Friday, January 27, 2017

பார்வை - Poem by Balasandilyan

அரிய ஆயுதங்கள் 

பார்வை 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

தமிழன்னைக்கு முதல் வணக்கம் 
கணேசனின் குரு பார்வை என் மீது வெகுநாள் கழித்து...
கவியரங்க தலைமைக்கு சிறப்பு வணக்கம் 
செவி மடுக்கும் பார்வையாளர்கள் உங்களுக்கு பணிவான வணக்கம் 
சிக்நலில் சிவப்பு விழுந்தாலும் ப்ரேக்ஸ் இன்றி நிற்காது ஊர்தி 
நிறுவனத்திற்கு பல கோடி வணக்கம் 

என்ன பார்வை உந்தன் பார்வை 

ஒரு வார்த்தை வெல்லும் 
ஒரு வார்த்தை கொல்லும் 
என்றும் மௌனம் வேண்டாம் 
ஆயிரம் அர்த்தம் சொல்லும் 
அந்த ஒற்றைப் பார்வை உலகை வெல்லும் 

பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமோ 

பறவையின் பார்வை இருந்தால் 
பிரச்சனைகள் சிறிதாகும் 
அன்னையின் அன்புப் பார்வை 
அழுகை நிறுத்தும் அரவணைப்பை தரும் 
தந்தையின் கண்டிக்கும் பார்வை 
குற்றங்கள் தடுக்கும் 
ஆசிரியரின் கோபப் பார்வை 
விழிகளுக்குள் விடைகள் நினைவூட்டும் 
காதலியின் ஓரப் பார்வை 
உயிரை உருக்கும்  தூக்கம் விரட்டும் 
மனைவியின் ஏளனப் பார்வை 
மன்னிப்பு கோர வைக்கும் 
அதிகாரியின் அர்த்தமுள்ள பார்வை 
அனைத்தையும் உணர்த்தி விடும் 
மகளின் கெஞ்சல் பார்வை 
மணிபர்ஸை காலி செய்யும் 
நண்பனின் நக்கல் பார்வை 
நம்மையே நமக்கு அறிமுகம் செய்யும் 
வாடிக்கையாளரின் மகிழ்வுப் பார்வை 
வணிகத்தைப் பெருக்கி நிற்கும் 

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே 

சிலர் பார்வை பட்டால் 
சீக்கெல்லாம் குணமாகும் 
சிலரின் அப்படி இப்படி பார்வை 
சிதைக்கும் மனதை குப்பையாய் 

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் 

மேலதிகாரியின் பார்வை நம் மீது விழ 
மேன்மை பல பிறக்கும் 
கடவுளின் கருணைமிகு கடைக்கண் பார்வை 
கஷ்டங்கள் போக்கி விடும் 
கிரகங்களின் பார்வை சிலருக்கு 
கெட்டதெல்லாம் போக்கி விடும் 

நீ பார்த்த பார்வைக்கு நன்றி 

அப்படிப் பார்க்கறது வேண்டாம் 
அக்கறைப் பார்வை ஒன்று தா என 
அனைவரையும் கேட்கும் மனது 

பார்வையது விசாலமானால் 
பார்வையது மாறி விட்டால் 
பண்புகள் தானே மாறிப் போகும் 
பண்புகள் மாறி விட்டால் - மனப் 
பாங்கு தான் மாறி விடும் 
பாங்கு மாறி விட்டால் 
எண்ணமும் செயலும் மாறும் - பின் 
எல்லாமே வெற்றியாய் நிச்சயம் மாறும் 
பார்வை என்பது மனதால் அறிவால் 
பார்ப்பது எனப் புரிந்து கொள்வோம் 
கண்ணால் மட்டும் பார்ப்பது 
காட்சி தானே ஒழிய காரியம் முடிக்காது 

காடு திறந்தே கிடக்கிறது காற்று மலர்களைத் துடைக்கின்றது 
கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது 

கண்திறந்து பார்ப்பது இனி வேண்டாம் 
மனம் திறந்த பார்வை கொள்வோம் 
மனித நேயத்துடன் உலகைப் பார்ப்போம் 
பார்வையெனும் அரிய ஆயுதம் கொண்டு 
பாரினை வெல்வோம் பரவசம் கொள்வோம் 
பிரபஞ்சத்தை அன்பால் வெல்வோம் 
உன் பார்வைக்கு நீயே பொறுப்பு 
உலகளாவ மனம் விரி..உயிருள்ளவரை நீ சிரி 

