Sunday, January 19, 2020

நீ தான் எந்தன் இரவு பகல்

எவையெல்லாம் உன்னுள்
புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
நான் காண்பவை வண்ணங்கள் தான்
உன் அன்பு அல்ல எண்ணங்கள் அல்ல
உன் வாசம் எங்கே உன் சுவாசம் எங்கே
உன் மூச்சும் பேச்சும் நானறிவேனே - அப்படி
எவையெல்லாம் உன்னுள்
புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
உனது வளமும் உளமும் அன்பு தான் உனது மனமும் குணமும் புதிய தெம்பு தான்
உனது ஸ்பரிசம் உனது கருணை இரண்டும்
உனது விரலில் குரலில் நானறிவேனே - அப்படி
எவையெல்லாம் உன்னுள் புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
உனது ஏற்போ உனது மறுப்போ எங்கே 
உனது அணைப்போ உனது தவிப்போ எங்கே 
உனது காதல் பார்வையை படம் பிடிக்க முடியுமா
உனது உருவம் உனது புருவம் வரையத்தான் முடியுமா - அப்படி
எவையெல்லாம் உன்னுள் புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
உன்னை அடையத் தான் எனக்கு விதியில்லையா
உன்னை விட்டால் எனக்கு வேறு கதியில்லையே
உன்னை நேரில் காணாது போனது சதியில்லையா
உனது படம் மட்டும் போதும் என்றால் சரியில்லையே
எவையெல்லாம் உன்னுள் புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
படைத்தவனே உன்னைநேரில் நின்று பார்த்தானா
பார்த்தால் பாராதது போல் கடந்து தான் போவானா
உனைப்போல் படைக்க இனி அவனால் கூட முடியுமா
எனைத்தான் பிரிக்க இனி விதியால் சற்றும் இயலுமா
எவையெல்லாம் உன்னுள் புதைந்திருக்கிறதோ
அவையெல்லாம் இந்தப் புகைப்படத்தில் இல்லை
வேண்டாம் இந்தப் படம் ச ச இது வெறும் நகல்
வேண்டும் வா நேரில் நீ தான் எந்தன் இரவு பகல்
இந்தப் புகைப்படத்தில் இல்லை
- பாலசாண்டில்யன்
(முகமது ரபி பாடிய எக்காலமும் நிற்கும் காதல் பண் - சாஹிர் லூதியான்வி அவர்களின் வரிகள், ரோஷன் அவர்களின் இசை, தாஜ் மஹல் படத்தின் ஜோ பாத் துஜ் மெய்ன் ஹை என்ற பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனதின் ரம்மியம் கூடுமா குறையுமா ? அந்த தருணத்தை தமிழில் கொணரும் முயற்சி.....நிச்சயம் எனக்கு திருப்தி இல்லை... இருந்தாலும் தோற்கும் முயற்சி செய்வது பெரிய தொல்லை).

No comments:

Post a Comment