Monday, June 11, 2018

Evergreen Actor Mohan - I simply adore




தொலைந்து போன இளைய நிலா

நிலவு தூங்கும் நேரம் தென்றல் வந்து என்னைத் தொடும். அந்த மன்றம் வந்த தென்றலுக்கு தூக்கம் வராது 'நிலாவே வா' எனப்பாடும். அதற்கென்ன என்கிறீர்களா? எனது கவலை அந்த ராஜ ராஜ சோழனைக் காணவில்லையே என்பது தான். 

சரியாகத் தான் புரிந்து கொண்டீர்கள் நான் நமது கோகில/மைக் மோகன் பற்றித் தான் சொல்கிறேன். 

1956 ஆம் ஆண்டு மே 10 அன்று பிறந்த (இன்று 62 வயது ஆகிறது) நடிகர் மோகன் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மஹிந்திராவின் 'கோகிலா' படம் மூலம் கன்னடத்தில் அறிமுகம் ஆனார். 

ஒரு ரஜினியின் ஸ்டைல், கமலின் நடிப்புத்திறன், விஜயகாந்த் சத்தியராஜ் போல சண்டைக் காட்சிகள் இவருக்கு சுட்டுப்போட்டாலும் வராது. இருப்பினும் பாலு மகேந்திரா, ஆர் சுந்தரராஜன், மற்றும் உலகம் போற்றும் மணிரத்தினம் ஆகியோர் படங்கள் இவரை பல உயரங்களுக்கு தூக்கி நிறுத்தின. 

ரொமான்ஸ், ஹீரோயின் சப்ஜெக்ட் அல்லது பாடல்களை மட்டும் மையமாக வைத்த படங்களுக்கு என்றே இவர் விதிக்கப்பட்டவர்.

நடிகர் பிரபு, ரகுவரன், முரள, கார்த்திக் இவர்களை மிஞ்சும் திறமை இவருக்கு இல்லை என்பது அவருக்கே தெரியும். இருப்பினும் இவருடைய நடிப்புக்கு பிரபல பின்னணி பாடகர் எஸ் என் சுரேந்தர் குரலில் டப்பிங், இசைஞானி இளையராஜாவின் இசை, தேன்குரல் எஸ் பி பி அவர்களின் பாடல், வாலி மற்றும் வைரமுத்து அவர்களின் பாடல்கள் - வேறென்ன வேண்டும் ஒருவர் முன்னணியில் நிற்க?

1977 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும், 1990 களுக்கு பிறகு இந்த 28 ஆண்டுகளில் வெறும் 5 படங்கள் மட்டுமே நடிக்க முடிந்தது திரு மோகனால். அதற்கு முக்கிய காரணம் அவருக்கு குரல் கொடுத்த திரு எஸ் என் சுரேந்தர் இருவருக்கும் ஏதோ சிக்கல் என்று சொல்லப்படுகிறது. அதெல்லாம் நமக்கெதற்கு?

சிலர் இடையில் அவர் மிகவும் நோய்வாய் இருக்கிறார், அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் கதை கட்டி விட்டனர். இருப்பினும் நேற்றைய கதாநாயகிகள் ரேவதி, ராதிகா மற்றும் சுஹாசினி ஆண்டு தோறும் கூடி மகிழும் நிகழ்வுகளில் நிச்சயம் மோகன் இருக்கிறார் என்று இணையதளம் சொல்கிறது. 

ஒரு புறம் இவை எல்லாம் இருக்கட்டும். ஒரு 72 படங்களில் நடித்த ஒருவர் எத்தனை வெள்ளி விழா படங்கள் வழங்கி உள்ளார்? அவரது திரைப்படப் பாடல்கள் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காதவை என்று தான் சொல்ல வேண்டும்.  பாடுநிலா எஸ் பி பி அவர்கள் 40 ஆயிரம் பாடல்கள் பாடி இருந்தாலும் அவருடைய டாப் 10 பாடல்களில் ஒன்றாக இருப்பது மௌன ராகம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நிலாவே வா' என்ற பாடல் தான். இதற்கு இளையராஜா அவர்கள் இசை. வாலி அவர்கள் பாடல் எழுதி உள்ளார். இது எல்லோருக்கும் பிடித்த பாடல். 

அண்மையில் திரு எஸ் பி பி அவர்களின் பிறந்த நாள் என்று ஒரு தனியார் சேனல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய எல்லா பாடல்களையும் ஒளிபரப்பு செய்தது. அதில் ஜெமினி, சிவாஜி, MGR, ஜெய்சங்கர், சத்தியராஜ், பிரபு, ரஜினி, கமல், கார்த்திக், விஜய், அஜித், என்ற பட்டியலில் ஏனோ அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் நடிகர் மோகன் அவர்களுக்கு பாடிய ஓரிரு பாடல்களோடு நிறுத்திக் கொண்டார். அது எனக்கு மனசு கேட்கவில்லை. ராஜா + எஸ்பிபி + மோகன் எனும் அந்த காம்பினேஷன் நிச்சயம் இசைப் பிரியர்கள் யாராலும் மறக்க இயலாது. 

மூடுபனி, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, தீராத விளையாட்டு பிள்ளை, பாசப்பறவைகள், இதய தீபம், மனிதன் மாறிவிட்டான் என்று (1980 - 2017 வரை) என்று பட்டியல் நீளலாம். 

