Tuesday, November 23, 2021

பிழைத்தது தாம்பத்தியம்

 பிழைத்தது தாம்பத்தியம்

குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
மூர்த்தி சென்னையில் உள்ள மிகப் பெரிய ஐ டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். பிஸ்சா, பக்கோடா, கோல்ட் காபி, போண்டா என்று சாப்பிட்டுக் கொண்டே வேலை பார்த்து வந்ததால் கொஞ்சம் தொப்பை அதிகம்.
கல்யாணப்படலம் வந்த போது திருச்சி நந்தினி மனைவியானாள். கொஞ்ச நாள் வேலை பார்த்து வந்த நந்தினி, மூர்த்தி மற்றும் அவன் பெற்றோர் சொன்னதைக் கேட்டு வேலையை விட்டாள். சாதாரண வேலை, சுமார் சம்பளம் தான் என்பதால் உடனே ஒப்புக்கொண்டாள். மூர்த்தி-நந்தினி தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர். மூர்த்தி ஒரு பிளாட் வாங்க முடிவு செய்தான். பல புதிய வேலைகளுக்கு மனு போட்டான். புனேவில் நல்ல வேலை கிடைத்தது.
சென்னையில் வாங்கிய பிளாட்டை க்ருஹபிரவேசம் முடித்த கையோடு வாடகைக்கு விட்டு விட்டு புனேக்கு குடி பெயர்ந்தான் மூர்த்தி. மூர்த்தி-நந்தினி இருவருக்கும் புனே புதுசு. மூர்த்தியை நைட் ஷிப்டில் போட்டார்கள். இங்கு தான் சிக்கல் தொடங்கியது.
மூர்த்திக்கு குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும். நைட் ஷிப்ட் முடித்து வீடு வந்து சேர விடியற்காலை ஐந்தரை மணியாகி விடும். பால்காரனைப் போல் வந்து மணி அடிப்பதும் பாதி தூக்கத்தில் நந்தினி கதவைத் திறப்பதும் வழக்கமானது.
ஆபீசிலிருந்து வந்ததும் மூர்த்திக்குப் பசிக்கும். ப்ரேக் பாஸ்ட், காபி கட்டாயம் வேண்டும். சாப்பிட்ட பிறகு கும்மிருட்டு அறையில் போய் படுத்துத் தூங்கத் தொடங்குவான். மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குத் தான் எழுந்திருப்பான். எழுந்ததும் பேப்பர், டிவி, பக்கத்தில் உள்ள காய்கறி கடைக்குச் செல்லுதல் போன்ற வழக்கமான அலுவல், முடிந்தால் மீண்டும் நைட் ஷிப்ட் ஆபீசுக்கு கிளம்ப வேண்டியது தான்.
நந்தினி குளித்தாளா? சாப்பிட்டாளா ? இவன் தூங்கும் போது அவளுக்கு எப்படிப் பொழுது போகிறது ? என்ற கவலையெல்லாம் மூர்த்திக்கு வந்தது இல்லை. இந்த வாழ்க்கை நந்தினிக்கு அலுப்பும் வேதனையும் ஆனது. ஒரு நாள் மூர்த்தி ஆபீஸ் முடித்து வீட்டிற்குள் நுழையும் போது பற்றிக் கொண்டது. நந்தினியின் விஸ்வரூபத்தை அன்று தான் மூர்த்தி பார்த்தான். பயந்தே போனான். மூச்சு வாங்க சண்டை போட்டு முடித்து விட்டு கையில் பெட்டியுடன் நந்தினி புறப்பட்டு விட்டாள். நிஜமாகவே திருச்சி போய் விட்டாள். மூர்த்தி நொடிந்து போனான். எத்தனை போன் செய்தும் நந்தினி பேசுவதாயில்லை.
மூர்த்தி வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தான். நந்தினிக்குத் தகவல் சொன்னான். நந்தினி இறங்கி வருவதாக இல்லை. இரண்டு மாத கடும் முயற்சிக்குப் பிறகு மூர்த்திக்கு கல்ஃபில் நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. திருச்சி போய் கிட்டத்தட்ட நந்தினி காலிலேயே விழுந்து கெஞ்சினான் மூர்த்தி. பெரியவர்கள் தலையீட்டோடு நந்தினி அவனோடு வர சம்மதித்தாள்.
நல்ல வேளை. நல்ல வேலை. மூர்த்திக்கு புதிய கம்பெனியில் ஐந்து நாள் வேலை, இரண்டு நாள் விடுமுறை, மேலும் காலை சென்றால் மாலை வீடு வந்து விடுவான்.
நந்தினி மீண்டும் கிளம்பினாள் திருச்சிக்கு... டெலிவரிக்காக.
பிழைத்தது ஒரு திருமணம்...தாம்பத்தியம்...!

