானே பழகி விட்டோம்...!!

படம் முடிந்து வீடு திரும்பியதும் எனக்கு போன் போட்டு புலம்பி விட்டான் என் நண்பன். ச ...என்னப்பா இது போல இதற்கு முன்பு பார்த்ததில்லை. யாருமே இல்லாத ஒரு தியேட்டரில் எப்படி படம் பார்ப்பது, பயந்து தான் போய் விட்டேன். கொஞ்சம் குழப்பமும் தான். நாம் வேறு படம் போய் இருக்கலாமே என்று. படம் நன்றாகத் தான் இருந்தது. ரசித்து பார்க்கும் மனம் சற்றும் இல்லை. இதை  மான்கள் அல்லது மந்தை மனநிலை தான் என்று சொல்லலாம்.

விலங்குகள் மட்டும் கூட்டம் கூட்டமாக இருப்பதில்லை. மனிதர்களும் தான். கூடி வாழும் இனமல்லவா நாம்? மக்களோடு மக்களாக இருக்கவே பெரும்பாலும் விரும்புகிறோம். சுற்றி இருப்பவர்கள் நமக்கு முன்பின் தெரியாத அந்நியர்கள் என்றாலும் அந்த ஒரு கூட்டத்தையே மனம் நாடுகிறது. இது தான் நமது இயல்பு.

இந்த மனோபாவம்  தியேட்டரில் மட்டுமல்ல. நாம் செல்லும் பிற இடங்களிலும் தான். உணவு உண்ண ஹோட்டல்கள் சென்றாலும், காலியாக இருக்கும் இடம் சென்று விட்டால், உணவு இங்கு நன்றாக இருக்காதோ, சேவை நன்றாக இருக்காதோ? ஏன் இங்கு கூட்டம் இல்லை. அப்படியே சாப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நன்றாக இருந்தாலும் நேற்று சமைத்ததோ இன்று சமைத்ததோ என்ற சந்தேகமும் கூடவே வருகிறது. 

மாறாக வேறு ஒரு ஹோட்டல் போகிறோம். அங்கு கூட்டம் அலை மோதுகிறது. நமது பெயர் கொடுத்து அரை மணி நேரம் கழித்து உள்ளே அழைக்கிறார்கள். வந்து ஆர்டர் எடுக்க மேலும் இருபது நிமிடம். எல்லோரும் நிறைய கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். நமக்கும் வருகிறது. பசியோடு உணவில் கை வைத்து ஒரு வாய் உண்டு பார்த்தால் ருசி ரொம்ப சுமார். நமது மனதில் கேட்கும் குரல், "வாயில் வைக்க வணங்கலை...எப்படி தான் இவ்வளவு கூட்டம் வருகிறதோ? விலையும் அதிகம், வந்தால் காத்திருக்கும் நேரமும் அதிகம். ஒன்றும் புரியவில்லையே!" கதவு அருகில், ஏன் கை அலம்பும் வாஷ் பேசின் அருகில் இடம் கொடுத்தால் கூட அமர்ந்து கொள்ளுகிற கூட்டம் பார்த்து குழம்பித் தான் போகிறோம். 

என்னவோ இருக்கிறது இந்த ஹோட்டலில். அது தான் இவ்வளவு கூட்டம் என்று விளக்கம் தரும் இளைய தலைமுறை. நாம் போன நேரம் தவறாக இருக்கலாம். அல்லது நாம் ஆர்டர் செய்த உணவு அயிட்டம் தவறாக இருக்கலாம். அதற்கு தான் பெரும்பாலான மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து அதையே நாமும் ஆர்டர் செய்ய வேண்டும் எனும் வேறு ஒரு இளைஞர். 

அதெல்லாம் இல்லை நான் ஏற்கனவே நெட்டில் மக்கள் போட்டுள்ள கமெண்ட் பார்த்து விட்டுத் தான் இங்கு உங்களை கூட்டி வந்தேன். இப்போது இந்த ஹோட்டல் தான் ட்ரெண்டிங். போன வாரம் கூட என் பிரென்ட் பிறந்த நாள் இங்கு நடந்தது. பேஸ்புக்கில் எவ்வளவு போட்டோ தெரியுமா? இது இன்னொரு குரல்.

