தோல்வி தரும் பாடங்கள் வெற்றி தராது
- டாக்டர் பாலசாண்டில்யன், மனநல ஆலோசகர்
இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரி இறுதி தேர்வுகள் எழுதி முடிவுக்காக காத்திருக்கும் நேரம் இது. இந்த முடிவு வாழ்வின் அடுத்த முடிவுகளுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் சிலர் மேற்படிப்பு மற்றும் வேலைக்கு நுழைவுத் தேர்வு எழுதி இருப்பர். காத்திருக்கும் இந்த நேரம் எண்ணங்கள் எல்லாம் நடந்து போன தேர்வுகளின் முடிவுகள் பற்றியே இருக்கும். சிலருக்கு அது பயத்தை, குழப்பத்தை அல்லது அதைரியத்தை தரக்கூடும்.
வெற்றி பெற்று விட்டால் ஏற்படும் திருப்தி மற்றும் பெருமூச்சு நம்மை மெத்தனத்தில் கொண்டு சேர்த்து, வாழ்வை வசதி வட்டத்திற்கு தள்ளி விடும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. நிச்சயம் வெற்றி தான் எல்லோருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை தோல்வி ஏற்பட்டால் துவண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் பெற்றோருக்கு, உறவினருக்கு, நண்பர்களுக்கு அல்லது வேறு யாருக்கோ உங்களை நிரூபணம் செய்வதற்காக தேர்வு எழுதவில்லை.
அவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று பிறரை மனதில் கொண்டு அச்சப்பட்டு கவலைப்பட்டு அமர்ந்து விட வேண்டிய கட்டாயம் இல்லை. இதனை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
வெற்றி நமக்கு கர்வத்தை, பெருமிதத்தை, அதீத நம்பிக்கையை தந்து விடும். அதுவே நமது அடுத்த நடவடிக்கையை கெடுத்து விடலாம். உதாரணத்திற்கு மிக நல்ல மதிப்பெண் பெற்று அருமையான கல்லூரியில் விரும்பிய படிப்பில் சேர்ந்து விடுகிறீர்கள் என்றால் அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை நிச்சயம் ஸ்லோ மோஷன் தான்.
மாறாக தோல்வியை சந்திக்க நேரிடுகிறது என்றால் அதில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். குறிப்பாக எது செய்ய வேண்டும் என்பதை விட எது செய்யக் கூடாது என்று கட்டாயம் எவருமே கற்றுக் கொள்ளுவர். அதையும் தாண்டி தோல்வி என்பது மிகவும் சிரமப்பட்டு, வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு அடுத்த அடியை எப்படி கவனமாக சரியாக திட்டமிட்டு எடுத்து வைக்க வேண்டும் என்று நமக்கு கற்றுத் தருகிறது.
சட்டென்று கிடைத்து விட்ட ஒரு வெற்றியில் எந்த ஒரு 'த்ரில்'லும் இருக்காது. அண்மையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒரு ஊடகப் பேட்டியில் தோல்வி தான் எனது வாழ்க்கையை சீராக்கி இருக்கிறது என்று மிக உருக்கமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். பல சவால்களை தாண்டி அவர் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட தகவல் கிடைத்த பொழுது அவருக்கு அழுகை வந்ததாம், மயிர்க்கூச்சல் ஏற்பட்டதாம். தனது வீட்டு மக்களிடம் மிகுந்த தாழ்மையுடன் அந்த செய்தியை பகிர்ந்து கொண்டாராம். எனவே தோல்வியைத் தாண்டிய வெற்றி வரும் போது பணிவும் துணிவும் தானாகவே சேர்ந்து வருகிறது.
கஜினி முகமது, தாமஸ் ஆல்வா எடிசன், பில் கேட்ஸ் ஆகியோர் தோல்வியை தழுவிய பிறகு வெற்றியை கண்டவர்கள்.
தோல்வியே வேண்டும் என்று தொழுதிட வேண்டாம். ஆனால் வெற்றி கிடைக்காத பொழுது அந்த சூழலை எப்படி 'பாசிட்டிவ்' மனப்பான்மையோடு எதிர்கொள்வது, அதில் இருந்து மீண்டு எழுவது, அடுத்த அடியை நம்பிக்கையோடு கவனமாக முன்வைத்து வெற்றியை பெறுவது இவை மிக முக்கியம்.
ஆயிரம் சீட்டுக்கள் இருக்கும் ஒரு வேலையோ படிப்போ உள்ள சூழலில் ஆயிரம் பேருக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்கள் தோல்வி பெற்றவர்கள் கிடையாது. 'பிளான் பி' என்று சொல்லக்கூடிய அடுத்த திட்டம் ஒன்றை கையில் எடுத்து அதில் வெற்றி பெறப் போகிறவர்கள். மருத்துவம் இல்லை என்றால் அடுத்து என்ன? பி காம் இல்லை என்றால் அடுத்து என்ன என்று மாற்றுத் திட்டம் ஒன்று கையில் வைத்திருங்கள். உங்கள் வெற்றி எங்கோ ஓர் இடத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆல் தி பெஸ்ட். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment