Sunday, June 27, 2021

நீங்கா நினைவலைகள் - 2

 நீங்கா நினைவலைகள் - 2

- பாலசாண்டில்யன்
சில நினைவுகள் அவ்வளவு முக்கியமானதாக இருக்காது. இருந்தாலும் அது நமது நெஞ்சை விட்டு அகலாது.
நான் படித்த சாரதா நடுநிலைப் பள்ளியில் உணவு நேரத்தில் எப்போதும் சாப்பிட்டு முடிந்த பிறகு எனது வகுப்பு இருந்த முதல் மாடியில் என் வகுப்புக்கு அடுத்த அறை. அங்கு சில ஆசிரியர்கள் அமர்ந்து சின்ன அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். அதற்கு அடுத்த அறையில் எனது மிகவும் பிடித்த ஆசிரியர் விட்டல் ராவ் சார் படுத்து சற்று ஓய்வு எடுப்பார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். "வா பாலு" என்று என்னை அழைத்து அவர் வயிறு மீது உட்காரச் சொல்லி ஏதாவது சின்ன பாட்டு பாடச்சொல்லி கேட்பார். மதிய நேர மணி அடித்ததும் நான் எனது வகுப்புக்கு விரைவேன். விட்டல் ராவ் சாரின் அந்த அன்புக்கு அடுத்த நாள் நான் காத்திருப்பேன். என்னுடைய நெருங்கிய உறவினர் போன்ற உணர்வைத் தந்தவர் அவர்.
இன்னொரு விஷயம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். இப்போதெல்லாம் பெரிய பள்ளிகளின் முன்பு பேக்கரி, ஜூஸ் மற்றும் ஐஸ் கிரீம் கடைகள் உள்ளன. சில சமயம் பள்ளிகளிலேயே கான்டீன் வைத்திருக்கிறார்கள். அன்று அப்படி இல்லை. அங்கே படிக்கும் பிள்ளைகள் எல்லோருமே நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் தான். அதற்கேற்ற சில விஷயங்கள் எப்படியோ மதிய சாப்பாட்டு இடைவெளி நேரத்தில் சில திடீர் தெருவோர கடைகள் முளைத்திருக்கும். அங்கே வேர்க்கடலை, கொடுக்காப்புளி, இலந்தைப்பழம், பால் ஐஸ், மிளகாய் பொடி உப்பு தடவிய கிளி மூக்கு மாங்கா பத்தைகள், மிட்டாய்கள், கடலை மிட்டாய், தவிர கையில் கடிகாரம் போல கட்டி விடும் (மூங்கில் கம்பு ஒன்றில் இருந்து ஜவ்வு போல பிடித்து இழுத்து அறுத்து ) ஒரு விதமான மிட்டாய் எல்லாம் விற்பர். என்னிடம் கையில் காசு இருக்காது. ரொம்ப அரிதாக என் வகுப்புத் தோழர்கள் பால் ஐஸ் வாங்கித் தருவார்கள்.
எனக்கு மிகவும் பிடித்தது பால் ஐஸ் மற்றும் அந்த கடிகார ஜவ்வு மிட்டாய். ஒரு நாள் வீட்டை விட்டு கிளம்பும் போது கீழே ஒரு பத்து பைசா காசு கிடைத்தது. கீழே கிடக்கும் காசை எடுக்கக் கூடாது என்று எனது பாட்டி சொல்லுவது உண்டு. இருந்தாலும், ஏதோ தவிர்க்க முடியாத அந்த ஆசையில் எடுத்து விட்டேன். காலை வகுப்பு எப்போது முடியும். தெருவைத் தாண்டி இந்த பத்து காசை வைத்து பால் ஐஸ் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆவலில் அந்த நாள் முழுதும் படிப்பில் கவனமே செல்லவில்லை. அந்த நேரமும் வந்தது, நானும் வேகமாக வட்ட நிலா சோற்றை முடித்துக் கொண்டு விட்டல்ராவ் சாரைக் கூட பார்க்கப் போகாமல் தெருவை கிராஸ் செய்து ஓடிப் போய் பால் ஐஸ் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். உடல் நடுங்குகிறது எனக்கு. எனது உறவினர்கள் யாரேனும் (அதே பள்ளியில் படிப்பவர்கள் தான் நேற்றே சொன்னது போல) பார்த்து விடப் போகிறார்கள் என்று. அந்த ஐஸ் நிச்சயம் ருசியாகவே இல்லை என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ ?
எனது வகுப்பு ஜி செக்ஷன். ராமமூர்த்தி சார் பையன் பாஸ்கர், ஜி ஆர் கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, சாந்தி, எஸ் பி உஷா இப்படி எல்லோருமே அதி புத்திசாலிகள். நானும் எப்படியும் முதல் ஐந்து ரேங்க் வாங்கி விடுவேன். போட்டி எல்லாமே இவர்களோடு தான். இவர்கள் பேரெல்லாம் எனது அப்பாவுக்கு அத்துப்படி. எனக்கு ஒவ்வொரு முறை பரீட்சை நடக்கும் போதெல்லாம் மூன்று முறை அர்ச்சனை அல்லது அடி விழும். எப்படி என்கிறீர்களா? முதலில் பரீட்சை முடிந்த அன்று "இன்று எப்படி எழுதி இருக்கிறாய்?" என்ற கேள்வி எழும். நானும் நல்லா தான் எழுதி இருக்கேன். உன் கண்ணே சரியில்லையே, மார்க் வரட்டும் இருக்கு உனக்கு என்பார். அதற்கு அடுத்தபடி மார்க் பேப்பர் ஒவ்வொன்றாக வெளியாகும். அதிலும் அப்பா கையெழுத்து போட வேண்டும்.
அப்போது மேலே சொன்ன ஒவ்வொருவர் பேரையும் சொல்லி அவன் எவ்வளவு, அவள் எவ்வளவு என்று கேட்டு உரிய தண்டனை கிடைக்கும். எனது மார்க் என்னவோ 97 அல்லது 98 என்று தான் இருக்கும். மீதி இரண்டு மார்க் எங்கே என்று கேட்பார் அப்பா. மூன்றாவது கட்டம் ப்ரோக்ரஸ் கார்டு வாங்கி வரும் ஒன்று. அதில் அந்த ரேங்க் என்ற ஒரு எழவு இருக்கும். மூன்று அல்லது நான்கு என்று இருந்தால், "போன முறை இரண்டாவது எடுத்தாய், பாருடி உன் பிள்ளையின் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையை. இதோ பாரு இந்த நான்காவது ரேங்க்குக்கு நான் கையெழுத்து போட மாட்டேன். உன் அம்மா கிட்ட வாங்கிக்கோ." அம்மாவும் போடலாம். இருந்தாலும் அப்பா போடணுமே.
நானும் அம்மாவைப் பார்த்து கண்ணால் கெஞ்சுவேன். வெச்சுட்டு போ நிச்சயாமாக உங்கப்பா கையெழுத்து போட்டுடுவார் என்பார். அதே போல மாலையில் வந்து பார்த்தால் அதில் அவரின் அழகான கையெழுத்து இருக்கும் (அவரின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்). ஆக எப்போதுமே ஒரு அழுத்தம் முதல் இரண்டு அல்லது குறைந்த பட்சம் மூன்றாவது ரேங்க் எடுத்தே ஆக வேண்டும் என்று. அதனால் படிப்பைத் தவிர வேறு எதிலும் மனம் லயிக்காது. இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. நாளை தவறாமல் படியுங்கள்.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