Tuesday, December 6, 2016

Tribute to Amma Jayalalitha

இரும்பு மனுஷிக்கு இதய ஒலியாய் அஞ்சலி
- டாக்டர் பாலசாண்டில்யன் 

புறக்கணிக்கப்பட்டவர்க்குக் கூட 
பரிவு காட்டிய இரும்புத் தாய் நீ 
வீரர்கள் முன் நீ  அன்புப் பசு 
வீணர்கள் முன் நீ  சிங்கம் 
வீண்வம்புக்காரர் முன் நீ  புலி 

ஒப்பார்க்கு ஒப்பார் 
மிக்கார்க்கு மிக்கார் 
தங்கத்தாரகை நீ அம்மா 
முட்களைத் தாண்டிய பாதை தாண்டி 
மக்கள் பாதை நுழைந்தவர் நீ அம்மா 
நெருப்பாற்றில் நீந்தித் தான் 
பொறுப்பாற்றலைக் கற்றார் நீ அம்மா 

தேசத்தைப் பாதுகாக்கத் 
துணிந்த அம்மா நின் 
தேகத்தைப் பாதுகாக்க 
இயலாது போனது நேற்று ..!
பாபங்கள் செய்தவரைக் கூட 
விட்டு விட்ட எமதர்மன் - மக்கள் 
அனுதாபம் பெற்ற உன்னை 
எடுத்துச் சென்ற பிறகு 
மூதறிஞர் மண்டபத்தில் 
பேரறிஞர் உன் உறக்கம் இன்று...!.

எங்கு காணினும் சென்னையில் 
எல்லையில்லா அன்பர் கூட்டம் 
எல்லை கடந்த அன்பு கொண்ட உனக்கு  
கண்ணீர் அஞ்சலி செலுத்திட நாட்டம் 

தண்ணீர் தராதவரும் கண்ணீர் சிந்தினர் 
வாய் திறக்காதவரும் வாய்மொழி சிந்தினர் 
தேசம் முழுவதும் இருந்து தலைவர் வருகை 
நேசம் பாராட்டும் நண்பர்களின் அழுகை 
வர முடியாத நபர்கள் விட்டனர் அறிக்கை 
சென்னை வீதிகளில் தண்ணீர் 
வெள்ளம் சென்ற ஆண்டு 
சென்னை வீதிகளில் மக்கள்தலை 
வெள்ளம் இந்த ஆண்டு 

நீ  தேச ராணியா நேச ராணியா 
என்ற விவாதம் தேவை இல்லை 
பாசமும் பரிவும் காட்டியதால் 
நீ  அகிலத்தின் அன்பு ராணி 

பூதவுடல் புதையுமெனினும் 
புகழுடன் நீ உறைவாய் 
பூவுலகில் என்றென்றும் 
எங்கள் உள்ளங்களில் ...!

அம்மா என்றான தாய் 
இறைவனடி சேர்ந்தாய் 
சமரசமில்லா போராளியே 
சந்தோசம் காணா அறிவாளியே 
இனியில்லை போராட்டம் உனக்கு 
இனிதே உறங்குவாய் அம்மா 

கடலை விட பெரிது உனைக் காண வந்த கூட்டம் 
கடற்கரையில் களைப்பாறுவாய் 
அதுவே இனி உன் தோட்டம் 
ஆசிகள் தந்து வழிகாட்டு எனக் கேட்டோம் 

பாரத ரத்னா விருது அறிவிப்பு 
இன்றோ நாளையோ வரும் என்பதே 
எனது மனம் சொல்லும் கணிப்பு ..!
இது சத்தியம்...பெரும் சாத்தியம்...!!

உலகம் இனி காணுமோ உன் போல் அம்மா 
உலவும் என்றும் உனது புகழ் அம்மா !!
கணினி சிந்திய கண்ணீரில் 
கவிதையாய் வடித்தேன் அஞ்சலி ..ஏற்பாய் அம்மா.!!