இவற்றில் நெஞ்சத்தை கிள்ளாதே 365 நாட்கள், கிளிஞ்சல்கள் 250 நாட்கள், பயணங்கள் முடிவதில்லை 300 நாட்கள், கோபுரங்கள் சாய்வதில்லை 200 நாட்கள், சரணாலயம் 175 நாட்கள், இளமை காலங்கள் 200 நாட்கள், மனைவி சொல்லே மந்திரம் 175 நாட்கள், விதி 500 நாட்கள், வேங்கையின் மைந்தன் 175 நாட்கள், நூறாவது நாள் 200 நாட்கள், நான் பாடும் பாடல் 200 நாட்கள், ஓசை 175 நாட்கள், உதய கீதம் 200 நாட்கள், தென்றலே என்னை தோடு 250 நாட்கள் (ஆறு பாடல்களும் ஹிட்), குங்கும சிமிழ் 175 நாட்கள், இதய கோவில் 200 நாட்கள், பிள்ளை நிலா 200 நாட்கள், டிசம்பர் பூக்கள் 175 நாட்கள், உயிரே உனக்காக 175 நாட்கள், மௌன ராகம் 250 நாட்கள், மெல்ல திறந்தது கதவு 200 நாட்கள், ரெட்டை வால் குருவி 175 நாட்கள், தீர்த்த கரையினிலே 175 நாட்கள், சகாதேவன் மஹாதேவன் 175 நாட்கள் - இப்படி ஓடின நடிகர் மோகனின் படங்கள். 

என்ன மேலே சொன்ன பட்டியல் கண்டு மயக்கம் வருகிறதா? மிக அதிகமான திறமைசாலி நடிகர்கள் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் பொழுது அதிகம் திறமை இல்லாத நிறைய பலவீனங்கள் மட்டுமே கொண்டிருந்த ஒரு நடிகர் மாபெரும் வெற்றிப்படங்களை வழங்கி உள்ளார். இப்போது ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே வெற்றிகரமான பத்தாவது நாள் என்று போடுகிறார்கள். 40-5- நாட்களில் அந்த படம் வந்ததே மக்களுக்கு நினைவில் இல்லை. 

இந்த சூழலில் இன்னும் நமது நினைவுகளில் நீங்கா இடத்தைப் பிடித்து இருக்கும் நடிகர் மோகன் நிச்சயம் நாம் எல்லோரும் கொண்டாடப்பட வேண்டியவர். குறிப்பாக 1980 படங்களை போற்றுகிறவர்கள் இன்னும் சினிமா பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

மோகன் தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என்று நான்கு தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயார் செய்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல் கசிகிறது. நிச்சயம் அவருடைய படங்கள் மக்கள் விரும்பி ஏற்பர் அதற்கு ஆதரவு தருவர் என்று நம்புவோம். 

மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா? இதுவே எனது கேள்வி. 

அந்த சில நாட்களை, 24 மணி நேரம் நினைக்கா விடினும், நான் உங்கள் ரசிகன் என்று சொல்லி அவரது வெற்றிக்கு உனக்காக ஒரு ரோஜா என்று சொல்லுங்கள். அந்த நடிகரின் உள்ளத்தில் ஆயிரம் பூக்கள் மலரட்டும், மெல்ல கதவு திறந்து மனதில் மௌன ராகம் பாடட்டும். அவரின் அன்றைய பாச மழையில் நனைந்து நெஞ்சமெல்லாம் நீயே இன்றும் மோகன் என்று சொல்லுங்கள். அன்பின் முகவரியில் என்றும் கோபுரங்கள் சாய்வதில்லை அதனால் தான் சொல்கிறேன் மோகன் அவர்களின் பயணங்கள் முடிவதில்லை. 

நமக்கு மிக நல்ல படங்களையும் பாடல்களையும் வழங்கிய நடிகர் மோகன் நீடு வாழ அது ஒரு தொடர் கதையாக மாறட்டும். 


Friday, May 18, 2018

Bala's Quick Stories

An interesting one-liner: Quick story 
மூணு வேளையும் டீ குடித்தே வயிறு நிரப்பும் ராமு சொன்னான், நல்ல வேளை சக்கரை சரியா இருக்கா என்று அப்பப்போ ருசி பார்க்கிறேன் இந்த வேலையில். இதற்கு முன்பு முடி வெட்டுற வேலை.

One liner - Quick story: வாடகை நூலகம் சென்ற இளைஞன் கேட்டான், தற்கொலை பற்றிய புத்தகம் இருக்கிறதா? கடைக்காரர் சொன்னார், இருக்கிறது, ஆனால், யார் அந்த புத்தகத்தை திருப்பித் தருவார்?!
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner: Quick story
பாட்டிக்கு ஏண்டா பிறந்த நாள் பரிசா டிராக் சூட் வாங்கிக் கொடுத்தே என்று கத்திக் கொண்டு இருந்தார் ரமேஷின் தந்தை. அவன் சொன்னான், பாட்டி மட்டும் எனக்கு காயத்ரி மந்திரம் சிடி வாங்கித் தரலாமா?!
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner - Quick Story:
டாக்டர் ஒரு நாள் வரவில்லை. கம்பௌண்டர் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள 'ஒரு நாள்' டாக்டர் ஆனார். உள்ளே அவசரமாக நுழைந்தார் ஒரு இளைஞர். 'டாக்டர் சார் எனது தந்தை உயிருக்கு போராடுகிறார், உடனே வந்து உதவுங்கள் '. புறப்பட்டு அவர் பின்னால் சென்றான்.. அப்போது தான் நினைவுக்கு வந்தது டாக்டர் கழுத்தில் மாட்டிக் கொள்ளும் அந்தக் கருவியை மறந்து போனதை. மாட்டிக் கொண்டோம் என்று பயந்தான். பயத்தோடு அந்த முதியவரைத் தொட்டான். அவர் 'டாக்டர் டாக்டர்' என்று முணுமுணுத்து கண் திறந்தார். இவனுக்கும் உயிர் வந்தது.
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner, Quick story:
சாமுவேல் மறக்காமல் தனது மனைவி கல்லறைக்கு மலர் வளையம் வைத்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இது ஏழாவது ஆண்டு. தூக்கி வாரிப்போட்டது. ஏற்கனவே அங்கே ஒரு மலர் வளையம். யார் அந்த நபர்? பரபரப்பாக வந்த இளைஞன் ஒருவன், சாரி சார். எனது காதலி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்து பதட்டத்துடன் மாற்றி வைத்து விட்டேன்.. என்று தான் வைத்ததை எடுத்து விட்டு நகர்ந்தான். மேரி, ஒரு வினாடியில் உன்னை...! சாரி..!! அழுதான் சாமுவேல். மாறாத அந்த சந்தேகம்...?!
- டாக்டர் பாலசாண்டில்யன்

One liner - Quick Story:
கோபமாக பைக்கில் வந்து ஓர் இடத்தில் நிறுத்தி கண்ணாலே ஜாடை செய்து ஹும் என்றான். எதிரில் இருந்த அந்த லுங்கிக்காரன் அரிவாள் எடுத்து ஒரே சீவு. வெட்டிச் சாய்த்தான் . குபீர் என்று கொப்பளித்து வந்தது தண்ணீர். நாப்பது என்றான். வேறு வழியின்றி பணத்தைக் கொடுத்தான் இளநீரை வாங்கிக் கொண்டு.