இன்னொரு விஷயம் கவனிக்க நேர்ந்தது. விடுமுறைக்கு ஊர் செல்வது. அங்கு தங்கும் விடுதி அல்லது ஹோட்டல் சாய்ஸ். அது மட்டுமா? அங்கு வருபவர்கள் எல்லோரும் பெரிய மனிதர்கள். நாம் எல்லோருமே ஜீன்ஸ் டிஷர்ட் எடுத்துக் கொள்ளுவோம். அங்கு வருபவர்கள் அப்படித் தான் வருவார்கள். அப்படி இல்லை என்றால் குர்தா பைஜாமா போடலாம். சும்மா புடவை வேட்டி என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்.- இது வேறு ஒரு வீட்டில் அலசப்படும் விஷயம். 

ஆக இந்த மான் அல்லது மந்தை மனநிலை தான் ஐபிஎல் டிக்கெட் வாங்குவது, பிள்ளையை சிங்கப்பூரில் படிக்க வைப்பது, ஹனிமூனுக்கு மாலத்தீவு செல்வது, ஏன் திருமணத்தையே அந்தமானில் வைப்பது, நீட் எழுதச் சொல்லி மகனை தொந்தரவு செய்வது, கொஞ்சம் கால் வலித்தாலும் குறிப்பிட்ட ஒரு ஹாஸ்பிடல் செல்வது, மனக் குழப்பம் என்றால் அந்த சாமியாரிடம் செல்வது ...இப்படித் தான் எல்லோருமே ஒரு சின்னத்தில் ஓட்டு போட்டு அதே ஆசாமியை ஆட்சிக்கு கொணர்வது எல்லாமே. 

இந்த மந்தை நிலை சற்று மந்த நிலை கூடத்தான். கூட்டம் அதிகமாக அதிகமாக மூளை ஸ்தம்பித்து போய் யோசிப்பதையே நிறுத்தி விடுகிறது. சுய சிந்தனை, சொந்த கருத்து இவை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் புதிது தான். 

என்ன நான் தனியாக ஏதாவது பிதற்றுகிறேனா ...இல்லை மக்கள் கருத்தைத் தான் மனக் குரலைத் தான் சொல்கிறேனா? எழுதும் போது சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நான் மட்டுமே இருக்கிறேன். என்ன படித்து விட்டு லைக் அல்லது கமெண்ட் போடுவீர்களா? பார்க்கலாம் போஸ்ட் போட்டு விட்டு. சும்மா சொல்லி வைக்கிறேன் தாங்க்ஸ் என்று. 

Tuesday, May 8, 2018

ஒரு பக்கக் கதை

பிழைத்தது பணம் 
- ஒரு பக்கக் கதை 
- முனைவர் பாலசாண்டில்யன் - 0940027810

ராஜனுக்கு வயது 75 இருக்கும். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று விழுப்புணர்வுக்கூட்டங்கள் நடத்தி வாழ்வியல் மதிப்புகள் பற்றிய போதனைகளை சொல்லிவிட்டு வருவார். தினமுமே மனைவி செல்லத்திற்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்வார். வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பார். வீட்டிற்குச் சாமான்கள் வாங்கிப் போடுவார். உறவினர்கள் வீட்டிற்கு சில சமயம் சென்று வருவார். 

ஒரே பையன் வெளியூரில் வேலை. அவ்வப்போது வெளிநாடும் சென்று விடுவான். 

ஒரு சமயம் தனது பையன் ஊரிலிருந்து வந்திருந்த போது  வெகுநேரம் காலை பேசிக் கொண்டு இருந்து விட்டு தாமதமாக குளிக்கச் சென்றார். வெளியில் வரும் போது யாரோ தள்ளியது போல உணர்ந்து இடுப்பில் துண்டுடனே கட்டிலில் அமர்ந்து கொண்டார்.  கண்கள் சொருகுவது இருந்த அவரை  மனைவி செல்லமும் மகன் மகேஷும் அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்து கொண்டு சென்றனர். 

ராஜனை உள்ளே ஒரு படுக்கை வண்டியில் போட்டு தள்ளிக் கொண்டு விரைந்தனர். செல்லம் அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தாள். மகேஷ் தனது மாமாவிற்கு போன் செய்து விட்டு, அப்பா அட்மிஷன் செய்திட அங்கே கொடுத்த பேப்பரில் எழுதிக் கொடுத்து விட்டு பத்தாயிரம் பணமும் செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டான்.