Thursday, November 17, 2016

Aaj jaane ki zid na karo ((தமிழில் )

Aaj jaane ki zid na karo ((தமிழில் எனது பிரதிபலிப்பு)
இன்றே செல்வேன் என்று ஆடம் பிடிக்காதே அன்பே
இதயத்தில் நான் சற்று இடம் பிடிக்கும் முன்பே (இன்றே)
என்னருகே அன்பே கொஞ்சம் அமர்ந்து கொள்
என்னை விரும்புவதாகச் சொல்லிக் கொல்
நீ கிளம்பிவிட்டால் நீ மட்டுமா செல்வாய் ?
என் உயிரும் தானே எனைவிட்டு செல்லும் (இன்று)
நான் ஏன் உனை நிறுத்துகிறேன் தெரியுமா?
நீ தான் என் வாழ்வும் சாவும் புரியுமா?
வாழ்நாள் முழுதும் துடிக்க வைப்பதா உன் வேலை ?
வாழ்ந்து காட்டுவோம் உலகிற்கு அன்பின் லீலை ..(இன்று)
காலத்தின் கைப்பிடியில் நமது வாழ்க்கை
காதல் காலமே விரிக்கும் சுதந்திரச் சிறகை
பனிக் காலத்தில் நீயே எனது மேற்கூரை
பணித்து நிறுத்து இரவே போகாதே எனக் கூறி (இன்றே)
- டாக்டர் பாலசாண்டில்யன்

Planning

எதைப் பற்றியெல்லாம் திட்டமிட வேண்டும் ?
- உடல் ஆரோக்கியம் 
- பண வரவு - செலவு - சேமிப்பு 
- மன அழுத்தம் - பாதுகாப்பின்மை 
- தனிமையைச் சமாளித்தல் 
- தள்ளாமை பற்றியும் தள்ளிபோடுவது பற்றியும்
- பணியின்மையால் ஏற்படும் மனக் கலவரங்கள்
- எந்த வருமானத்திலும் மகிழ்ச்சி
- கனவுகளை நனவாக்குதல்
- குடும்பம்/வீடு/நண்பர்கள்/அந்தஸ்து/சமூகம்/ஆன்மிகம்/ஆகியவற்றை சமாளிப்பது
- தியானம்
- எதிர்பாராத விஷயங்கள்
- மகன் அல்லது மகள் படிப்பு மற்றும் திருமணம்
- பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து செயல்படுதல்
- சமூகப் பணி
- புத்தகம் எழுதுதல்
- வெளியூர் செல்ல
- பிரார்த்தனை நிறைவேற்ற
- வீடு மற்றும் இதர சொத்து வாங்க விற்க
- வேலையில் அல்லது தொழிலில் மேம்பட
- பிடித்ததை செய்ய
- நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு செல்ல
- விடுமுறை கொண்டாட
இப்படி பட்டியல் நீளுகிறது.


பணி ஓய்வுக்குப் பிறகு செய்வது அவசியம் :
- நேரத்தில் குளிப்பது 
- காலை உணவு மற்றும் மருந்து உட்கொள்ளல் 
- நடப்பது, புத்தகம் படிப்பது, நண்பர்களை தொடர்பு கொள்ளல் 
- முடி, நகம் வெட்டுதல்
- மீசை தாடி சரி செய்து கொள்ளுதல்
- சரியான 'பளிச்' உடைகள் அணிவது
- வாய் துர்நாற்றம் இன்றிப் பார்த்துக் கொள்வது
- அநாவிசியமாக சாப்பிட்டு வியாதி வராது காத்தல்
- சேமிப்பு மற்றும் பண விஷயங்களில் கவனமாக இருத்தல்
- யாரையும் சார்ந்து இல்லாது இருத்தல்



ஓய்வு பெற்ற பெண்கள் :
- தனக்கு தெரிந்த பாடல்கள், ஸ்லோகங்கள் அக்கம் பக்கத்தவருக்கு சொல்லித் தரலாம்
- கைத்திறன் காட்டும் படி பொம்மை, தையல், எம்ப்ரோடயரி செய்யலாம்
- பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொல்லலாம்.
- கோவில்களுக்கு செல்லலாம்
- பத்திரிகைகளில் சிறு குறிப்புகள் எழுதலாம்.
- சமூகப் பணிகளில் ஈடுபடலாம்.

