Tuesday, March 6, 2018

My wife has written an excellent article about me

கண் அவன் கணவன்
என் மனைவி மகளிருக்கான போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை. இருப்பினும் எனது மனதை வென்ற ஒரு படைப்பு - அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல. (Thanks to Sukeerthy Balasubramanian)
நான் பிறந்து படித்து வளர்ந்ததெல்லாம் கிராமம் தான். பெரிய குடும்பம். அம்மா, அப்பா, என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நடுத்தர நிலைமை. நாங்கள் எல்லோருமே படித்தது எல்லாம் கவர்ன்மெண்ட் ஸ்கூல் தான். அப்பாவிற்கு பெரிய வேலை என்று சொல்ல முடியாது. அவருக்கு எங்கு வேலை கிடைத்ததோ அங்கெல்லாம் நாங்கள் படித்திருக்கிறோம்.
நான் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன் என்னை காலேஜ் அனுப்பவில்லை. நீ தபால் மூலமே படி என்று என்று என் அப்பா சொல்லிவிட்டார். அதன் படி அண்ணாமலை யூனிவெர்சிட்டியில் B.Sc - Maths சேர்ந்தேன். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது என் அண்ணன்களுக்கு சென்னையில் வேலை கிடைத்தது. அப்போது குடும்பத்தை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு சென்னையை பற்றி ஒன்றும் தெரியாது.
தபால் மூலம் படித்துக் கொண்டே டைப் ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட், ஹிந்தி வகுப்புகள் சேர்ந்தேன்.
அப்போது தான் எங்கள் குடும்பத்திற்கு தெரிந்தவர்கள் மூலம் எனது ஜாதகத்தை பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு கொடுத்து அனுப்பினர் எனது பெற்றோர். திடீர்னு ஒரு நாள் பக்கத்து தெருவுக்கு கொடுத்து அனுப்பிய ஜாதகம் சேருகிறது. இன்று உன்னை பெண் பார்க்க வரப் போகிறார்கள் என்று அம்மா சொன்னார்கள். இதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இரவு 8.30 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வந்தார்கள். அவர் என்னைப் பார்த்தாரா என்று தெரியாது. நான் அவரை சரியாகக் கூட பார்க்கவில்லை. பயமாக இருந்தது. பெண் பிடித்த விட்டது என்று தகவல் வந்ததால் மார்ச் 29 அன்று நிச்சயதார்த்தமும் முடிந்தது.
நிச்சயம் நடந்த சில நாட்களிலேயே அம்பத்தூரில் சொந்த வீடு வாங்கிக்கொண்டு சென்று விட்டோம். பக்கத்து தெருவிலேயே புகுந்த வீடு என்று நினைப்பதற்குள் வீடு மாற்றிக் கொண்டு சென்று விட்டோம். கல்யாணம் மே 15 ஆம் தேதி என்று குறித்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி மீட் செய்யும் வாய்ப்பும் இல்லாமல் போனது.
எனக்கு கல்யாணம் ஆகும் போது வயது 21. எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம். ஆனால் எங்களைப் பார்த்தால் அந்த வித்தியாசம் தெரியாது. காரணம் அவரின் சிறிய உருவம் தான். கல்யாணமும் சிறப்பாக நடந்தது.
எனது கணவர் ஒரு தோலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பேக்டரி மேனேஜர். காலையில் சீக்கிரம் கிளம்பினால் வீடு திரும்ப இரவு ரொம்ப லேட் ஆகும். என் புகுந்த வீட்டில் மாமனார், மாமியார், மைத்துனர்கள், நாத்தனார்கள், மாமனாரின் அம்மா, அடிக்கடி வந்து போகும் உறவினர்கள் என்று பெரிய கூட்டுக் குடும்பம் அது. வேலை சரியாக இருக்கும். நான் வீட்டின் மூத்த மருமகள் வேறு. கேட்க வேண்டுமா? (திருமணத்திற்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த வேலைக்கு போகலாமா என்று எனது கணவரிடமோ மாமனாரிடமோ கேட்கவே இல்லை.) பொறுப்புகள் நிறைய இருந்தன. குருவி தலையில் பனங்காய் போல திணறினேன். இதற்கு நடுவில் மூத்த மகள் சுபாஷிணி பிறந்தாள். கைக்குழந்தை, மைத்துனர் மற்றும் நாத்தனார் கல்யாணம் என்று பிஸியான வாழ்க்கை தான். இப்படியே மூன்று ஆண்டுகள் உருண்டு ஓடின. அப்போது தான் நான் படிப்பை முடிக்கவில்லை என்பதே நினைவுக்கு வந்தது.
எனது கணவர் நான் தபாலில் படித்து வந்த படிப்பை அப்படியே விட்டு விட்டு புதிதாக B A - Sociology சேரச் சொன்னார். அது முடிந்த உடனேயே M.A. Sociology என 5 வருடங்கள் தபால் வழிக் கல்வி முடித்து முதுகலை பட்டதாரியும் ஆகி விட்டேன். இதற்கு நடுவில் எங்களுக்கு இரண்டாவது மகளும் (சுபிக்ஷா) பிறந்து விட்டாள்.
இவர் கவிதை கட்டுரை கதை எல்லாம் எழுதுபவர் என்று தெரியும். ஆனால் ஓயாமல் மீட்டிங், இலக்கிய கூட்டம், டிவி நிகழ்ச்சி என்று பாதி நேரம் வீடு தங்க மாட்டார். ஆபிஸ் பொறுப்பு, வீட்டுப் பொறுப்பு தாண்டி பாலசாண்டில்யன் என்று பலரும் அறிந்த இவர் எப்போதுமே பிசி தான்.