மகேஷின் மாமா ஒரு சமூக ஆர்வலர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என்பதால் நேரே சென்று தனது உறவினரின் பெயர் சொல்லி அவர் எங்கே என்று வினவினார் . தனது அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு உள்ளே நுழைந்து விட்ட போது சில நர்சுகள், மற்றும் இரண்டு டாக்டர்கள் ராஜனை நெஞ்சில் குத்திக்கொண்டு இருந்தனர். ஒரு ஊசியும் போட தயாராக இருந்தனர். மகேஷ் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு நடப்பது என்ன என்ற விபரம் கேட்ட போது புரிந்து கொண்டான் ராஜன் அங்கே கொண்டு வரும் போதே இறந்து விட்டார் என்று. 

அடுத்த அரை மணி நேரத்தில் ராஜன் பொட்டலம் கட்டப்பட்டு சடலமாக ஒப்படைக்கப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டார். ஏற்கனவே கட்டிய பணத்தில் மீதி என்று மூன்றாயிரம் ரூபாய் என்று கொடுக்கப்பட்டது.

மாமன்  வருகையால் பொட்டலத்தோடு கிடைத்தது சில ஆயிரங்கள் மீதியாய். இல்லையேல் சென்றிருக்கும் சில லட்சங்கள் பீதியாய். பிழைத்த பணத்துடன் போய் விட்ட பிணத்துடன் கிளம்பினார் ராஜனின் மகன்.

ஒரு பக்க கதை

வர்ணாஸ்ரமம் - ஒரு பக்க கதை
டாக்டர் பாலசாண்டில்யன் 
9840027810

ஸ்ருதி வருண் இருவருக்கும் நிச்சயம் ஆனது சற்று நம்ப முடியாத விஷயம் தான். பெண் பார்க்கும் படலம் நடந்து கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இருவரும் பழகிப் பார்ப்பதாக முடிவு செய்தனர். 

தினமும் மாலையில் மால், சப்வே, ஐஸ் கிரீம் பார்லர், பார்க் பீச் என்று பல இடங்களில் அமர்ந்து பேசி விவாதித்து பின்னர் ஒரு வழியாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்ய அவரவர் வீட்டில் சொன்னார்கள்.

ஸ்ருதி ஒரு ஐடி கம்பெனியில் பெரிய போஸ்ட். வருண் சிஏ மற்றும் லா படித்து விட்டு சுயமாக ஒரு கம்பெனி நடத்தும் குறுந்தொழில் அதிபர். இருவருமே வீட்டுக்கு ஒரே குழந்தைகள். அவர்களுக்குள் ஒற்றுமை குறைவு. வேற்றுமை தான் அதிகம். அதுவே அவர்கள் இருவரும் இணைவதற்கு காரணம் என்பது கூட ஒரு விதத்தில் ஆச்சரியம் தான். 

அடுத்த வாரம் திருமணம். ஸ்ருதியிடம் இருந்து ஒரு போன் வந்தது வருணுக்கு. "வருண் ஒங்கூட கொஞ்சம் அர்ஜென்ட்டா பேசணும், வழக்கமா நாம மீட் பண்ற ஸ்பாட்டுக்கு வந்திடு". திருமணப் பத்திரிகையில் விட்டுப் போனவர்கள் பெயர் எழுதிக் கொண்டு இருந்தவன் திடீரென்று வெளியே புறப்பட்டதை கண்டு வருண் அம்மா சற்று குழம்பித் தான் போனாள்.

என்னப்பா ஏதாவது பிரச்சனையா என்று ஆரம்பிப்பதற்குள் வருண் தனது பைக் எடுத்து பறந்து போனான். 

திரும்பி வந்தான் அரை மணி நேரத்தில். முகத்தில் எந்தவித ஒரு மாற்றமும் இல்லை. இருப்பினும், "அம்மா எனது திருமணம் நடக்காது, அப்பாவிடம் நீ தான் சொல்லணும், காரணம் ஏதும் கேட்காதே" என்றான். வருணின் அம்மா சற்று பேய் அறைந்தது போல ஆனாள்.

