Thursday, March 1, 2018

இணைய தலைமுறை

இணைய தலைமுறை 
- டாக்டர் பாலசாண்டில்யன் 
மனநல ஆலோசகர்/கல்வியாளர் 


எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் கூகுள் சொல்வதறிவு என்ற நிலை உருவாகி உள்ள நிலை தான் இன்று. 

எங்கே சாப்பிடலாம், எங்கே தங்கலாம், எப்படி ஓர் ஊருக்கு போகலாம் எந்த தகவல் என்றாலும் இக்கால இணைய தலைமுறை உடனே மடிக்கணினி அல்லது கைபேசியை திறந்து பார்த்து விடுகிறார்கள்.

தவிர பொருள் விலை, கிடைக்குமிடம் எல்லாமும் அறிந்திடும் அதே வேளை ஆடை, காலணி இவை எல்லாம் கூட இணையத்தின் மூலம் ஆர்டர் செய்கிறார்கள். சில பொருட்கள் தொட்டுப்பார்த்து, சில பொருட்கள் போட்டுப் பார்த்து, வாங்கிட வேண்டும். கண்ணால் காண்பதும், பிறர் சொல்வதும், தீர விசாரிப்பதும் கூட தவறு தான். நாமே கண்டு, உணர்ந்து, திருப்தி மனப்பாங்கோடு வாங்க வேண்டும். இந்த நிலை இன்று இளைஞர்களிடம் இல்லை. கேட்டால் ரிட்டர்ன் பாலிசி இருக்கிறது. கவலைப்பட ஒன்றும் இல்லை என்பார்கள். நேர விரயம் பற்றி யாரும் யோசிப்பதில்லை. 

கல்விப் பாடங்களில் சந்தேகம் என்றால் இணையத்தில் நிச்சயம் விடை இருக்கும். ஒன்றுக்கு நூறு கூட கிடைக்கும். அவற்றுள் எது சரி, எது நமக்குப் பொருந்தும், எது நாம் தேடுகிற ஒன்று என்ற புரிதல் இங்கே தேடுவோரிடம் சற்று குறைவு தான். இதை ஆங்கிலத்தில் ரெலெவன்ட் அண்ட் ஆதென்டிக் என்பார்கள். அதே போல புள்ளி விவரங்கள் பெரும்பாலும் அண்மையில் சொல்லப்படும் ஒன்றாக இருக்காது. அதுவும் யார் சொன்னது, எப்போது எங்கே சொன்னது என்பதுவும் முக்கியம் தானே? 

இணையத்தில் நாம் காணுகின்ற ஒவ்வொரு விஷயமும் யாரோ எங்கோ எப்போதோ தேடிப் பிடித்து பதிவு செய்தது தான். அதன் உண்மைத்தன்மை அங்கே எவரும் உறுதி செய்வது இல்லை. போட்டது தான் கிடைக்கும். ஆனால் கிடைப்பது எல்லாம் சரியாய் இருக்குமா என்று சொல்வது கடினம். 

இன்று இணைய தலைமுறையிடம் பெரும்பாலும் காணுகின்ற ஒரு முக்கிய விஷயம், அவர்கள் உடல் ரீதியான நோய் குறித்து தேடிப் பிடித்து தெரிந்து கொள்கிறார்கள். நிச்சயம் அந்த விஷயம் நமக்கு முற்றிலும் பொருந்துமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஒரு மருத்துவரிடம் சென்று நமது உடலில் ஏற்படும் உபாதை குறித்து முழுமையாக எடுத்துச் சொல்லி, அதனை அவர்கள் அனுபவத்தில் என்ன நோய் அல்லது அது நோய் தானா என்று கண்டறிந்து உரிய வைத்தியம் சொல்லுவார்கள். ஆனால் இணையத்தில் நாமே கண்டறிந்து, புரிந்து கொண்டு அதற்கு சொந்த வைத்தியமும் செய்து கொண்டால் அது மிகவும் ஆபத்தானது.

தெளிவு ஏற்படுவதை விட குழப்பங்கள் ஏற்படும் சாத்தியம் இன்று அதிகம். அதே போல ஒரு கேள்விக்கு விடை தேடும் போது விடைக்கு பதில் மேலும் பல கேள்விகளே எழுகிற வாய்ப்பும் அதிகம். அப்போது சார்ந்த வேறு பல இணைய கருத்துக்களை தேடித் தேடி நேர விரயம், மேலும் குழப்பம் இவை தான் மிஞ்சும். 

ஒரு நிபுணரை நேரில் சந்தித்து பெறுகிற தகவல் உறுதியான, நம்பகமான ஒன்றாக இருக்கும். ஆனால் இணையம் தருகிற எல்லா தகவலும் அப்படி அல்ல. ஏற்கனவே ஒரு சில தகவல்கள் நம்மிடம் உள்ளன, மேலும் சில அது குறித்த விபரங்கள் தேவை எனும் பொழுது இணையம் நிச்சயம் உதவும். ஆகவே இளைய இணைய தலைமுறையினர் ஸ்மார்ட் ஆக இருந்தாலும், எல்லா விஷயங்களையும் அப்படியே நம்புகிற சற்று சாதுரியம் மற்றும் சாமர்த்தியம் குறைந்தவர்களாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. பி கேர்புல் - நான் என்னைச் சொன்னேன். ஹும் ...!!

No comments:

Post a Comment