Wednesday, January 29, 2020

சூனியம்


 
நீயில்லை எனில் வீடேசூனியம் 
மனித சகவாசம்  இல்லா வீதி போல்
மணமே சற்று மில்லா மலரைப் போல்  
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 

இருள் சூழ்ந்த வனத்தைப்  போல் 
ஒளியிழந்த விழிகள் போல்  
அலைகள் இல்லாக்  கடலைப் போல்  
நிலவே இல்லா வானம் போல்  
பூக்கள் இல்லா நந்தவனம் போல்  
பொலிவே இல்லா மலையைப் போல்  
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 

வெட்டவெளி குளிர்தென்றல் போல்  
வெற்று மனதுள் கலைந்த நினைவு போல்  
விண்மீன் இல்லா இரவைப் போல்  
தூக்கம் தொலைத்த கட்டிலைப் போல்  
துக்கம் நிறைந்த மெட்டினைப் போல்  
நினைவுகளின் நிழலாக மட்டுமே ஆன   
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 

கண்ணின் நீர் முத்தை களவாடாமல்  
காலத்தின் தூரத்தை நீட்டி விடாமல்  
கணம் கணமிங்கே மாறிடும் மனமே  
கடும்பகல் கடந்து இரவாகிடும் தினமே
கஷ்டங்கள் தாண்டி சுகம் தேடுகையில் 
கதிரவன் வந்து கிழக்கே நரைக்கையில் 
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 
நீயில்லை எனில் வீடே சூனியம் 
மனித சகவாசம்  இல்லா வீதி போல் 
மணமே சற்று மில்லா மலரைப் போல்  
நீயில்லா வீடும் ஆனது சூனியம் 
உன் வரவு தான் நான் பெறும் மானியம் 
உன் உறவு தான் எந்தன் பாக்கியம் 


நீயிருக்கும் உலகு தான் சொர்க்கம் 

No comments:

Post a Comment