Wednesday, August 1, 2018

பிக் பாஸ் - உளவியல் பார்வையில்

பிக் பாஸ் - உளவியல் பார்வையில் 
- முனைவர் பாலசாண்டில்யன் 
மனநல ஆலோசகர் 

உள்ளே இருப்பவர்களை வெளியே இருந்து வேடிக்கை பார்க்கிறது உலகம். அவர்களைப் பற்றிய கருத்துப் பதிவு, காழுப்புணர்ச்சி வெளிப்பாடு, புகழாரம் எல்லாமே சமூக வலைத்தளங்களில் நடக்கிறது. 

நமது அன்றாட வாழ்வில் நாம் என்ன செய்கிறோம், யார் அதனைப் பார்க்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். பேசுகிறார்கள் என்றெல்லாம் நாம் அறிவதில்லை. செய்வதையே செய்ததையே நாம் தொடர்கிறோம் அது தான் சரி என்ற நினைப்புடன். 

யாருடைய அங்கீகாரமோ ஆலோசனையோ அட்வைஸோ நமக்கு தேவையில்லாமல் இருக்கலாம். இருப்பினும் நம்மில் எத்தனை பேருக்கு சுய ஆய்வு செய்யத் தெரியும். 

சில சமயம் என்னுடைய சில நெருங்கிய நண்பர்கள் எனக்கு உள்பெட்டியில் வந்து உங்களின் அதிகமான போஸ்ட்கள் முகநூலில் வருகின்றன. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் சில நேரம் ஏன் இரண்டு மூன்று நாட்களாக ஒரு மாதிரி நெகடிவ் போஸ்ட் போடுகிறீர்கள் என்று கேட்பது உண்டு. அப்போது தான் நாமே உணருவோம் நம்மை பிறர் கண்காணிக்கிறார். நம்மை சிலர் பின்பற்ற நினைக்கிறார். நம் மீது உயர் அபிப்ராயங்கள் வைத்துள்ளார்கள் என்று. 

அப்படித் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும். இதர மொழிகளில் நிறைய சீசன்கள் தாண்டி விட்டன. தமிழில் இது தான் இரண்டாவது சீசன். இதைக் காண்பதே நம்மில் சிலருக்கு அதிர்ச்சியாக கடுப்பாக கோபமாக இருக்கிறது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஏன் இந்த சின்ன சின்ன விஷயங்களுக்கு பஞ்சாயத்து தேவைப்படுகிறது என்று. 

ஒரு விஷயம் என்னவோ உண்மை. அதிகம் பேருக்கு பொதுவாக சகிப்புத்திறன் குறைவாக உள்ளது. மேலும், இணையம், மொபைல், சமூக வலைத்தளம், உறவினர் மற்றும் நெருக்கமானவர்களின் பிரிவு, பிடித்த உணவு கிடைக்காமை, நினைத்த நேரத்தில் நினைத்த செயல், தூக்கம் போல செய்ய முடியாமை என்று எத்தனையோ கட்டுப்பாடுகள் இந்த பிக் பாஸ் வீட்டில் உள்ளன. நிச்சயமாக இது உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்கும். தவிர, வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள், வெவ்வேறு பழக்கம் கொண்டவர்கள், வெவ்வேறு வயதினர் என்று ஒரு குழுவோடு வாழ்வது அதுவும் கண்காணிப்போடு வாழ்வது நிச்சயம் மிக மிகக் கடினமான ஒன்று தான். 

என்ன தான் விளையாட்டு என்றாலும், அதற்கு பணம் கிடைக்கிறது என்றாலும், ஒன்றை பெறுவதற்கு பலவற்றை இழக்க நேரிடுகிறது எனும் போது நிச்சயம் அது சிரமமான விஷயம் தான். 

பிறரைப் பற்றி குறை சொல்லுவது எளிது. ஆனால் சரியாக நடந்து கொள்ளுவது கடினம். 

இந்த பின்னணியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து அதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன என்று உணர்ந்தால் நமக்கு நிறைய விஷயங்கள் புதிதாக புரிந்து போகும். நாம் இந்த இடத்தில் இருந்தால் இந்த சூழலில் இருந்தால் எப்படி நடந்து கொண்டு இருப்போம், எப்படி அதனை சமாளித்து இருப்போம் என்று கூட சிந்தித்து பார்த்தால் சிறப்பாக இருக்கும். 

யார் வெல்கிறார், யார் தோற்கிறார் என்பதை விட இது ஒரு டிவி விளையாட்டு, சிலரின் உண்மை முகம் இது தான் என்று ஏற்றுக் கொள்ளும் விதமாக அதனை பார்த்தால் நமக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது எண்ணம். 

அந்தப் பஞ்சாயத்துகளை ஒரு வக்கீல் மகன் எப்படி சமன் செய்கிறார், எப்படி அவர்களுக்கு புரிய வைக்கிறார் என்று பார்க்கும் போதும் சில புதிய விஷயங்கள் கற்க முடிகிறது. இது என்னுடைய பார்வை. உங்களது எப்படியோ??

No comments:

Post a Comment