Some Tamil Quotes

சிலர் சொல்லில் வைப்பார் முள்ளை.
சிலர் சொல்லில் வைப்பார் கள்ளை.
சிலர் சொல்லில் இன்பம் கொள்ளை
சிலர் சொல்லில் இன்றும் பிள்ளை

கண்களில் தெரியும் வெறி 
மனதில் தெரியும் குறி 
அதுவே வெற்றிக்கு அறிகுறி

புழுவாக பற்றிக் கொள்வதும், பூச்சியாக பறந்து செல்வதும் இயற்கையின் ஏற்பாடு தான். மனிதனாக நமது இயல்பு அறிவோம்.

ஒரு தொந்தரவு தரும் எண்ணம்
பத்தாயிரம் கவனச் சிதறல்களை உருவாக்கும்...!
எண்ணங்களில் கவனமாய் இருப்போம் !

கடினமான வாழ்க்கையில் பிரார்த்தனை என்பது இயலாத காரியம். ஆனால், பிரார்த்தனை செய்து விட்டு தொடங்கினால் இயலாத கடினமான காரியமும் எளிதான ஒன்றாகிறது.

மற்றவர்களை பற்றிய நமது
ஒவ்வொரு எரிச்சலும்
நம்மைப் பற்றிய புதிய புரிதலாகவே இருக்கிறது...!

எனக்கு மழை பிடிக்கும் என்றவர்கள் குடை பிடித்து நிற்கிறார்கள்
எனக்கு வெயில் பிடிக்கும் என்றவர்கள் நிழல் தேடி அலைகிறார்கள்
எனக்கு காற்று பிடிக்கும் என்றவர்கள் ஜன்னலைச் சாற்றுகிறார்கள்

கோட்டை போட்டுக் கொண்டு அரசைப் பிடிக்கலாம். அரசைப் பிடித்த பிறகு கோட்டை விடக் கூடாது.

குழந்தைகளுக்கு இல்லை கவலை 
கட்டுக்களை மாற்றிட.. 
கட்டுக்குள் அவர்களை 
வைக்க வேண்டாம் இன்று மட்டும் 
இறைவன் அவர்களுள் இருப்பதால்.. 
கொண்டாடும் தினமின்று


எல்லா(ர்) கூரையிலும் கீறல் இருக்கிறது. அதனால் தான் ஒளிக் கீற்றுகள் உள்ளே நுழைகின்றன.

உங்கள் சந்தோஷத்தின் சாவியை 
மறந்தும் அடுத்தவர் சட்டைப்பையில் 
போட்டு விடாதீர் !


வாழ்க்கையெனும் வீணையில் அனுபவம் எனும் நரம்பை மீட்டினால் கிடைப்பது சொத்து. குறைவு என்றால் கெத்து. அதிகம் என்றால் வெத்து..ஆபத்தும் தான்.

தொலைநோக்கு பார்வையை 
கொலைநோக்கு பார்வையாக 
பார்க்கின் தொல்லை தான்..


வீட்டில் உப்பு பருப்பு சொம்பு எல்லாம் இருந்தாலும் பேச்சில் அன்பு இல்லை என்றால் எந்தப் பலனும் இல்லை.

விடிந்ததும் மடிந்தன 
காகிதங்கள் 
காரணங்கள் நேற்று 
காரியங்கள் நாளை



நேற்று செல்லுபடி ஆனது இன்று செல்லா நிலை ஆனதே அதுபோல வாழ்வின் ஆயுள் உட்பட எல்லாமே தற்காலிக நிரந்தரம். நிரந்தரமாக தற்காலிகம். தத்துவம் உரைத்தது அன்றும் இன்றும் நரேந்திரரே.

செய்த பாவங்களுக்காக அடித்த ஆணிகளை ஒவ்வொரு நல்ல காரியம் செய்த போதும் பிடுங்கி எறிந்தாலும் ஆணித்தரமாக பதிந்து போன ஆணியின் தழும்புகள் ஆத்மா தனை ரணமாக்குகிறது என்றுணர்வோம்

தேவையெனும் போது மட்டும்
உங்களை நாடுகிறார்களா
வருத்தம் வேண்டாம்
திடீரென இருள் சூழும் போது
மெழுகுவர்த்தியை தானே
தேடுகிறோம்....
வருத்தம் தவிர்
பெருமிதம் கொள் ...!

இருக்க வேண்டும் ( உயிரோடு உயர்வோடு) என்றால் என்னென்ன இருக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்திடல் வேண்டும். இருப்பது சரியாக இருந்தால் இருக்கலாம்.