My new book

 எனது முதல் சிறுகதை தொகுதி குவிகம் வெளியீடாக விரைவில்...

டாக்டர் பாஸ்கரன் அவர்களின் அணிந்துரை...
திரு தேவிபாலா, திரு பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரின் ஆசியுடன்...
அட்டைப்படம்: திருமதி சுபாஷிணி சந்தோஷ்
விலை : ₹ 120. - 21 சிறுகதைகள் (பெரும்பாலானவை பத்திரிகைகளில் பிரசுரம் ஆனவை, பரிசு பெற்றவை)
நூல் அர்ப்பணிப்பு:
என் அம்மா திருமதிலட்சுமி கல்யாணராமன், திருமதி ராஜலட்சுமி விக்கிரமன் மற்றும் திரு உதயம் ராம்.
நூல் பெற: 98400 27810

நீர் வளங்களைப் பற்றி

 நீர் வளங்களைப் பற்றி எல்லோரும் ஊடங்கங்களில் புலம்புவதைப் பார்க்கும் போது மனம் வெதும்புகிறது.

மும்பையிலும் கேரளத்திலும் ஓவ்வொரு ஆண்டும் மாரி தவறாமல் பொழிகிறது.
அவர்கள் அதற்குத் தயாராகிறார்கள் மனதளவில் மற்றும் எல்லா விதத்திலும்.
முகம் சுளிப்பதில்லை. வேலை நின்று போவதில்லை. சில சமயம் ரயில் பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்து போனாலும் சமாளிக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளுவார்கள். எதற்கும் அரசாங்கத்தை குறை சொல்ல மாட்டார்கள்.
நான் மும்பையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன். அதனால் அங்கு மழை மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்களை நேரில் பார்த்திருக்கிறேன்.
நம்ம ஊரில் குப்பை, பிளாஸ்டிக், தீபாவளி பட்டாசு கழிவுகள், உணவுக் கழிவுகள் இவற்றைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் எங்கு வேண்டுமானாலும் விட்டு எறிவதை நாம் பார்க்கலாம். மழை சொல்லி வந்தாலும் சொல்லாது வந்தாலும், நாம் மழையை மற்றும் அரசை குறை சொல்லிப் பழகி விட்டோம். நமக்கு வெயில் பிடிக்குமா? இருப்பினும், நீர் இன்றி அமையாது உலகம் என்று சும்மாவா சொன்னார்கள்?
குடை, ரெயின் கோட், மழையில் நனைவது எதுவுமே பிடிக்காத நாசுக்கான மக்கள் நாம். எது நடந்தாலும் போட்டோ எடுப்பது, டிவியில் பேட்டி கொடுப்பது, போனில் பகிர்வது இப்படியே இருப்பவர் நம்மில் அதிகம் இன்று. நமக்கு உள்ள பொறுப்பு உணராது பிறர் வந்து செய்ய வேண்டும். குறிப்பாக அதிகாரிகள், அரசு வந்து நம் வீட்டு தீபாவளி குப்பையை எடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது எப்படி சரியாகும்?
"நமக்கென்று கடமைகள் உண்டு, அதை நம் கையால் செய்வது நன்று" என்று ஒரு பழைய பாடல் கேட்ட நினைவு உண்டு.
நாம் வாழும் இடம் நமது. நாம் இந்த உலகிற்கு வந்துள்ள விருந்தாளி தான். ஆனால் சில நாட்களுக்கு அல்ல. சில பல வருடங்களுக்கு என்பதை நினைவில் கொள்வோம். எனவே நாம் ஒன்றும் பேயிங் கெஸ்ட் அல்ல. அவரவர் வீட்டிற்கு அருகே சுத்தமாக வைத்துக் கொண்டால் எப்போதும் நன்மை தான். குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவோம். பிளாஸ்டிக் உபயோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்போம்.
இதனை நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்தால் அடுத்தடுத்த மழையின் போது நிச்சயம் அவதி குறைவு என்பதைக் காணலாம்.

