Thursday, March 1, 2018

இணைந்து செயல்பட்டால் இல்லை தொல்லை

இணைந்து செயல்பட்டால் இல்லை தொல்லை 

இன்று காலை வழக்கமான முடிதிருத்தும் செய்யும் கடைக்கு சென்றேன். ரொம்ப ஆண்டுகளாக செல்லுவதால் அங்கே இருக்கும் ஊழியர்களுக்கு என்னை நன்றாகவே தெரியும். "சார் கொஞ்சம் இருங்க, பப்பு டிபன் சாப்பிடப் போய் இருக்கிறார், வந்து விடுவார்" என்றார் கருணா. சற்று நேரத்தில் வந்தார் அப்பு. வழக்கம் போல பப்புவிடம் அவர் ஊர் பற்றி, குடும்பம் பற்றி எல்லாம் ஹிந்தியில் விசாரித்தேன். பப்பு பீகாரில் இருந்து இங்கு வந்து வேலை செய்தாலும் அவருக்கு தமிழும் தெரியும். 

என் தலை மீது பப்பு விளையாடிக் கொண்டு இருந்தார். நான் வழக்கமாக அவருக்கு எந்த ஒரு விபரமும் சொல்ல மாட்டேன். அவருக்கு தெரியும் எனக்கு என்ன வேண்டும் என்று. 

எல்லோருக்கும் டீ வந்தது. பப்பு என்னைக் கேட்டார் சார் உங்களுக்கு என்று. நான் லெமன் டீ கிடைக்குமா? என்றேன். சில நிமிடங்களில் சுவையான லெமன் டீ வந்தது. 

அங்கே இருந்த வினோத் என்பவர், "பப்பு இங்கே வா"  என்று அழைக்க பப்பு சார் ஒரு நிமிடம் என்று சொல்லி விட்டு போய் ஒரு சீட்டு வாங்கி வந்து படித்தார் கப் போர்ட் மற்றும் சேர். நான் கேட்டேன் எதாவது சீட்டு போட்டு பணம் சேர்க்கிறீர்களா? இல்லை என்று சொன்ன பப்பு தொடர்ந்து சொன்ன விஷயம் தான் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. 

ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் நாங்கள் மைண்டெனன்ஸ் என்று மதியத்துக்கு மேல் கடையை சுத்தம் செய்வோம். நீ இத செய், நான் இத செய்யறேன் என்று எங்களுக்குள் சிறு சிறு குழப்பம் வருகிறது. நான் சொன்ன ஐடியா படி தான் இப்போது ஓரிரு மாதமாக நடக்கிறது. அதாவது என்ன வேலைகள் உள்ளதோ அவற்றை பிரித்து வேறு வேறு சீட்டில் எழுதி விட்டு அந்த சீட்டை ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி அவரவருக்கு ஒரு சீட்டு எடுத்துக் கொள்ளுவோம். அதன் படி இன்று எனக்கு வந்தது தான் கப் போர்ட் மற்றும் சேர்.

நான் விடவில்லை. இங்கே உங்களில் சிலர் வயதானவர்களும் இருக்கிறீர்களே, சில வேலைகள் கடினமாக இருக்குமே, அப்போது என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். பப்பு சொன்னார், அதை நாங்கள் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளுவோம் எந்தவித மனத்தாங்கல் இல்லாமல். இப்படி வேலையை பிரித்துக் கொள்ளும் பொழுது அவரவர் வேலையை முணுமுணுக்காமல் செய்கிறோம். அது மட்டும் அல்ல. ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்யும் பொழுது ஒரு அலுப்பு இருக்கும் அல்லவா அதுவும் வராது.

பப்புவின் கையைக் குலுக்கி எனது பாராட்டை தெரிவித்தேன். ஒரு சிறிய டீம் இருக்கும் எந்த அலுவலகத்திலும் இந்த சிஸ்டெம் கடைபிடிக்கலாம். ஏன் நமது வீட்டில் கூட மாதம் ஒரு முறை ஞாயிறு அன்று இந்த முறையை கடைபிடித்து அனைவரும் இணைந்து ஒரு டீமாக வேலை செய்யலாம். 

இணைந்து செய்யும் பொழுது கம்பிளைன்ட் எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை. இஷ்டத்துடன் நமது என்ற உணர்வுடன் செயலில் ஈடுபடலாம். நிச்சயம் இந்த ஐடியா உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு முறை பரிசோதித்து தான் பாருங்களேன்.

No comments:

Post a Comment