Saturday, June 26, 2021

நீங்கா நினைவலைகள் - பகுதி 1

 நீங்கா நினைவலைகள் - பாலசாண்டில்யன்

இது ஒரு புதிய பகுதி. வாழ்க்கையில் சில விஷயங்கள் நம்மால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட பகிரக்கூடியவற்றை இந்த பகுதியில் தினம் ஒன்றாக பகிரலாம் என்று நினைக்கிறேன். கூடிய வரை படித்தால் சுவையாக இருக்கும் படி எழுதிட முயற்சிக்கிறேன்.
நெடுநாள் தேங்கிய நீரில் படிந்த பாசியை போல மனதின் ஆழத்தில் நின்றுவிட்ட நினைவலைகள் எப்போதும் ஈரமிக்கதாக அப்படியே தன் இருப்பை காட்டிக் கொண்டிருக்கின்றன.
நான் படித்த பள்ளி சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெரு அருகே (தற்போது இருக்கும் மாட்லி சப்வே நடுவே) திரு வெங்கட்ராமன் மற்றும் திரு பூவராகவன் அவர்களால் 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகவும் தரமான ஸ்ரீ சாரதா நடுநிலைப் பள்ளி. இதன் தாளாளர் திரு வெங்கட்ராமன் அவர்கள், இதன் தலைமை ஆசிரியர் திரு பூவராகவன் அவர்கள், உதவி தலைமை ஆசிரியர் திரு ஸ்ரீனிவாசன் (எனது நண்பன் திரு எதிராஜன் அவர்களின் தந்தை). சென்ற ஆண்டு இந்தப் பள்ளி தமது 83வது ஆண்டு விழாவை கொண்டாடினார்கள் என்று நியூஸ் டுடே பார்த்து தெரிந்து கொண்டேன்.
இந்தப் பள்ளியில் நான் 1964 முதல் 1971 வரை பயின்றேன். அங்கே படித்து வளர்ந்து மிகப் பெரிய பதவிகளில் அமர்ந்தவர்களில் எனது நண்பர்கள் திரு எதிராஜன் மற்றும் கிரிதரன் இன்றும் என்னோடு தொடர்பில் இருக்கின்றனர். அது மட்டுமா ? அங்கே படித்த எனது உறவினர்களும் இன்று பெரிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த பள்ளியில் ஆசிரியர் ஆண்கள் என்றால் அவர்கள் ஜிப்பா பஞ்சகச்சம் மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து இருப்பர். திருமணம் ஆன ஆசிரியர்கள் என்றால் பெரும்பாலும் மடிசார் அணிந்து இருப்பர்.
நெற்றியில் பொட்டு இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது. தினமும் பள்ளி மைதானத்தில் நின்று சாரதா ஸ்லோகம் சொல்ல வேண்டும். வகுப்பறைகள் எல்லாமே கூரை நெய்த ஒன்று. கட்டிடம் இல்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் கோ எட் பள்ளி தான் அது. தமிழ் மீடியம் தான். பிள்ளைகள் அமர பெஞ்ச் தான் இருக்கும்.
ஆசிரியர்கள் எல்லோருமே நமது உறவினர் போல அக்கறையுடன் இருப்பர். நாங்கள் சுமார் ஏழெட்டு உறவினர் ஒன்றாக (கிட்டத்தட்ட சம வயதினர்) படித்தோம். அவரவர் வீட்டில் இருந்து கட்டிக்கொண்டு போன சாப்பாட்டை மைதானத்தில் வட்டமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் சாப்பாட்டை பகிர்ந்து நிலாச்சோறு போல தினம் தினம் சாப்பிடுவோம்.
என் அம்மா சில நேரம் எனக்குப் பிடித்த சேமியா உப்புமா செய்து மதிய உணவாக அனுப்புவார். தொட்டுக்கொள்ள சர்க்கரை. ஒரு நாள் காலை வகுப்பு முடிந்ததும் மதிய உணவுக்கான மணி அடித்தது. நான் வழக்கம் போல ஆசையாக ஓடிப்போய் எனது டிபன் டப்பாவை (அது ஒரு தூக்கு) எடுத்தேன். அது கனம் இல்லாமல் காலியாக இருந்தது. கவலையுடன் திறந்து பார்த்தேன். எனக்கு ஏமாற்றம். அதில் நான் ஆசையாக எதிர்பார்த்த சேமியா உப்புமா இல்லை. எல்லாம் காலி.
நான் சாப்பிடப் போகாமல் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பாக்கெட் மணி கிடையாது. எனது உறவினர்கள் எனக்காக காத்திருந்து விட்டு அவரவர் வகுப்புக்கு சென்று விட்டனர். அப்போது அங்கே நுழைந்த எனது ஆசிரியை சரோஜா நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விவரம் கேட்டார். நான் எனது டப்பா காலியான விஷயம் சொன்னேன்.
உடனே சற்றும் தயங்காமல் ஆபீஸ் பியூனை அழைத்து தனது பர்சில் இருந்து பணம் கொடுத்து எனக்கு அருகில் இருந்த உடுப்பி ஹோட்டலில் இருந்து இரண்டு இட்லி வாங்கி வரச்சொல்லி எனது கண்ணீரை துடைத்து விட்டார். ஒரு அம்மாவைப் போல எனது கண்ணீர் துடைத்த சரோஜா டீச்சர் இப்போது உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவரை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன் மிகுந்த நன்றியுடன்.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

Wednesday, June 9, 2021

தனிக்குடித்தனம்


 தனிக்குடித்தனம் - பிரிந்திருந்தாலும் புரிந்திருப்போம் !