One liner - Quick Story:
இந்த வினோதத்தை விபரீதத்தை எங்கு போய் சொல்ல? பல இடங்களில் நடந்தது தான் இந்த ஊரிலும் நடந்தது. இரவு வரை அவன் தான் காத்தான். இரவுக்குப் பிறகு இவன் தான் காத்தான். காலையில் காணோம். கடவுள் சிலை ஒன்றும் காவல் காப்பவனும்.
Dr. Balasandilyan

One liner - Quick Story:
சற்று அவசரம் தான். பாதுகாப்பும் மிக முக்கியம் ஆயிற்றே. என்ன செய்வது? யார் நமக்கு உதவுவார் ? நமக்கு நாமே தான் பொறுப்பு. நம்பிக்கை விடாமல் இடம் தேடி குறுக்கும் நெடுக்கும் அலைந்தது Anniyan அம்பியை போல. பிரசவ வேதனையில் பூனை.

One liner - Quick Story:
வீடே ரெண்டு பட்டுக் கொண்டு இருந்தது. அலுவலகத்தில் இருந்து சற்று முன்பு தான் நுழைந்திருந்த ராகுலுக்கு தலையும் காலும் புரியவில்லை. ஏன் தனது அம்மா இப்படிக் கத்தறாங்க, "உணமையச் சொல்... யார் அந்த வடையை தின்னது? அது எலி பிடிக்க விசம் தடவி வைத்திருந்தேன்...!" அது கேட்டவுடன் வாந்தி எடுக்க ஓடினான் எதிர்வீட்டுப் பையன் கிட்டு. ராமு அவனை அள்ளித் தூக்கி காரில் போட்டு ஆஸ்பத்திரி விரைந்தான். இப்போது டென்சன் டாக்டருக்கு...!
- Dr. Balasandilyan

One liner- Quick Story:
குழந்தைக்கு உடல்நிலை படுத்திக்கொண்டே இருந்தது. தெரிந்த பெரியவர் ஒருவர் வீடு வந்திருந்த பொழுது உங்களுக்கு மிகவும் பிடித்த இனிப்பு ஒன்று செய்து இறைவனுக்கு படையுங்கள். பிறகு சிலருக்கு அதை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். இதே போல ஏழு செவ்வாய் செய்யுங்கள் என்றார். இவளும் கேசரி செய்து 'அவன்' முன்பு வைத்து பிரார்த்தனை செய்தாள். கண் திறந்த போது கேசரி இல்லை. பறந்து போனது நம்பிக்கை. அன்றோடு நிறுத்தினாள் நைவேத்யம்.
- Dr/ Balasandilyan

One Liner - Quick Story by
Dr. Balasandilyan
அது ஒரு டிவி ரியாலிட்டி ஷோ. செமி பைனல் நிகழ்வில் அன்று டெடிகேஷன் ரவுண்டு. எல்லோரும் அம்மாவைப் பற்றி பாட வேண்டும். இவனும் பாடினான். இவனுக்கு மட்டுமே தெரியும் அவள் ஐ சி யு வில் இருப்பது. கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படாமல் பாடினான். சுருதி சுத்தமாக இருந்தது அந்தப் பாடல். ஜட்ஜ் சொன்னார் சுருதி 'மாதா' உன் பாட்டில் ஒளிர்கிறாள். மிகப் பிரமாதம். அந்த தருணம் தனது அம்மா பிழைத்து விடுவாள் என்று புரிந்து கொண்டு மேடையில் அப்படியே விழுந்து வணங்கினான்.


Bala's little flash poems

உன்னோடு கைகோர்த்து
நடந்த போது தான்...அது
நடந்தது...
என் கடிகாரத்தில்
சின்ன முள்ளும் பெரியது போல்
சீறும் வேகத்தில்..!
உன்னை நினைந்து நினைந்து
பார்க்கும் போது தான்
நினைத்தேன் 
காப்பீடு
ஏன் எடுத்தேன் என்று...
ஆயுள் நீளும் என்பதை
மனது உறுதியாக சொன்னது..!!
- பாலசாண்டில்யன்

வாழ வேண்டும் என்பது
உயிர் நோக்கம்
சிறப்புடன்
வாழ வேண்டும் என்பது
உயர் நோக்கம்!!
இனிப்பு பிரச்சனையால்
இன்சுலின் சிக்கல்
கசப்பு பிரச்சனை என்றால்
'இன்'சொலின் சிக்கல்.
- பாலசாண்டில்யன்


சேதாரம் பற்றி
மகள் அம்மாவிற்கும்
மொபைல் பே பற்றி
மகன் அப்பாவிற்கும்
கணினி பற்றி 
மாணவன் ஆரிரியருக்கும்
கற்றுத் தந்தாலும்
எல்லாம் கற்றதாக நினைக்கும்
இளையவர்களுக்கு
இன்று யார் சொல்லித் தருவார் ?
ஒழுக்கம் மற்றும் பணிவு...!?
- டாக்டர் பாலசாண்டில்யன்


கரை புரண்டோடும் ஆற்றின் வெள்ளம்
அணை கட்டினால் விவசாயம்
அப்படியே விட்டால் சர்வநாசம்
அப்படித் தான் நம் அறிவும் ...
பயன்படுத்தா விடின் பாரம் ஆகும் ...


