இன்னும் இருக்கிறது
நம்மில் பலருக்கு அடிக்கடி தேவையற்ற ஓர் அலுப்பு ஏற்படுகிறது அல்லது மனதில் இருக்கிறது. . அதற்கு பெரிதாக ஒரு காரணமும் தேவை இல்லை. மனநிலை என்பது வானிலை போலத்தான். அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். ஏன் அப்படி மாறுகிறது என்று குறிப்பிட்ட காரணங்கள் யாராலும் கூற முடியாது. சிலர் இன்று முழித்த முகம் சரியில்லை என்று பிறர் மீது பழி போடுவதுண்டு.
முதல் நாள் சரியான தூக்கம் இல்லை, நாம் பார்த்த படித்த செய்தி ஒன்று மனதை மிகவும் அலைக்கழிக்கிறது. இல்லை என்றால் எந்த காரணமுமே இல்லாமல் கூட நமது மனநிலையில் ஊசலாட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. எப்போதும் உற்சாகமாக மாறாத புன்னகையுடன் இருப்பதைப் பார்த்திருப்போம். அவர்களுக்குள்ளும் இந்த மனநிலை ஊசலாட்டம் இல்லை என்று சொல்ல முடியாது. இருப்பினும் அவர்கள் அதிலிருந்து எப்படி எளிதில் வெளிவருவது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். அல்லது அப்படிப்பட்ட உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்கக் கற்றிருக்கிறார்கள்.
எத்தனை ஆடைகள் இதுவரை நாம் அணிந்திருந்தாலும் திருப்தி இல்லாமல் மற்றவர் ஆடைகளைப் பார்த்தவுடன் ஆசை மேலோங்குகிறது நாமும் அது போல வாங்கி விடலாம் என்று. எத்தனை வகையான உணவுகள் இதுவரை உண்டிருப்போம். இருப்பினும் சாப்பிட ஏனோ மனதில் நப்பாசை இன்னும் இருக்கிறது.
எத்தனை மேடையில் பேசி இருந்தாலும் சிலருக்கு மைக் கையில் கிடைத்து விட்டால் ஒரு குஷி. போதும் என்ற பிறகும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பல வகையான பாராட்டுக்கள் பெற்று விட்ட பிறகும் மனதில் ஏக்கங்கள் இன்னும் இருக்கிறது என்றபடியால் மேலும் பாராட்டு பெற துடிப்பது அல்லது ஏங்குவது மனித இயல்பு.
பல விஷயங்கள், அது தெரியும், இது தெரியும் என்றாலும் நாம் தெரிந்து கொள்ள, அறிவை மேம்படுத்திக் கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதனால் தான் பெரியோர்கள் சொன்னார்கள் - கற்றது கையளவு. கல்லாதது உலகளவு, பல கற்றும் கல்லாதார் என்று.
நெருக்கமான நல்ல உறவுகள், நட்புகள், தொடர்புகள் நமக்கு பல இருக்கலாம். இருந்தாலும் பொறாமையால், வெறுப்புணர்ச்சியால், வேண்டாத நெகடிவ் உணர்ச்சிகளால் நமது உறவுமுறைகளில் விரிசல்கள் இன்னும் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மாற்றங்கள் நம்மைச் சுற்றி தினம் தினம் நடைபெற்று வருகிறது. நாமும் மாறித்தான் போய் இருக்கிறோம். எனினும் மாறிட மாற்றிக்கொள்ள இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது. மறுக்க முடியுமா?
முடித்து விட்ட கடமைகள் நம்மை திருப்தியில் ஆழ்த்தினாலும், இன்னும் முடிக்க வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது.
நான் இருக்கிறேன். கவலை எதற்கு என்று கடவுளே வந்து அருகில் நின்று ஆற்றுப்படுத்தினாலும், கவலைகள் மறையாது மனதில் இன்னும் இருக்கிறது. புதுப்புது கவலைகள் எந்த ரூபத்தில் வரும் என்று 'கவலைகள்' இல்லாத போதும் அவற்றை எண்ணி கவலைப்பட்டு பழக்கமாகி விட்டதே. வலையோடு போகிறவன் கெண்டை மீன்களோடு திரும்புவான். கவலையோடு போகிறவன் சண்டையோடு தான் திரும்புவான் என்று நான் எனது பயிற்சி வகுப்புகளில் சொல்லுவதுண்டு.
இப்படி சொல்ல நிறைய இருக்கிறது என்று நான் அடுக்கிக் கொண்டே போக இன்னும் நிச்சயம் இருக்கிறது. அவற்றைப் படிக்க உங்களுக்கு நேரமும் பொறுமையும் இருக்கிறதா? ஏற்கனவே சுமார் 17 நாட்களாக எழுதி வருகிறேன். ஓரிருவர் மட்டுமே படித்து விட்டு 'பேஷ்' என்கிறார்கள். இன்னும் நிறைய பேர் படித்து பயனுற வேண்டும் என்ற அவா என் மனதில் இன்னும் இருக்கிறது.
No comments:
Post a Comment