டாக்டர். பாலசாண்டில்யன் - Psychologist/Counselor/Behavioral Expert

சிறு வட்டத்தில் வசதி வட்டத்தில் வாழ விரும்பும் இன்றைய கால கட்டத்தில் தனிக்குடித்தனம் தான் 'ப்ராக்டிகல்'. இதில் மாற்று கருத்து குறைவு தான் . தனியாக இருக்க விரும்புகிறோமா தனிமைப் பட்டு இருக்க விரும்புகிறோமா ?

தனியாக என்றால் சுயநலம் உண்டு. தனிமைப்பட்டு என்றால் மன நலம் இல்லை.

வயது காரணமாக முதியோர் சில சமயம் சோர்ந்து இருக்கலாம். வேறு வழி இல்லாமல் சேர்ந்து இருக்கலாம் . ஆனால் எப்போதும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது .

பிடித்ததை பிரிந்து இருக்கலாம் . அது தியாகம். பிடித்தவரை பிரிந்து இருந்தால் அது சுய நலம். பிரிந்து வாழ்ந்தால் வருவது இன்பமா, சந்தோஷமா , திருப்தியா, அமைதியா, சேமிப்பா, சுதந்திரமா ?

சேர்ந்து வாழ்ந்தால் பெறுவது அன்பா, வெறுப்பா, பாசமா, பாதகமா ?
பிரித்து பார்த்து புரிந்து கொள்ளலாம். பிரிந்து வாழ்ந்து புரிந்து கொள்ளலாம்.

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்.
எது அதிகம் ? அன்பா, வெறுப்பா, பொறுப்பா, வசதியா?
எது குறைவு ? மகிழ்ச்சியா? சுதந்திரமா ?

ஒரு வார்த்தை கொல்லும். ஒரு வார்த்தை வெல்லும் என்பார்கள்.
வார்த்தைக்கு வலிமை உண்டு. வலியும் உண்டு.
வார்த்தை புரிந்து போனதால் வாழ்க்கை பிரிந்த கதைகள் நிறைய உண்டு.

வாழ்க்கை புரிந்து போகும் போது வார்த்தை வெறும் வெற்றுச் சொல்லாவதும் உண்டு. வாழ்க்கை என்றால் நிறையும் உண்டு. குறையும் உண்டு.

சேர்ந்து இருக்கும் குடும்பங்களில்
- என்ன சமைக்கலாம் என்கிற சர்ச்சை தினம் வரும்
- தாத்தாவுக்கு ரசம் சாதம்
- பையனுக்கு காரக்குழம்பு
- பேரனுக்கு பிஸ்சா அல்லது நூடுல்ஸ்
என்ன தான் செய்வாள் மருமகளும் மாமியாரும் ஒருவரைப் பார்த்தால் மற்றவர்க்கு ஆகாது.
அடுத்து டிவி சர்ச்சை
- IPL பார்க்க விரும்பும் கணவன்
-கார்ட்டூன் பார்க்க விரும்பும் பேரன்
- நியூஸ் அல்லது பஜனை பார்க்க விரும்பும் பெரியவர்
- சீரியல் பார்க்க விரும்பும் மாமியார்

அதனால் இன்று பல வீடுகளில் அஞ்சறைப் பெட்டி போல வெவ்வேறு சரக்கு தான் ...சமாசாரம் தான்.

அதையும் மீறி பேரனுக்கு தன பென்ஷனிலிருந்து சைக்கிள் வாங்கித் தரும் தாத்தா . கணவனுக்கு முன்னால் மாமனாருக்கு காபி தரும் மருமகள். எது செய்தாலும் நொட்டு சொல்லும் மாமியார். போக வர ஜாடையாய் பேசும் நாத்தனார் ...!

அது சரி...தனிக்குடித்தனம் போனால் அடிக்கடி ஜொள்ளு விடும் பக்கத்து பிளாட்டு பைத்தியக்காரன். வந்து வந்து வம்பு பேசும் எதிர் வீட்டு மாமி. எப்போதும் சண்டை பிடித்துக் கொள்ளும் இளஞ்ஜோடிகளின் சத்தம். எதற்கெடுத்தாலும் பணம் பிடுங்கும் பிளாட் செக்ரெடரி. பார்கிங்குக்கு பிரச்சனை தரும் செக்யூரிட்டி. அப்போது நினைத்துப் பார்ப்பது நம் வீட்டு ஹீரோ மாமனாரை...!

குழந்தைக்கு ஜுரம். தூக்கி தூக்கிப் போடும் போது மருமகளுக்கு தூக்கி வாரிப் போடுகிறது. மாமியார் இருந்தால் ஒரு கஷாயம் வைத்து தந்து இருப்பார்.

தினம் தினம் லேட்டாக வரும் கணவன். அப்போது யோசிப்பாள் ...அந்த வீட்டில் எப்போதும் மனிதர்கள் கலகல. உணர்ந்ததில்லை தனிமையும் பயமும்.

மரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை தான் இலையின் பசுமை. உதிர்ந்தாலோ பிரிந்தாலோ இல்லை சருகாகும். நிறம் மாறும். தினம் வாடும்.
இணைந்து இருக்கும் போது இயல்பு இருக்கும். இயற்கையான உறவு இருக்கும். உறவுகளின் அர்த்தம் இருக்கும்.

இருட்டும் போது எருமை தெரிவதில்லை. இருக்கும் போது அருமை தெரிவதில்லை. அருமை தெரியும் போது ஆனந்தம் உண்டு. அருமை தெரியவில்லை என்றால் அங்கே கண்ணீரே உண்டு.