பாசம் சொரிந்தாலும் அன்பு
விலை போவதில்லை
பூக்கள் எறிந்து இறைச்
சிலை சாய்வதில்லை
பாக்கள் சொரிந்திடின் அவன்
அருள் ஓய்வதில்லை


யார் தொட்டாலும் சிகரம்
------------------------------------------
புல்வெளி காலுக்குள் சுகம்
சொல்வெளி காதுக்குள் புகும்
கட்டிப்பிடி காதல் புரியும் 
எட்டிப்பிடி வெற்றி தெரியும்
எடுத்து விடு உன்னைப் புரியும்
கொடுத்து விடு உலகைப் புரியும்
பேசிப் பார் அரங்கம் அதிரும்
யோசிப்பார் சுரங்கம் நிறையும்
அன்பாலே மனம் தொடு
அன்புக்கு சினம் விடு
- டாக்டர் பாலசாண்டில்யன்


Monday, May 14, 2018

அர்த்தமுள்ள உறவுகள்



அர்த்தமுள்ள உறவுகள்
- முனைவர் பாலசாண்டில்யன் 
மனநல ஆலோசகர்/மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் 

திரும்பிப் பார்க்கையில் நாம் விரும்பிப் பார்த்த சந்திப்புகள் மூலம் பல ஆயிரம் நபர்களை நாம் சந்தித்திருக்கக் கூடும், ஆனால் அவர்கள் இன்னும் நம்மோடு தொடர்பில் நட்பில் உறவில் இருக்கிறார்களா என்றால் விடை 'இல்லை' என்று தான் இருக்கும். 

பல தொடர்புகள் கடந்து போகும் அல்லது கடந்து போய் விட்ட உறவுகளாகவே இருக்கின்றன. ஒருவேளை நாம் ஓரிரு முறை மட்டும் அவர்களோடு தொடர்பில் இருந்து விட்டு பிறகு நமது வாழ்வில் அவர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லாத பொழுது அவர்களை மறந்திருக்கக் கூடும். மனதில் சிற்சில சிற்றலைகள் மட்டும் ஏற்படுத்தி விட்டு அவர்கள் நமது வாழ்வில் வந்தார் சென்றார் என்று ஆகிவிட்டார் எனலாம். 

அதே சமயம் வெகு சிலர் பல்லாண்டுகளாக நமது வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து இன்னும் கூட இருக்கிறார்கள். அவர்களோடு நாம் தொடர்ந்த தொடர்பில் இல்லாவிடினும், மீண்டும் தொடர்பு கொள்ளும் பொழுதெல்லாம் அந்த நட்பு உறவு உயிர்பெற்று விடுகிறது. தழைத்து ஓங்குகிறது என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. 

சிலர் தொழில்முறை நட்பு அல்லது உறவு தொடராது மற்றும் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்லக்கூடும். எனது அனுபவம் வேறு. இன்றும் பல்லாண்டுகளாக தொழில் ரீதியாக தொடங்கிய சிறு தொடர்பு பின்னாளில் நல்ல நட்பாக நெஞ்சில் நிலைத்த உறவாக மாறிவிட்ட ஆனந்தம் என் மனதை இன்னும் நிரப்புகிறது. 

கடந்து போகிற உறவு மற்றும் கடவுள் போல கூடவே துணை நிற்கும் உறவு என்று இருவிதமான உறவுகள் எல்லோருக்கும் உண்டு. நமது மனதை முழுமையாக திறந்து நட்பு பாராட்டி அன்பு நீர் வார்க்கும் முன்னரே மேம்போக்காக இருக்கும் போதே சில உறவுகள் முறிந்து போவதுண்டு. அவை தான் கடந்து போகும் உறவு என்பது. அப்படிப்பட்ட நண்பர்களோடு நாம் நமது உண்மை முகத்தை, சிரமங்களை, வெற்றிகளை, ரகசியங்களை பகிர்ந்து இருக்க மாட்டோம். அது ஒரு மேலோட்டமான உறவு மட்டுமே.

உண்மையான நட்பு அல்லது உறவு என்பது காலத்தை வெல்லும் ஒன்று. தினம் தினம்  நேரில் சந்திக்காவிடினும், முகநூல், ஈமெயில், வாட்ஸ் அப் என்று ஏதோ ஒரு விதத்தில் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த உறவு என்பது நிபந்தனைகளற்ற எதிர்பார்ப்பற்ற அர்த்தமுள்ள உறவாக இருக்கும்.

நிறைய நண்பர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் நினைத்ததுண்டு. ஏதோ ஓர் அற்ப காரணங்களுக்காக அவை முற்றிலுமே முறிந்து போன அனுபவமும் உண்டு. சிறு உரசல், சிறு புரிதலின்மை, இவைகளால் உறவு முற்றிலும் முறிந்து போன போது நான் வியந்து போய் இருக்கிறேன். இதற்கு நேர் மாறாக எவ்வளவோ தவறுகள் கோளாறுகள் புரிதலின்மைகள் இருந்த பொழுதும் சில நண்பர்கள் நமக்கான ஒரு இடத்தை அவர்கள் மனதில் அளித்து நம்மை உள்ளவாறே ஏற்றுக் கொண்டதால் தான் அந்த உறவு தப்பித்தது என்று என்னால் உறுதிப்பட சொல்ல முடியும். 

அவர்கள் நமது ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருந்து அழைக்காமல் வலிய வந்து உதவி நம்மை உயர்த்தியவர்கள் என்று சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது. 

சில நண்பர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மோடு ஒட்டிக் கொண்டு விட்டு அவர்களின் 'அந்த' ஒரு நோக்கம் நிறைவேறிய பின்னர் தானாகவே மெதுவாக பின்வாங்கி நம்மிடம் இருந்து விலகி விடுவார்கள். இவர்களையும் நமது நண்பர்கள் என்று பட்டியலில் சேர்ப்பது நிச்சயம் தவறு. 

