நாணயமும் நா நயமும்
சிலர் நேர்மை என்பர். சிலர் நாணயம் என்பர். தினம் தினம் நாம் கேட்கும் வார்த்தைகள் இவை. மக்கள் இந்த வார்த்தைகள் பற்றி சிந்திக்க இன்று அதிக நேரம் இல்லை. வாழ்வியல் மதிப்பீடுகளை யார் மதிக்கிறார்களோ அவர்கள் நேர்மையுடன் நாணயத்துடன் விளங்குவர்.
அதிகமாக தமது குழந்தைகளை திட்டி அதட்டி மிரட்டி அடித்து விரட்டி செய்யும் பெற்றோர்கள் தமது அந்த தவறான செயலை நேர்மையாக உணர்ந்து மன்னிப்பு கேட்பதைப் பார்த்திருக்கிறோம். இது மிகவும் அரிதான ஒரு விஷயம் எனலாம். தமது பெற்றோர் எனும் உயர் நிலையில் இருந்து இறங்கி வந்து அப்படி மன்னிப்பு கேட்பது மிகவும் கடினம் தானே?
அலுவலகத்தில் மேலதிகாரிகள் பலர் மிக நன்றாக தமது சக ஊழியர்களிடம் வேலையை உறிஞ்சிக் கொண்டு, அவர்கள் உழைப்பில் குழுவுக்கு வெற்றி கண்டு அதன் பலன்கள் அவர்களே எடுத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. மிக நல்ல தலைவர்கள் குழுவின் மிகச் சிறந்த வெற்றி தமது குழு அங்கத்தினரின் கடின உழைப்பால் அவர்கள் பங்களிப்பால் கிடைத்தது என்று நிர்வாகத்திடமும், பொது இடத்திலும் எடுத்துரைத்து அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரவேண்டும். இதனை நாணயம் அல்லது நேர்மை எனலாம்.
பல நேரம் இன்று காதல் செய்பவர்கள் மற்றும் காதல் திருமணம் செய்து கொள்ளுபவர்கள் தமது காதல் பங்காளியிடம் நேர்மையாக இருப்பதில்லை. அதனால் வரும் குழப்பங்கள் தான் இன்று அதிகமான மன மற்றும் மண முறிவை கொண்டு சேர்க்கிறது.
பலர் இன்று கார் ஓட்டுனர்களை பணியில் வைத்துள்ளார்கள். எந்த ஓட்டுநர் நேர்மையாக நாணயத்துடன் செயல்படுகிறார்கள்?. பெட்ரோல் அல்லது டீசல் போடுவதில் பணம் பண்ணுவது, வண்டி ரிப்பேர் என்று அதிக பணம் முதலாளியிடமிருந்து வசூல் செய்வது என்று தான் இருக்கிறார்கள். அதே போல பல அரசு அதிகாரிகள் நேர்மை நாணயம் என்ற வார்த்தைகளை இது வரை அவர்தம் வாழ்வில் கேள்விப்பட்டதில்லை என்றே நடந்து கொள்கின்றனர்.
மிகவும் முக்கியமானவர்கள் கூட்டத்தில் கட்டாயம் இந்த குறித்த நேரத்தில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு காத்திருப்புக்கு பின்னர், நீங்கள் என்னை அழைக்கவே இல்லை என்று அப்பட்டமான பொய் சொல்லி தமது வாக்குறுதியில் இருந்து தப்பிக்கிறார்கள். அன்றாட வாழ்வில் சொன்ன வாக்கை காப்பாற்றாத நபர்களை நிறைய காண முடிகிறது. அவர்கள் வாங்கிய கடனை திரும்பத் தருவதில்லை.
இன்றைய விளையாட்டில், வியாபாரத்தில், பல டிவி நிகழ்ச்சிகளில் நாணயம் அல்லது நேர்மை என்பது பெயருக்குக் கூட சிறிதும் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். நாணயம் என்பது ஒருவர் பிறக்கும் போது இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாது. அவர்களின் வளர்சூழல் மற்றும், அவர்கள் பெற்றோர் ஆசிரியர் சமூகம் என்று எதைக் கற்றுக் கொள்கிறார்களோ அதன்படியே அவர்களின் நாணயம் அமைகிறது என்பதே உண்மை.
இப்படித் தான் நா நயமும். யாரையும் எப்படியும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு சிறிதும் தயக்கம் இன்றி பயமின்றி மரியாதையின்றி கண்டபடி பேசுகிறார்கள்.
இப்படித்தான் பெரியோர்களிடம், மூத்தோர்களிடம், மேலதிகாரியிடம், வாடிக்கையாளரிடம் பேச வேண்டும் பழக வேண்டும் என்ற நா நயம் தெரியாத சமூகமாக இன்று மாறி வருவதற்கு முக்கிய காரணம் இன்றைய திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்கள் என்று சொல்லலாம். பள்ளி மற்றும் கல்லூரிகளில், வீட்டில் எப்படி பிறர் மனம் கோணாது, நோகாது பேச வேண்டும் என்று சொல்லித் தருவதே இல்லை என்பது மிகவும் வருத்தமான செயல் தான். ஆத்திசூடி 'நயம்பட உரை' என்று (இனிமையாகப் பேசு) என்று கூறுகிறது. வாக்கினிலே இனிமை வேண்டும் என்று சொல்லுவான் பாரதி.
சிலர் சொல்லில் வைப்பார் முள்ளை. சிலர் சொல்லில் வைப்பார் கள்ளை. சிலர் சிலர் சொல்லில் இன்னும் பிள்ளை. நா நயம் என்பது பிறரோடு நல்ல சுமுகமான உறவு முறை வைத்துக் கொள்ள மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
நாணயமும் நா நயமும் வாழ்க்கை எனும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன என்பதில் என்ன சந்தேகம்?
No comments:
Post a Comment