தென்னங்கீற்றுகளில் ஓலைகள் பல உண்டு. ஓலைகளும் கீற்றுகளும் தனித்தனியே...ஆனால் மரத்தில் ஒட்டிக் கொண்டு...! மட்டை விழுந்தால் 'மாறு' ஆகி மாறிப் போகும்.

வாழை மரத்தில் இலைகள் பல உண்டு. விரியாத ஒன்று. விரிந்த இளசு ஒன்று. விரிந்து முதிர்ந்த ஒன்று. விதையிடாமலேயே அடுத்தடுத்த வாழை கன்றுகள் ஒட்டியபடி வளர்வது கண்டிருப்போம்.

வாழ்க்கையும் அப்படித்தான். சேர்ந்து இருந்தால் இனிமை உண்டு.

நிறைவாக நிதானமாக யதார்த்தமாக காலத்திற்கேற்ற ஒரு விஷயம் ஒன்று. ஒரே பில்டிங்கில் தனித்தனி பிளாட்டில் இருக்கலாம். தவறில்லை. சேர்ந்து ..ஆனால் பிரிந்து ...உண்மை புரிந்து...! ஒரே தெருவில் கூட வேறு வீட்டில் இருக்கலாம். அடிக்கடி வந்து பார்த்துச் செல்ல வசதியாக இருக்கும். நாள் கிழமைக்கு சேர்ந்து கொள்ள வளமையாக இருக்கும். ஒரே ஊரில் கண் காணாத இடத்தில காத தூரத்தில் வெவ்வேறு வீடா? இதுவே என் கேள்வி.

ஒத்துப் போக வைப்பது உடல், உடை, உணவு அல்லது உறைவிடம் அல்ல. ஒத்துப் போவது உணர்வு மட்டுமே...! ஒத்துப் போகவில்லை என்றால் ஒத்திப் போகலாம் ...தவறில்லை... ஆனால் ஒத்திப் போகும் முன் அந்த முடிவை சற்று ஒத்திப் போடலாமே ...! புது உத்தி தேடலாமே ...! இறை சக்தி நாடலாமே ...!

வாழ்க்கை ஒரு வேள்வி. வேள்வியில் பலி பழி இரண்டும் வேண்டாம். எல்லோரும் இன்பமாய் வாழ்வோம் என்ற பிரார்த்தனை இருக்கலாமே ..!
பிரிவோம்...புரிவோம் ...ஆனால் இனிமையில் இணைவோம் சந்திப்போம். இது பற்றி தனிமையில் அல்ல இணைந்தே சிந்திப்போம் ...!

Tuesday, June 8, 2021

மில்லியனியல்ஸ்

 


மில்லியனியல்ஸ் எனப்படும் தலைமுறையினர் 

டாக்டர் பாலசாண்டில்யன் - மனநல ஆலோசகர்/கல்வியாளர் 

இப்படி அழைக்கப்படுகிற இவர்கள் பொதுவாக 1981 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர் (94-96 க்கு முன்பு பிறந்தவர் ) எனக் கொள்ளலாம் - நிர்வகிக்கக் கடினமானவர்கள், சோம்பல் மிகுந்தவர்கள், கவனம், உரிமை  மற்றும் சுய ஆர்வம் செலுத்தாதவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல என்பதே உண்மை. இவர்களுக்கு இப்போது 25 முதல் 40 வயது இருக்கிறது என்று கொள்ளலாம். இவர்கள் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். பெரும்பாலும் தோல்வியை அதிகம் காண்பவர்கள்.

நாம் இது பற்றித் தான் இந்த கட்டுரையில்  விரிவாகப் பார்க்கப் போகிறோம். 

அவர்களிடம் அவர்களின் மூத்தோர் எப்போதும் கேட்பது "உங்களுக்கு என்ன வேண்டும்?". அவர்களின் பதில் பெரும்பாலும், "நாங்கள் நல்ல நோக்கத்துடன் ஓர் இடத்தில் வேலை செய்ய விரும்புகிறோம். அதையே எங்கள் லட்சியமாக கொண்டுள்ளோம்."

"நாங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்". இதனை பலர் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்றால் இவர்களுக்கு இலவச உணவு, டீ, காபி, பீன் பாக் போன்ற அமர்விடம், யாரும் கேள்வி கேட்காத நிலை என்று தான். இவை எல்லாம் ஏற்கனவே பல நிறுவனங்கள் அளித்துள்ளன என்பது வேறு விஷயம். இருந்தும் இந்த குறிப்பிட்ட தலைமுறையினர் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் ஒரு குறைபாடு இங்கே தலை தூக்குகிறது. அவை பெற்றோர் வளர்ப்பு, தொழில் நுட்பம், பொறுமையின்மை, வளர்சூழல் மற்றும் வாழும் சூழல் இவற்றில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. 

நிறைய பேரின் வாழ்க்கை இன்று சீரழிந்து வருகிறது என்றால் அது தவறான வளர்ப்பினால் என்றால் அது மிகையாகாது. அந்தக் குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர் திரும்பத் திரும்பச் சொன்னது இது தான் : " நீங்கள் எப்போதும் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல், உங்களுக்கு என்ன தேவை என்றாலும் தருவது எங்கள் கடமை." அப்படித்தான் சிலருக்கு மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் அவர்களின் மதிப்பெண் குறைவென்றால் கூட." 

அதே போல பிள்ளைகளும் மிக அதிக மதிப்பெண் எடுத்தார்கள், அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என்பதால் அல்ல, அவர்களின் பெற்றோர் அதனை மிகவும் விரும்பினார்கள் என்பதால். தவிர, அந்த செல்வந்தர்களின் பெற்றோரை ஆசிரியர்களும் சந்திக்க விரும்பவில்லை என்பதால் அப்படி நடக்கிறது என்றும் கூறலாம். நிறைய பிள்ளைகளுக்கு 'பங்கு பெற்ற சான்று மற்றும் விருதுகள்' கிடைத்தன.  கடைசியில் முதல் (for coming in last) என்று கூட மெடல் கிடைக்கிறது எனலாம்.  அப்போது உண்மையில் அந்த மெடலை உழைத்துப் பெற்ற மாணவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ ?

