5. புரிந்து கொள்வோம் தலைமுறை இடைவெளி
தலைமுறை இடைவெளி என்பது வாழ்வியல் மதிப்பீடு, விருப்பு வெறுப்பு, புரிதலில் பார்வை மாற்றம், கலாச்சார பண்பாட்டு மாற்றங்களில் கருத்து வேறுபாடுகள் , நம்பிக்கை, செயல்பாடு, அணுகுமுறை போன்ற இவை தான் என்று சொல்லலாம்.
1960 களில் தான் இந்த தலைமுறை இடைவெளி என்ற பார்வை முதன்முதலில் வெளிப்பட்டது. காரணம் மக்களின் வெளிப்பாடு, உணவு, உடை, பண மதிப்பு, செலவழிக்கும் முறை, காதல் மற்றும் கல்யாணம் இவற்றை பார்க்கும் விதம், அரசியல் பொருளாதார சமூக மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பணியிடத்தில் கலாச்சார வித்தியாசங்கள், என்று பல காரணங்கள் சொல்ல முடியும்.
தகவல் பரிமாற்றங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், அலுவலக ஊழியர்கள் மத்தியில் இருந்த உறவுமுறைகளில் மாற்றங்கள், பணிச்சூழல்களில் மாற்றம், பயணங்களில் மாற்றம் என்று எல்லாவிதத்திலும் மாற்றங்கள் வரத்தொடந்தும் போது மூத்தவர்கள் சற்று பின்தங்கி சிலவற்றை ஏற்கத் தயங்கினர். இதில் பின்தங்கிய மூத்தோர்களுக்கும் இளையோர்களுக்கும் வீட்டில் அலுவலகத்தில் வெளியில் என்று எல்லா இடங்களிலும் முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் வரத்தொடங்கின.
இவற்றை சரியான அணுகுமுறையோடு புரிந்து கொண்டு தம்மை மாற்றிக் கொண்டு அல்லது மாற்றங்களைப் புரிந்து கொண்டோர் மத்தியில் சிக்கல்கள் ஏதும் வரவில்லை என்பது தான் இங்கே மிக முக்கியம். தொழில் ரீதியாக இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், திரைக்கலைஞர்கள் போன்று பலதரப்பட்ட மக்களிடமும் இந்த தலைமுறை இடைவெளி மிகவும் சிக்கல்களை உருவாக்கிடத் தொடங்கியது. அது இன்னும் தொடர்கிறது என்றால் மிகையல்ல.
இன்றைய இணைய இளைய தலைமுறையினரின் வாழ்வை நோக்கிய அணுகுமுறை மருத்துவர்கள், பொறியாளர்கள், கல்வியாளர்கள் என்று பாரபட்சம் பாராது பிரச்சனையில் தள்ளி உள்ளது என்பதுவே நிதர்சனம்.குழந்தை வளர்ப்பு, கல்வி முறை, பணம் ஈட்டும் முறை, அதனை செலவழிக்கும் முறை, பிறரோடு உறவாடும் முறை, தகவல் பரிமாறும் முறை என்று பல விஷயங்கள் இன்று மிகவும் மாறி உள்ளன. இதனை மனதில் கொண்டு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுவது அல்லது ஏற்றுக் கொள்ளுவது என்று வெகு சீக்கிரம் முடிவெடுத்த மூத்தோர்கள் இந்த இடைவெளியை பெரும்பாலும் குறைத்துக் கொண்டு விட்டார்கள் எனலாம்.
நான் ஏன் மாற வேண்டும் என்று அப்படியே பழங்கதை பேசிக் கொண்டு பழைய முறையிலேயே தமது பழக்க வழக்கங்களை நடைமுறைகளை வைத்துக் கொண்டோர் நிச்சயம் இன்று மனவேதனைக்குள் ஆளாகி இருக்கின்றனர்.
மிக முக்கிய விஷயம் இன்றைய ஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் எனலாம். யாரெல்லாம் தம்மை வேகமாக இந்த வகையில் தம்மை இணைத்துக் கொண்டாரோ அவர்களை தலைமுறை இடைவெளி இன்றி அனைவரும் அவர்களை அரவணைத்துக் கொண்டு தம் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளனர் எனலாம்.
உங்களுக்கு இங்கே சொல்லப்படும் விஷயங்களில் நிறைய இடைவெளி இருக்கிறதா? ஆம் என்றால் எங்கே நீங்கள் மாற வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்றே அர்த்தம். உள்ளடக்கிய (இன்க்ளூசிவ்) சமூகத்தில் நீங்கள் இடம் பெற வேண்டுமா அல்லது தனிமைப்பட்டு நிற்க வேண்டுமா என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து மற்றும் விருப்பமே.
No comments:
Post a Comment