Saturday, January 31, 2015

My poem

பார்வை 
------------------
மாடப்புறாவே நீ ஒரு குரியர் பாய் 
கருமைக் காகமே நீ காலிங் பெல் 
தோகை மயிலே நீ வானிலை அறிக்கை 
வண்ணத்துப்பூச்சியே நீ மகரந்தச் சேர்க்கை 
பட்டுப் புழுவே நீ பளபள சேலை 
பறக்கும் தேனியே நீ இனிமைத் தேனே 
நாயே நன்றி உனது மறுபெயர் 
கழுதையே பொதி உனது செயல் 
மாடே பால் உனது கொடை 
மரமே நீ பலரின் நிழற்குடை 
மலையே நீ தரையின் எல்லைக்கோடு 
கடலே நீ மீனின் புகுந்த வீடு 
வானே நீ உலகின் மேற்கூரை 
தரையே நீ மறைத்திருப்பது பற்பல வேரை 
மழையே நீ கடலின் சில்லறை மொழி 
ஒளியே நீ கதிரவனின் அன்பு வழி 
- பாலசாண்டில்யன் 

தலைவர்கள் பிரச்சாரம் செய்தாலும்
வாக்களிப்பது மக்கள் தான்
பெற்றோர் பணம் கட்டினாலும்
மதிப்பெண் எடுப்பது மாணவர் தான்
மேலாளர் திட்டமிட்டாலும்
உற்பத்தி செய்வது உழைப்பாளர் தான்
காசு கொண்டு வந்து கணவன் தந்தாலும்
குடும்பம் நடத்துவது மனைவி தான்
இயக்குனர் ஸ்டார்ட் கட் என்றாலும்
இயல்பாய் படைப்பது கலைஞர் தான்
நண்பர்கள் ஆயிரம் இருந்தாலும்
வாழ்க்கை சூழலை சமாளிக்க நாமே
அதிபர் வந்து விஜயம் செய்தாலும்
சிரமப்படுவது ஆம் ஆத்மி தான்
பார்வையாளர்கள் ஆரவாரமிட்டாலும்
விளையாடி ஜெயிப்பது வீரர்கள் தான்
அணுசக்தி கண்டுபிடித்தாலும்
அரண் செய்வது காவலர் தான்
வாழ்வது நாம் தானென்றாலும்
வலி சுமந்தது நம் தாய் தான்
- பாலசாண்டில்யன்

தெளிவான குழப்பம் 
சிறிய கூட்டம் 
இயல்பான நடிப்பு 
சீரியசான ஹுமெர் 
ஒரே சாய்ஸ் 
ஒரிஜினல் காப்பி
காணவில்லை எனக் கண்டுபிடித்தேன்
அழகான அசிங்கம்
சரியான மதிப்பீடு
அது போலத் தான் ....
நோயில்லா உடம்பு என்பது....
மரணமிலா வாழ்வு என்பது...
அதைவிட
சாதியற்ற சமூகம் என்பதும்...
வரியில்லா பட்ஜெட் என்பதும்....!!

Tuesday, January 27, 2015

நெஞ்சறைப்பெட்டி

நெஞ்சறைப்பெட்டி
- டாக்டர் பாலசாண்டில்யன்


தீப்பெட்டி, தபால் பெட்டி, சவப்பெட்டி, புகார் பெட்டி, யோசனைப் பெட்டி, நகைப்பெட்டி, கல்லாப்பெட்டி, அஞ்சறைப்பெட்டி என்று பற்பல பெட்டிகள் இருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒரு தகவல் தான். ஆனால் கவலைகளைப்  போட்டு வைக்கும் ஒரு பெட்டி தான் நெஞ்சறைப்பெட்டி. இது பற்றி தெரிந்து கொள்ள மேலும் ஆவலா? படியுங்கள் தொடர்ந்து...!

கவலைப்படுவதில் நாமெல்லாம் வல்லவர்கள். கவலைப் படுவது மனித இயல்பு என்றாலும் எதற்கெடுத்தாலும் கவலைப் படுவது சற்று கவலை தரும் விஷயம் தான். கடந்த கால ஏமாற்றங்கள், தோல்விகள், அவமானங்கள் குறித்த கவலைகள்,  என்ன செய்திருக்கலாம் என்ன செய்யாது இருந்திருக்கலாம் எனும் கவலைகள், என்ன நடந்திருக்கலாம் எனும் கவலைகள் எல்லாமே வருத்தம் தருபவை, வேதனை தருபவை தான். இக்கவலைகளால் பாதி இரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டு தூக்கம் கெடுத்துக் கொள்பவர்கள் இன்று ஏராளம்.

சந்தோஷமாக யாரும் கவலைப்படுவதில்லை. ஏதாவது ஒரு தீர்வு வருமா என்று தான் கவலையே. தொடர் கவலைகள் நமது கற்பனைத் திறனையும், படைப்பாற்றலையும் முடக்கிப் போடுகிறது என்று நாம் அறிவதில்லை. கவலை கொள்வதால் நாளைய துக்கங்கள் குறைவதில்லை. மாறாக அவை நாளைய மகிழ்ச்சியை தான் குலைக்கின்றன.