நமது வாழ்வியல் மதிப்பீடுகள், ஒத்த கருத்துக்கள், விருப்ப வெறுப்புகள், வாழ்க்கை முறையில் ஒற்றுமை, கண்ணோட்டங்களில் சமன்பாடு என்று ஏதோ ஒரு விதத்தில் நம்மோடு ஒத்துப் போவதால் தான் சிலர் கடைசி வரை நமது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். 

மேம்போக்கான சில உறவுகளை நெருக்கமான ஒன்று என்று தவறாக நான் புரிந்து கொண்டு பின்னர் உணர்ந்ததும் உண்டு. சில உறவுகள் அர்த்தமற்றவை, தேவையற்றவை என்று கருதியது தவறு என்று உணர்த்துவது போல நீங்கா இடம் பிடித்து இன்னும் தொடர்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 

சிலர் வெளியேறும் நோக்கோடு தான் நமது உள்ளத்தில் வந்தார்கள் என்பதை நமது உள்ளுணர்வே சில சமயம் உணர்த்தி விடும். உங்களுக்கும் அது நேர்ந்து இருக்கிறதா? நகமும் சதையும் ஆக நம்மோடு இரண்டற கலந்து நிற்கும் சில உறவுகளின் நட்புகளின் வலிமை மற்றும் உண்மைத்தன்மை புரிந்து கொண்டோம் என்று சொன்னால் நாம் ஒரு நாளும் அந்த நட்பை இழக்கத் துணிய மாட்டோம். 

சில உறவுகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கூட தளிர் போல வளர்ந்து மேம்படாத ஒன்றாக இருக்கும். அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். சில உறவுகள் நாம் எதிர்பார்த்ததை விட ஆன்மீக வலிமை கொண்ட ஒன்றாக இருக்கும். 

எல்லா உறவுகளையும் நட்புகளையும் நம்மால் தக்க வைத்துக் கொண்டு கடைசி வரை பராமரிக்க முடிவதில்லை. கடந்து போகிற ரயில் சிநேகம் போன்ற நட்புகளை எண்ணி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கண்களைப் போல காக்க வேண்டிய சில உறவுகளை நட்புகளை வளர்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதே சமயம் காணாமல் போய் விட்ட உறவுகளை எண்ணி கவலை கொள்ளாமல் இருக்கும் உறவை உன்னதமாக போற்றிடுவோம். அர்த்தமுள்ள உறவுகளே வாழ்க்கையின் ஆதாரம். மீதமெல்லாம் சேதாரமே. மனதுக்கு தெரியும் உறவின் மகத்துவம். மனம் சொல்வதை சில நேரம் மௌனமாக இருந்து தான் கேட்க வேண்டும். 

Sunday, May 13, 2018

எச்சரிக்கை மணி




எச்சரிக்கை மணி 
- டாக்டர் பாலசாண்டில்யன் 
தொழில் ஆலோசகர் - CEO www.visionunlimited.in
Thought Leader/Transformation Coach/Psychologist/Leading Behavioral Catalyst