வருண் ஒரு முதியோர் இல்லத்தில் டிரஸ்டி. அங்கே புதிதாக ஒரு வயதான ஜோடியை கொண்டு வந்து சேர்த்து விஐபி ரூம் ஒன்று ஏற்பாடு செய்து விட்டு கிளம்பினான். அங்கே மேனேஜரும் எந்த விவரமும் கேட்கவில்லை. 

எல்லாமே வருண் ஸ்ருதி சந்திப்பில் நடந்த விஷயம் தான். ஸ்ருதி சொன்னாள்,"வருண் என்னை ஒரு முக்கிய ப்ராஜெக்ட் விஷயமாக  ஆறேழு மாதங்களுக்கு ஆஸ்திரேலியா போகச் சொல்லுகிறார்கள். ஆகவே நமக்கு திருமணம் ஆன அடுத்த இரண்டு நாட்களில் நான் கிளம்ப வேண்டும். நீ உனது வீட்டில் இருக்காமல் எனது வீட்டில் தங்கி எனது அம்மா அப்பாவை பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றாள்.

வருண் வெகு நிதானமாக சொன்னான், "நாம் நல்ல நண்பர்களாக இருப்போம், இந்த திருமணம் நடக்காது. ஆனால் நீ கவலைப்படாமல் வெளிநாடு போய் வா, உனது அம்மா அப்பாவை நான் பார்த்துக் கொள்கிறேன்". ஸ்ருதி ஷாக் ஆகி விடவில்லை. சற்றும் அவளுக்கு சுருதி இறங்கவில்லை. தாங்க்யூ என்று புறப்பட்டு சென்றாள்.

அவளுக்குமே வருண் நடத்தும் முதியோர் இல்லம் பற்றி தெரியாது.

கடைசி வரை எதனால் திருமணம் நின்று போனது என்று வருண் யாரிடமும் சொல்லவில்லை. அதற்காக வருத்தப்படவுமில்லை. அவன் சிறு வயது முதலே எதற்கும் சந்தோஷமோ வருத்தமோ கொள்ளாத ஒரு சந்நியாசி போலத்தான். அவன் படித்த ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் அவன் கற்றுக் கொண்டது அது தான். 

திருமணம் நின்று போன விவரம் புரியாத ஸ்ருதியின் பெற்றோர் எத்தனை கேட்டும் வருண் எந்த விவரமும் சொல்லவில்லை. 

ஸ்ருதி பேதம் நடந்தது. ஆஸ்திரேலியா போன மூன்று மாதங்களில் வருணுக்கு ஒரு போட்டோ வாட்ஸ்ஆப்பில் வந்தது. அவளின் திருமண போட்டோ தான் அது. 

வழக்கம் போல அதையும் யாரிடமும் சொல்லவில்லை வருண்.

தோல்வி தரும் பாடங்கள்

தோல்வி தரும் பாடங்கள் வெற்றி தராது 
- டாக்டர் பாலசாண்டில்யன், மனநல ஆலோசகர் 

இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரி இறுதி தேர்வுகள் எழுதி முடிவுக்காக காத்திருக்கும் நேரம் இது. இந்த முடிவு வாழ்வின் அடுத்த முடிவுகளுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் சிலர் மேற்படிப்பு மற்றும் வேலைக்கு நுழைவுத் தேர்வு எழுதி இருப்பர். காத்திருக்கும் இந்த நேரம் எண்ணங்கள் எல்லாம் நடந்து போன தேர்வுகளின் முடிவுகள் பற்றியே இருக்கும். சிலருக்கு அது பயத்தை, குழப்பத்தை அல்லது அதைரியத்தை தரக்கூடும்.

வெற்றி பெற்று விட்டால் ஏற்படும் திருப்தி மற்றும் பெருமூச்சு நம்மை மெத்தனத்தில் கொண்டு சேர்த்து,  வாழ்வை வசதி வட்டத்திற்கு தள்ளி விடும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. நிச்சயம் வெற்றி தான் எல்லோருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை தோல்வி ஏற்பட்டால் துவண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் பெற்றோருக்கு, உறவினருக்கு, நண்பர்களுக்கு அல்லது வேறு யாருக்கோ உங்களை நிரூபணம் செய்வதற்காக தேர்வு எழுதவில்லை. 

அவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று பிறரை மனதில் கொண்டு அச்சப்பட்டு கவலைப்பட்டு அமர்ந்து விட வேண்டிய கட்டாயம் இல்லை. இதனை புரிந்து கொள்ளுதல் வேண்டும். 