மார்க் என் செயும்

 மார்க் என் செயும்

குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
எப்போதும் நான்கு மணிக்கே வீடு திரும்பும் யாமினியை இன்னும் காணவில்லை. 'ப்ரெண்ட் வீட்டிற்குப் போயிருப்பாளோ?' துடிதுடித்துப் போனாள் காயத்ரி.
மணி ஆறு ஆயிற்று. யாமினி இன்னும் வந்தபாடில்லை. காயத்ரி ராமனுக்குப் போன் செய்தாள். "ஏங்க யாமினி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை"
எதிர்ப்புறத்திலிருந்து ராமன் நிதானமாக, "வருவாள், ஏன் பதறுகிறாய் ? சும்மா போன் செய்து என்னைத் தொந்தரவு செய்யாதே" என்றான்.
மணி 8 ஆயிற்று. வீடு வந்து சேர்ந்த ராமனும் குழம்பித் தான் போனான்.
யாமினியின் வகுப்பு தோழர்களுக்கு தோழிகளுக்கு எல்லாம் ஒவ்வொருவராய் போன் செய்தான் ராமன். உஷா, சந்திரா என்ற இன்னும் இரண்டு பெண்கள் வீடு வந்து சேரவில்லை என்று தெரியவந்தது.
ராமனுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.
திடீரென்று கோபாலிடம் (யாமினியின் வகுப்புத் தோழன் ) இருந்து போன் வந்தது. "சார் நான் கோபால் பேசறேன் ..யாமினி, உஷா மற்றும் சந்திரா மூவரும் ரயிலில் ஏறி வெளியூர் போகத் திட்டம் போட்டுள்ளனர். வண்டி சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து பத்து மணிக்குப் புறப்படுகிறது."
போனை அவசரமாக வைத்து விட்டு ராமனும் காயத்ரியும் ஆட்டோ பிடித்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் விரைந்தனர்.
சரியாக 9.35 இருக்கும். ராமன் ஒவ்வொரு பெட்டியாகத் தேடிக் கொண்டே ஓடினான். காயத்ரி இன்னொரு புறம் ஓடினாள். போலீஸ்காரர் ஒருவர் முன்பு மூன்று பள்ளி மாணவிகள் யூனிபார்முடன் நின்று கொண்டிருந்தனர். மூவரில் ஒருவர் யாமினி. பின்னால் இருந்தே அடையாளம் தெரிந்தது ராமனுக்கு.
முன்னால் வந்து யாமினியைப் பார்த்து அங்கேயே மயக்கம் அடைந்தான் ராமன்.
காயத்ரியும் அங்கு வந்து சேர்ந்தாள். யாமினியை கன்னம் கன்னமாக அறைந்தாள்.
மறுநாள் பள்ளி பிரின்சிபால் முன்பு செய்வதறியாது கைகளைப் பிசைந்தபடி நின்றார்கள் ராமனும் காயத்ரியும்.
'படி படி ...இந்த மார்க் பத்தாது' என்று கத்திய பெற்றோர் நிலை தடுமாறினர். அதே மனநிலையில் தான் பிரின்சிபால் மேடமும்... ஆனால் மௌனமாக.