அது மட்டுமா? எதுவுமே செய்யாமல் மெடல் பெறும் அந்த மாணவனுக்கும் ஒரு குற்ற உணர்வு இருக்கவே செய்கிறது அல்லவா ? அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அந்த மெடலுக்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்று. ஆகவே மெடல் பெற்ற பிறகும் அவர்கள் மனம் வருத்தமாக இருக்கும். இதற்கு யார் பொறுப்பு ?

அதே பிள்ளைகள் பின்னாளில் படிப்பு முடித்து ஒரு வேலைக்கு சேர்ந்த பிறகு, அவர்களை அந்த பணம் ஈட்டும் உலகிற்குள் தள்ளி விட்ட பிறகு அவர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக, அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் உத்தியோக உயர்வு இரண்டையும் அவர்களின் பெற்றோரால் பெற்றுத் தர முடியாது. அதனை அவர்கள் உண்மையில் உழைத்து நேர்மையாக ஈட்ட வேண்டும் என்பது தான் கசப்பான உண்மை. 

வேண்டும் என்பதற்காக எதுவும் கிடைத்து விடுவதில்லை. எதுவுமே இங்கே ரெடிமேட் இல்லை. இந்த சூழலில் அவர்களின் சுய பிம்பம் உடைந்து போகிறது. நாம் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஒரு தலைமுறையே இப்படி சுய மதிப்பு குறைந்தவர்களாக வளர்கிறார்கள், தொடர்கிறார்கள், சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் முந்திய தலைமுறைக்கு கிடையாது. 

எல்லாவற்றையும் விட ஒரு வருத்தம் தருகிற விஷயம் தான் இந்த தலைமுறை பிள்ளைகள் பேஸ்புக் எனும் முகநூல் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் உலகில் வாழ்கிறார்கள் எல்லோருக்கும் ஈடு கொடுக்க. பிறருக்கு தனது வாழ்க்கை மிகவும் சிறந்தது என்று எடுத்துரைக்கும் கருவியே இவை இரண்டும். "நான் சிறந்தவன், சிறப்பான விஷயங்கள் என்னிடம் உண்டு, எனது வாழ்க்கை உங்களை விட அற்புதமானது" என்று போலித்தனத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது என்பது கொடுமை. 

எல்லோருமே அதனால் தான் மிகவும் சிறந்தவர், வெற்றியாளர், என்று தினம் தினம் பிறருக்கு சொல்லிக் கொண்டும், நிரூபித்துக் கொண்டும் இருக்க வேண்டிய கடுமையான சூழல். தான் செய்வது தவறு போலியானது என்று தெரிந்தாலும், என்ன செய்ய "இதைத் தானே நானும் செய்ய வேண்டி இருக்கிறது?" என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் நிலையில் தள்ளப்படுகிறார்கள். 

அதில் இருந்து வெளியே வர அவர்களுக்கு தெரியாது. யாரும் அதனை கண்டறியவில்லை. குறைவான சுய மதிப்பீட்டுடன் வாழும் இவர்கள் முந்திய தலைமுறையை விட கஷ்டப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் பொறுப்பு இல்லை. அது அவர்கள் தவறு இல்லை. அவர்கள் அப்படி நடத்தப்பட்டு, அந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். 

தொழில்நுட்பம் எனும் மாயவலை இவர்களை ஆட்டிப்படைக்கிறது. சமூக வலைத்தளங்கள், கையில் இருக்கும் செல் போன் இவர்களின் மூளையில் 'டோபோமெயின்' எனும் கெமிக்கலை அள்ளித் தருகிறது. அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த மாயவளைக்குள் தெரிந்தே நுழைந்து சிக்கித் தவிக்கிறார்கள். என்ன செய்ய ? அதனால் அவர்கள் தனிமையில் இருக்கும் போது "சூப்பர், ஆஹா, பிரமாதம்" என்கிற மெசேஜ்கள் அவர்கள் விருப்பப்படி வந்து கொண்டே இருக்கிறது. அவர்களும் பிறருக்கு அவற்றை அனுப்புகிறார்கள். அது அவர்கள் தனிமையை, சோகத்தை, வெற்றிடத்தை, தாழ்வு மனப்பாங்கை விரட்டுகிறது. 

அவர்கள் மீண்டும் மீண்டும் " ஹாய் ஹாய் " என்று நண்பர்களுக்கு (உண்மையில் அவர்கள் ஒன்றும் நெருக்கமான நண்பர்கள் இல்லை, சிலர் இன்னும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டது கூட இல்லை, சிலர் நண்பர்களின் நண்பர், சிலர் உண்மையில் அந்த பெயருடன் தான் இருக்கிறார்களா என்று யாருக்கும் தெரியாது) அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையில் நட்பு உறவு என்றால் என்னவென்றே தெரியவில்லை என்பது வருத்தம் தருகிறது. 

அவர்கள் தங்கள் சுயமதிப்பை உயர்த்தி உண்மையில் தம்மை யார் விரும்புகிறார்கள், மதிக்கிறார்கள் என்று அறிய நேரம் இல்லை, துணிவும் இல்லை. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி என்றால் அது மிகையல்ல. இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் கடைசி வரை போலி வாழ்க்கை வாழ்ந்து பிறரின் பாராட்டை எதிர்பார்த்து கிடைத்தால் மகிழ்ந்து, கிடைக்காவிட்டால் மனம் நொந்து தமது வாழ்வை கடப்பார்கள்.

இதற்கு ஒரே வழி பெற்றோர் அவர்களுடன் நல்ல உரையாடல்கள் வைத்துக் கொள்ளுவது, தரமான நேரத்தை அவர்களோடு செலவு செய்து யதார்த்தமான நிலையினை புரிய வைத்து, அவர்களை நல்வழிபடுத்திட வேண்டும். அவர்களுக்கு நல்ல திருமண வாழ்வும் அமைய வேண்டும். இல்லையேல் கேள்விக்குறியாக இருக்கும் அவர்கள் வாழ்க்கை கேலிக்குறியாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே,  இந்த மில்லியனியல்ஸ் தலைமுறை இணையத்தில் மட்டும் தொலைந்து போய் விடாமல் நிதர்சன வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பழகிட, பகிர்ந்திட, பரிவு காட்டிட நல்ல நட்பை, உறவுகளை உருவாக்கி வைத்துக் கொள்ளுதல் இங்கே மிகவும் அவசியம். இணையம் தாண்டிய மனித இணைப்பு தான் அவர்களுக்கு பாசம், பரிவு, பகிர்வு எல்லாம் பெற்றுத் தரும். 