ஆட்டோமேஷன் என்று சொல்லக்கூடிய இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் வேகம் சற்று குறைவு தான் என்றே சொல்ல இயலாது. சூடு பிடித்து விட்டது எனும் இந்த எச்சரிக்கை மணியை நான் தயங்காமல் அடிக்க விரும்புகிறேன்.
முழுமையாக துணி தோய்த்து தரும் வாஷிங் மெஷின், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மால்களில் இயங்கும் எஸ்கலேட்டர், வங்கிகளில் பணம் எண்ணும் இயந்திரம், மற்றும் பாஸ்புக் என்ட்ரி போடும் இயந்திரம், பணம் பெறும் இயந்திரம், பார் கோட் பில்லிங் இயந்திரம், இப்படி ஏற்கனவே நாம் காண்கின்ற அல்லது பயன்படுத்துகின்ற இயந்திரங்களைப் பற்றி நான் இங்கே சொல்லவில்லை.
பல தொழிற்சாலைகளில் மூளையை அதிகம் பயன்படுத்தாத ரொட்டின் (routine) என்று சொல்லக்கூடிய வழக்கமான செயலப்பாடுகளை மனிதர்கள் செய்கிறார்கள் என்றால் அங்கே மனிதர்கள் தேவை இல்லை. அங்கே ரோபோ என்று சொல்லக்கூடிய தானியங்கி இயந்திரங்களின் பயன்பாடு இன்று அதிகமாகி வருகிறது.
இதன் காரணமாக பல பன்னாட்டு உற்பத்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹெல்பர் என்று சொல்லக்கூடிய உதவியாளர்களுக்கு வேலை போய் விட்டது. அங்கே ஒரு ரோபோ வந்து அதிவேகமாக அற்புதமாக அசுரத்தனமாக வேலை செய்கிறது. அதிக உற்பத்தி, உற்பத்தித்திறன், சீரான தரம், செலவுக் கட்டுப்பாடு, லாபம் இவற்றை முன்வைத்து இந்த நடவடிக்கைகளில் நிறுவனங்கள் சில முடிவுகளை எடுக்கின்றன.
கிட்டத்தட்ட 1200 கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரு ரோபோவை ஒரு இந்திய தனியார் வங்கி அறிமுகம் செய்து உள்ளது. இதனைப் பார்க்கும் பொழுது உற்பத்தி துறை தவிர வணிகம் மற்றும் சேவை துறைகளிலும் இந்திரமயமாக்கல் அதிவேகமாக பரவி வருகிறது என உணரலாம்.
தவிர 'டிஜிட்டல் இரா' எனும் இந்த நவீன யுகத்தில் கண்ணுக்கு புலப்படாத போட்டியும் நிலவுகிறது. நிகான் கேனோன் போன்ற கேமரா நிறுவனங்களுக்கு போட்டி சாம்சங் மற்றும் விவோ மொபைல் போன்கள் எனலாம். எச்எம்வி மற்றும் சோனி நிறுவனங்களை விட அதிகமாக இசையை விற்பது ஏர்டெல் டெலிகம்யூனிகேஷன் நிறுவனம் தான் என்று எனது நண்பர் முனைவர் மேகநாதன் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
இந்த நிலை பல்வேறு இடங்களில் நடக்கலாம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது துணிமணிகள் விற்கும் ஒரு மால் ஆக இருக்கலாம். வாடிக்கையாளர்களோடு அளவளாவி வணிகம் பெருக்கும் ஒரு விற்பனையாளருக்கு பதில் வெறுமனே அவர்களின் சந்தேகங்களுக்கு மட்டும் விடை அளிக்கும் ஒரு கஸ்டமர் கேர் மனிதர் மட்டுமே அங்கு இருக்கிறார் என்றால் அங்கே மனிதர்கள் தேவை இல்லை என்ற ஒரு நிலை உருவாகி வருகிறது. அப்போது இன்று இருப்பது போல பிரம்மாண்டமான துணிக்கடைகளில் அதிகம் படிக்காத பல சேல்ஸ்மேன்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலை இழக்க நேரிடும் என்ற ஒரு கணிப்பு உருவாகி உள்ளது. அவர்கள் வேறு சில திறன்களை வளர்த்துக் கொண்டால் பிழைத்தார்கள்.
மேலும் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதை விட மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களே இதற்கு சாட்சி.
பண பரிவர்த்தனை செய்ய மக்கள் இன்று வங்கிகளுக்கு செல்லுவதற்கு பதில் மொபைல் ஆப் பலவற்றின் வாயிலாக அதனை செய்கிறார்கள் என்பது யாவருமே அறிந்தது தான்.
குற்றங்கள் பெருகி வரும் இன்றைய சூழலில் துப்பு துலக்க நாய்களுக்கு பதில் பெரும்பாலும் சிசிடிவி காமெராக்கள், மொபைல் ஆடியோ மற்றும் விடீயோக்கள் தான் பயன்படுகின்றன.
ஹோட்டல்களில் உணவு கொண்டு வந்து மேசையில் பரிமாற இனி ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் (ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளது போல) பயன்பாட்டில் விரைவில் வரும். அப்போது உணவு சப்ளையர்கள் பலருக்கு வேலை போய் விடும் என்பது ஏற்க கடினமான ஒன்று என்றாலும் உண்மை நிலை அது தான். பெட்ரோல் பங்கில் கூட பணியாளர்கள் வேலை இழக்கலாம்.
துணிக்கடைகளில் ட்ரையல் ரூம் செல்ல வேண்டாம் எனும் தொழில்நுட்பம் அதிவேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட கேமெராக்கள் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட ஆடையில் எப்படி இருப்போம் என்று பட்டனை அழுத்தினால் தெரிந்து விடும். போட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஓகே பட்டனை அழுத்தினால் அந்த துணி தானாகவே கேஷ் கவுண்டருக்கு சென்று விடும். இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் வந்து விட்டால் பலருக்கு வேலை போய் விடும்.
அயல்நாடுகளில் பிள்ளைகளுடன் செல்ல ரோபோ குரு உருவாக்கி உள்ளார்கள். இது மாணவர்களோடு பள்ளி சென்று எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. அங்கே ஒரு படி மேலே சென்று மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லை அன்று பள்ளி செல்ல முடியவில்லை எனும் சூழலில் அவர்களுக்கு பதில் இந்த ரோபோ குரு பள்ளி செல்லும் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில் வெகு விரைவில் ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ குரு வரலாம். பள்ளி மேற்படிப்பு, மற்றும் கல்லூரி மேற்படிப்பு, திறன் மேம்பாடு இவற்றிற்கு மட்டும் ஆசிரியர்கள் இருப்பார்கள். மற்ற இடங்களில் அங்கே இயந்திரம் வந்து விடும் எனும் அபாயம் உருவாகி வருகிறது. நிறைய பாட்டு வாத்தியார்கள் இன்று ஸ்கைப் மூலம் பல வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.
இயந்திர காதலிகள், காதலர்கள், சமைக்கும் ரோபோக்கள், என்று கூட அயல்நாடுகளில் முயற்சி செய்யத் தொடங்கி விட்டார்கள். இங்கு அவை எல்லாம் வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று சொல்லி விட முடியாது.
கையில் அணியும் வாட்ச் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை, எவ்வளவு நடந்து இருக்கிறோம், எத்தனை கலோரி செலவு ஆகி உள்ளது, போன் பேசுதல், போட்டோ எடுத்தல், உடலில் உள்ள நோய் அறிகுறிகள் எல்லாமே தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. அப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்தும் பல இயந்திரங்கள், கருவிகள் இவை எல்லாம் பயனற்று போய் விடும் நிலை உருவாகி வருகிறது. சில கருவிகளை இயக்கம் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போகும்.
ஐபிஎல் பார்க்கிறோம். முன் போல ஒரு கபில்தேவ், ரவி சாஸ்திரி இவர்கள் மட்டுமா ஆல்ரௌண்டர்கள் ? ரெய்னா, ஜடேஜா, பிராவோ, என்று ஒவ்வொருவரும் ஆல்ரௌண்டர்கள் தான். பன்முகத்தன்மை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறார்கள்.
இங்கே பலருக்கு வேலை போய் விடும் எனும் எச்சரிக்கை மணி இந்த கட்டுரை என்று கொள்ள வேண்டாம். பழையன கழிந்து புதியன புகுகின்ற நேரம் என்று கொள்ள வேண்டும். அதாவது ஏற்கனவே நம்மிடம் இருக்கும் திறன் இனி பயனற்று போகும். புதிய திறன்களை அறிய வேண்டி வரும். நாம் செய்யும் தற்போதைய வேலைக்கு பதில் புதிய வேலை செய்யும் நிலை உருவாகும்.
ஏற்கனவே மனிதர்கள் செய்யும் கைமுறை வேலைகள் பலவற்றை இன்று கருவிகள் அல்லது இயந்திரம் மூலம் செய்யப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். அப்படி நாளுக்கு நாள் மேலும் இயந்திரமாக்கும் சூழல் உருவாகும் பொழுது நாம் அந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியம் ஆகிறது.
வாக்கிய அமைப்பு, இலக்கணம் இவற்றிற்கு எப்படி கணினி உதவுகிறதோ, போட்டோக்கள் மற்றும் எக்ஸ்ரே இவை ஈரத்தை காய வைக்காமல் உடனே கணினி மூலம் பிரிண்ட் ஆகி வருகிறதோ, திரைப்படப் பாட்டுகள் இசை அமைப்பதில், அசுரவேக பிரின்டிங் என்று பலதுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிடும் இந்த சூழலில், வருங்கால இளைஞர்கள் அதற்கேற்ப உள்ள படிப்புகளை தேர்வு செய்து படித்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏதாவது ஒரு இருக்கின்ற படிப்பை படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று கூறுவது இனி கூடாது. அதே போல ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் புதிய மாறி வரும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டால் அவர்கள் வேலை பிழைக்கும். இல்லையேல் நோக்கியா போன்ற நிறுவனங்களில் திடீர் என்று வேலை போனது போல பலருக்கு நேரிடலாம். அதனைத் தவிர்க்க அன்றாடம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எச்சரிக்கை மணி.
ரெடிமேடாக காம்பௌண்ட் சுவர்கள் கூட தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து விட்ட இந்த தருணம், குறைந்த பட்சம் ஒவ்வொரு மனிதரும் நான்கு அல்லது ஐந்து திறன் கொண்டிருத்தல் வேண்டும். தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்று இல்லாமல் இருக்கும் புதிய வாய்ப்புகளுக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ளுதல் தான் இதற்கு முக்கிய தீர்வு.
இயந்திரமயமாக்கல் ஒரு புறம் வேகமாக பரவி வந்தாலும், சிந்திக்கும் செயல்படுத்தும் பணிகள் எப்போதும் மனிதர்களே செய்வர். ஆகவே சிந்திக்கும் புதிய யுக்திகளை செயல்படுத்தும் நுட்பமான மனிதர்களாக நாமும் மாறுவோம். மாற்றத்தோடு வேகமாக நாமும் மாறுவோம். மாற்றம் தான் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுவோம்.
செயற்கை நுண்ணறிவு எனும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் மிக அதிகமாக ஒவ்வொரு துறையிலும் நுழையக் காத்திருக்கும் மிக முக்கிய தருணம் இது. இதில் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் என்பது மிகவும் பொருத்தமான வரி தான்.