குழந்தைகளிடம் மிக வெற்றி பெற்ற ஒரு யோசனை தான் நெஞ்சறைப்பெட்டி. அந்தப் பெட்டியில் ஆறு அறைகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு நூல் பொம்மை இருக்கும். ஒவ்வொரு பொம்மை மீதும் தமது கவலைகளை கையால் பிடித்துப் போட்டு விட்டு தூங்கச் சென்ற குழந்தைகளுக்கு மறு நாள் அந்தப் பெட்டியில் கவலை காணாது போயிருந்தது மிக ஆச்சரியமாக இருந்தது. இந்தக் கவலைகளைப் போடும் நெஞ்சறைப்பெட்டி மனதிற்கு இதம் தரும் மாமருந்தாக அமைந்து போனது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. கவலைகளை பெட்டியில் போட்ட பிறகு மனம் லேசாக ஆகிறது. அது பற்றிய சிந்தனை மனதை வாட்டாமல் இருந்தது என்பதும் ஆய்வில் தெரிந்தது

வேறு ஒரு குழு ஒவ்வொரு தனித் தனி கவலைகளை ஒரு சிறு காகிதத்தில் எழுதி அதனை சுருட்டி கவலைப்பெட்டியில் போட்டு விட்டு, விரும்பினால் அது பற்றி பிறகோ, மறு நாளோ சிந்திக்க அந்த கவலையின் பாரம் மனதை அழுத்தவில்லை.
சிலர் சற்று நேரம் கழித்து அந்தக் கவலை அல்லது பிரச்சனை பற்றி சிந்தித்த போது அதனை எப்படி கையாள்வது என்ற நல்ல யோசனை அவர்களுக்கு கிடைத்தது. அந்த கவலைகளை, சிக்கல்களை, சவால்களை சந்திக்க புது தெம்பும் தைரியமும் கிடைக்கப் பெற்றனர் சிலர்

சிலர் இந்தக் கவலைப்பெட்டி அல்லது நெஞ்சறைப்பெட்டியினை சரணாகதிப் பெட்டி என்றனர். ஏனெனில் அவற்றுள் போடப்பட்ட கவலைகள் தனது வலு இழந்து சுலபமாக கையாள முடிந்தது. அது ஓர் உயர் சக்தியின் அற்புதம் அல்லது கருணை என்று சிலர் தீர்க்கமாக நம்பினர்

கவலைகளைப் போட்டு வைக்கும் பெட்டிக்கு சிலர் வண்ணம் தீட்டி, படங்கள் ஒட்டி, பளபளப்பு கூட்டி அதன் மதிப்பினைக் கூட்டினர். கவலைகளை எழுதும் காகிதத்தையும் சரியாக வடிவமைத்து வண்ணம் தந்தனர். பணம் பற்றிய கவலை, நோய் பற்றிய கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை, எதிர்காலம் பற்றிய கவலைகள், விரோதிகள் பற்றிய கவலைகள், முடிக்க இயலாத வேலை பற்றிய கவலைகள், திருமணம் அல்லது எதிர்கால கனவு பற்றிய கவலைகள் என்று ஒவ்வொரு கவலைக்கும் ஒரு வண்ண காகிதத்தை பயன்படுத்த ஆயத்தமாயினர்.

கவலைகளை பெட்டியில் போட்ட பிறகு இதர முக்கிய பணிகளில் கவனம் செலுத்த முடிந்ததை மக்கள் உணர்ந்தனர். அவர்களின் திறன் கூடியது. மனம் லேசாகியது. நல்ல தூக்கம் வந்தது. நம்பிக்கை அதிகரித்தது. ஒரு பெட்டியினால் இத்தனை நன்மைகளா? நாமும் தான் முயற்சி செய்து பார்க்கலாமே!

நமது கவலைகளை இறைவனிடம் அல்லது பிரபஞ்ச சக்தியிடம் போட்டு விட்டதால் நாம் பலவீனமானவர்கள் என்றோ சவால்களை சந்திக்க முடியாத கோழைகள் என்றோ நினைக்க வேண்டிய அவசியமில்லை. தோற்றுவிட்டதாக எண்ண வேண்டியதும் இல்லை. கவலைகளின் இடம் மனதில் காலி ஆகும் போது அந்த இடம் நல்ல விஷயங்களால் நிரப்பப்படுகிறது என்பது தான் உண்மை

தீர்க்க முடியாத கவலைகள் பற்றிய தொடர்ந்த எண்ண ஓட்டம் இருப்பின் வேறு எதிலும் மனம் கவனம் செலுத்த முடியாது போகிறது என்பதனை உணர்ந்து வெற்றியை மகிழ்வை நோக்கிய முதல் படியாக இந்த நெஞ்சறைப்பெட்டி முறை தனை முயற்சி செய்வதில் என்ன தவறு...? கவலை இருக்கும் இடம் கடவுள் இடம் அல்ல. கவலை இறக்கும் இடம் (பெட்டி) கடவுள் இருக்கும் இடம் என்று கொள்ளலாம். கவலைகள் மாயமாகும் பெட்டி தனை உடனே கண்முன் வையுங்கள். போடுங்கள் உங்கள் கவலைகளை அதனுள். நெஞ்சுரம் பெற நெஞ்சறைப்பெட்டி ரெடி.