தொழில்நுட்பம் நினைக்கிற எல்லாமே பெற்றுத் தந்து விடும் பலம் பெற்றிருந்தாலும், மனிதநேயம், உறவு, நட்பு எனும் உன்னதமான விஷயங்கள் நுட்பமான ஒன்று. அதனைத் தேடி உணர்ந்து பெற்றிடும் நிலை வர வேண்டும். அப்படி இந்த தலைமுறையினரை மாற்றிடும் பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் உள்ளது. 

உபாயமே இல்லாத அபாயங்கள் மட்டும் நிறைந்த வருங்கால வாழ்வினை எதிர்கொள்ள நேர்மையான அறிவு கொண்ட தலைமுறை தேவை. எந்திரமயமாகும் நிலை வெகுதூரம் இல்லை எனும் இந்த தருணம் அன்பு, பாசம், கருணை, இரக்கம் இவற்றைச் சரியாக புரிந்து கொண்டால் நிச்சயம் நிம்மதியான வாழ்வுடன் தப்பித்து வாழலாம்.

செய்யும் வேலையில் கவனம், விருப்பம், ஈடுபாடு, முழுமையான கடப்பாடு என்று இவர்கள் இருக்கத் தொடங்கும் சமயம் எப்போதும் ஆனந்தம் வாழ்வில் நிலைத்து நிற்கும்...என்ன சந்தேகம் ?

Friday, May 21, 2021

கொரோனா காலத்தில்

 கொரோனா காலத்தில் யாருக்கெல்லாம் திண்டாட்டம் ?

- பாலசாண்டில்யன் 

- பள்ளிகளுக்கு, நண்பர்கள் வீட்டுக்கு, அருகில் உள்ள பூங்காவிற்கு போக முடியாத சிறுவர்களுக்கு 

- தொடர்ந்து வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ ஓட்டுனர்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுனர்கள், மருந்து கடைக்காரர்கள், காவல் அதிகாரிகள், முன்களப் பணியாளர்கள், கார்பொரேஷன் ஊழியர்கள் 

- தபால் நிலைய ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் 

- உணவு மற்றும் முக்கிய பொருட்களை இல்லத்தில் டெலிவரி செய்யும் டென்ஸோ, ஸ்விக்கி ஊழியர்கள் 

- வீட்டில் இருந்தே கடினமான சூழலில் உழைக்கும் 'ஒர்க் பிரம் ஹோம்' ஊழியர்கள் 

- ஊடக நண்பர்கள்  (பிரிண்ட் மற்றும் டிவி மீடியா)

- அரசு ஊழியர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 

- வீட்டில் உடல்ரீதியாக கஷ்டப்படும் முதியவர்களை வைத்துக் கொண்டு சிரமப்படும் பிள்ளைகள் 

- முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 

- மிகுந்த சிரமத்துடன் வணிகம் நடத்தும் சிறு குறு மற்றும் நடுத்தர பத்திரிகைகள் 

- இன்னும் பரீட்சை எழுத முடியாமல் தவிக்கும் +2 மாணவ மாணவிகள் 

- படிப்பு முடிந்து  வேலை கிடைக்குமா என்று தவிக்கும் இளைஞர்கள் 

- யாரையும் சந்திக்க முடியாமல் உள்ளுக்குள் முடங்கிக் கிடக்கும் முதியவர்கள். 

- எல்லாவற்றையும் விட ஏற்கனவே பல ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி அடுத்த வேளைக்கு என்ன சமைக்கலாம் என்று சிந்தித்து, சமையல் செய்து, துணி துவைத்து, வீட்டில் தொடர் சேவை செய்யும் இல்லத்தரசிகள். (நன்றி பாராட்டு எதிர்பாராத பாவப்பட்ட ஜென்மங்கள்)

யாருக்கு கொண்டாட்டம் ?

- கண்டபடி விலை ஏற்றி விற்கும் காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் 

- உயிர் காக்கும் மருந்துகளை (மாஸ்க், ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் உட்பட) இஷ்டத்திற்கு விற்கும் வணிகர்கள் 

- உயிர் இழந்த பிறகும் செம்மையாக பணம் கறக்கும் தனி நபர்கள் 

- தினம் ஒரு 'பிரேக்கிங் நியூஸ்' போடத் துடிக்கும் சில மலிவான ஊடகங்கள் 

- தோன்றியதை எழுதி சமூக வலைத்தளங்களில் வதந்தி மற்றும் பயத்தை கிளப்பி விடும் விஷக் கிருமிகள் 

- பாட்டரி, பெட்ரோல், பொருட்கள் திருடும் கயவர்கள் 

Wednesday, May 19, 2021

சூப்பர் சிங்கர் செய்யும் இசைக்க(கொ)லை

 சூப்பர் சிங்கர் செய்யும் இசைக்க(கொ)லை 

- பாலசாண்டில்யன் 

டிவி நியூஸ், டிவி சீரியல் பிடிக்காது என்பதால் சில நேரம் டிவி விவாதங்கள் (அதுவும் நல்ல பேச்சாளர்கள் இருந்தால் மட்டும்), நீயா நானா என்று பார்ப்பது வழக்கம். விடாது பார்ப்பது இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள். 

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பல சீசன்களாக பார்த்து வருகிறேன். அதில் இருந்து வெளியே வந்துள்ள சாய் சரண், மாளவிகா, விக்ரம், ஸ்ரீகாந்த், பிரியங்கா, ஸ்ரீஷா, சத்யபிரகாஷ், பிரகதி, ஷிவாங்கி, மூக்குத்தி முருகன்  என்று பற்பல நல்ல திறமையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றாலும் இப்போது இரண்டொரு சீசன்களாக வந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிச்சயம் ஒரு கேலிக்கூத்து தான். இசைக்கு செய்யும் பெரிய துரோகம் தான். நிச்சயம் சந்தேகம் இல்லை. 

மிகவும் வருந்தத்தக்க விஷயமே மிகவும் இசை ஞானம் மிக்க நடுவர்களாக வரும் திரு உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் போன்றோரின் நிலை தான். நிகழ்ச்சியில் வரும் மிமிக்ரி, நடனம், கெட்ட கெட்ட வசனம், கிறுக்கு ஜோக்குகள், சிறுபிள்ளை விளையாட்டுகள், நேரத்தை வீணடிக்கும் வெட்டிப் பேச்சுக்கள் என்று இசை தவிர எல்லாமே உண்டு இந்த நிகழ்ச்சியில். அவற்றை சகித்துக் கொண்டு இந்த நடுவர்கள் அமர்ந்து கொண்டு இருப்பது தான் மிகவும் கொடுமை. சில நேரம் இந்த அச்சுபிச்சு விளையாட்டுகளில் நடுவர்களையும் சேரச் சொல்லி அவர்களையும் கீழ் நிலைக்கு தள்ளுவது ...!!

தற்போது நடக்கும் சீசனில் மானசி, அபிலாஷ்,பரத், அனு, ஸ்ரீதர் சேனா என ஐந்தாறு திறமைசாலிகளின் பாடல் கேட்க இசைப் பிரியர்கள் வீணடிக்கும் (அல்லது வீணடிக்கப்படும் நேரம்) நேரம் இரண்டு எபிசோடுகள். எவ்வளவு நேர, பண, சக்தி விரயம்.

அதுவே ஓர் ஒப்பீடுக்கு என்றாவது - ஹிந்தி மொழி தெரியாவிட்டாலும், நீங்கள் ஓர் இசைப்பிரியர் என்றால் சோனி எண்டெர்டைன்மெண்ட் சானெலில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 9.30 க்கு 'இந்தியன் ஐடல்' வைத்துப் பாருங்கள். 

நடுவர்களாக இசை அமைப்பாளர்கள் திரு ஹிமேஷ் ரேஷமையா, திரு விஷால், பின்னணி பாடகி நேஹா கக்கர் மூவரும் எப்படி கண்ணியமாக, இசையை ரசிக்கிறார்கள், உண்மையாகப் பாராட்டுகிறார்கள், எப்படி போட்டியாளர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்கள் என்று கவனித்தே ஆகவேண்டும். 

அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கும் (உதித் நாராயணன் மகன்) ஆதித்ய நாராயண் எத்தனை நகைச்சுவையுடன், கவிதை ரசனையுடன், தேவையில்லா குறும்புகள் இல்லாமல் அழகாக செய்கிறார் என்று பார்த்தால் புரியும்.

அதில் வருகிற சிறப்பு விருந்தினர்கள் என்று பார்த்தால் நடிகர் தர்மேந்திரா, ஜிதேந்திரா, ஹேமமாலினி, நடிகை ரேகா, பிரபல இசை அமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹமான், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, அஜய் அதுல், ஜெயப்பிரதா, ஜாக்கி ஷ்ரோப் என்று மிகப்பெரிய நபர்கள் வருகிறார்கள். அவர்கள் அதில் பங்கு பெறும் ஒவ்வொருவரின் பின்னணி, மற்றும் அவர்களின் முந்தைய பாடல்கள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு வருகிறார்கள். 

இயன்றவர்கள் பரிசு அளிக்கிறார்கள், சிலர் வாய்ப்பு அளிக்கிறார்கள், சிலர் பொன் பொருள் தருகிறார்கள்.

இங்கே சொல்லியே ஆக வேண்டியது பாடுகிற திறமைசாலிகள் - ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலங்களில் வந்தவர்கள். வெவ்வேறு மொழி பேசுபவர்கள். ஆனால் பாடுவது ஹிந்தி பாடல்கள். ஒவ்வொருவரின் பின்னணியும் மிகவும் வித்தியாசமானது. உதாரணத்திற்கு, சவாய் பாட் எனும் ஒரு இளைஞர் ராஜஸ்தானை சேர்ந்தவர். தெருவில் பொம்மலாட்டம் செய்து பாடிப் பிச்சை எடுத்து குடும்பத்தை காப்பாற்றுபவர். 

அருணிதா(மேற்கு வங்கம்), பவன் தீப் - ஹார்மோனியம், ட்ரம்ஸ், டோல் கி, பியானோ என்று சகலமும் வாசிக்கும் திறன் கொண்டவர் (உத்தராகண்ட்), ஷண்முகப்ரியா (ஆந்திரா), நேஹால், சாயலி, குல்கர்னி (மஹாராஷ்ட்ரா), மொஹம்மத் தானிஷ் (டில்லி), அஞ்சலி கைக்வாட் (ஹிந்துஸ்தானி இசை பாடுபவர்) என்று திறமையின் உச்சத்தை பெற்றவர்கள் அனைவருமே. இவர்களில் கடைசி 5 பேரை தேர்வு செய்வதே மிக கடினம். ஒவ்வொரு வாரமும் இவர்கள் அனைவரும் பைனல் நிகழ்வில் பாடுவது போல பாடுகிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் இவர்களின் திறன் மேம்பட மிகவும் உழைக்கிறார்கள். இசையே இவர்களின் உயிர்நாடி என்று இருக்கும் இந்த இளைய தலைமுறை தான் அடுத்த பத்து ஆண்டுகள் நாம் கேட்க இருக்கும் பின்னணி குரல்கள் என்று சொல்லி விடலாம். அத்தனை திறமை வாய்ந்தவர்கள். இவர்களின் பாடல்கள் கேட்டாலே மனதின் பாரம் மற்றும் கவலை காற்றில் பஞ்சாகப் பறந்து விடும். இவர்கள் அனைவருக்குமே கந்தர்வ குரல் என்று சொல்லலாம். ஏற்கனவே சிலர் போட்டி நடந்து கொண்டிருக்கும் சமயத்தியிலேயே சில ஆல்பங்கள் பாடி விட்டார்கள். 

இசை நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் 'இந்தியன் ஐடல்' தான். நான் சற்றும் மிகைப்படுத்தவில்லை. நீங்களே நிகழ்ச்சியை கண்டு களித்து பிறகு சொல்லுங்கள். நிச்சயம் இந்த இளம் திறமையாளர்கள் பின்னாளில் தமிழ் மொழியிலும் பாடலாம் ஒரு உதித் நாராயண், ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம், போல. 