வீட்டின் மூத்த மருமகள் என்ற அடிப்படையில் அவருடைய சகோதர சகோதரி மட்டுமல்லாமல் சித்தப்பா பெரியப்பா பசங்க திருமணங்கள், வீட்டின் இதர நல்லது கெட்டது எல்லாவற்றிலும் எனது பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. இவர் என்னுடைய எந்த விஷயத்திற்கும் நோ சொல்லவே மாட்டார். வீட்டின் வரவு செலவு வங்கிக்கணக்கு, சேமிப்பு எல்லாவற்றிற்கும் இவர் என்னையே பொறுப்பாக்கினார். ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவம் தான்.
வீட்டுப் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, அவர்கள் படிப்பு அனைத்திலும் என்னையே முன்னிறுத்துவார். யாரும் என்னை ஒரு வார்த்தை சொன்னாலும் அவரால் தாங்க முடியாது. அப்படிப்பட்ட சூழல்களில் தான் அவர் என் மீது எவ்வளவு அன்பு பாசம் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். பல நேரம் நான் வியந்து போவேன். எனது முகத்தை பார்த்தவுடனே எனது மனதில் இருப்பதை சொல்லி விடுவார். தவிர எங்கள் வீட்டில் இருக்கும் போது ஹோட்டல் என்றால் என்னவென்றே தெரியாது. இப்போது இவருடன் சேர்ந்து நான் போகாத ஹோட்டல்கள் கிடையாது. ஒரு கிராமத்து பெண்ணாக இருந்த என்னை நம்பிக்கையுள்ள நவீனப் பெண்ணாக மாறிடச் செய்தது எப்போதுமே அவருடைய ஊக்கமும் உற்சாகமும் பாராட்டுகளும் தான்.
என்னைப் பற்றிப் பெருமையாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை என்றாலும் இவரைப் பார்க்க நிறைய பேர் வருவார்கள். அவர்களிடம் என்னை தவறாமல் அறிமுகம் செய்து வைப்பார். என்னுடைய சமையல் மற்றும் காபி அவருக்கு ரொம்ப பிடிக்கும். நார்த் இண்டியன், சவுத் இண்டியன் மற்றும் சைனீஸ் என்று எல்லாம் சமைப்பேன். அவற்றை போட்டோ எடுத்து Facebookல் போட்டு என்னை எப்போதும் என்கரேஜ் செய்வார். தனது பணிச்சுமை காரணமாக தனது 47 வயதில் தனது பெரிய வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக ஒரு சிறு நிறுவனம் தொடங்கினார் அதுவும் என்னை அதன் Proprietor ஆக அறிவித்து. எனது மனதின் உள்ளூர இருக்கும் பயம் தாண்டி அவர் நினைத்தது போல அந்த நிறுவனம் ஓரளவுக்கு சிறப்பாக நடக்கிறது.
என் பிறந்த வீட்டிலும் இவரது நண்பர்கள் மத்தியிலும் மற்ற வெளியிடங்களிலும் எனக்கு முக்கியத்துவம் இன்று கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் என் கணவரும் எங்கள் குழந்தைகளும் தான்.
குழந்தை வளர்ப்பு, சுய தொழில், பெண்கள் முன்னேற்றம் இவற்றில் எல்லாம் பயிற்சி தருகிற எனது கணவர் சற்றும் குறைவில்லாத மதிப்பும் மரியாதையும் எனக்கு தருவார். பிரபலமான ஒருவரின் மனைவியாக இருப்பது எவ்வளவு சிரமம் என்று நான் நிச்சயம் புரிந்து கொண்டுள்ளேன். எல்லோருக்கும் எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யும் குணம் அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து நானும் அதனை பழகிக் கொண்டு வருகிறேன். இன்று எனக்கான ஒரு தனி அடையாளம் கிடைக்க காரணம் எனது கணவர் தான். அதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது.
நட்சத்திரப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம் இவை எல்லாம் தாண்டிய மனப் பொருத்தம் தான் மகிழ்ச்சியான வாழ்வை நிர்ணயிக்கும். அப்படிப்பட்ட மனப் பொருத்தம் எனக்கும் எனது கணவருக்கும் இருப்பது பல்வேறு தளங்களில் வெளிப்படும் போது என் மகள்கள் இருவரும் 'உண்மையை சொல்லுங்க, நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் தானே...இருவரும் பக்கத்துக்கு தெரு வேறு' என்று கிண்டல் செய்வர். எங்கள் பரஸ்பர புரிதல் அப்படி.
எங்கேயோ பிறந்து வளர்ந்த எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. சந்தோஷமான எனது திருமண வாழ்விற்கு முக்கியமான காரணம் எனது கணவர் தான். எத்தனையோ கஷ்டங்கள், பிரச்சனைகள், சந்தோஷங்கள் இவற்றையெல்லாம் சமாளித்து 25 ஆண்டுகள் கடந்திருக்கிறேன் என்றால் அது என் கணவர் அளித்த சப்போர்ட் தான்.
இன்னொரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதிலும் இவரே எனது கணவனாக வர வேண்டும் என்று வேண்டி நிற்பேன். எனது கணவர் எனக்கு ஒரு கண். எனது மகள்கள் எனக்கு மறு கண்.
- சுகீர்த்தி பாலசாண்டில்யன், M.A.

No comments:

Post a Comment