கல் ஆணி

 கல் ஆணி

குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
கல்யாணி பன்னிரண்டு வயதுச் சிறுமி. அவள் தந்தை வாசுதேவன் குடிபழக்கத்திற்கு அடிமையாகிப் போனவன். தினமும் குடித்து விட்டு வருவதும், மனைவியை மற்றும் மகளை அடிப்பதும் அவனுக்கு வாடிக்கையானது. வாசுவின் மனைவி மரகதத்திற்கு தனது கணவனை எப்படி திருத்திக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை.
வாசுவின் இந்தப் பழக்கம் அவனை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தது. மரகதம் விட்டுக் கொடுக்காமல் வீட்டையும் பார்த்துக் கொண்டு கணவனையும் பார்த்துக் கொண்டாள். மூன்று மாதப் போராட்டம் சோக முடிவாகிப் போனது. வாசுவின் இறுதிப் பயணம் மரகதத்தை சற்று உலுக்கத் தான் செய்தது. கல்யாணியை வளர்த்து ஆளாக்குவது பெரிய சவால் ஆனது.
இந்த நிலையில் குடும்ப நண்பர் பட்டாபி வலிய முன்வந்து கல்யாணியை தனக்குத் தெரிந்த ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுவதாகப் பரிந்துரைத்தார். அது அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும் என்றும் சொன்னார். கல்யாணி மறுநாளே ஆஸ்ரமத்தில் சேர்க்கப்பட்டாள். அங்கே படிப்பு, தியானம், பஜனை, கைவேலை என்று பல்வேறு விஷயங்கள் அவளுக்கு கற்றுத் தரப்பட்டது.
கல்யாணிக்கு ஏனோ படிப்பில் நாட்டம் இல்லை. தினமும் அப்பா வந்து அவளையும் அவள் அம்மாவையும் அடிப்பது போலவே கண்முன் காட்சி வந்து அவளைத் தொந்தரவு செய்தது. அவள் மனநிலையைச் சரியாக்க ஆஸ்ரிம குருஜி அவளை பாட்டு வகுப்பில் சேர்க்கச் செய்தார். கல்யாணியின் மனநிலையில் மாற்றம் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் இசையில் முன்னேறினாள். அருகில் சில நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தாள். பட்டாபியும் மரகதமும் அவ்வப்போது அவளை சென்று பார்த்து உற்சாகம் அளித்தனர்.
ஆஸ்ரமதிற்கு அடிக்கடி வந்து போகும் ஒரு பணக்காரர் மூலம் கல்யாணிக்கு வெளிநாடு புறப்படும் யோகம் அடித்தது. அவள் இப்போது 19 வயது யுவதியாக இருந்தாள் என்பதால் அந்த பணக்காரர் அவளுக்கு அமெரிக்காவிலேயே ஒரு சங்கீதப் பள்ளி வைத்துத் தருவதாக சொன்னார்.
தலைகால் புரியாத கல்யாணி அவள் அம்மாவிடம் யாரோ மூன்றாம் மனுஷியிடம் சொல்வது போல் சொன்னாள். மரகதத்தின் அழுத்தம் காரணமாக கல்யாணி பட்டாபி வீட்டிற்கு போனாள். அவரிடம் அவள் சொன்ன விஷயமும் சொன்ன விதமும் பட்டாபியை மனம் அதிரச் செய்தது. "அங்கிள், இனி நான் உங்களுக்கும் அம்மாவுக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. வெளிநாடு போகிறேன். என்றாவது திரும்பி வந்தால் பார்க்கலாம்"
எதையும் எதிர்பார்த்து உதவவில்லை என்றாலும் நன்றியறியா தனது நண்பரின் மகளை நினைத்து பட்டாபி மிகுந்த வருத்தத்திற்கு ஆளானார். மரகதத்திடம் ஏதும் சொல்லவில்லை...தனக்குள் நினைத்துப் புலம்பினார்....! எங்கு சென்றாலும் நன்றாய் இரு என்று அவரை அறியாமல் தனது பிரார்த்தனையில் சொன்னார்.