Cherish Your happy moments - my article in English






Thursday, May 10, 2018

என்னைப் போலவே என் மாணவர்கள்

என்னைப் போலவே என் மாணவர்கள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 
(மனநல/கல்வி/தொழில்  ஆலோசகர், மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர்)

அது 1987 ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வேலை பார்த்து விட்டு, ஓராண்டு மஸ்கட்டில் வேலை பார்த்து விட்டு சென்னை திரும்பி விட்டேன். நான்கைந்து மாதங்கள் வேலை எதுவும் கிடைக்கவில்லை. திரும்பவும் மும்பை அல்லது வெளிநாடு செல்லலாமா என்று குழம்பித் திரிந்த பொழுது இண்டோ இன்டெர்நேஷனல் எனும் தோலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர் வேலை கிடைத்தது. அப்போது இளங்கலை படிப்பிற்கு பிறகு ஐந்து பட்டயங்கள் பெற்று இருந்தேன். ஹிந்தி நன்றாக பேசத் தெரியும்.

இரவு பகலாக உழைத்தேன். அடிமட்ட உழைப்பாளி தோழனிடம் கூட வேலை கற்றுக் கொண்டேன். பிறகு தைக்கத் தெரியாது. மற்றபடி பல்வேறு விஷயங்கள் தெரிந்து கொண்டேன். ஒரு தோலை எடுத்து முகர்ந்து பார்த்தாலே அது ஷீப் அல்லது கோட் அல்லது கௌ லெதர் என்று சொல்லி விடும் அளவிற்கு தேர்ந்து போனேன். இரண்டே வருடங்களில் பேக்டரி மேனேஜர் ஆனேன். பிறகு ஹெட் ஆபீஸில் அமர்ந்து நான்கு பேக்டரிகளை மேனேஜ் செய்யும் அளவிற்கு உயர்ந்தேன். நல்ல பல தொடர்புகள் ஏற்பட்டது. வெளிநாடுகள் சென்று வந்தேன். அதற்குள் மேலும் நான்கு பட்டய படிப்புகள் முடித்தேன். 

பத்து ஆண்டுகள் நிறைவு. பிறகு 1997 ஆம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டிடியூட் அப் லெதர் ப்ராடக்ட்ஸ் எனும் தொழிற்கல்வி நிறுவனத்தின் செயல் இயக்குனராக சேர்ந்தேன். அங்கே 2007 ஆண்டு வரை பணியாற்றினேன். கிட்டத்தட்ட பத்தரை ஆண்டுகள். அங்கே காலணி, தோலாடை மற்றும் தோல் பொருட்கள் என்று மூன்று பிரிவிலும் சான்றிதழ், பட்டயம், மற்றும் பிஜி டிப்ளமோ படிப்பு இருந்தது. ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 300 கும் மேற்பட்டவர்கள் படித்து முடித்து பணிக்கு சென்றார்கள்.  ஆண்டுக்கு இருமுறை அட்மிஷன் செய்தோம். 

தவிர எங்கள் பயிற்சி நிறுவனம் குறித்து பல தனியார் தொலைக்காட்சிகளில் எனது பேட்டி வந்தது. எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, மற்றும் மைனாரிட்டி வகுப்பை சார்ந்தவர்களுக்கு தமிழக அரசுடன் இணைந்து இலவசமாக பயிற்சி, உதவித்தொகை, வேலை வாய்ப்பு என்று 5000 மாணவர்களுக்கு மேல் பயன்பெற்றார்கள். மேலும் சுய உதவிக் குழு பெண்கள், ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்கள், சாலைகளில் பங்க் கடை வைத்து காலணி தைப்பவர்கள் 150 பேருக்கும் மேலாக எங்கள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பலன் பெற்றார்கள். தோலாடை பற்றி முதன்முதலாக நூல் எழுதி வெளியிட்ட பெருமை எனக்கு கிடைத்தது.