வெற்றி நமக்கு கர்வத்தை, பெருமிதத்தை, அதீத நம்பிக்கையை தந்து விடும். அதுவே நமது அடுத்த நடவடிக்கையை கெடுத்து விடலாம். உதாரணத்திற்கு மிக நல்ல மதிப்பெண் பெற்று அருமையான கல்லூரியில் விரும்பிய படிப்பில் சேர்ந்து விடுகிறீர்கள் என்றால் அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை நிச்சயம் ஸ்லோ மோஷன் தான். 

மாறாக தோல்வியை சந்திக்க நேரிடுகிறது என்றால் அதில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். குறிப்பாக எது செய்ய வேண்டும் என்பதை விட எது செய்யக் கூடாது என்று கட்டாயம் எவருமே கற்றுக் கொள்ளுவர். அதையும் தாண்டி தோல்வி என்பது மிகவும் சிரமப்பட்டு, வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு அடுத்த அடியை எப்படி கவனமாக சரியாக திட்டமிட்டு எடுத்து வைக்க வேண்டும் என்று நமக்கு கற்றுத் தருகிறது. 

சட்டென்று கிடைத்து விட்ட ஒரு வெற்றியில் எந்த ஒரு 'த்ரில்'லும் இருக்காது. அண்மையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒரு ஊடகப் பேட்டியில் தோல்வி தான் எனது வாழ்க்கையை சீராக்கி இருக்கிறது என்று மிக உருக்கமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். பல சவால்களை தாண்டி அவர் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட தகவல் கிடைத்த பொழுது அவருக்கு அழுகை வந்ததாம், மயிர்க்கூச்சல் ஏற்பட்டதாம். தனது வீட்டு மக்களிடம் மிகுந்த தாழ்மையுடன் அந்த செய்தியை பகிர்ந்து கொண்டாராம். எனவே தோல்வியைத் தாண்டிய வெற்றி வரும் போது பணிவும் துணிவும் தானாகவே சேர்ந்து வருகிறது. 

கஜினி முகமது, தாமஸ் ஆல்வா எடிசன், பில் கேட்ஸ் ஆகியோர் தோல்வியை தழுவிய பிறகு வெற்றியை கண்டவர்கள். 

தோல்வியே வேண்டும் என்று தொழுதிட வேண்டாம். ஆனால் வெற்றி கிடைக்காத பொழுது அந்த சூழலை எப்படி 'பாசிட்டிவ்' மனப்பான்மையோடு எதிர்கொள்வது, அதில் இருந்து மீண்டு எழுவது, அடுத்த அடியை நம்பிக்கையோடு கவனமாக முன்வைத்து வெற்றியை பெறுவது இவை மிக முக்கியம். 

ஆயிரம் சீட்டுக்கள் இருக்கும் ஒரு வேலையோ படிப்போ உள்ள சூழலில் ஆயிரம் பேருக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்கள் தோல்வி பெற்றவர்கள் கிடையாது. 'பிளான் பி' என்று சொல்லக்கூடிய அடுத்த திட்டம் ஒன்றை கையில் எடுத்து அதில் வெற்றி பெறப் போகிறவர்கள். மருத்துவம் இல்லை என்றால் அடுத்து என்ன? பி காம் இல்லை என்றால் அடுத்து என்ன என்று மாற்றுத் திட்டம் ஒன்று கையில் வைத்திருங்கள். உங்கள் வெற்றி எங்கோ ஓர் இடத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆல் தி பெஸ்ட். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். 

சாலை பாதுகாப்பு வாசகங்கள்

சாலை பாதுகாப்பு வாசகங்கள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

வளைவில் முந்தாதே ....விளைவில் வருந்தாதே 

அதிக வேகம் ஆபத்தில் முடியும் 
ஆய்ந்து பார்த்தால் அர்த்தம் புரியும் 

சராசரி வேகமே நல்லது - அப்போது தான் 
நம் உயிர் நம்மது 

தலைக்கவசம் அணிவது விதி 
தவறினால் நடப்பது தலைவிதி 

விதிகளை மறந்த பயணம் 
விதியின் பயணம் மறக்காதே 

விவேகம் தருவது எதிர்காலம் 
வேகம் தருவது இறந்தகாலம் 

முகம் பார்க்க முந்துவதால் 
மிஞ்சுவது சோகம் 

முந்துவது வாழ்வில் இருக்கட்டும் 
வீதியில் எதற்கு 

கைபேசி விதவை ஆகலாமா?

