Saturday, November 9, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 9

9.  சீரமைப்பு அவசியம் (Alignment)

'சீரமைப்பு' எனும் வார்த்தை புதிதாக உள்ளதா? 'அலைன்மென்ட்' என்று பெரும்பாலான நிறுவனங்களில் பேசப்படும் வார்த்தை தான் தான்.நமது முதுகுத்தண்டுவடம் எப்படி சீரமைக்கப் பட்டுள்ளது என்று நம்மால் காண முடியாவிடினும் நாம் நேராக நிற்பது நடப்பது எல்லாமே இந்த சீரமைப்பு காரணமாகத் தான். அப்படி ஏதேனும் கோளாறு இருந்தால் அவிழ்ந்து விழுந்த 'சிட்டி' ரோபோ போல நாமும் ஆகி விடுவோம். அது இறைவனின் மிக நல்லதொரு உருவாக்கம். 

அதே போல மரங்களைப் பாருங்கள் எல்லா இலைகளும் பச்சை நிறத்தில் ஒரு போல இருக்கின்றன. ஏதாவது ஓர் இலை நாம் ஏன் இங்கே பச்சையாக இருக்க வேண்டும் என்று நினைத்து மரத்தைப் பிரிந்து கீழே விழுந்தால் ஓரிரு நாட்களில் அந்த பச்சை மாறி அது பழுப்பு நிறமாகி விடும்.அது தான் சீரமைப்பு அல்லது இயைந்து வாழுதல் எனப்படும் ஒத்துணர்வு ஆகும். 

அதனால் தான் நம்மையும் இயற்கையோடு ஒத்து வாழ் என்கிறார்கள். நாம் எங்கெல்லாம் எப்போதெல்லாம் அதற்கு மாறாக செயல்படுகிறோமோ அதன் விளைவை நிச்சயம் பெரிய அளவில் சந்தித்து இருக்கிறோம். சந்திக்க இருக்கிறோம். Our Future lies in the Nature என்பார்கள். நமது எதிர்காலமே இயற்கையில் தான் அடங்கி உள்ளது. 

ஒவ்வொரு மனிதரும் நான்கு விதமான சூழலில் இருக்கக்கூடும். ஒன்று அக்ரீமெண்ட் எனும் ஒத்துப்போதல். எல்லா சமயங்களிலும் எல்லோரோடும் நம்மால் ஒத்துப் போக முடியுமா? என்றால் முடியாது. அப்படி நாம் ஒத்துப் போனால் நம்மை 'ஆமாம் சாமி' 'எஸ் மாஸ்டர்' அல்லது 'தலையாட்டி பொம்மை' என்றே கூறுவார்கள். அப்படி நம்மில் பலர் கணவர்கள் ஆனவுடன் மனைவியிடம் இருக்கிறோம். அது ஒன்றும் பெரிய தவறல்ல. ஒவ்வொரு முறையும் ஒத்துப் போகாமல் முரண் பட்டு முரண்டு பிடித்தால் ஓடாது உட்கார்ந்து போகும் இரட்டை மாட்டு வண்டி போல் ஆகி விடும் குடும்பம். அதே போல அலுவலகத்திலும் எதற்கெடுத்தாலும் 'எஸ் சார்' என்று சொல்லி நல்ல பெயர் எடுக்கும் ஒருவரை சுய புத்தி இல்லாதவர் என்று முத்திரை குத்தி விடுவர். நமக்கென்று ஒரு கருத்து இருக்கும். அதனை பிறர் மனம் புண்படாமல் எடுத்து சொல்லுவது தவறில்லை. 

அதற்கடுத்து 'ஆர்குமென்ட்' எனும் விவாதம் அல்லது சர்ச்சை செய்யும் நிலை. இப்படி சிலர் எதற்கெடுத்தாலும் எல்லோருடனும் விவாதம் அல்லது வாக்குவாதம் செய்து பிடிவாதமாக அதில் வெற்றி பெறப் பார்ப்பர். அவர்கள் விவாதத்தில் வெற்றி பெற்று உறவுகளை முறித்துக் கொள்ளுவது தான் நிஜம். நம்மை முற்றிலும் தவறு என்று சொல்லி அவமானப்படுத்தும் சூழலில் சரியான முறையில் நமது கருத்தை எடுத்து முன்வைத்து நம்மை சரி என்று நிலைநாட்டிக் கொள்ளுவது நல்லது தான். ஆனால் அங்கே நமது உறவுமுறை கெடாமல் இருத்தல் முக்கியம். இது வீட்டில் வெளியில் அலுவலகத்தில் என்று எல்லா இடங்களிலும் பொருந்தும். 

'அட்ஜஸ்ட்மென்ட்' எனும் அடுத்த நிலை மிகவும் சங்கடமான ஒரு நிலை. எவ்வளவு தான் ஒருவர் அட்ஜஸ்ட் செய்வார். மனைவியுடன், நண்பருடன், குழந்தைகளுடன், உடன் பணியாற்றுபவர்களுடன். அப்படி எப்போதுமே அட்ஜஸ்ட் செய்பவர்கள் மனநிலை எப்போதும் வருத்தத்தில் இருக்கும். தமது சுய கௌரவம் அங்கே பாதிக்கப் பட்டு விட்டதே என்ற வருத்தம் தான். அதிகம் அடங்கிப் போய் பொறுத்து பொறுத்து போகிற ஒருவரின் மனம் கூட எலாஸ்டிக் போலத்தான். எவ்வளவு தான் இழுக்க முடியும். ஒரு நாள் அது அறுந்து போகும் அல்லவா? அது போல ஒருவரின் மனம் உடைந்து போகும். அன்று சில விபரீதங்கள் நடக்கக் கூடும். அப்படி சிலர் அட்ஜஸ்ட் செய்து கொண்டு 30 - 40 ஆண்டுகள் குடும்பம் நடத்துவர். சிலர் ஒரே அலுவலகத்தில் இருப்பர். அவர்கள் இதய நோய் அல்லது கான்செர் வந்து கிடப்பர். 

நிறைவாக வருவது தான் இந்த சீரமைப்பு எனப்படும் 'அலைன்மென்ட்'. ஒத்துணர்வுடன் சிந்தித்தல், செயல்படுதல் குடும்பத்தில் நிறுவனத்தில் மிக் முக்கியமாகிறது. ஊரோடு ஒத்து வாழ் என்பது போல. எங்கெல்லாம் இந்த ஒத்துணர்வு எனும் சீரமைப்பு இல்லையோ அங்கெல்லாம் சீர்கெட்டுத் தான் கிடக்கும் அவர்கள் வாழ்க்கை. குடும்பம் என்றால் ஒரு குடும்பம், ஒரு மகிழ்ச்சி என்று சிலவற்றை புரிந்து கொண்டு நடத்தல் அவசியம் ஆகிறது.

அது போல நிறுவனம் என்றால் நிர்வாகம், மேலாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைவருமே ஒரு நேர்க்கோட்டில் இருந்து சீரமைப்புடன் செயல்பட்டால் அந்த நிறுவனம் அடுத்தடுத்த நிலைக்கு வெகு சிறப்பாக சுலபமாக நகரும்.இப்போது யோசித்துப் பாருங்கள் உங்கள் நிலை என்னவென்று? அக்ரிமெண்ட், ஆர்குமென்ட், அட்ஜஸ்ட்மென்ட் அல்லது அலைன்மென்ட் இவற்றில் எது என்று...

No comments:

Post a Comment