இந்த கதை ஒரு புறம் இருக்கட்டும். 

2008 ஆம் ஆண்டு விஷன் அன்லிமிடெட் என்ற மனிதவள பயிற்சி நிறுவனம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்து ஒன்றரை லட்சம் பேருக்கு மேலாக பயிற்சி அளிக்கும் வாய்ப்பினை பெற்றேன். இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளேன். தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் பயிற்சி அளித்துள்ளேன். அரசு ஊழியர்கள், நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், நிறுவன அதிபர்கள், மேலாளர்கள், வங்கி அதிகாரிகள் என்று நான் சந்திக்காத துறை கிடையாது. ஆனால் தோல் துறையில் 20 ஆண்டுகள் பணி செய்த பிறகும் ஓரிரு நிறுவனங்கள் தவிர வேறு எந்த தோல் துறை சார்ந்த நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளவில்லை. அவர்களுக்கு பயிற்சியும் தரவில்லை. இப்படித்தான் என்னிடம் பயின்ற மாணவர்களும் என்பதை பின்னாளில் அறிந்த பொழுது ஆச்சரியம் கொண்டேன். 

பல சம்பவங்கள் இருந்தாலும் மூன்று நிகழ்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

ஒரு முறை விருகம்பாக்கத்தில் எனது நண்பர் முனைவர் தென்காசி கணேசன் அவர்களின் இல்லம் செல்ல வேண்டும். நான் சென்ற ஓலா வண்டி என்னை எங்கோ தவறுதலாக வேறு தெருவில் இறக்கி விட்டு சென்று விட்டார். அங்கே குடிநீர் சப்ளை செய்யும் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு வந்தார். சார் நீங்க இங்கே யாரைத் தேடுகிறீர்கள் என்றார். நான் விவரம் சொன்னேன். ஏறுங்கள் வண்டியில், நான் உங்களிடம் பயின்ற மாணவன், என்று  இரண்டு தெரு தள்ளி இருக்கும் விலாசத்தில் கொண்டு போய் இறக்கும் பொழுது சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எனக்கு அவரை நினைவில் இல்லை. 

அடுத்த சம்பவம் அதை விட ஆச்சரியம். என் மகள் ஒரு முறை பீச் சென்ற பொழுது தனது பர்ஸை தொலைத்து விட்டார். தெரியாத நபர் ஒருவர் எனக்கு போன் செய்து உங்கள் மகளின் ஆதார் கார்ட், லைசன்ஸ், போன்ற டாக்குமெண்ட்ஸ் என்னிடம் உள்ளது. நீங்கள் டி.நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பேசியவர் சற்று கறாராக பேசினார். நானும் அங்கே போய் காத்துக் கிடந்தேன். ஆட்டோ ஒன்று வந்து யு டர்ன் போட்டு நின்றது. இறங்கியவர் என்னைக் கண்டு ஆச்சரியத்தோடு இரண்டு கைகளை எடுத்து கும்பிட்டு, "சார் உங்க பொண்ணுடையதா?" என்றார். நான் ரொம்ப வெகுளியாக உங்களுக்கு என்னை முன்பே தெரியுமா என்று கேட்டேன். அவர் என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சார் நான் உங்கள் ஐஐஎல்பி மாணவர். நல்லா இருக்கீங்களா என்று எனது காலைத் தொட வந்தார். நான் தடுத்து நிறுத்தினேன். நான் அவருக்கு கொடுத்த பெட்ரோல் செலவு பணத்தை வாங்க மறுத்தார். பிறகு அவர் சட்டைபையில் பணத்தை போட்டு விட்டு தாங்க்யூ சொன்னேன். 

இன்று நடந்ததும் சற்று ஆச்சரியம் தான். தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ள 2017 ஆண்டு பிரசுரம் செய்துள்ள நூல்களுக்கு பரிசு எனும் திட்டத்தின் படி விண்ணப்பம், வரைவோலை, மற்றும் நூலின் பத்து பிரதிகள் கொடுக்க தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகம் சென்றேன். முதலில் ஒரு அதிகாரியை சந்தித்தேன். அவர் ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்து விட்டு அங்கே அமர்ந்து இருக்கும் ஒருவரின் பெயர் சொல்லி அவரிடம் இந்த நூல்களையும் விண்ணப்பத்தையும் கொடுத்து விடுங்கள் என்றார். நான் அவர் சீட்டை தேடிச் சென்றேன். என்னை ஒரு முறை இரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு எழுந்து நின்று வணக்கம் சொன்னார். உங்களுக்கு என்னைத் தெரியுமா? என்று கேட்டேன் வழக்கம் போல. அவர் புன்னகையுடன் சார் நான் உங்கள் மாணவன் ஐஐஎல்பி நிறுவனத்தில் 2002 ஆம் ஆண்டு படித்தேன். இங்கே மூன்று ஆண்டுகளாக பணியாற்றுகிறேன் என்றார். என்ன ஆச்சரியம். மன்னிக்கவும் எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லை என்றேன். அவர் நன்றாக வளர்ந்து நடிகர் விஜயசேதுபதி போல இருந்தார்.

என்னைப் போலத்தான் எனது மாணவர்களும். ஒருவரும் தான் படித்த லெதர் துறையில் இல்லை. எங்கெங்கோ பணியாற்றி வாழ்க்கையை வெற்றிகரகமாக நடத்தி வருகிறார்கள். (லெதர் துறை சரியாக வாய்ப்புகள் மற்றும் வருமானம் தரவில்லை என்பதும் ஒரு காரணம்). உங்கள் மாணவர் என்று சொல்லும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு எல்லையே இல்லை. ஏதோ ஒரு விதத்தில் ஒரு சிறு மாற்றம் என்னால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கும் பொழுது மனநிறைவு ஏற்படுகிறது. எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லா வளங்களும் பெற்று இன்பமாக இருக்கட்டும். இதுவே எனது பிரார்த்தனை.