6. கொஞ்சம் தந்திரம் வேண்டும்
சிம்பிள் என்று சொல்லிக்கொண்டு சிலர் இன்னும் வாழ்வில் தம்மை பின்னிறுத்திக் கொண்டு இருப்பதன் காரணம் பிறர் சற்று தந்திரத்துடன் சூழ்ச்சியுடன் சூட்சுமத்துடன் வாழ்வை அணுகத் தொடங்கி விட்டார்கள் என்பதை மனதில் வையாமல் ஒரு மூடரைப் போலவே வாழ்ந்து கொண்டு பல்வேறு ஏமாற்றங்கள் அவமானங்கள் உதாசீனங்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மனிதர்கள் (பறவைகள் பல விதம் போல) பலவிதம், அவர்களை ஒரு போதும் ஒரு போலவே அணுகி விட முடியாது. அவர்களின் நுட்பமான அணுகுமுறைகள் நாளுக்கு நாள் வெற்றிக் கண்ணோட்டத்தோடு மாறி வருகிறது. பலர் இன்று ஸ்மார்ட் என்றும் குறுக்கு வழியிலும் தமது போக்கை மாற்றிக் கொண்டு விட்டார்கள். அவர்களை வெகுளியாக பார்த்தால் ஏமாற்றம் அவமானம் நிச்சயம். ஒவ்வொரு மனிதரையும் தனித்தனியே அணுகிட வேண்டும். அது போல ஒவ்வொரு சூழலையம், பிரச்சனையையும் பல்வேறாக அணுகிட வேண்டும். அதற்கு விழிப்புணர்வு அதிகம் தேவை.
சூழல் அறிவு, தகவல் அறிவு, தொழில் நுட்ப அறிவு என்று பல விஷயங்களில் தம்மை யார் புதுப்பித்துக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லா விஷயங்களிலும் கட்டாயம் வெற்றி பெறுகிறார்கள். காரணம் அவர்களின் அணுகுமுறைகளில் ஏதோ ஒரு தந்திரம் சூட்சுமம் இருக்கிறது. அது அவர்கள் பெற்ற அனுபவம், சந்தித்த நபர்கள் அல்லது சிக்கல்கள், கற்றுக் கொண்ட விஷயங்கள், இவற்றில் இருந்து கிடைத்த அறிவு அல்லது ஞானம் எனலாம்.அப்படி ஒவ்வொரு மனிதரும் தம்மைப் புதுப்பித்துக் கொள்ள மென்மேலும் புதிய விஷயங்களை அன்றாடம் கற்க வேண்டும். பார்வையை விசாலப்படுத்துதல் வேண்டும். புதிய அணுகுமுறைகளை கையாள வேண்டும். புதிய நபர்களோடு பழக வேண்டும். நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்பம் மூலம் தகவல் அறிவை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும். நேர மேலாண்மை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் அதே 24 மணி நேரம் தான். எப்படி சிலர் பற்பல சாதனைகளை வெகு சுலபமாக செய்து விடுகிறார்கள் என்று நாம் உற்று நோக்கி கவனிக்க வேண்டும். எப்படி தமது சகமனித உறவுமுறையில் சிறந்து விளங்குகிறார்கள். எப்படி பணச் சிக்கல்களில் இருந்து தப்பிக்கிறார்கள் என்றெல்லாம் பார்த்து அறிதல் வேண்டும். தவிர தன்னை முன்னிறுத்திக் கொள்ள என்னவெல்லாம் சிலர் செய்கிறார்கள் என்று கண்காணித்து நாமும் அப்படி செய்ய முடியுமா என்று ஆய்வு செய்து பார்த்திட வேண்டும். எப்படி சிலர் சுருக்கமாக பேசி பல விஷயங்களை சாதிக்கிறார்கள். எப்படி சிலர் பல்வேறு நபர்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். எப்படி சிலர் என்ன இடர்ப்பாடுகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கிறார்கள். எப்படி புதிய புதிய பொருட்களை உடனே வாங்கி விடுகிறார்கள். எப்படி தமது வருமானத்தை எளிதாக பெருக்கிக் கொள்ளுகிறார்கள். எப்படி தமது நட்பு வட்டத்தை விரிவு படுத்திக்கொள்கிறார்கள்.
இப்படி அவர்களின் தந்திரங்களை கற்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற ஆர்வம் முதலில் மிகவும் அவசியம். பிறகு அவற்றைக் கற்றுக் கொள்ளும் வேட்கை. அதன் பின் கற்றுக் கொண்ட விஷயங்களை நடைமுறைப்படுத்துவது என்று இதற்கு படிப்படியான வழிமுறைகள் உண்டு. தெரிவது எல்லாம் ஞானம் அல்ல. செய்வதெல்லாம் சாதனைகள் அல்ல. சில யுக்திகள் தந்திரங்கள் கொண்டு வெற்றியாளனாக நம்மை முன்னிறுத்திக் கொள்ள நுட்பமான சில தந்திரங்களை தினம் தினம் கற்க வேண்டும்.
No comments:
Post a Comment