Tuesday, January 27, 2015

அதிசக்தி (ஹைபர் ஆக்டிவ்)குழந்தைகளை சமாளிப்பது எப்படி ?

அதிசக்தி (ஹைபர் ஆக்டிவ்)குழந்தைகளை சமாளிப்பது எப்படி ?
- டாக்டர் பாலசாண்டில்யன்

அன்றைய குழந்தை வளர்ப்பு முறையிலும் இன்றைய அணுகுமுறையிலும் நிறைய மாற்றங்கள் உண்டு. குழந்தைகள் இயல்பாகவே என்ன சுபாவத்தோடு பிறக்கின்றன மற்றும் இருக்கின்றன என்பதை புரிந்து கொண்ட பின்பே அவர்களிடம் என்னென்ன பண்புகளையும் குணங்களையும் உருவாக்கி வளர்க்க வேண்டும் என்று திட்டமிட முடியும்.

கரடு முரடான மேடு பள்ளங்கள் நிறைந்த, வளைவுகள் சரிவுகள் கொண்ட பயணமே வாழ்க்கை என்பதைப் புரிய வைத்து நல்ல மனிதர்களாக பிள்ளைகளை கொண்டு வருவது பெற்றோர் இருவரின் திறமை மற்றும் கடமை ஆகும். வாழ்க்கை முட்கள் தாண்டி மலர்கள் பறிக்கும் போராட்டம் என்பது பிள்ளை பெற்ற அனைவரும் உணர்வர். நிறம், இனம், உயரம், உடல்வாகு, புத்திகூர்மை, போன்ற மரபியல் தன்மை உடையது தான் அதிசக்தி கொண்ட ஹைபர் ஆக்டிவ் எனும் ஒன்று

நல்ல பண்புகள், தன்னம்பிக்கை, வாழ்வியல் மதிப்புகள் புரிந்து கொள்ளும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது இன்றைய காலத்தின் கட்டாயம்.

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இந்த குழந்தைகள் அதிக எனேர்ஜியோடு இருப்பார்கள். இவர்களை எளிதில் இனம் காண முடியும். இவர்களை கண்காணித்து சமாளிப்பது சிரமமான செயல் தான். பொறுமையை சோதிக்கும் இப்பிள்ளைகள் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. கோபப்படுவதும் தண்டிப்பதும் இங்கே தீர்வாக அமைவதில்லை

அதிசக்தி பிள்ளைகள் எப்படிப்பட்டவர்கள் ?
சொல்பேச்சு கேளாதவர்கள், மறதி உள்ளவர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள், பிற பிள்ளைகளோடு ஒத்துப் போகாதவர்கள், வம்பு சண்டைகளை வீட்டிற்கு கொண்டு வருபவர்கள். இப்படி தொல்லைகள் பல இவர்களால் நிறைய உண்டு. இவர்களை பேணி வளர்ப்பது எப்படி என்பதை தெரிந்து தெளிதல் அவசியம்.


சரி, இவர்களை எப்படி சமாளிப்பது ?
1. கட்டாய ஒழுக்கத்தை கொண்டு வருவது 2. உற்சாகம், புதிய முயற்சி, வேகம் காட்டும் இவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய பாராட்டு தருதல் 3. ஓரிடம் தங்காத, தங்க வைக்க முடியாத இப்பிள்ளைகள் நிறைய விளையாடி தனது சக்தியை செலவழிக்க வைத்தால் தான் அவர்களால் படிப்பில் அல்லது இதர முக்கிய பணிகளில் கவனம் செலுத்த முடியும். 4. பள்ளிகளிலும் இவர்கள் இயல்பு பற்றி எடுத்திச் சொல்லி சிறு சிறு வேலைகள் கொடுத்து இவர்கள் சக்தியை சரியாக பயன்படுத்த செய்ய வேண்டும் 5. ஆசிரியர்கள் வகுப்பில் இவர்களை புரிந்து கொள்ளாவிடில் தண்டனை வழங்குவர். அதனைத் தடுக்க இவர்கள் பற்றிய தன்மையை வெட்கம் தயக்கம் இன்றி சொல்லி வைப்பது நல்லது. 6. வீட்டு பாடம் செய்யும் போதும் படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், ஓரிரண்டு கணக்கு கூட செய்ய வைத்தல் அவசியம் ஆகிறது. 7. வேகத்தில் இவர்கள் செய்யும் தவறுகளை மெதுவாக அன்பாக கனிவாக சுட்டிக் காட்டி திருத்துதல் வேண்டும்.


