10. விளைவுகள் மீது கவனம் தேவை
எந்த ஒரு சொல்லுக்கும் செயலுக்கும் எதிர்வினை என்று சொல்லக் கூடிய விளைவு உண்டு. அது நல்லதாக இருக்கலாம். கெட்டதாக இருக்கலாம். எதிர்பார்த்தபடி இருக்கலாம். முற்றிலும் எதிர்பாராத ஒன்றாகக் கூட இருக்கலாம்.
சொல்லை சொல்லும் நாம் செயலை செய்யும் நாம் அதன் விளைவுகளைச் சந்திக்க அல்லது ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோமோ? பெரும்பாலும் எதிர்மறையான எதிர்பாராத ஒரு விளைவே ஏற்படும். எப்போதும் நல்ல விளைவே நிகழும் என்று சொல்ல இயலாது. வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான் - என்று சொல்லுவார்கள் மூத்தோர். அதனை கர்மா என்பர் பெரியோர். பகவத் கீதையில் கடமையைச் செய். பலனை எதிர்பாராதே என்பார் ஸ்ரீ கிருஷ்ணர்.
சுவற்றின் மீது எவ்வளவு வேகமாக ஒரு பந்தினை எறிகிறோமோ அதே வேகத்தோடு அது திரும்ப வரும். அப்படித்தான் நமதும் செயலும் சொல்லும். இதைச் செய்தால் சொன்னால் இப்படி ஆகும் என்று தெரியாமல் நாம் செய்கிறோம் என்றால் அது அறியாமையின் காரணமாக அல்லது கோபம் அல்லது ஆணவத்தின் காரணமாக என்று சொல்லலாம்.
பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை பொதுவில் சொன்னால் அதனால் நாம் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.ஒரு ஓலா ஆட்டோ ஓட்டுநர் என்றாலும் அவரை அழைத்து குட் மார்னிங் என்றால் அவரும் திரும்ப குட் மார்னிங் என்பார். நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக்கண்ணே என்று பழைய பாடல் ஒன்று உண்டு. நமக்கு பரிச்சயம் இல்லாத ஒரு அந்நியரிடம் கூட ஒரு புன்னகை வீசினால் பதில் புன்னகை கிடைக்கும்.
நிறைய நண்பர்கள் மாலை நேரங்களில் தமது குடலைக் கெடுத்துக் கொள்ளும் முன்பு 'சியர்ஸ்' என்பார்கள். அவர்களுக்கு அது திரும்பக் கிடைக்கும். ஆனால் குடலில் இறக்கிய அந்த திரவம் மூலம் குடலும் சிலவற்றை திருப்பத் தரும். இது நிச்சயம். ஒரு குழந்தையை பார்த்து செல்லம் என்றால் அது சிரிக்கும். டேய் என்று கண்ணை உருட்டினால் அது அழும் அல்லது முறைத்து விட்டு ஓடி விடும். இது நாய், அல்லது எந்த மிருகங்களுக்கும் பொருந்தும்.
நாம் இயற்கைக்கு என்ன தருகிறோமோ அது தான் நமக்கு மீண்டும் கிடைக்கிறது. மரங்களை வெட்டினால் மழை நின்று போகிறது. புகையினைப் பரப்பினால் மாசுக் காற்றே சுவாசிக்கக் கிடைக்கிறது. நமது பிள்ளைகளை அரவணைப்புடன் வளர்த்தால் அது பின்னாளில் நல்லவிதமாக நமக்குத் திரும்ப வரும்.
அதே போல நிறுவன ஊழியர்களை நாம் கொடூரமாக நடத்தினால் அவர்கள் அதற்கேற்ற முடிவுகளை நிறுவனத்திற்குத் திருப்பித் தருவார்கள்.
பெரும்பாலும் இன்றைய ஊடக விவாதங்களைப் பாருங்கள். நடக்கக் கூடாதது ஒன்று நடந்தால் அதனை வைத்து ஒரு நாள் அல்ல நான்கு நாட்கள் கூட அதனை 'வைத்து' செய்வார்கள். அப்படித்தான் அண்மையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது.
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சக்தி உண்டு. சில மந்திரச் சொற்கள் உண்டு. ப்ளீஸ், தாங்க்யூ, சாரி, லவ் யூ, காரண்டீ, புதிது, தள்ளுபடி என்பது போல 18 வார்த்தைகளை ஏல் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிவித்துள்ளது. இந்த மந்திர வார்த்தைகள் ஒரு நாளும் கெட்ட விளைவுகளை உண்டாக்கி விடாது.
அப்படித்தான் நமது செயலும். எதையுமே சொல்வதற்கு முன்பு செய்வதற்கு முன்பு இப்படி சொன்னால் செய்தால் இப்படி நடக்க வாய்ப்புண்டு என்று உணர்ந்து புரிந்து செயல்பட்டால் எப்போதும் உண்டு நன்மை. ஒன்றே செய்க. நன்றே செய்க. இன்றே செய்க. இப்போதே செய்க. நல்லதே நடக்கட்டும்.'
No comments:
Post a Comment