கைபேசி விதவை ஆகலாமா?

- டாக்டர் பாலசாண்டில்யன் - மனநல ஆலோசகர் 

உங்களை விட அதிகமாக லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் இவற்றில் அதிக நேரம் செலவிடுகிறாரா உங்கள் கணவர்...பெண்களே உஷார்! ஒரு காதல் ஒழிஞ்சிச்சோ ஒரு காதல் செத்துச்சோ?

இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின் கவனத்தைத் திருப்ப சற்று சிரமம் தான். வீட்டில், வெளியில், ஹோட்டலில், டிவி பார்க்கும் பொழுது, நாம் பேசும் பொழுது, ட்ரிங் ஓசை கேட்டு போனை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு மெசேஜை மட்டும் பார்த்து விட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாரா என்றால் இல்லை என்பது தான் பதில். ஏன் எனில் போனை கையில் எடுத்தவுடன் அடுத்து அடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை. 

உள்ளங்கை அளவில் ஒரு எதிரி என்றால் அது ஸ்மார்ட் போன் தான். நம்மை அவர் கவனிக்கவில்லை என்பதை விட நம்மை அவர் ஒதுக்கி வைத்து விட்டார் என்ற உணர்வு சில நேரம் தலை தூக்குகிறது. நீங்கள் ஒரு கணவன் இருந்தும் கைவிடப்பட்ட கைபேசி கைம்பெண் ஆகலாமா?

சில நேரம் சில பெண்கள் கேட்கிறார்கள்? நமக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகி உள்ளன. இப்போது தான் நமக்கு ஒரு குழந்தை பிறந்து உள்ளது. எப்படி சிரிக்கிறது பாருங்கள்? அப்படி என்ன தான் இந்த சனியன் போனில் உள்ளது? ஆரம்பிக்கிறது ஓர் உரையாடல்.

பட்டென்று வருகிறது பதில். இவ்வளவு நேரம் எனது பாஸ் உயிர் எடுத்தான். இப்போது தான் உலகத்தில் என்ன நடக்கிறது, எனது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்று கூட பார்க்க எனக்கு உரிமை இல்லையா? நேற்று நமது திருமண நாள் போட்டோ முகநூலில் போட்டிருந்தேன். யார் என்ன சொல்லி வாழ்த்தி இருக்கிறார்கள் ..உனக்கு அதில் விருப்பம் இல்லையா?

சில கணவர்கள் காதில் இப்படி விழுகிறது. நீங்கள் பேசாமல் என்னை திருமணம் செய்து கொண்டதற்கு பதில் இந்த போனை கட்டிக்கொண்டு இருக்கலாமே? என்னை ஏன் உயிர் எடுக்கிறீர்கள்? 

மனநல ஆலோசகர்களிடம் பெரும்பாலும் பெண்கள் சொல்லும் புகார் என்ன தெரியுமா? என் கணவர் முன்பு போல இல்லை. என்னிடம் இப்போது அதிகம் பேசுவது இல்லை. சாப்பாடு, உறக்கம், செல்போன், ஆபீஸ் இது தான் அவர் உலகம் என்றால் நான் எதற்கு இடையில்? 

ஆனால் பெண்களும் இப்படி ஆகி வருவதும் பார்க்க முடிகிறது. ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டால் வேறு எங்காவது சந்தோஷம் கிடைக்குமா என்று தேடவும் நேரிடுகிறது. இது ஆபத்தானது. 

மனக்கிலேசங்கள் வரும் பொழுதே உரையாடல் மூலம் அவற்றை சரி செய்ய வேண்டும். மனதில் போட்டு புதைத்து வைத்தால், பிறகு சிக்கல் அதிகமாகும். இருவருமே வேலை பார்க்கும் இன்றைய நாட்களில் உணவு, காய்கறி, வீட்டு சாமான், காஸ் புக்கிங், பண பரிவர்த்தனை இவற்றிற்காக கையில் எடுக்கும் போன் கீழே வைக்கப் படுவதில்லை. ஏனெனில் அதில் தான் நேரம் பார்ப்பது, பாட்டு கேட்பது, போட்டோ எடுப்பது, டிவி ரிமோட், வீடியோ பார்ப்பது, மெயில் செக் செய்வது, எல்லாம் நடக்கிறது. யாரை இங்கே குற்றம் சொல்வது? தொழில்நுட்பம் இயல்பு வாழ்வை சாகடித்து விட்டது. 