நிர்கதி

 நிர்கதி - குறுங்கதை

- டாக்டர் பாலசாண்டில்யன்
ரவிச்சந்திரன் தனது 52 வது வயதில் பணி விருப்ப ஓய்வு பெற்றார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று வரவழைத்துக் கொண்டதால் அடிக்கடி தலை சுற்றல், கை கால் நடுக்கம் என்று உடல் உபாதைகள். தனியார் நிறுவனம் என்பதால் ஓய்வு பெற்ற போது கிராஜுவிட்டி என்று நான்கு லட்சம் ரூபாய் தான் வந்தது.
தனது பெண் ரமாவின் திருமணத்திற்கு மூன்று லட்சம் செலவானது. மீதம் ஒரு லட்சத்தில் கடன் வாங்கிய ஐம்பதாயிரம் கரைந்து போனது. மீதி பணம் பிக்செட் டெபாசிட்டில் வங்கியில் போய் உட்கார்ந்தது.
ரவிச்சந்திரனுக்கு திடீரென்று காது இரண்டும் கேட்காமல் போனது. தினமும் மகன் கணேஷிடமும் மனைவி பானுவிடமும் அர்ச்சனை தான். ரவிச்சந்திரன் தான் உண்டு தன் செய்தித்தாள் மற்றும் டிவி உன்று என்று இருப்பது வழக்கமாகிப் போனது.
கணேஷிற்கு கல்யாணம் ஆனது. ரவிச்சந்திரன் ஹோமுக்கு அனுப்பப்பட்டார். மனைவி பானு மகனுக்கு அடிமை ஆனாள். ரவிச்சந்திரனுக்கு அப்படி இப்படி என்று வயது அறுபது ஆனது. கண்ணிலும் கோளாறு. அடிக்கடி பல் பிரச்சனை வேறு. கேட்பாரற்று இருந்த அவர் நிலைமை நாளுக்கு நாள் மோசமானது.
முதியோர் இல்லத்திலிருந்து ரவிச்சந்திரன் என்கிற ஓர் அநாதை இறந்து விட்டதாக
குரோம்பேட்டை ராகவுனுக்கு ஒரு நாள் போன் வந்தது, ராகவன் அநாதைப் பிணங்களுக்கு ரட்சகன் என்பதால் மகனைப் போல் இருந்து காரியங்கள் முடித்து வைத்தார்.
மகன் மகள் மனைவி யாவரும் இருந்தும் அநாதையான கதி...நிர்கதி...!!

குருவின் அற்புதம்

 ஓரிக்கை சென்று ஒரு கணம் தொழுதால்

கோரிக்கை நிறைவேறுமே - குருவின்

அற்புதம் நிஜமாக்குமே

பாரினில் குருவென்றால் சந்திரசேகரரே
- இனி அவர் போலே
யார் வருவார் பக்தர்கள் இன்னல் களைந்திடவே (ஓரிக்கை)

வாடிக்கை மனிதர்கள் வாழ்வினிலே அவர்
வளங்கள் பல சேர்த்தார் - ஒரு
வேடிக்கையாகவே ஜாலங்கள் பல செய்து
வேதனைகள் போக்கி நின்றார்
(ஓரிக்கை)

நடராஜனின் வடிவமாய் நடமாடிய தெய்வமாய்
நம்பினோர்க்கருள் புரிந்தார்- பல
தடம் மாறிய பக்தரும் தாள் பணிந்தே நிதம்
தயைகொடு சங்கரா எனத் தொழுதார்
தாங்கொணா மகிழ்ச்சியில் ஆனந்தமாய்த் தாம் அழுதார்
(ஓரிக்கை)

- பாலசாண்டில்யன்