உண்மையில் வடநாட்டு இளைஞர்கள் இசைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுகிறார்கள். இசையும் இருக்கட்டும், இல்லை என்றால் ஐடி வேலைக்கு போகலாம் என்றில்லை இவர்கள். தொடர்ந்து தம்மை மேம்படுத்தி உயர் தர இசையை தருகிறார்கள். இது தான் மிகைப்படுத்தாத உண்மை.

Monday, May 17, 2021

கர்ணன் தனுஷ்

 கர்ணன் தனுஷ்

- பாராட்டுரை
- பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், பாடகர், கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், நூலாசிரியர் என்பதை எல்லாம் தாண்டி நான் நல்ல கலை ரசிகன்.
அந்த வகையில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் தனுஷ் அவர்களை பல்வேறு படங்களில் கண்டு அவரது பரிமாண வளர்ச்சியைக் கண்டு வியந்து போய் இருக்கிறேன்.
எனது பயிற்சி வகுப்புகளில் மகேந்திர சிங் தோனி மற்றும் நடிகர் தனுஷ் பற்றி அடிக்கடி குறிப்பிடுவேன். குறிப்பாக அவர்களின் தொடர் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து.
2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை', 2003 ல் திருடா திருடி போன்ற படங்களில் அவர் நடித்த பொழுது மிகவும் எரிச்சலாக, கோபமாக பார்த்ததுண்டு. அவருக்கு யார் எழுதித் தந்ததோ, "என்னை எல்லாம் பார்த்தால் பிடிக்காது, பார்க்கப் பார்க்க பிடிக்கும்" என்று அவர் பேசிய வசனம் நிச்சயம் அவர் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல.
தனுஷ் எனும் மனிதர் ரஜினியின் மாப்பிள்ளை, இயக்குனர் செல்வராகவன் தம்பி, இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்றெல்லாம் ஆரம்ப காலத்தில் கால் பதிக்க உதவி இருக்கலாம். அதன் பிறகு நடிப்பு, நடனம், நீச்சல், வாகனம் ஓட்டுதல், சண்டை போடுதல், தனக்கென ஒரு ஸ்டைல் உருவாக்குதல், வசன உச்சரிப்பு என்று பல திறன்களை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு மிகச் சிறந்த இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து படிப்படியாக முன்னேறிய முழுமையான நடிகர் இன்று.
பல பிலிம் பேர் விருது, தேசிய விருது என்று பெற்று விட்ட கலைஞன் தனுஷ் ஆடுகளம், மரியான், வி ஐ பி, மாரி, படிக்காதவன், திருவிளையாடல் ஆரம்பம், கொடி என்று பல வேடங்களில் நடித்து தனது காலை சரியாக ஊன்றிய பிறகு 'ஷமிதாப்' எனும் ஹிந்தி படம் (உயர்ந்த மனிதர் அமிதாப் பச்சனுடன்), பிறகு ராஞ்சனா (அம்பிகாபதி) எனும் மற்றொரு ஹிந்தி படம் - இரண்டிலும் சொந்தமாக ஹிந்தி மொழி கற்று சொந்தக் குரலில் டப்பிங் பேசியது பெரிய பாராட்டுக்கு உரியது.
அண்மையில் ஆங்கிலம் மொழியில் - பிரெஞ்சு படமாகிய 'பகிர்' (பக்கிரி) படத்தில் என்ன ஒரு ஸ்டைல், லாவகம், அற்புதமான பாடல் என்று காண்பவர் மனதைக் கவரும் தனுஷ் அசுரன் படத்தில் ராட்ஷசன் போல நடித்து தேசிய விருது பெற்றார். இதெல்லாம் உங்களுக்குத் தெரியும். எதுவுமே புதிய செய்தி இல்லை.
அண்மையில் 'கர்ணன்' படம் பார்த்த பொழுது அதிக ஆர்ப்பாட்டம், சத்தம் எதுவுமே இல்லாமல் ஆனால் கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு நடித்திருக்கும் விதம் மிகவும் அருமை. படத்தில் வரும் கால்கள் கட்டிய கழுதை, குதிரை, வீச்சரிவாள் வெட்டு படும் மீன், பூனை, அவ்வப்போது சாமியோ பூதமோ என்று வந்து போகும் ஹீரோவின் இறந்து போன தங்கை எனும் குறியீடுகள் கதைக்கு மிகவும் வலு சேர்த்துள்ளது.
அது மட்டுமா ? உன்னிப்பாக கவனித்தால் மஹாபாரதத்தில் கண்ணபிரான் எல்லோரையும் - கர்ணன் உட்பட அழிப்பது போல இந்த படத்தில் கர்ணன் கண்ணபிரான் எனும் அதிகாரியை வதம் செய்வது - அதிகார வர்க்கத்தை அழுத்தப்பட்ட வர்க்கம் கணக்கு தீர்ப்பது போல வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். நிச்சயம் இந்த படத்திற்கும் ஒரு விருது உண்டு தனுஷ் அவர்களுக்கு.
இன்றும் ஒடுக்கப்பட்ட சமூகம் பல மாநிலங்களில் பல கிராமங்களில் வாழ முடியாமல் தவித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த படத்தில் யாரும் மது அருந்தவில்லை, குழந்தைகள், மற்றும் மனைவியை அடிக்கவில்லை. மோசமான வசனங்கள் இல்லை.
என்ன இருந்திருக்கலாம் ? ஹீரோ படித்தவனாக இருந்திருக்கலாம். கிராமத்தில் போராடி அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், சிறுதொழில் வாய்ப்புகள் என்று உருவாக்கித் தருபவனாக, அந்த கிராமத்தை 'ஸ்மார்ட் கிராமமாக' உருவாக்கும் ஒருவனாக சித்தரித்து இருந்தால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கும் என்பது எனது ஆதங்கம்.
நிறைவாக மீண்டும் அற்புதமான நடிகர் தனுஷுக்கு எனது பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
. இன்னும் இது போன்ற நல்ல படங்களை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்.