பெண்களே நானும் முக்கியம், கையில் இருக்கும் அந்த போனும் முக்கியம் என்று மெதுவாக அன்பாக அழகாக பேசிப் புரிய வையுங்கள். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள். பிறகு இழந்த நேரத்தை இளமையை வாழ்க்கை இன்பங்களை திரும்பப் பெற முடியாது. 

இன்று வேலை வாழ்க்கை போன் இவை மூன்றையும் மிகச் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு புத்தி சாதுரியம் மட்டும் போதாது. இழந்த தருணத்தை கரணம் போட்டாலும் திரும்பப் பெற முடியாது. இருக்கும் நமது நேரத்தில் உண்பது, உறங்குவது, வேலை பார்ப்பது, பயணிப்பது, பொழுது போக்கிற்காக டிவி பார்ப்பது, நண்பர்களோடு பேசுவது, உறவினர் இல்லம் செல்வது, பிரார்த்தனை, உடற்பயிற்சி, தியானம், பாட்டு கேட்பது, குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது, குடும்பத்தோடு வெளியே செல்வது, திட்டமிடுவது, பெற்றோரோடு பேசுவது, அழகு ஆரோக்கியத்தை காப்பது, சமூக பொறுப்புகள் ஏற்பது, தொழிலை மேம்படுத்துவது, இடையே சற்று காதல் செய்வது எல்லாமே தான் அவசியம். அதற்கு அந்தந்த செயல் அந்தந்த தருணத்தில் என்பது போல சரியான நேரம் ஒதுக்கி நேர மேலாண்மையோடு செயல்படுதல் அவசியமாகிறது.

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் காதல் காமம் அன்பு கருணை எல்லாவற்றிற்கும் சற்று நேரம் ஒதுக்க வேண்டும். இல்லையேல் மன முறிவு மற்றும் மண முறிவு இரண்டுமே தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். கவனம் தேவை மக்களே.உங்கள் போன் உங்கள் கையில். அதே போல உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். ஆல் தி பெஸ்ட். 

விடை தருவார் யாரோ?

நாமென்ன ஒட்டு வங்கி மட்டுந்தானா ? (விடை தருவார் யாரோ?)

ஏன் இப்படி நடக்கிறது? நம்மை சாதியாலும் மதத்தாலும் பிரிக்க நினைக்கும் நாடகம் தினம் தினம் அரங்கேறுகிறது. பேசும் எல்லாவற்றிலும் மதங்கள், இனங்கள், பிரிவினைகள் பற்றியே இருக்கின்றனவே. நினைத்தாலும் புரியவில்லை இவர்கள் நோக்கம். நெடுநாட்களாக நமக்கு சொல்லித் தரப்பட்டவை இவை தானா ? யார் சொல்லி இப்படி நடக்கிறது? யாருடைய உள்நோக்கம் இது? ஒரு வினாடி நின்று நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும். 

கிறித்துவர்கள் அனைவருமே மத மாற்றம் செய்ய வந்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோருமே கெடுதல் செய்பவர்கள், ஹிந்துக்கள் எல்லோரும் நாட்டை உலகை ஆளப் புறப்பட்டு விட்டார்கள்? எங்கிருந்து கிளம்பியது இந்த சித்தாந்தங்கள்? கிளப்பி விடக்கூட ஓர் அளவு வேண்டும் அல்லவா ?

எப்போது கடைசியாக ஓர் அரசியல்வாதி மிகவும் நாகரீகமாக பேசியுள்ளார்? நினைவில் உள்ளதா? நமது வேலை, விவசாயிகள், பொருளாதர வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை, நீராதாரம், அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, மக்களின் சிரமங்கள் பற்றி? நமது அமைச்சர்கள், முதல்வர்கள், அதிகாரிகள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக் கொண்டு இருக்கும் நிலையை  தானே நாம் தினம் தினம் வேடிக்கை பார்க்கிறோம்?