வேறு சில முக்கிய யோசனைகள் தெரிந்து கொள்ள ஆர்வம் வருகிறதா ?
இதோ மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. பிற பிள்ளைகளோடு போட்டி போடுவதும் அவர்களை அடிப்பது உதைப்பது சகஜம். அப்படி நிகழாமல் கவனமாகப் பார்த்துக் கொள்வது முக்கியம். 2. இவர்கள் விளையாட தகுந்த இடம், அதற்கேற்ற விளையாட்டு பொருட்கள், அதற்கான சூழல் இவை அமைத்துத் தருதல் பெற்றோருக்கு சற்று சவாலான ஒன்று தான். 3. கராத்தே, ட்ரம்ஸ், பிற கடின வெளி விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்குகள் நல்லது. அவை எல்லாம் இவர்கள் அதிசக்திக்கு தீனி போடுபவையாக இருக்கும். 4. மிக சின்ன வயதினர் என்றால் கையால் அமுக்கும் பந்து தரலாம். நீச்சல் பயிற்சி மற்றும் பூங்காக்களில் நடப்பது ஓடுவது விளையாடுவது நல்லது. 5. இனிப்பு, பலகாரம், நொறுக்கு தீனி, குளிர் பானம், சிப்ஸ், நூடுல்ஸ், பிஸ்சா, சாக்கலேட் இவை கொடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 6. Attention Deficit Hyperactivity Disorder (ADHD) கவனச் சிதறல் மற்றும் அதிசக்தி தன்மை கொண்ட இக்குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிடாமல், மட்டம் தட்டாமல் இருத்தல் வேண்டும்


இந்தப் பிள்ளைகள் பெற்றோரின் பிரதான கவலை தான்.
எப்போதும் எங்கும் ஓடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு அடிக்கடி காயம், விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு இந்த விஷயங்கள் குறித்து நிதானமாக எடுத்துரைத்து சரி செய்தல் வேண்டும். எங்காவது மேலே ஏறுதல், குதித்தல், பொருட்களை தூக்கி எறிதல், பொருட்களை உடைத்தல் இவை எல்லாம் அடிக்கடி நடக்கும் என்பதால் நண்பர்கள் உறவினர்கள் இல்லம் இவர்களை கூட்டிச் செல்ல நிச்சயம் பயம் தயக்கம் இருக்கும். இருப்பினும் கவனமாக இருந்தால் சமாளிக்கலாம். பெற்றோர் கண்ணாலேயே கண்டித்தல், பெயர் சொல்லி முறைப்படுத்துதல் பலன் அளிக்கும். சில சமயம் கை அசைவு, அர்த்தமுள்ள புன்னகை கூட உதவும்.


இந்தப் பிள்ளைகள் பெற்றோர்கள் நினைத்த படி, சொன்ன படி நடந்து கொண்டால் பாராட்ட வேண்டும், சின்ன சின்ன பரிசுகள் தந்து ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் மற்றவர் எதிரில் கண்டித்தல், கத்தி மிரட்டி அடித்தல், அவமானப் படுத்துதல் கூடவே கூடாது


என்ன படிக்கப் படிக்க தலை சுற்றுகிறதா ?

கவலை வேண்டாம். இவர்களின் இந்த தன்மை நிச்சயம் மாறக் கூடிய ஒன்று தான். இப்படிப்பட்ட குழந்தைகள் பின்னாளில் ஒரு வாத்திய இசைக்கலைஞராக, விளையாட்டு வீரனாக, போலீஸ் அதிகாரியாக, மிலிடரி ஆபிசராக, மார்கெடிங் அதிகாரியாக வருவதற்கு நிறைய சாத்தியங்கள் அதிகம்

No comments:

Post a Comment