Thursday, March 1, 2018

பிராண்டிங் என்றால் என்ன?

பிராண்டிங் என்றால் என்ன?

பிராண்ட் என்பது ஒரு பொருளோ, நிறுவனமோ அல்லது அமைப்போ அல்ல. பிராண்ட் என்பது காண்கின்ற ரூபத்தில் இருப்பதில்லை. ஒரு பொருள் அல்லது நிறுவனம் பற்றிய மக்களின் அனுபவம், எண்ணங்களின் பிரதிபலிப்பு, நல்லுணர்வுகள் எல்லாம் கலந்தவை தான் பிராண்ட் என்பது. பிராண்ட் என்பது மக்களின் நினைவுகளில் எண்ணங்களில் உறைந்து இருக்கிற ஒன்று எனலாம். 

பிராண்ட் என்பது ஒரு ஐகான் எனப்படும் குறியீடு, ஒரு வாசகம், இலக்கு நிர்ணயிக்கும் வழிமுறை விளக்கம், நிறுவனத்தின் உறுதி மற்றும் வாக்கு, சந்தை நடவடிக்கை, நிறுவனத்தின் முடிவு, வாடிக்கையாளரின் மனதின் குரல் என்று பலவாக இருக்கிறது. 

எதையெல்லாம் பிராண்ட் செய்ய முடியும்? 
பொருட்கள் (சோப்பு, மொபைல் )  சேவை (டி எச் எல்)  வெப்சைட், பொருளின் /சேவையின் பயன்பாடு, விற்பனை (அம்மா உணவகம்),  பொருள் கொள்ளளவு, மனிதர்கள் (மைக்கேல் ஜாக்சன்)  தொழில் நுட்பம் (எஸ் எ பி) , இடம் (சென்னை), சில்லறை வணிகம் (அமேசான்), பொழுதுபோக்கு (சென்னையில் திருவையாறு), நிறுவனம் (டாடா), கல்வி நிறுவனங்கள் (எஸ் ஆர் எம்), 

ஒரு உடைந்த கோக் பாட்டிலின் மூடியை பார்த்தாலும் அந்த பொருளின் நினைவு வரும், ஒரு பொருளுக்காக விளம்பரம் செய்யும் கதாபாத்திரம் - பிரபு (கல்யாண் ஜெவெல்லர்ஸ்) - இதனை ப்ராண்ட் அம்பாஸடர் என்கிறோம். பிராண்ட் விசுவாசம் எனும் லாயல்டி என்பது ஹிந்து நாளிதழை தொடர்ந்து தலைமுறை தலைமுறை மாறாது வாங்குவது. பிராண்ட் பொசிஷனிங் என்பது ஒரு பொருளை அல்லது சேவையை எப்படி முன் நிறுத்துவது என்பது குறித்தது (தேர்தல் சமயத்தில் ஒரு வாசகம் அல்லது லோகோவை எப்படி பிரபலப்படுத்துவது), 5 ஆப்பிள் என்பதற்கும் ஆப்பிள் 5 என்பதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா ? 

பிராண்டிங் செய்வதன் பயன்கள் என்று பார்க்கும் பொழுது - வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு, பொருளின் மதிப்பு மற்றும் சேவையை முன்னிறுத்துவது, நாம் தேடுகின்ற பொருள் அல்லது சேவையை கிடைக்க செய்வது (மொபைல் போனில் ஏர்டெல் மூலம் இசை பெறுவது), சந்தையில் நமது பொருள் மற்றும் சேவையின் பங்கு எவ்வளவு என்று பிராண்ட் தீர்மானிக்கிறது. மேலும் மக்களின் நல்ல அபிப்ராயத்தை மேம்படுத்தல், வருமானம் பெருகிட பிராண்ட் பெரிதும் உதவுகிறது. 

ஒரு பிராண்டை எப்படி முன்னேற்றுவது ? 
- பிற பொருட்களில் இருந்து வித்தியாசப்பட்டு அதன் தனித்தன்மையை மக்களுக்கு தெரிவிப்பது 
- நமது வாடிக்கையாளர்கள் இருக்கும் சந்தையில் ஒரு அர்த்தத்தை உருவாக்குவது 
- நமது வாடிக்கையாளர்களுக்கு நன்மதிப்பை தருவது 
- நமது பிரான்ட் வாடிக்கையாளர்களுக்கு என்ன அனுபவம் மற்றும் திருப்தி தந்தது என்று கண்டறிவதன் மூலம் 

பொதுவாக பிராண்ட் என்பது நாம் சொல்வது, செய்வது, நினைப்பது, ட்வீட் செய்வது, முகநூலில் பதிவு செய்வது, மெயிலில் எழுதுவது, பகிர்ந்து கொள்வது, வாடிக்கையாளர்களிடம் பழகும் விதம் எல்லாமே தான். 

மக்களின் ஒவ்வொரு பேச்சும், எண்ணங்களும், கதையும், அனுபவமும் பிராண்ட் என்பதை பிரதிபலிக்கும். மக்கள் ஒரு பிராண்ட் என்ன சொன்னது என்பதை நினைவில் கொள்வதில்லை, விரைவில் எளிதில் மறந்து விடுவார். ஆனால் அவர்களை எப்படி உணரச் செய்தது என்பதை ஒரு போதும் மறப்பதில்லை. 