அன்றாடம்  வங்கிகள் பணம் இழந்த கதை, தொழிலதிபர்கள் ஓடிப் போன கதை படிக்கிறோம். யாருடைய பணம் அது ? நமது தானே? உண்மையான கவலை உள்ள ஒருவரை காண முடிகிறதா?

அரசாங்கம் நமக்கு தர வேண்டியது கல்வி, மருத்துவம், சுத்தமான நீர் மற்றும் உணவு. யார் இவற்றைப் பற்றி பேசுகிறார்கள்? யார் கவலைப் படுகிறார்கள்? மிகப் பெரிய செல்வந்தருக்கு கூட நல்ல கல்வி, நல்ல உணவு, நல்ல குடிநீர், சுத்தமான காற்று இல்லை. இது தான் இன்றைய நிலை. இது மிகைப்படுத்தப் பட்ட விஷயம் இல்லை. உண்மை. யதார்த்தம். ஆனால் தினந்தோறும்  ஊடகங்களில் பேசப்படுவது நமது வித்தியாசங்கள், பிரிவினை, மக்கள் செய்யும் போராட்டங்கள், ஏமாற்று விளையாட்டுகள், நடிகர் நடிகையர் விஷமங்கள்  பற்றித் தான். 

மழையை மழையாக யார் பார்த்தார்கள்? காட்டை மரத்தை இயற்கையை யார் கவனித்தார்கள்? சிலைகளுக்கு மாலைகள், பேசி வைத்தவர்களுக்கு விருதுகள் என்று ஒருபுறம், வரி கட்டினாலும், சட்டங்களுக்கு கட்டுப்பட்டாலும், கஷ்டப்பட்டாலும் மனிதனை மனிதனாக இங்கே யார் பார்க்கிறார்கள்? ஒட்டு அடிப்படை எண்ணிக்கையாக தான் பார்க்கிறார்கள்? ஓட்டளிக்க சொல்லி வாட்ஸ் அப் செய்திகள், காகித மடல்கள், சுவரொட்டிகள், தொலைபேசி அழைப்புகள்  எல்லாம் வருகிறதே!

இவர்கள் பேச்சை எப்போது நாம் புறந்தள்ளப் போகிறோம்? நமது மத இன உணர்வை வியாபாரமாக மாற்றும் இவர்களை நாம் ஒதுக்கி வைக்க முடியுமா? காற்று மற்றும் நீர் மாசுபடுதல், நீராதாரங்கள் அழிக்கப் படுதல், மணற்கொள்ளைகள், தனிநபர் சொத்து பறிப்பு, முறையற்ற கல்வி வழங்கப்படுதல், கலப்படம், கற்பழிப்பு, கொலை, இவற்றை எப்போது குறைக்கப் போகிறார்கள்? 

இறக்கும் குழந்தைகள், வேலை இல்லா இளைஞர்கள், ஏமாற்றும் நிறுவனங்கள், லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள், கல்வி மற்றும் மருத்துவத்தில் வணிகம், அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராம மக்கள், அடுத்த சந்ததியர் படவிருக்கும் மத இன சிக்கல்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல்கள், குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் சுரண்டல்கள், இவற்றை பற்றி நோக்காமல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தல் மட்டுமா இவர்கள் வேலை?

விழித்து எழும் வேளை வந்து விட்டது. நம்மை நாமே உணர்ந்து புரிந்து கொள்ள...நாம் ஒன்றும் வெறும் ஓட்டுச்சீட்டு அல்ல. ஒட்டுமொத்த தேசமே நாம் தான். நமக்காக தான் இவர்கள். நம்மால் தான் இவர்கள். நாற்காலி ஏறும் முன்பு ஒரு பேச்சு, ஏறிய பிறகு வேறு பார்வை, பேச்சு இதற்கு வைக்க வேண்டும் முற்றுப்புள்ளி. இவை எல்லாம் சரியானால் தேசம் நமக்கு. இல்லையேல் சேதம் நமக்கு. யார் செய்யப் போகிறார்கள் இதற்கு வைத்தியம்? யார் தரப்போகிறார்கள் இதற்கு தீர்வு? யார் வந்து இதனை சீர்செய்யப் போகிறார்கள்? கேள்விகள் பல உண்டு. விடைகள் தான் இல்லை இங்கு.