விலை நிர்ணயித்தல் 

ஒரே விலை, வாடிக்கையாளருக்கு ஏற்ப விலை, மொத்த வணிகத்திற்கு ஒரு விலை, சில்லறை வணிகத்திற்கு ஒரு விலை, ஏற்றுமதிக்கு ஒரு விலை, உள்ளூர் சந்தைக்கு ஒரு விலை, விழாக்காலங்களில் ஒரு விலை, அரசு நிர்ணயித்த விலை (தங்கம், பெட்ரோல்), மான்ய விலை (ரேஷனில் சர்க்கரை விலை), புதிய பொருளுக்கு விலை, சொந்த பிராண்ட் கடைகளில் ஒரு விலை, ஹோல் சேல் சந்தையில் ஒரு விலை (கோயம்பேடு காய்கறி சந்தை), மால் போன்ற இடங்களில் சற்று அதிக விலை, பிளாட்போர்ம் கடைகளில் ஒரு விலை, சந்தா கட்டியவர்களுக்கு ஒரு விலை (ஆவின் அட்டை மூலம் ஒரு விலை, கடையில் வேறு விலை), சீசன் முடிந்து போனால் ஒரு விலை, வீடு வீடாக விற்கும் பொழுது ஒரு விலை, கண்காட்சி மற்றும் பொருட்காட்சி சாலைகளில் ஒரு விலை, என்று வித்தியாசமான விலை எல்லா நிறுவனங்களிலும் உண்டு. 

புதிய பொருள் சந்தைக்கு முதல் முறை வரும் பொழுது அதிக விலை, மாற்று பொருள் சந்தையில் வரும் பொழுது இறங்கும் விலை, கள்ளச் சந்தையில் ஒரு விலை, பொருள் இனி சந்தையில் வராது எனும் பொழுது இறங்கும் விலை, ஏழை பணக்காரர்களுக்கு ஒரு விலை (உடனே பணம்/கடனுக்கு பொருள்), அநியாய விலை, நியாய விலை, விடுமுறை சந்தைகளில் ஒரு விலை, வெள்ளம் மழை போன்ற சிக்கல்களில் ஒரு விலை (பால் அரை லிட்டர் 200 ரூபாய்), ஆஸ்பத்திரி வாசலில் இளநீர் குறைவு விலை, ஐ டி நிறுவனம் அருகில் காபி அதிக விலை, முன்கூட்டிய பதிவிற்கு குறைந்த விலை (விமான டிக்கெட்), என்று பல விதமாக நிறுவனங்கள் பொருள் அல்லது சேவைக்கு விலை நிர்ணயம் செய்கின்றன. 

தவிர காஸ்ட் அடிப்படையில் விலை, காஸ்ட் மற்றும் லாபம் சேர்ந்த விலை, டிமாண்ட் அடிப்படையில் விலை, போட்டி அடிப்படையில் விலை, மதிப்பு கூட்டிய சேவைக்கு ஒரு விலை, உறுதியான அதிக கொள்முதலுக்கு குறைந்த விலை, நடப்பு விலை, ஸ்டாக் முடிக்க குறைந்த விலை என்று நிறுவனங்களின் யுக்தி மாறுகிறது. 

பேக்கிங் சிறப்புகள் என்ன?

ஒரு பொருளின் மதிப்பு அது எப்படி பேக் செய்யப்பட்டு இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் அமைகிறது. அழகான பாட்டில், பெட்டி, இவற்றில் போட்டு விற்கும் பொருளின் விலை யாரும் கேள்வி கேட்பதில்லை (சென்ட், கைக்கடிகாரம், கூலிங் கிளாஸ்).

பேக்கிங் செய்த பெரும்பாலான பொருட்களில் நிறுவனத்தின் பெயர், லோகோ, கலர் தீம், பொருளின் தன்மை, அதன் கால நிர்ணயம், எங்கு தயாரிக்கப் பட்டது, பொருளின் காலாவதி நாள் என்று பல விஷயங்கள் உள்ளன. சாக்லேட் வாங்குபவர்கள் நிச்சயம் காட்பரி நிறுவனங்களின் பொருட்கள் மீது ஈர்க்கப்படுகிறார்கள். அதே போல ஷாம்பூ போன்ற பொருட்களின் பாட்டில்கள் மக்களை ஈர்க்கின்றது. தவிர சில பரிசுப் பொருட்களை எப்படி பேக்கிங் செய்கிறோம் என்பதை பொருத்து அதன் மதிப்பு மாறுகிறது. 

வண்ணங்கள், பேக்கிங் செய்ய பயன்படுத்தும் பொருள் மரம், காகிதம், பிளாஸ்டிக், அலுமினியம், செம்மண் அல்லது களிமண் பொருள், மெட்டல், கண்ணாடி, பிளாஸ்டிக், டின், அட்டை என்று மாறுபடுகிறது. அதிலும் வண்ணங்கள், வடிவங்கள், அதில் பொருளின் பெயர் மற்றும் சித்திரம் எப்படி இருக்கிறது என்று கூட நாம் காணலாம். ஆகவே ஒரு பொருளுக்கு சமமாக அதன் மதிப்பு பேக்கிங் மூலம் கூடுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

No comments:

Post a Comment